SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இது ஐ.டி காதல்

2018-04-03@ 14:29:23

நன்றி குங்குமம் தோழி

தீபலட்சுமி - அலோசியஸ் ஜோசப்

எழுத்தாளர் ஜெயகாந்தன்- எழுபதுகளிலேயே பலர் பேசத் தயங்கி யதை தன் எழுத்தில் பேசியவர். அவருடைய மகளின் திருமணம் காதல் திருமணம் என்பதில் வியப்பில்லை. ஜெயகாந்தனின் மகள் தீபலட்சுமி தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றினாலும் எழுத்து பணியிலும் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறார். ஜெயகாந்தனுடைய சிறுகதை களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். தன்னுடைய காதல் திருமணம் பற்றி நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

“நான் படிச்சது எல்லாம் சென்னைதான். ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கும் போது ஜோவை சந்தித்தேன். பொதுவாகவே கம்பெனியில் வேலை பார்க்கும் எல்லோருக்கும் ேஜாவை ரொம்ப பிடிக்கும். எனக்கு அவர் மேல் ஒரு மரியாதை இருந்தது. ரெண்டு பேரும் நல்ல ஃபிரண்ட்ஸ். ஒரு நாள் உன்னை பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு கெத்தா போயிட்டாரு. அப்போதான் அவர் என்னை காதலிக்கிறார்னு எனக்கு தெரியவந்தது. லவ் பண்ணும்போது அவர் ஃபிரண்ட்ஸ் ரூம்ல தங்கி இருந்தப்போ, எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அவருக்கு இலக்கியம், கடிதம் எழுதுறது, கவிதை எழுதி இம்ப்ரஸ் பண்ணுறதுலாம் பிடிக்காது.

ஆனால் முதல் முறையாக அவரையே அறியாமல் அவர் எழுதிய முதல் கடிதம் அது. இப்பவும் அந்தக் கடிதத்தை அடிக்கடி பார்த்து ரசிப்பேன். காதலிக்கும்போது நான் மயிலாப்பூர்லயும் அவர் தரமணிலயும் வேலை பார்த்தோம். தினமும் வேலையை முடிச்சிட்டு, எவ்வளவு நேரம் ஆனாலும் வெயிட் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வருவார். அதெல்லாம் என்னால மறக்கவே முடியாது. நகைச்சுவை உணர்வு இவர்கிட்ட அதிகம். ரொம்பப் பிடித்தது தன்னம்பிக்கை, சுயமரியாதை, நேர்மை! பிடிக்காதது:அதீத பிடிவாதம். நான் கல்லூரி படிக்கும்போது நிறைய நண்பர்கள் இருந்தாங்க.

ஆனால் அவங்க பேசும்போது ஏதோ ஒரு தயக்கத்தோடதான் பேசுவாங்க. இவர் அப்படி இல்லை. ரொம்பவே ஸ்ட்ரெயிட் பார்வர்ட். எனக்கும் சாதி, மதம் மீது நம்பிக்கை கிடையாது. ஜோவும் அப்படித்தான். எங்க வீட்டுல எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறதா சொன்னாங்க. நான் ஜோவை லவ் பண்ணிட்டு இருக்கேன். அவரையே திருமணம் பண்ணிக்கிறேனு சொல்லிட்டேன். எங்கள் திருமணம் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் எளிமையா சர்ச்சில நடந்தது. திருமண வாழ்க்கையில் அடிக்கடி சின்னச் சின்ன பிரச்சனைகள் வரும். ஆனால் பெரிய அளவில் போனது கிடையாது.

அவர் எனக்கு எந்த கட்டுப்பாடும் விதித்தது கிடையாது. ரெண்டு பேரும் வீட்டு வேலைகளை செய்வோம். என்னுடைய வாழ்க்கையில எனக்கு மிகப்பெரிய பலமாக இருக்கக்கூடியவர். ரெண்டு பெண் குழந்தைகள் எங்களுக்கு. குழந்தை பிறந்தபின் பொறுப்புகள் அதிகமாக இருந்தது. அந்த சமயத்தில் எல்லா குடும்பத்திலும் இருக்கிற மாதிரி எங்களுக்குள் சின்னச் சின்ன கருத்து வேறுபாடும் இருந்தது. ஆனால் அது ஒரு பெரிய விஷயமா எங்களுக்கு தெரியல. குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்த பிறகு அவர்களால் எங்க வீடு மகிழ்ச்சியால் நிறைந்திருக்கிறது” என்றவரை தொடர்ந்து பேசினார் அலோசியஸ் ஜோசப்.

