SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டைரீஸ்

2018-04-18@ 13:41:36

நன்றி குங்குமம் தோழி

புதிய பகுதி

அது என்ன கிச்சன் டைரி?


‘எண் சாண் உடலுக்கும் சிரசே பிரதானம்’ என்பார்கள். உண்மையில் எண் சாண் உடலுக்கும் வயிறுதான் பிரதானம்.  உடலுக்கு மட்டும் அல்ல... ஒட்டுமொத்த மானுட குலத்துக்கும் வயிறுதான் பிரதானமாயிருந்திருக்கிறது. வீட்டின்  மூலையில் உள்ள சின்னஞ்சிறு சமையலறைதான் வரலாற்றின் போக்கையே நிர்ணயித்திருக்கிறது. உலக வரைபடத்தின்  கோடுகளை மாற்றிப்போட்டிருக்கிறது. ஐரோப்பியர்களுக்கு குறுமிளகின் மீதிருந்த மட்டற்ற காதல்தான் இந்தியாவுக்கு  கடல் வழி காணச் செய்தது.

காலனிகளை உருவாக்கி உலகப்போரைக் கொண்டுவந்தது. எனவே, கிச்சனின் கதை வெறும் உப்பு, புளி சமாச்சாரம்  அல்ல. அதில் அரசியலும் இருக்கிறது. அழகியலும் இருக்கிறது. இந்தத் தொடர் அதன் அத்தனைப் புள்ளிகளையும்  தொட்டும் செல்லும் சிறு முயற்சி. உணவும் உணவு நிமித்தமுமான அத்தனையும் இங்கு இடம்பெறும். கலப்படம் முதல்  கவிதை வரை உணவு தொடர்பான பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை இதில் காணப்போகிறோம்.

டயட் மேனியா


‘நான் டயட்ல இருக்கேன்...’ இந்த டயலாக்தான் இப்போது திரும்பிய பக்கம் எங்கும் ஒலிக்கிறது. ஒல்லிபெல்லி டீன்  ஏஜ் டீன்ஸ் முதல் அன்லிமிடெட் தொப்பை அங்கிள்ஸ் வரை அனைவருமே டயட்டில் இருக்கிறார்கள். லோ கார்போ  டயட், பேலியோ டயட்,  ஃப்ரூட்டேரியன் டயட், ஜி.எம். டயட், வீகன் டயட்... அப்பப்பா! டயட்கள் எத்தனை டயட்களடி  எனப் பாடத் தோன்றுகிறது.

எல்லா டயட்டும் எல்லோருக்கும் செட் ஆவது இல்லை. உடல்வாகு, வாழும் சூழல், வாழ்க்கைத் தரம், உடல் நிலை,  வயது ஆகியவற்றுக்கு ஏற்ப டயட்டும் ஆளுக்கு ஆள் மாறுபடும். எனவே, உங்களுக்கு ஏற்ற டயட் எது என்று முதலில் கண்டுபிடிக்க வேண்டும். நண்பர்கள் பின்பற்றுகிறார்கள். உறவினர்கள் சொன்னார்கள் என  ஏதாவது ஒரு டயட்டை பின்பற்றி ஏறுக்கு மாறாக எடைகூடி அவதிப்படாதீர்கள். இந்த வாரம் பேலன்ஸ்டு டயட்  எனப்படும் சமச்சீர் உணவைப் பற்றி பார்த்துடுவோம் வாங்க…

பேலன்ஸ் டூ டயட் என்ற பேரைப் பார்த்துட்டு என்னவோ ஏதோன்னு நினைச்சுக்காதீங்க. நாம் காலங்காலமாக  தலைவாழை இலைப் போட்டு வெளுத்து வாங்குறோமே அதுதான் சமச்சீர் உணவு. எப்படி? ஓர் ஆரோக்கியமான  உணவுத்தட்டில் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, புரோட்டின் எனும் புரதச்சத்து, வைட்டமின்கள்,  இரும்பு, கால்சியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள், நுண்ணூட்டச்சத்துக்கள், நார்ச்சத்து ஆகியவை சம  அளவில் இருக்க வேண்டும். நம்முடைய பாரம்பரிய சாப்பாட்டில் இந்த அனைத்துமே சம அளவில் இருக்கின்றன.  எனவே, இந்த நிலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான உணவுமுறை என்றால் சமச்சீர் உணவுதான்.  
 
