SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செல்லுலாய்ட் பெண்கள்

2018-04-27@ 12:51:24

நன்றி குங்குமம் தோழி

தமிழ் ஞானப்பழம் நீயம்மா… கே.பி.சுந்தராம்பாள்

பா.ஜீவசுந்தரி - 35


தனக்கு நிகராக மேடையில் நின்று பாடக்கூடிய ஆண் நடிகர்கள் எவரும் இல்லை என்ற நிலையை உருவாக்கிய நடிகை  ஒருவரும் அன்றைய நாடகத்துறையில் இருந்தார். அவருக்கு இணையாக நடித்துப் பேர் வாங்க முடியாது என மிகப்  பிரபலமான ராஜபார்ட் நடிகர்கள் பலரும் பயந்து பின்வாங்கியிருக்கின்றனர். இதனால் வேறு வழியில்லாமல் அவரே  ராஜபார்ட் வேடமிட்டு ஆண் வேடத்தையும் சமாளிக்க வேண்டிய நிலை அந்த நடிகைக்கு. சுமார் பதினைந்து ஆண்டு  காலம் அவரது  குரல் நாடக மேடைகள் தோறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாடகங்களுக்காக அவர் பயணித்த  பாதைகள் எங்கும் அந்தக் கந்தர்வ கானம் இன்னமும் பரவிக் கிடக்கிறது. அவரே பின்னர் ‘கொடிமுடி கோகிலம்’ என்று  அழைக்கப்பட்ட கே.பி. சுந்தராம்பாள்.

தமிழ் நாடக உலகின் நிலையும் தமிழ் சினிமாவின் நிலையைப் போலவே உணர்வுப் பூர்வமானதாகவும், எந்த நேரத்  திலும் எதுவும் நிகழலாம் என்ற பரபரப்பு மிகுந்ததாகவும்தான் இருந்து வந்திருக்கிறது. நாடகங்கள் நடைபெறத்  தொடங்கிய ஆரம்பக் காலத்தில் நடிகைகளுக்குப் பெரும் பஞ்சம் இருந்தது. சிறு வயதிலேயே படிப்புக்குப் பயந்து  அல்லது சோற்றுக்கு வழியில்லாமல் வீட்டைத் துறந்து, பெற்றோரைத் துறந்து ஓடி வந்த சிறுவர்கள் அடைக்கலமான  இடம் பெரும்பாலும் நாடகக் கம்பெனிகள். பாய்ஸ் கம்பெனிகள் என்று இவை அழைக்கப்பட்டன. சிறுமிகள் அதில்  சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. என்றாலும் நாட்கள் செல்லச் செல்ல அந்த நடைமுறையும் தொலைந்து போனது.  பிற்காலத்தில் அங்கொருவரும் இங்கொருவருமாகப் பெண்களும் நாடகங்களுக்குள் நுழைந்தார்கள்.  அதுவரை ஆண்களே  பெண் வேடமேற்று ஸ்திரீ பார்ட்களாக சிறப்புப் பெற்றார்கள். பின்னாட்களில் அவர்களில் பலர் பேரும் புகழும் பெற்ற  திரைப்பட நடிகர்களாகவும் மாறினார்கள்.
 
பிறவிக் கலைஞர்களை உருவாக்கிய நாடக உலகம்


19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழகத்தில் ஸ்பெஷல் நாடகங்கள் கொடி  கட்டிப் பறந்தன. ஸ்பெஷல் நாடகப் பார்ட்டிகள் நாடகங்கள் நடைபெறும் இடத்துக்குச் சென்று சேர்வதற்கு முன்பாகவே,  நாடகத்தில் நடிக்க இருக்கும் நாடகக் கலைஞர்கள் பற்றிய தகவல்கள், செய்திகள் கட்டுக்கதைகளாக வாய் வழிச்  செய்தியாக ஊருக்குள் விரைந்து சென்று சேர்ந்து ரசிகர்களை மயக்கத்துக்குள் ஆழ்த்தி விடுகின்ற, திரைப்படங்கள்  கண்டுபிடிக்கப்படாத காலம் அது. நாடகமே அவர்களின் உலகமாக இருந்த காலம்.

