SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாடத்திட்டமாக பெண் எழுத்து

2018-04-30@ 14:55:30

நன்றி குங்குமம் தோழி

சென்னை ராணி மேரி கல்லூரியில் தமிழ் முதுகலை படிக்கும் மாணவிகளுக்கு பெண் படைப்பாளிகளின் படைப்புகளை மட்டுமே கொண்ட “பெண் எழுத்து” என்னும் தாளை அக்கல்லூரியின் தமிழ் துறை அறிமுகம் செய்துள்ளது. வரும் 2018-19 கல்வியாண்டில் இந்த புதிய தாள் பட்ட மேற்படிப்பில் இணைக்கப்படும் என்று தெரியவந்துள்ளது “பெண் எழுத்து” என்கிற புதிய முயற்சி குறித்தும் அதன் தேவை பற்றியும் ராணி மேரி கல்லூரியின் தமிழ்த்துறை இணை பேராசிரியர் பத்மினியிடம் பேசினேன்.

“ராணி மேரி பெண்கள் கல்லூரி 100வது ஆண்டை நிறைவு பெற்றுள்ளது. தமிழ் துறையும் 75 ஆண்டுகளை கடந்து விட்டது. அது ஆய்வுத்துறையாகவும் வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழ் இலக்கியம் படிக்கின்ற மாணவர்கள் வெறும் மொழி, மொழியின் சிறப்போடு நின்றுவிடக்கூடாது என்றும், இன்று இருக்கக்கூடிய இலக்கியத்தின் நவீன முறையை கற்றுக்கொள்ள வேண்டும் என 6 மாதகாலமாக இது குறித்த விவாதம் நடத்திக்கொண்டிருந்தோம்.

அதற்கான முயற்சியை எடுத்தோம். பெண்ணியம் குறித்த கருத்தை எளிதில் புரியவைக்க, அதை இலக்கிய வடிவில் தர முடிவு செய்தோம்.“பெண் மொழி” குறித்து பேசவேண்டிய தேவை சமூகத்தில் உருவாகி இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள், கொடூர தாக்குதல்களும் நடந்துக்கொண்டிருக்கும் போது, பெண் சுதந்திரம் பற்றிய உணர்வை மாணவர்கள் அடிப்படையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்றும்,

இது மகளிர் கல்லூரி என்பதாலும், முக்கியமாக இலக்கியம் படிக்கக்கூடிய மாணவர்கள் இதை கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தோடு இந்த “பெண் எழுத்து” தாளை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இன்றைய காலச்சூழலில் தமிழ் எப்படி நவீனமாக வளர்ந்துள்ளது என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு பெண் எழுத்து. பெண்களுக்கான விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் கல்வி மூலமாக செயல்படுத்த வேண்டும் என்கிற முயற்சி இது. 10 ஆண்டுகளுக்கு முன்பு பெண்ணியம் குறித்து “காலம்தோறும் பெண்ணியம்” என்கிற பெயரில் ஒரு முயற்சியை அறிமுகப்படுத்தினோம்.

அதில் மேலை நாட்டு கோட்பாடுகள், தீவிரவாத பெண்ணியம், மிதவாத பெண்ணியம். மார்க்ஸிய பெண்ணியம் இப்படியாக அறிமுகப்படுத்தியிருந்தோம். இப்போது தமிழில் இருக்கக்கூடிய எழுத்தாளர்கள் பெண்களுக்கான ஒரு மொழியை பெண் மொழி என்று உருவாக்கியிருக்கிறார்கள். இது நிச்சயமாக ஆண்களின் மொழியில் இருந்து வேறுபட்டதாக வந்திருக்கிறது. இந்த பெண் மொழியின் மூலமாக மாணவர்களுக்கு பெண் விடுதலை,பெண் உடல் உணர்வுகள், சுதந்திரம் குறித்த உணர்வையும் எப்படி தாங்கி வருகிறது என்பதை இரண்டு பகுதி பாடமாகவும் மூன்று பகுதி பிரதிகள் மூலமாக‌வும் கற்றுக்கொள்ள முடியும்.

இதில் மூன்று தமிழ் பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். அதில் மாலதி மைத்திரியின் கவிதை தொகுப்பும், பெண்ணியம் பற்றிய கதைகளை நமக்கு அறிமுகம் செய்து, விழிப்புணர்வை ஏற்படுத்திய அம்பையின் சிறுகதைகளில் இருந்து 12 சிறுகதைகளும், இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக இருக்கக்கூடிய பெரியார் தொடங்கிய சுய மரியாதை இயக்கத்தில் இருந்த பெண்களின் வரலாறு போன்றவை தமிழ்த் துறையில் முதுகலை படிப்போருக்கு தயாரிக்கப்பட்டுள்ள, ‘பெண்எழுத்து’ என்ற பாடத்தில் இடம்பெற்றுள்ளன.