அதைத்தானே இத்தனை வருஷமா சாப்பிட்டு இப்படி உடல் பருத்து இருக்கிறோம் என்கிறீர்களா? உண்மையில்  தொப்பைக்கும் உடல் பருமனுக்கும் காரணம் உணவு மட்டுமே அல்ல. தினசரி எட்டு மணி நேரத் தூக்கம், முறையான  உடற்பயிற்சி, வேளை தவறாத அளவான ஆரோக்கியமான உணவு இதுதான் முழுமையான டயட் பேட்டர்ன். இதில் எந்த  ஒன்றை நீங்கள் தவறவிட்டாலும் எடை அதிகரிப்பதைத் தவிர்க்க முடியாது. எனவே, பழியை உணவு மீது மட்டும்  போடாதீங்க.

எண்ணெயில் என்ன இருக்கு?


‘நல்லெண்ணெய்தான் நல்லது’ என்கிறார் ஒரு டாக்டர். ‘தேங்காய் எண்ணெய் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வராது’  என்கிறார் ஒருவர். ‘ஆலிவ் ஆயில்தாங்க பெஸ்ட்’ என்கிறார் இன்னொருவர் ‘ரைஸ் பிரான் ஆயில் ஹெல்த்தி.  அதுக்கு மாறுங்க’ என்கிறார் வேறு ஒருவர். இதில் எது உண்மை? எல்லாமே பாதி உண்மைதான். எண்ணெயில்  கொழுப்புச்சத்து அதிகமாக உள்ளது. கொழுப்பில் ஹெச்.டி.எல் என்ற வகையை நல்ல கொழுப்பு என்கிறார்கள். ஓர்  ஆரோக்கியமான உடலில் நல்ல கொழுப்பு அதிகமாகவும் கெட்ட கொழுப்பு குறைவாகவும் இருக்க வேண்டும்.  எல்லாவகையான எண்ணெயிலும் இந்தக் கொழுப்புகள் உள்ளன.

எனவே, அனைத்தையுமே அளவாகப் பயன்படுத்துவது நல்லதுதான். ஆனால், தற்போது நீங்கள் பயன்படுத்தும் எண்ணெய்  நிஜமாகவே எண்ணெயா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. மரச் செக்கில் எண்ணெய் ஆட்டி எடுத்த காலம்  எல்லாம் மலை ஏறிப்போனது. விதவிதமான பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் சமையல் எண்ணெய்கள்தான்  இப்போதும் எங்கும் உள்ளன. இந்த எண்ணெய்களை உற்பத்தி செய்வதற்கு பெட்ரோலிய பொருளான க்ரூடாயில் முதல் பல்வேறு வேதிப்பொருட்களைப் பயன்படுத்து கிறார்கள் என்று குற்றம்சாட்டுகிறார்கள் நிபுணர்கள். முடிந்தால்  எல்லோரும் மரச்செக்கு எண்ணெய்க்கு மாறுங்க. எந்த எண்ணெய் பெஸ்ட் என்பதை பிறகு முடிவு செய்யலாம்.

உணவு விதி #1

கீரைகள், காய்கறிகள், பழங்களில் ஒரு வானவில் கூட்டணியை உருவாக்குங்கள். ஒவ்வொரு வண்ண காய்கறிகள்,  பழங்களும் ஒவ்வொரு வகையான சத்து கொண்டவை. எனவே, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ணம் எனத்  தேர்ந்தெடுத்து வாழ்வை  வண்ண மயமாக்குங்கள். இதனால், அனைத்துவிதமான இயற்கையான சத்துக்களும்  உடலுக்குக் கிடைக்கும்.

அக்பர் சாப்பிட்ட விருந்து

முகலாயர்கள் கிட்டதட்ட ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆண்டவர்கள். டெல்லியிலும் நாடெங்கிலும் அவர்கள்  உருவாக்கிய பெரிய கட்டடங்கள் அவர்களின் செல்வச் செழிப்பை சொல்பவை. தந்தூரி, மஞ்சூரியன், கவாப், ஃப்ரை,  க்ரில், டிக்கா என இன்று, நாம் சாப்பிடும் காரசாரமான அசைவ ஐட்டங்கள் பல முகலாயர் காலத்தில்தான் பாரசீகத்தில்  இருந்து இந்தியாவுக்கு வந்தன. அக்பர், அவர் வாழ்ந்த காலத்தில் உலகின் அதிகாரம் மிக்க மன்னர்களில் ஒருவர்.  அவருக்கு என ஸ்பெஷலான உணவுகள் தயாராகுமாம்.