அந்த உலகத்தில் பெரியவர்கள் மட்டுமல்ல, சின்னஞ்சிறுசுகளும் கூட மயக்கத்தில் ஆழ்ந்து கிடந்தார்கள். ஒவ்வொரு  முறையும் ஒரு நாடகக் கம்பெனி ஒரு ஊரில் சில மாதங்கள் தங்கியிருந்து நாடகங்கள் நடத்தி முடித்து, ஊரை விட்டுக்  காலி செய்து போகும்போது, அந்த ஊரிலுள்ள சிறுவர்கள் சிலரும் மாயமாக மறைந்து போவது அன்றைக்கு மிக மிகச்  சாதாரணமான செய்தி. நாடகக் கம்பெனிகளின் நாடகங்களில் மயங்கி அவர்கள் பின்னாலேயே சென்ற சிறுவர்கள்  ஏராளம். அவ்வாறு செல்லும் துணிச்சல் இல்லாதவர்கள் தாங்கள் பார்த்ததைக் கேட்டதை அப்படியே ஆடிப் பாடிக்  காண்பித்தபடி தெருக்களில் அலைந்தனர்.

அப்பாவின் வெள்ளை வேட்டிகள் திரைச்சீலைகளாயின; அதுவே அவர்களின் விளையாட்டாகவும் மாறியது. இந்த  விளையாட்டுகள்தான் பல பிறவிக் கலைஞர்களைப் பின்னாட்களில் அசல் கலைஞர்களாக அடையாளம் காட்டியது.  அக்காலத்தில் தங்களுக்குப் பிடித்த பாடல்கள், கதைகளின் காட்சிகளை அப்படியே நடித்துக் காட்டி பிறரைக் கவர்ந்த  குழந்தைகள் பலர் இருந்தார்கள். கொடிமுடி பாலாம்பாளின் மகள் சுந்தரியும் அப்படித்தான். ஐந்து வயதுக்கு முன்பாகவே  தான் பார்த்த நாடகங்களின் பாடல்களை, காட்சிகளை அப்படியே கணீர் குரலில் பாடிக் காட்டும் ஆற்றல் பெற்றிருந்தாள்.
 
சுந்தரியின் வெண்கலக் குரலுக்கு கட்டுப்பட்ட கொடுமுடி ரயிலடி


பாலாம்பாள் கரூரில் வாழ்க்கைப் பட்டிருந்தாலும் பெரும்பாலும் கொடு முடியில் உள்ள தாய்வழிப்பாட்டி சௌந்தர நாயகி  வீட்டில்தான் வாசம். ரயில் தண்டவாளத்தருகே வீடு. பாலாம்பாள் மகள் சுந்தரிக்கோ பிறவியிலேயே வெண்கலக்குரல்.  தான் பார்த்த நாடகங்களின் பாடல்களைத் தெளிவாக, வெண்கலக்குரலில் அப்படியே பாடுவார். அவர் பாட்டைக்  கேட்பதே ஒரு அதிசயமாகப் பார்க்கவும் பேசவும் பட்டது; குடும்பத்தில் வறுமை தாண்டவமாடியது. வறுமையின்  கொடுமையால் தன் மூன்று குழந்தைகளையும் ஆற்றில் தள்ளிவிட்டுத் தானும் உயிரை மாய்த்துக் கொள்ள பாலாம்பாள்  ஒரு முறை முடிவு செய்ததாகவும், மகள் சுந்தரி உடன் வர மறுத்ததால் நால்வரும் உயிர் பிழைத்ததாகவும் கூட  தகவல் உண்டு. சுந்தரிக்குப் பிறகும் இரண்டு குழந்தைகள் பாலாம்பாளுக்கு. இதனால் சுந்தரி எங்கிருக்கிறாள்  என்றெல்லாம் அவரைத் தேடுவாரில்லை. சுந்தரியும் எப்போதும் ரயிலடியில் பாடல்களே கதியாகக் கிடந்திருக்கிறார்.  கொடுமுடி ரயிலடியில் சுந்தரியின் பாடல்கள் மிகப் பிரபலம். அவர் ரயில்களிலும் பாடி காசு வாங்கியதாகவும், அதனால்
அவர் பிச்சை எடுத்துப் பிழைத்தார் என்றும் சொல்லப்படுவதுண்டு. இதை மறுப்பவர்களும் உண்டு. கந்தல் பாவாடை,  எண்ணெய் காணாத பரட்டைத்தலை, வாரிச் சுருட்டிய கூந்தல். ஒட்டிய வயிறு, இக்கோலம் அந்தக் குழந்தையைப் பற்றி  அப்படி ஒரு எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அப்படியே அந்தப் பிஞ்சு வயதில் தனது கலையை விற்றுக் கையேந்த  வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தாலும் அதற்காக வெட்கப்பட வேண்டியவர் அவர் அல்ல; வறுமை நிலையில் கையேந்த  வைத்த சமூகம் தான். வறுமையும் கலையும் சேர்ந்தே இருப்பதுதானே.

