SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாஸ்டர்ஸ் டூ நாச்சியார்

2018-04-04@ 15:31:58

நன்றி குங்குமம் தோழி

- இவானா


கேரள தேசம் தமிழ் மக்களுக்கு அளித்திருக்கும் இன்னுமொரு தேவதை இவானா. ‘நாச்சியார்’ திரைப்படத்தில் ‘அரசி’ எனும் பாத்திரத்தில் ஏழை மைனர் பெண்ணாக நடித்து கவனம் ஈர்த்திருக்கிறார். உண்மையிலும் இவர் 12ம் வகுப்பு படித்து வருபவர்தான். குழந்தை நட்சத்திரமாக மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமாகி இன்றைக்கு முக்கிய கதாபாத்திரத்தில் தன் நடிப்புத் திறனை வெளிக்காட்டியிருக்கிறார். ‘நாச்சியார்’ படத்துக்காக தமிழ் கற்றுக் கொண்ட இவானா மலையாள தொணியில் தமிழ் பேசுகிறார்...

உங்களைப் பத்தி சொல்லுங்க...
சொந்த ஊர் கோட்டயம் பக்கத்தில். அல்லீனா ஷாஜிதான் என் பெயர். அல்லீனாவை சரியா உச்சரிக்க மாட்டாங்கங்குறதால என்னோட உறவினர்தான் சினிமாவுக்காக ‘இவானா’னு பெயர் வெச்சார். அப்பா நிகழ்ச்சிகளுக்கு டெக்கரேசன் பண்ற தொழில் பண்றார். அம்மா வீட்டைப் பாத்துக்குறாங்க. எனக்கு ஒரு அக்காவும் ஒரு அண்ணனும் இருக்காங்க. அண்ணனும் நானும் இரட்டையர்களாகப் பிறந்தோம். அண்ணன் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்துல ‘பஹத் ஃபாசிலோட குழந்தைப் பருவ பாத்திரத்தில் நடிச்சிருக்கான்.

சினிமாவுக்கும் உங்க குடும்பத்துக்குமான தொடர்பு எப்படிப்பட்டது?
நானும், என் அண்ணனும் மட்டும்தான் சினிமாவுல நடிக்கிறோம். மத்தபடி எங்க குடும்பத்துக்கும் சினிமாவுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ப்ரித்விராஜ், சசிக்குமார் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்ஸ்’ படத்துலதான் நான் குழந்தை நட்சத்திரமா அறிமுகம் ஆனேன்.  பியா - வின் குழந்தைப் பாத்திரமாக நடிச்சிருந்தேன். அந்தப் படத்தோட இயக்குனர் ஜோனி ஆண்டனி என்னோட அம்மா வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர்.

நான் ஆறாம் வகுப்பு படிக்கிறப்போ என்னைப் பார்த்தவர் அந்த ரோல்ல என்னை நடிக்க வெச்சார். ஆஷிக் அபு இயக்கத்தில் ரீமா கல்லிங்கல், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான ‘ராணி பத்மினி’ படத்தில் ரீமா கல்லிங்கலின் குழந்தைப் பாத்திரமாக நடிச்சேன். காலித் ரஹ்மான் இயக்குன ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ படத்தில் ஆஷிஃப் அலியோட தங்கையாக நடிச்சிருந்தேன். எதிர்பாராத விதமாக கிடைச்ச வாய்ப்புதானே தவிர, நடிகையாகனும்ங்கிற எண்ணமெல்லாம் பெருசா இருந்ததில்லை.

‘நாச்சியார்’ பட வாய்ப்பு எப்படிக் கிடைச்சுது?
ஒரு பத்திரிகையில் வெளிவந்த என் ஃபோட்டோவைப் பார்த்துட்டுதான் பாலா சார் கூப்பிட்டார். நடிச்சுக் காட்ட சொல்லி ஃபோட்டோ ஷூட் பண்ணாங்க.
அதுல பல விதமான பாவனைகளைக் காட்டினேன். என்னோட நடிப்பு பிடிச்சிருந்ததால செலக்ட் பண்ணாங்க.

சென்னை தமிழ்ல பேசியிருக்கீங்களே?
ஆர்.ஜே ரோகிணியை வெச்சு எனக்கு 10 நாட்கள் சென்னைத் தமிழ் கத்துக்கொடுத்தாங்க. எந்தெந்த வார்த்தைகளை எப்படி எப்படி உச்சரிக்கணும்னு கத்துக்கிட்டேன். அதுக்கப் புறம்தான் ஷூட்டிங்குக்குப் போனேன். ரொம்ப சிரமமாவெல்லாம் இல்லை. நல்லாவே பேசி நடிச்சேன்.

