SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2017 பெண்கள் உருவாக்கிய ஆண்டு

2018-04-24@ 11:44:44

நன்றி குங்குமம் தோழி

அனிதா

தன் உடலையே ஆயுதமாக்கி, நீட் தேர்வுக்கு எதிராக அனிதா தற்கொலை செய்துகொண்டது தமிழகத்தையே உலுக்கியது. மாணவர்கள் வீதிக்கு வந்தனர். ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தன. உச்ச நீதிமன்றத்தின் வாயிலில் நின்று அனிதா அளித்த நேர்காணலில் தென்படும் சத்தியமும், வெகுளித்தனமும், உண்மையும் அவள் இறப்பிற்குப் பின் நம்மைப் பொசுக்கின. அந்த அப்பாவி முகம் ஏதாவது செய்யுங்கள் என்று நம்மைப் பார்த்துக் கதறியது. தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் அனிதாவுக்கான அஞ்சலி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

நீட் என்றால் என்ன என்று அறியாதவர்களுக்கும் நீட் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது அனிதாவின் மரணம். ரோஹித் வெமுலாவின் மரணத்துக்கு அடுத்தபடியாக கல்விக்காக நிகழ்ந்த இந்த மரணத்தை, தற்கொலை என்பதைவிட மத்திய மாநில அரசுகள் தவறான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றி செய்த கொலை என்பதே சரியாக இருக்கும். அனிதா - போராட்டத் தீயின் நெருப்பை பற்ற வைத்த பொறி.

கௌசல்யா

சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிரான ஒரு பெரும் சவாலான தீர்ப்புக்குக் காரணமாய் இருந்தவர். சங்கரின் மனைவியாய் ஒரு சராசரி பெண்ணாக வாழ்வைத் துவக்கிய அவருடைய எட்டு மாத கால வாழ்வு சங்கரை துள்ளத் துடிக்க நடு சாலையில் வெட்டிக் கொலை செய்ததை கண்ணால் பார்த்ததும் மாறத் தொடங்கியது. தன் பெற்றோரே ஆயினும் கொலை செய்தவர்களை தயவு தாட்சண்யமின்றி நீதிமன்றத்தில் வழக்காடி தண்டனை பெற்றுத்தந்த தீரம் நிறைந்த பெண். பெரியாரை வாசித்து, பெண் விடுதலையைப் புரிந்துகொண்டு, சாதி ஒழிப்புக்கான களத்தின் போராளியாக தன்னை உயர்த்திக் கொண்டு இன்று சமூகத்தில் கம்பீரமாக வலம் வரும் தோழி இவர். கௌசல்யா சாதி மறுப்பின் குறியீடு. சாதி ஆணவக் கொலையின் ரத்த சாட்சி. சமூக மாற்றத்தின் வித்து.

வளர்மதி

ஜல்லிக்கட்டு போராட்டத்தை தட்டிக்கொடுத்து வளர்த்த அதே தமிழக அரசுதான் வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது. நெடுவாசலின் போராட்டத்திற்கு ஆதரவாக துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்ததற்காக கைது செய்யப்பட்ட வளர்மதிக்காக கமலஹாசன் வரை குரல் கொடுத்தனர். அரசு தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்கான எடுத்துக்காட்டுதான் வளர்மதியின் கைது. சிறை மீண்ட வளர்மதியை வரவேற்கக் காத்திருந்த கூட்டம்தான் அவர் சம்பாதித்த சொத்து. மத்திய அரசுக்கு கைகட்டி சேவகம் புரியும் மாநில அரசு மாநிலத்தின் நலன்கள் எதிலும் கவனம் செலுத்தவில்லை. மாறாக மக்கள் போராட்டங்களில் ஈடுபடுவோரை கைது செய்தது. அதில் மாணவி வளர்மதியின் கைது பல மட்டங்களிலும் அரசுக்கு அவப்பெயரைக் கொண்டு வந்து சேர்த்தது.

கௌரி லங்கேஷ்

பெங்களூருவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் கொலை நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை உண்டுபண்ணியது. கௌரி லங்கேஷ் கர்நாடகாவின் பிரபலமான பத்திரிகையாளர். குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகளின் ஆவணமான குஜராத் கோப்புகளை கன்னடத்தில் மொழிபெயர்த்தவர். தன் வாழ்நாள் முழுவதும் இந்துத்துவவாதிகளை கடுமையாக எதிர்த்துவந்தவர். தன் வீட்டு வாசலில் துப்பாக்கிக் குண்டுகள் துளைக்க, வீழ்ந்து இறந்து கிடந்தவரைப் பார்த்தவர்கள் மனம் உறைந்து போனது.