திருட்டு ரயிலேற வைத்த நாடக ஆசை


கொடுமுடி ரயிலடியில் நின்று செல்லும் ரயில்களில் பாடித் திரிந்ததால்தான் நாடகமேதையும் ரயில்வே துறை  அதிகாரியுமான எஃப். ஜி. நடேசய்யரின் கண்களில் தென்பட்டு அவரது சிபாரிசின் மூலம் நாடகக் கம்பெனியிலும்  சேர்க்கப்பட்டு இசையுலக ராணியாக, கொடுமுடி கோகிலமாக ஆனார் சுந்தராம்பாள். அவரது ரசிகப் பட்டாளத்தில் எஃப்.  ஜி. நடேசய்யர் மற்றும் காவல்துறை அதிகாரி ஆர்.எஸ். கிருஷ்ணசாமி ஐயர் ஆகியோரும் உண்டு.

நடேசய்யர் தாமே அமெச்சூராக ஒரு நாடகக் கம்பெனியை வைத்துக் கொண்டு ஸ்பெஷல் நாடகங் கள் நடத்தி வந்தார். கரூர் வந்த வேலு நாயரின் பிரபல நாடகக் கம்பெனியில் சுந்தரியை அழைத்துச் சென்று சேர்த்து விட்டார் நடேசய்யர்.  சுந்தரியின் கணீர் குரலால் கவரப்பட்ட வேலு நாயர் அவருக்கு நல்ல வேடங்கள் கொடுத்தார். மேடையில் அவர் பாடிய  முதல் பாட்டு “பசிக்குதே, வயிறு பசிக்குதே...” வேலு நாயர் கம்பெனி கரூரை விட்டுச் சென்றது. சுந்தரியையும்  தங்களுடன் வர அவர்கள் அழைத்தும் அவர் போகவில்லை. ஆனால் ஆர்மோனிய வித்வான் கோவிந்தராஜு நாயுடு  கூறிய ஆசை வார்த்தைகளாலும் வறுமையிலிருந்து மீள வேண்டும் என்பதாலும் மெட்ராஸ் போய் நாடகங்களில் நடிக்க  வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. விளைவு, நாடக ஆசை தலைக்கேற ஏழு வயதுச்சிறுமி சுந்தரி
வீட்டில் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் திருட்டு ரயிலேறி மெட்ராஸுக்கு ஓடிப் போனார்.

ஒரு வருடம் நாயுடு கம்பெனியில் அடி, உதைபட்டு நடித்துக் கொண்டிருந்தார். அக்கால பாய்ஸ் கம்பெனிகளில்  தங்களிடம் வந்து அடைக்கலமாகும் சிறுவர்களைப் பெற்ற தாயைப் போல அரவணைத்துப் பழக்குவதுதான் அன்றைய  நாடக மேதைகளின் வழக்கம். நாடகக் கம்பெனிகளில் பசி இருக்கலாம்; வறுமை இருக்கலாம்; கண்டிப்பு இருக்கும்,  ஆனால் அடி உதை இருக்காது. அன்புக்குப் பஞ்சம் இருக்காது. ஆனால் நாயுடுவோ பேராசைக் காரராகவும் கொடுமைக்
காரராகவும் இருந்தார்.