“நான் பிறந்தது, ஸ்கூல் முடித்தது எல்லாம் மதுரை மாவட்டம். காலேஜ் சென்னையில் முடிச்சிட்டு ஐ.டி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். 2001ம் ஆண்டு நான் வேலை பார்க்கும் அதே கம்பெனியில் தீபாவை பார்த்தேன். ரொம்ப போல்டான டைப். பார்த்தபோதே எனக்கு பிடிச்சிருந்தது. சின்ன வயசுல இருந்தே பாய்ஸ் ஸ்கூல், பாய்ஸ் காலேஜ்லதான் படிச்சேன். அதனால எனக்கு கேர்ள் ஃபிரண்ட்ஸ் யாரும் இல்லை. என்னோட முதல் கேர்ள் ஃபிரண்ட் தீபாதான். அவரே என் வாழ்க்கை துணையாக வருவார்னு அப்போ எனக்கு தெரியல.

ஒரே கம்பெனியில ரெண்டு பேரும் வேலை பார்க்க வேண்டாம்னு வேற வேற கம்பெனிக்கு மாறிட்டோம். எனக்கு அக்கா ஒருவர் இருக்காங்க. அவங் களுக்கு திருமணத்தை முடிச்சிட்டு வீட்டில் சொல்லலாம்னு இருந்தேன். 4 ஆண்டுகள் ரெண்டு பேரும் காதலிச்சோம். எங்க அப்பா, அம்மாவுக்கு நான் தீபாவை லவ் பண்றேன்னு ஏற்கனவே சந்தேகம் இருந்தது. நான் வீட்டுல சொன்னதும் முதல்ல மறுத்தாங்க, அப்புறம் அவங்களுக்கு வேற சாய்ஸ் இல்லாததால வீட்டுலயே பேசி எங்கள் திருமணம் 2005ம் ஆண்டு மே 11ல் நடந்தது.

தீபாவிடம் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் மனசுல என்ன இருக்கோ அதை நேரடியாக பேசுவார். அந்த தைரியம் எனக்கு ரொம்ப பிடிக்கும். நல்லா பாடுவாங்க. லவ் பண்ணும் போது எனக்காக ஒருமுறை ‘வெள்ளை புறா ஒன்று…’ பாடலை பாடினாங்க. அதை என்னால் மறக்கவே முடியாது. அவங்க கிட்ட பிடிக்காத விஷயம்னா ரொம்ப கேர்லஸா இருப்பாங்க. சோஷியல் மீடியாவில் ஆக்டிவா இருப்பாங்க. மத்தபடி ரெண்டு பேரும் மேட் ஃபார் ஈச் அதர்தான். திருமணத்திற்கு பிறகு ரெண்டு பேருக்கும் ஒரே வயசுங்குறதால ஒரு சில விஷயத்தில் கருத்து ரீதியான சிக்கல் இருந்தது.

அது ஒரு சவாலாகவே இருந்தது. சின்ன வயசுல இருந்தே குழந்தைகளை எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு பெண் குழந்தைதான் பிறக்கணும்னு ஆசைப்பட்டேன். அதே போல இப்போ எங்களுக்கு நேஹா, ஷைலானு பெண் குழந்தைகள் இருக்காங்க. அவங்கதான் என்னுடைய உலகம். ரெண்டாவது குழந்தை பிறந்தபோது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. அப்போ நான் வெளிநாடு போக வேண்டியது இருந்தது. போயிட்டு ஒரு வருஷம் கழிச்சு வந்தபோது, அவ என்கிட்ட பழகுறதுக்கே கொஞ்சநாள் ஆயிடுச்சி.

அப்புறம் ஒட்டிகிட்டா. இப்போ என்னோட குடும்பம்தான் என்னுடைய உலகம். குழந்தை வளர்ப்பு மட்டுமல்ல, நாம் பார்த்து வளர்ந்த தம்பதிகள் நமக்குள் ஏற்படுத்திய பிம்பங்கள் காரணமாக இருவருக்கும் குடும்ப வாழ்க்கை குறித்து சில வேறுபட்ட எதிர்பார்ப்புகள் இருந்தன. இதனால் பூசல்களும் வந்தன.  ஆனால் பரஸ்பர புரிதல்களுக்குப் பின் இருவருமே நிறைய பரிணமித்திருக்கிறோம்’’ என்றார்.

-ஜெ.சதீஷ்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • UkraineCoronaProtest

  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

 • puthu2020

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

 • rayil21

  ஆஸ்திரேலியாவில் நொடி பொழுதில் தரம்புரண்ட பயணிகள் ரயில்: 2 பேர் பலி...ஏராளமானோர் படுகாயம்!

 • coronaa_vugaan11

  கொரொனா வைரஸ் வராம பின்ன என்ன வரும்? - பறவைகள், முயல்கள், வெளவால்கள், பாம்புகள் விற்கப்படும் வுஹான் கடல் உணவு சந்தை!!!

 • pakistan21

  பெங்களூருவில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணியில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷம் போட்ட பெண் கைது: போலீசார் அதிரடி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்