மத வெறியர்களின் கைகளில் மாண்டுவிட்ட அவரது கொலையை அடுத்து ‘நானும் கௌரிதான்’ என்கிற வாசகத்தோடு இந்தியா முழுவதும் நிகழ்ச்சிகள் நடந்தன. ‘இன்று கௌரிக்கு நிகழ்ந்தது நாளை உங்களுக்கோ எனக்கோ நடக்கலாம்’ என்கிற அச்சத்தை பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் பகிர்ந்துகொண்டனர். மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் இத்தகைய படுகொலைகள் மிகுந்து விட்டன. அதன் சான்றாக தன் உயிரை இழந்தவர் கௌரி லங்கேஷ்.

தீபிகா படுகோனே

எப்போதுமே ‘டேக் இட் ஈஸி’ என்கிற கொள்கையை உடையவர் தீபிகா. தன்னைப் பற்றிய வதந்திகளை பொருட்படுத்துவதில்லை. தனக்கு மன அழுத்தம் உண்டு என்பதை வெளிப்படையாக நேர்காணல்களில் கூறக்கூடியவர்தான். ‘பத்மாவதி’ என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்ததற்காக இந்துத்துவவாதிகளால் மிரட்டப்பட்டார். படத்தின் இயக்குநருக்கும் இவருடைய தலைக்கும் விலை வைக்கப்பட்டது. ‘பத்மாவதி’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் வெளியான திரையரங்கங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. முன்னதாக தீபா மேத்தாவின் ‘ஃபயர்’ திரைப்படத்திற்கும் இப்படியான தீ வைப்பு சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஒரு கலைஞராக, அதிலும் ஒரு பெண்ணாக, ஒரு திரைக் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக தலைக்கு விலை வைக்கப்பட்ட முதல் நடிகை தீபிகா படுகோனேதான்.

ஹாதியா

கேரளாவின் ஹாதியா இந்து மதத்தில் பிறந்து, இஸ்லாம் மீது கொண்ட பற்று காரணமாக மதம் மாறினார். தன் புதிய மதத்திலேயே ஒருவரை மணம் செய்துகொள்ளவேண்டி, இணையதளம் மூலமாக வரன் தேடி ஷஃபின் ஜஹானை திருமணம் செய்துகொண்டார். இதை விரும்பாத ஹாதியாவின் தந்தை அசோகன், வழக்கு தொடுக்க, கேரள உயர் நீதிமன்றம் அவர்களுடைய திருமணத்தை செல்லாது என்று அறிவித்தது. சட்டத்திற்கும் அறத்திற்கும் புறம்பானது இத்தீர்ப்பு என நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்த நிலையில், உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு வர, பதினோரு மாதங்கள் சட்டவிரோதமாக கணவனிடமிருந்து பிரிக்கப்பட்டு தந்தை வீட்டில் சிறைவைக்கப்பட்டிருந்த ஹாதியா புது டில்லி சென்று தன் தரப்பு நியாயத்தை எடுத்துவைத்தார்.

‘கணவருடன் இணைந்து வாழவே விருப்பம்’ என்று கூற, உச்ச நீதிமன்றமோ அவர் கல்வியைத் தொடரவேண்டுமென்று கூறி அவர் படித்துக்கொண்டிருந்த சேலம் கல்லூரிக்கே அவரை அனுப்பிவைத்து, கல்லூரி முதல்வரை காப்பாளராக நியமித்தது. கல்லூரி முதல்வரோ கணவரைப் பார்க்க ஹாதியாவை அனுமதிக்கப்போவதில்லை என்று கூற, கல்லூரி விடுதி என்கிற பெயரில் இன்னொரு சிறைச்சாலையில் தற்போது ஹாதியா வசிக்கிறார். தன் துணையைத் தானே தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தின் குரலாய் ஒலிக்கும் ஹாதியாவின் குரல் ஒவ்வொரு பெண்ணும் செவிமடுக்கவேண்டிய குரல்.