அடி உதையிலிருந்து மீண்டு வந்தவர், ஸ்பெஷல் நாடக நடிகையானார்

ராஜபார்ட் தாணுவம்மாள் என்ற பிரபல பெண் நடிகர் நாயுடு கம்பெனியை பாண்டிச்சேரிக்கு அழைத் திருந்தார். அந்த நாடகத்தில் அவரும்  நடித்தார். 8 வயதுச் சிறுமியை நாயுடு காலால் எட்டி உதைப்பதும் கம்பால் அடிப்பதுமாகச் சித்திரவதை செய்வதைப்  பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார்.  நாயுடு அருகில் இல்லாத நேரம் பார்த்து சுந்தரியிடம் அனுசரணையாகப் பேசி  அவரது தாயாரின் முகவரியைக் கேட்டு வாங்கி அவருக்குக் கடிதம் எழுதிவிட்டார். ஒரு வருட மாகப் பெண்  பிள்ளையைக் காணாமல், பல இடங்களில் தேடியும் பிடிபடாமல் ஒரு ஜோசியனைப் பார்த்துள்ளனர். அவனோ பிள்ளை  இன்ன மும் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று கூறியிருக்கிறான். எனவே மகள் இறந்து போய் விட்டாளென்று  முடிவு செய்து அவருக்குக் காரியம் செய்யவிருந்த நேரத்தில்தான் தாணுவம்மாளின் கடிதம் போய்ச் சேர்ந்தது.  மிகப்பெரும் போராட்டத்துக்குப் பிறகே பாலாம்பாள் தன் மகள் சுந்தரியை நாயுடுவின் நாடகக் கம்பெனியிலிருந்து மீட்டு  வர முடிந்தது.

கொடுமுடிக்கு மீண்டு வந்த சுந்தரி, மீண்டும் கருப்பாயி அம்மாள் நாடகக் கம்பெனியில் ஸ்பெஷல் நாடகங்களில் நடித்து  வந்தார். அக்காலத்தில் பாய்ஸ் கம்பெனி போன்ற முழு நேர நாடகக் கம்பெனிகளுடன் அவ்வப்போது மட்டும் நாடகங்கள்  நடத்தும் நாடகக் கம்பெனிகளும் இருந்தன. இவை பெரும்பாலும் ஸ்பெஷல் நாடகங்களை நடத்தி வந்தன. அதாவது சில  முக்கிய நாடகங்களை அதில் நடித்துப் புகழ்பெற்ற நாடக நடிகர்களுக்கு ஒரு காட்சிக்கு இவ்வளவு என பெருந்தொகை  கொடுத்து அழைத்து வந்து நாடகம் போடுவார்கள். இவை நடிகர்களின் புகழால் மட்டுமே நடத்தப்படும் நாடகங்களாகும்.

கடல் கடந்தும் புகழ் பெற்ற சங்கீத ராணி

கருப்பாயி அம்மாள் கம்பெனியின் ஸ்பெஷல் நாடகங்களில் நடித்து வந்த சுந்தரி விரைவில் பெரும்புகழ் பெற்றார். தனது  பதினோராவது வயதில் கொழும்பு சென்றார். நாடக ஏஜென்ட் சண்முகம் பிள்ளை கே.பி.எஸ்.ஸின் குரல் வசீகரம்  அறிந்து அவரைத் தேடி வந்தார். அனைத்துச் செலவுகளும் போக மாதம் ரூ.40 சம்பளம் தருவதாக ஒப்பந்தம் போட்டு  அழைத்துச் சென்றார். கூடவே சுந்தரியின் பாட்டி சௌந்தராம்பாளும் துணைக்குச் சென்றார். பாலபார்ட்தான்.  இலங்கையில் பல மாதங்கள் தங்கியிருந்து ஏராளமான நாடகங்களில் நடித்தார்.