சுய மரியாதை இயக்கத்தில் அதிக பெண்கள் தங்களது உரையின் மூலம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். அவற்றையெல்லாம் தொகுத்து உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றும் வளர்மதி “சுயமரியாதை இயக்க வீராங்கனைகள்” என்கிற தலைப்பில் மூன்று தொகுப்புகளாகக் கொண்டுவந்துள்ளார். அதில் ஒரு தொகுப்பை நாங்கள் பாடத்திட்டமாக வைத்திருக்கிறோம். இந்தத் தொகுப்பில் நீலாம்பிகை அம்மையார், குஞ்சுதம் குருசாமி  போன்ற பெரியாரின் பெண்ணியப் போராளிகளின் பேச்சுகள் உரைநடையாக தொகுக்கப்பட்டிருக்கிறது.

மற்ற மொழிகளில்தான் இது போன்ற விஷயங்களை பேச முடியும் என்றில்லாமல் நம்முடைய மொழியிலே எப்படி பேசமுடியும் என்கிற புதிய முயற்சியாக நாங்கள் இதை பார்க்கிறோம். குறிப்பாக இன்று வரக்கூடிய எல்லா கோட்பாடுகளையும் தமிழுக்குள் கொண்டுவரமுடியும்.  தமிழ் பெண் எழுத்தாளர்கள் எப்படி எழுத தொடங்கினார்கள், இலக்கியத்தின் வாயிலாக எழுச்சியை ஏற்படுத்திய தமிழ் பெண் எழுத்தாளர்கள் பற்றிய உணர்வு இன்று இல்லை.

குறிப்பாக 1950களுக்கு முன்பாக யார் யார் இருந்தார்கள் என்கிற பட்டியலே நம்மிடம் இல்லை. நாங்கள் அதையும் ஒரு பாடமாக வைத்திருக்கிறோம். யார் எல்லாம் அப்போது எழுதினார்கள் எதற்காக எழுத தொடங்கினார்கள், என்னமாதிரியான கருத்துக்களை எழுதினார்கள் என்பதை பற்றியெல்லாம் இந்த பாடத்தொகுப்பு விளக்கும். இதன் மூலம்1900லிருந்து 1950 வரையில் தமிழகத்தில் இலக்கிய வாயிலாக தமிழகத்தில் எழுச்சியை உண்டாக்கிய பெண் எழுத்தாளர்களின் பட்டியலை நாங்கள் கொடுத்திருக்கிறோம். இது நிச்சயமாக‌ மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்” என்று நம்பிக்கையோடு
தெரிவித்தார்.

தமிழ் நாட்டில் பெண் எழுத்து என்னும் தாள் வருவது இதுவே முதல் முறை என்று வரவேற்கும் கவிஞர் சுகிர்தராணியிடம் பேசியபோது, “ராணி மேரி கல்லூரி முதல் முறையாக இந்த முயற்சியை எடுத்துள்ளது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆக்கப்பூர்வமான நிகழ்வாக நான் இதைப்பார்க்கிறேன். மகளிரியல் துறை இருக்கிறது, தலித்தியம் பற்றி படிப்பதற்கு தாள் இருக்கிறது. இவை இரண்டும் எவ்வளவு முக்கியமோ பெண்களின் இலக்கியமும் முக்கியம். அது தாளாக வந்திருப்பது மிக முக்கியமான விஷ‌யம்.

எங்களைப்போன்ற எழுத்தாளர்களோ சமூகசெயல்பாட்டாளர்களோ, எங்களுக்கு முன் எழுதிய எழுத்தாளர்களை வாசிக்காமல் நாங்கள் வரவில்லை. நான் ஒரு கவிஞராக வருவதற்கு என்னுடைய சமூகப் பின்புலம் ஒரு காரணமாக இருந்தாலும் கூட எனக்கு முன் எழுதிய எழுத்தாளர்களின் சிந்தனைகள், அவர்கள் எந்தத் தளத்தில் இயங்கினார்கள், அவர்களின் படைப்புகள் எதைக் குறித்துப் பேசியது என்பதை எல்லாம் வாசித்துதான் நாங்கள் வளர்ந்தோம். அதை என்னுடைய சுய விருப்பத்தின்படி சுயத்தேடலின் அடிப்படையில் படித்தேன்.