இரோம் ஷர்மிளா

மணிப்பூரின் ராணி இரோம் ஷர்மிளா. மணிப்பூர் மாநிலத்தில் பிரயோகிக்கப்படும் சிறப்பு ஆயுதப்படை சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி பத்தாண்டுகள் உண்ணா நோன்பிருந்தார். வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட அவர் தன் உண்ணாநோன்பை தேன் துளி ஒன்றை சுவைத்து முடித்துக்கொண்டார். தேர்தலில் நின்ற அவருக்கு மிகக் குறைவான வாக்குகளே கிடைத்தன. தன் காதலரை மணமுடிக்க முடிவு செய்த அவர் திருமணம் செய்துகொண்டு வாழ தேர்ந்தெடுத்த இடம் கொடைக்கானல்.

அயல்நாட்டுக்காரர் ஒருவரை மணம் செய்துகொள்ள அவர் எடுத்த முடிவும்கூட மதவெறியர்களால் சர்ச்சைக்குள்ளானது. அனைத்தையும் மீறி அவர் கொடைக்கானலில் தன் காதலரை பதிவுத் திருமணம் மூலம் கரம் பற்றினார். இப்போதையை அவருடைய மண வாழ்க்கையில், கடந்த காலத்தில் சந்தித்த புயலுக்குப் பின்னான அமைதி போல் காட்சியளிக்கிறது.

ப்ரித்திகா யாஷினி

பெண்களே இன்னும் பல துறைகளில் கால் பதிக்காத நிலையில், திருநங்கைகளின் நிலைமை இன்னும் மோசமாகத்தான் இருக்கிறது. திருநங்கைகளை சக மனிதர்களாக ஏற்றுக்கொள்ளாத இச்சமூகத்தில் அவர்கள் ஒவ்வொரு விஷயத்திற்காகவும் போராட வேண்டியுள்ளது. அப்படியொரு போராட்டத்துக்கு சொந்தக்காரர்தான் ப்ரித்திகா யாஷினி. இந்தியாவிலேயே முதன்முறையாக காவல்துறை ஆய்வாளராக பதவியேற்றுக்கொண்டார்.  ப்ரித்திகா யாஷினிக்கு பல திசைகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன. திருநங்கைகளின் முன்னேற்றத்துக்கு இவருடைய இந்த சாதனை மிகப்பெரிய உத்வேகத்தைத் தரும்.

நந்தினி

நந்தினியின் படுகொலை அண்மைக்காலமாக நடந்துவரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு ஒரு சான்று எனலாம். மனசாட்சியுள்ள பலரும் இந்தக் கொலை நிகழ்ந்த விதம் கண்டு அதிர்ந்தனர். கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு தாக்கி கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டார் நந்தினி. அவரது உடல் கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.

தலித் பெண்ணான நந்தினியை பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி, கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் இந்துத்துவ அரசியல் கட்சிகளின் உறுப்பினரும் உண்டு. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரை காப்பாற்ற மத்திய அமைச்சர் ஒருவர் தலையிட்ட கொடுமையும் இவ்வழக்கில் நடந்தது. பெரும் அதிர்வுகளை உண்டாக்கி இருக்கவேண்டிய இந்தக் கொடூர படுகொலை பற்றிய பலரின் மௌனத்தின் பின்னால் சாதி இருந்தது கண்கூடாகவே தெரிந்தது.

ஓவியா

இந்த ஆண்டின் மிகப்பெரிய சென்சேஷன் ஓவியாதான். தமிழ்நாடே ஓவியா ஓவியா என்று பல நாட்கள் பேசிக்கொண்டே இருந்தது. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வருவதன் மூலம் இத்தனை புகழ் வேறு யாருக்கும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான். பல படங்களில் நடித்து ஒரு நடிகையாக மட்டுமே அறியப்பட்ட ஓவியாவின் இன்னொரு முகத்தையும், அவருடைய அணுகுமுறையையும் மக்கள் அறிந்துகொண்டனர்.

எப்போது எதற்கு கோபப்படவேண்டும்? ஓரிடத்தை விட்டு எப்போது நகர்ந்துவிடவேண்டும்? யாரிடம் எப்படிப் பேசவேண்டும் என்பதையெல்லாம் தனிமனித வாழ்க்கையில் கடைபிடிக்க ஒரு முன்னுதாரணமாய் ஓவியா இருந்தார் என்பது உண்மை. எப்போதும் உண்மையின் பக்கம், நியாயத்தின் பக்கம் இருந்தது, பொய் பேசாத, புறங்கூறாத நேர்மை இவையே ஓவியாவை மக்கள் தூக்கி வைத்துக் கொண்டாட காரணமாக அமைந்தன.
   
- கவின் மலர்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-06-2019

  18-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • yoga

  சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

 • octopus

  ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

 • brainfever

  பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

 • pandacub

  உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்