ஒரு வரலாற்று அதிசயம்

இக்காலகட்டத்தில்தான் கே.பி.எஸ்.ஸின் கலை இணையும், காதல் இணையுமாக விளங்கப் போகிற எஸ். ஜி.  கிட்டப்பாவும் கொழும்பில் பாலபார்ட் வேடத்தில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார். ஆனால் இக்காலகட்டத்தில்  ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டதோ, ஏன் ஒருவரைப் பற்றி ஒருவர் கேள்விப்பட்டதோ கூட இல்லை. தமிழகம்  திரும்பிய பின் தொடர்ந்து ஸ்பெஷல் நாடகங்களில் நடித்தார். ஸ்திரீ பார்ட் மட்டுமல்ல ராஜபார்ட்டாகவும் தமிழகம்  முழுவதும் வலம் வந்தார். கொடுமுடி கோகிலம், சங்கீதராணி கே.பி. சுந்தராம்பாள் என்றே பின்னர் அவர்  அழைக்கப்பட்டார்.

புகழ்மிக்க நாடக உலக ஜோடிகள் எஸ்.ஜி. கிட்டப்பா - சுந்தராம்பாள்

இரண்டே ஆண்டுகளில் மீண்டும் இலங்கைப் பயணம். இம்முறை முன்பைவிட 40 மடங்கு அதிக ஊதியத்துக்கு  ஒப்பந்தம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு மிகப்பெரும் சவால் ஒன்றும் காத்திருந்தது. பெரும்பாலும் ஸ்திரீ பார்ட்  வேடம் தாங்கிய சுந்தராம்பாளின் குரலுக்கு ஈடு கொடுத்துப் பாடக்கூடிய ராஜபார்ட் நடிகர்கள் யாருமில்லாததால்,  ராஜபார்ட்டாக நடிக்க வந்தவர்களால் இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்க முடியவில்லை. தங்கள் செல்வாக்கு  கெட்டுவிடும் என்ற பயத்தில் பெயர் பெற்ற ராஜபார்ட் நடிகர்கள் கூட ஓடி ஒளிந்தனர். இதனால் சில நேரங்களில் கே.பி.எஸ். ராஜபார்ட் வேடத்தையும் தானே ஏற்க வேண்டியதாயிற்று. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண நாடக  ஏற்பாட்டாளர்கள் தீவிரமாக யோசித்து இறுதியில் துணிச்சலான முடிவு ஒன்றையும் எடுத்தனர்.

அக்காலகட்டத்தில் பிரபல கர்நாடக சங்கீத வித்வான்களே பயப்படக்கூடிய நாடக மேதை எஸ்.ஜி. கிட்டப்பாவை  கொழும்பு அழைத்து வந்து கே.பி.எஸ். ஸின் இணையாக நடிக்க வைப்பது, அவர் பாடினால்தான் கே.பி.எஸ். குரலுக்கு  இணையாக இருக்கும் என முடிவெடுத்து அவரை அழைத்து வந்தனர். கிட்டப்பா வந்தது வீண் போகவில்லை. ஒருவர்  பாடலில் ஒருவர் மயங்கினர். ஒருவரிடம் ஒருவர் தங்களை இழந்தனர். அவர்களிடையே உருவான காதல், கலை  உலகின் அழியாக் காதலானது. ஒருவரை ஒருவர் பிரிக்க முடியாதபடி இலங்கையில் மட்டுமல்லாது தமிழகத்திலும்  நாடக மேடைகளில் சேர்ந்தே வலம் வந்தனர்.