பாக்தாத் முதல் பாரசீகம் வரை இருந்த புகழ் பெற்ற சமையல் கலைஞர்கள் பலர் இங்கு வந்து அக்பருக்கு  சமைத்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான வீரர்கள், அரச குடும்பத்தவர்கள் புடைசூழ அக்பர் மேற்கொள்ளும்  பயணங்களின்போது அவருக்கு எனத் தயாரான ஒரு ஸ்பெஷல் உணவைப் பற்றி சுவாரஸ்யமான குறிப்பு ஒன்று  உள்ளது.

ஒரு முழு ஒட்டகத்தை சுத்தம் செய்து மசாலா தடவி, அதன் வயிற்றில் ஒரு முழு மாட்டை வைத்து, அதன் வயிற்றில்  ஒரு முழு ஆட்டை வைத்து, அதன் வயிற்றில் ஒரு கோழியை வைத்து அதன் வயிற்றில் ஒரு முட்டையை வைத்து  பிரமாண்ட அடுப்புக்கூட்டி தந்தூரி போல் சமைத்துத் தருவார்களாம். நன்கு பக்குவமாக சமைக்கப்பட்ட கறி பாகங்களும்,  கோழியும் அதன் முட்டையும் அரசருக்குச் செல்லுமாம். படிக்கச் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. டேஸ்ட்தான் எப்படி  இருக்கும் என்று தெரியவில்லை.

எக்ஸ்பர்ட் விசிட்

அனில் அம்பானி, கரீனா கபூர் போன்ற பிரபலங்களுக்குப் பிரத்யேக ஊட்டச்சத்து நிபுணராக இருப்பவர் ருஜுதா திவேகர். உணவு தொடர்பாக இவர் சொல்லும் பல பரிந்துரைகள் அதிரடி ரகம். வாங்க சாம்பிள் பார்க்கலாம்.  அரிசி சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்பது ஒரு தவறான கருத்து. முடிந்தவரை அரிசி சாப்பிடுங்க. ஏனெனில் அதைத்தான் நம் முன்னோர்கள் சாப்பிட்டார்கள்.

நெய் நன்றாக ஊற்றிச் சாப்பிடுங்கள். நெய்யின் கிளைசெமிக் எண் குறைவானது. இதனால், சர்க்கரை நோயாளிகள்கூட  பயப்படாமல் நெய் ஊற்றிச் சாப்பிடலாம். நெய்யில் அதிகமான நல்ல கொழுப்பு உள்ளது. தேங்காயிலும் முந்திரியிலும்  கொலஸ்ட்ரால் இருக்கிறது. இவற்றைச் சாப்பிட்டால் வெயிட் போடும் எனப் பலர் தவிர்த்துவிடுகின்றனர். இது தவறு.  தேங்காயும், முந்திரியும் நம் ஊரில் அதிகம் விளைபவை. தேங்காய், முந்திரி இரண்டிலும் நல்ல கொழுப்பு  நிறைந்திருக்கிறதே தவிர கொலஸ்ட்ரால் இல்லை.

நாட்டுவெல்லத்தைப் பனிக்காலம் மற்றும் மழைக் காலத்தில்கூட சாப்பிடலாம். வெள்ளைச் சர்க்கரையைக் கோடை  காலத்தில் மட்டும் சேர்த்துக்கொள்ளுங்கள். சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
தைராய்டு பிரச்சனை குணமாக டயட் மட்டுமே போதாது. ஆரோக்கியமான லைஃப் ஸ்டைலும் முக்கியம்.  எலெக்ட்ரானிக் கேட்ஜெட்டுகள் பயன்படுத்துவதைக் குறையுங்கள். இரவு படுக்கைக்குச் செல்லும் ஒரு மணி நேரத்துக்கு  முன்பே டி.வி, செல்போன், லேப்டாப் எல்லாவற்றையும் அணைத்துவிடுங்கள். நன்றாக உறங்குங்கள். மனஅழுத்தத்தைத்  தவிர்த்திடுங்கள். வாரம் 150 நிமிடங்கள் உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். இதனால், தைராய்டு பிரச்சனைக்கு நல்ல  பலன் கிடைக்கும்.  

- இளங்கோ கிருஷ்ணன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-04-2019

  24-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • vote

  3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

 • hailstrom

  தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

 • bookday

  இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

 • ukraine

  உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்