ஆனால் இப்போது இருக்கக்கூடிய மாணவர்களுக்கு வாசிக்கின்ற ஆர்வம் மிகக்குறைவுதான் என்று நினைக்கிறேன். ஆகையால் ஒரு கல்லூரியில் பெண் எழுத்தை ஒரு தாளாக கொண்டுவந்துள்ளது வரவேற்கத்தக்க ஒன்று. இந்த பெண் எழுத்து என்னும் தாள் வந்தவுடன் ஒரு ஈர்ப்பு அனைவருக்கும் வருகிறது. அது பேசுபொருளாக மாறுகிறது. அதுதான் இதனுடைய வளர்ச்சிக்கான முதற்படி என்று நினைக்கிறேன். எழுத்து கேள்விப்பட்டிருக்கிறோம் இது என்ன பெண் எழுத்து, எழுத்திலிருந்து பெண் எழுத்து எப்படி வேறுபடுகிறது,

யாரெல்லாம் எழுதுகிறார்கள், என்கிற வரலாற்றை மாணவிகளும் தெரிந்துக்கொள்ள நல்ல வாய்ப்பாக இருக்கும். மாணவிகள் தேடிப்போய் படிப்பதைவிட எழுத்தே இவர்களை தேடி வருகிறது என்பதை நான் மிக முக்கியமான விஷயமாக நான் பார்க்கிறேன். இதற்காக முயற்சி செய்த ராணி மேரி கல்லூரியின் தமிழ்த்துறை இணை பேராசிரியர் பத்மினிக்கு இதன் மூலம் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயம் பெண்கள், பெண் சமூகத்தை புரிந்துக்கொள்ள இந்த படிப்பு முக்கியமான தேவை என்று நினைக்கிறேன்.

எனக்காக நான் குரல் எழுப்பாவிடில் மற்றவர்களுக்கு என்னால் குரல் கொடுக்க முடியாது. இப்போது இருக்கக்கூடிய பெண்கள் தனக்கு என்ன நடந்தாலும் குரல் கொடுக்காமல் அமைதியாகிவிடுகிறார்கள் இப்படியான சூழலில் பெண் எழுத்து என்னும் தாள் மூலம், சமூக மாற்றத்திற்கான எழுத்துக்களை படித்து உள்வாங்கி செயல்படுவார்கள்” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார் சுகிர்தராணி.

கவிஞர் மாலதி மைத்ரி பேசுகையில், "இது ஆக்கபூர்வமான முயற்சி, ஏனெனில் தமிழ் இலக்கியம் படிப்பது என்பது சங்க இலக்கியங்களை படிப்பது. நவீன இலக்கியத்தில் உள்ள கிளாசிக் மட்டுமே பாடத்திட்டமாக இருந்தது. 2000 ஆண்டிற்கு பின் நவீன பெண் கவிஞர்களின் வரவிற்கு பிறகுதான் நவீன பெண் இலக்கியம் பாடத்திட்டத்திற்குள் போனது. அதற்கு முக்கிய காரணமாக இருந்தது “பறத்தல் அதன் சுதந்திரம்” என்னும் தொகுப்பு. இதை நானும் க்ருஷாங்கினியும் தொகுத்திருந்தோம். ஏறக்குறைய தமிழ்நாட்டில் எல்லாக்கல்லூரியிலும்உள்ளபாடத்திட்டத்திலும் துணை நூலாக சேர்க்கப்பட்டது.

அதைப் படித்த பின்புதான் தமிழ் மாணவர்கள் பெண் கவிஞர்கள், நவீன பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை அதிகம் வாசிக்கத் தொடங்கினர். பாரதியும், பாரதிதாசனும், ஜெயகாந்தனும் மட்டுமே அறிமுகமாகியிருந் தவர்களுக்கு பரவலாக பெண் எழுத்துகளை அறிமுகப்படுத்தியது. தற்போது “பெண் எழுத்து” என்னும் தாள் மூலம் பெண் படைப்பாளிகளின் படைப்புகளை மட்டுமே அறிமுகப்படுத்தியிருப்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்று”என்கிறார் கவிஞர் மாலதி மைத்ரி.

- ஜெ.சதீஷ்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-04-2019

  24-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • vote

  3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

 • hailstrom

  தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

 • bookday

  இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

 • ukraine

  உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்