துயரில் முடிந்த காதல் வாழ்வு

கிட்டப்பா ஏற்கனவே மணமானவர் என்றபோதும் சுந்தராம்பாளையும் மணம் செய்து கொண்டார். கே.பி.எஸ்  கர்ப்பமானார். இக்காலகட்டத்தில் இருவருக்குள்ளும் ஏற்பட்ட சிறு ஊடல் அவர்களை நிரந்தரமாகப் பிரித்தது. பிறந்த  பெண் குழந்தையும் இறந்து போனது. ஏற்கனவே மதுவின் பிடியில் சிக்கி பாதிக்கப்பட்டிருந்த கிட்டப்பா மேலும், மேலும்  நோய்வாய்ப்பட்டார். சுந்தராம்பாள் கவனமாகப் பார்த்துக் கொண்டபோதும் எல்லாம் கைமீறிப் போனது. தனது 28வது  வயதில் கிட்டப்பா அகால மரணமடைந்தார். அப்போது கே.பி.எஸ்.ஸுக்கு வயது 26. சம்பிரதாயப்படி திருமணம் செய்து  கொள்ளவில்லை என்றாலும் சுந்தராம்பாள் கைம்மைக்கோலம் பூண்டார். அப்போது முதல் வெள்ளைச்சேலையுடன்  வீட்டுக்குள் முடங்கினார். நாடக நடிப்புக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். நடிப்பை முழுக்கத் துறந்து ஒண்டுக்  குடித்தனத்தில் வாழ்ந்தார். தனது சகோதர, சகோதரிகள், தாய் மாமன்கள் உள்ளிட்ட பெரிய குடும்பத்தைக் கட்டிக் காக்க  வேண்டிய நிலை.

கிட்டப்பாவுடன் மனக்கசப்பு கொண்டிருந்தபோதும், பின் உடல் நலமற்று இருந்த அவரது இறுதி நாட்களில்  உடனிருந்தபோதும், அவரது மறைவுக்குப் பின்னரும் கே.பி.எஸ் மிகவும் வலி மிகுந்த வாழ்க்கையை வாழ்ந்தார். ஆனால்  அவர் எண்ணமெல்லாம் காதல் இணை கிட்டப்பாவையே சுற்றி வந்தது. அவர் நினைவிலிருந்து ஒரு கணமும் அவர் மீள  விரும்பவில்லை. அவர்கள் காதல் அமர காதல்தான். ‘எங்க ஆத்துக்காரர்’ என்றே கிட்டப்பாவை அவர் குறிப்பிட்டு  வந்தார். கிட்டப்பா பார்ப்பனர், சுந்தராம்பாளோ கவுண்டர் வகுப்பில் பிறந்தவர். இந்த சாதி ஏற்றத்தாழ்வே அவர்கள்  இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் தடையாக இருந்தது.
 
காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியின் வற்புறுத்தலாலும் குடும்பத்தின் வறுமை நிலையாலும் ‘நந்தனார்’ நாடகத்தில்  நந்தனாராக நடிக்கச் சம்மதித்தார். பின்னர் அதே வேடத்துக்காக ஒரு லட்சம் ரூபாய் ஊதியத்தில் அசன்தாஸ்  முயற்சியால் ‘நந்தனார்’ திரைப்படத்திலும் நடிக்க வைக்கப்பட்டார்.

சுதந்திரப் போராட்டச் செயல்பாடுகளும் அரசியல் பங்கும்


இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட பெண் செயல் பாட்டாளர்களில் சுந்தராம்பாளும் ஒருவர்.  அதற்கு மூலகாரணம் எஸ்.ஜி. கிட்டப்பா. அவர் தன் சக வயதினரான தீரர் சத்தியமூர்த்தியின் நெருங்கிய நண்பரும் கூட.  இந்த நட்பு அவரை விடுதலைப் போராட்டத்திற்கும் இழுத்து வந்ததால் காங்கிரஸ் கருத்துகளிலும் தீவிரமாக ஈடுபட்டார்.  1920-களுக்கு முன்பிருந்தே விடுதலைப் போராட்ட இயக்கப் பாடல்களை மேடைகளில் பாடி வந்தார். சுந்தராம்பாளுடன்  இணைந்து நடிக்கத் தொடங்கிய பின்னர் இது அவருக்கும் பெரும் ஊக்கமாக அமைந்தது. விடுதலை உணர்வூட்டும்  பாடல்களைப் பாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தபோதும் அதற்கெல்லாம் அவர்கள் அஞ்சவில்லை. காங்கிரஸ்  மேடைகள்தோறும் கலந்துகொண்டு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார். காந்தியின் கதர் பிரச்சார இயக்கம், தீண்டாமை  ஒழிப்பு, வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டங்கள் என இங்கெல்லாம் கலந்து கொண்டு தன் கம்பீரமான  குரலால் பாடல்களைப் பாடத் தவறியதில்லை.