இயக்குனர் பாலா படத்துல நடிக்கிறது ரொம்ப சவாலான விசயம்னு சொல்லுவாங்க... உங்க அனுபவம் எப்படி?
அப்படியெல்லாம் சவாலா எனக்கு இல்லை. ஸ்பாட்டுக்கு வர்றதுக்கு முன்னாடியே ஸ்க்ரிப்டை வாங்கி வசனங்களை மனப்பாடம் பண்ணிக்குவேன். ஸ்பாட்டுக்கு வந்ததும் பாலா சார் டயலாக் சொல்லிக் கொடுத்து அதுக்கு எப்படி நடிக்கணும்னு நடிச்சுக் காட்டுவார். அவரை அப்படியே ஃபாலோ பண்ணி நடிச்சதால எனக்கு பெரிய சிரமம் இருந்ததா தெரியலை. பாலா சாரோட  ஷூட்டிங் ஸ்பாட் கொஞ்சம் ஸ்டிரிக்ட் ஆக இருந்துச்சு. எல்லோரும் சின்சியரா வேலை செஞ்சாங்க. பாலா சாரோட சின்சியாரிட்டிதான் அதுக்கு முக்கியக் காரணம். நான் இந்தப் படத்தில் நடிச்சப்போ ரொம்ப கம்ஃபோர்டா உணர்ந்தேன்.

‘நாச்சியார்’ படத்தில் நடிச்சதுக்கு பாராட்டு கிடைச்சுதா?
என்னோட குடும்பம், நண்பர்கள் எல்லாம் என்னை ஆரம்பத்துல இருந்தே ஊக்கப்படுத்திட்டு இருக்காங்க. நடிகர் சிவக்குமார் சார் நான் நல்லா நடிச்சிருக்கிறதா பாராட்டி வாட்சப்ல மெசேஜ் பண்ணியிருந்தார். பாலா சார், ஜீவி பிரகாஷ் சார் எல்லாருமே நல்லா நடிக்கிறேன்னு ஊக்கம் கொடுத்தாங்க.

ஜோதிகா கூட நடிச்ச அனுபவம்...
ஜோதிகா மேடம்னா எனக்கு சின்ன வயசுல இருந்தே பிடிக்கும். அவங்களோட தீவிரமான ஃபேன் நான். ஸ்பாட்ல முதன் முறையா அவங்களைப் பார்த்தப்ப காக்கி யூனிஃபார்ம்ல இருந்தாங்க. நான் என்னை அறிமுகப்படுத்திக்கிட்டதும் என்னைப் பத்தி விசாரிச்சாங்க. நமக்கு ரொம்பப் பிடிச்சவங்க நம்மளைப் பத்தி விசாரிக்கும்போது வர்ற சந்தோசமே தனி. சகஜமாக பழகுறது மட்டுமில்லாம நல்லா உதவியும் பண்ணுவாங்க. சீனியர் ஆர்ட்டிஸ்டா ஷூட்டிங் ஸ்பாட்ல எனக்கு பல விசயங்களை கத்துக் கொடுத்தாங்க. அதெல்லாம் மறக்கவே முடியாது.

தமிழ் சினிமாவுல உங்க ஃபேவரட் யாரு?
விஜய், சூர்யா, விஜய் சேதுபதி, தனுஷ் எல்லோரையும் எனக்குப் பிடிக்கும். இவங்களோட படங்களை தவறாம பார்த்துடுவேன். நடிகைகள்ல ஜோதிகா, நயன்தாரா, நஸ்ரியா இவங்களைப் பிடிக்கும்.

உங்க தனித்திறன் என்ன?
படிப்புல நான் எப்பவுமே டாப் ரேங்க்தான். படிப்புக்கு அடுத்து டான்ஸ்ல எனக்கு ஆர்வம் அதிகம். வெஸ்டர்ன், பரதம் இரண்டு நடனங்களும் ஆடுவேன்.

அடுத்து என்ன பண்ணப் போறீங்க?
12ம் வகுப்பு முடிக்கப் போறேன். சி.ஏ படிக்கணும்ங்கிறதுதான் என் விருப்பம். இப்பப் பட வாய்ப்புகள் தமிழிலும், மலையாளத்திலும் அதிகமாக வந்துக்கிட்டிருக்கு. அதனால் பி.காம் படிச்சிட்டு சி.ஏ பண்ணலாம்னு இருக்கேன்.

- கி.ச.திலீபன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-07-2019

  17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • DongriBuildingCollapse

  மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

 • ChangchunZoologicalPark

  உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • 16-07-2019

  16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்