தமிழ் சினிமாவின் முதல் பாடலாசிரியர் பாஸ்கரதாஸ், மதுரையை மையமாகக் கொண்டு இயங்கியவர்.  நாடகங்களுக்குக் கதை வசனமெழுதி காட்சிகள் அமைப்பது, பயிற்சி கொடுப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்..  அக்காலத்தில் பாஸ்கரதாஸ் பாடல்கள் கிராமஃபோன் ரிக்கார்டுகளாகவும் அமோகமாக விற்றுள்ளன. அதில் அதிகம் பாடி  சாதனை படைத்தவர் சுந்தராம்பாள். அவற்றில் பல ரிக்கார்டுகள் அக்காலத்தில் சாதனை படைத்தவை. 1944ல்  நடைபெற்ற முதல் தமிழிசை மாநாட்டின் இசையரங்கில் கலந்து கொண்டு பாடியவர். நாடு விடுதலை பெற்ற பின்னர்,  காமராஜர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

கே.பி.எஸ் பெற்ற விருதுகள்


சுந்தராம்பாளின் கலைச்சேவையைப் பாராட்டும் விதமாக 1966 ஆம் ஆண்டு தமிழ் இசைச்சங்கம் ‘இசைப் பேரறிஞர்’  விருது வழங்கி கௌரவித்தது. இந்திய அரசு 1970 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது. 1969ல் வெளியான  ‘துணைவன்’ திரைப்படத்தில் அவர் பாடிய பாடல்களுக்காக தேசிய அளவில் சிறந்த பின்னணிப் பாடகிக்கான  விருதினைப் பெற்றார்.  திரைப்படங்களின் வாயிலாகப் பெற்ற விருது இது மட்டுமே…

நினைவில் நிற்கும் பாடல்கள்


திருவிளையாடல் படத்தில் இடம் பெற்ற ‘ஞானப்பழத்தைப் பிழிந்து’,  ’ஒன்றானவன் உலகில் இரண்டானவன்’  போன்ற பாடல்களை யார் பாடினாலும் கே.பி.எஸ் குரலுக்கு ஈடாகாது. ‘மகாகவி காளிதாஸ்’ படத்தின் ‘சென்று வா  மகனே சென்று வா’ சோர்ந்து கிடக்கும் மனங்களுக்கு உத்வேகம் ஊட்டக்கூடிய பாடல். ‘பூம்புகார்’ படத்தில் கவுந்தி  அடிகளாக நடித்ததுடன், வாழ்க்கை என்னும் ஓடம் என்ற தத்துவார்த்தப் பாடலையும் பாடினார். சிவசக்தி நடனத்துக்கு  உத்வேகமளிக்கும் ‘தகதக தகதகவென ஆட வா?’… என சொல்லிக்கொண்டே போகலாம்.
(ரசிப்போம்!)

படங்கள் :ஸ்டில்ஸ் ஞானம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • thaneer_laari_kudam11

  குடிநீர் பஞ்சம் எதிரொலி : 'குடம் இங்கே, தண்ணீர் எங்கே?’.. தமிழக அரசை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்

 • kali_dogsa1

  கலிபோர்னியாவில் அழகற்ற நாய்களுக்கான போட்டி : 19 நாய்கள் பங்கேற்பு

 • firoilsuthigari11

  அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 2 நாட்களாக பற்றி எரிந்த தீ : மாபெரும் போராட்டத்திற்கு பின் அணைப்பு

 • 24-06-2019

  24-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-06-2019

  23-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்