SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேண்டலின் சகோதரிகள்

2018-03-08@ 11:47:12

நன்றி குங்குமம் தோழி

சூலமங்கலம் சகோதரிகள் போல ஒரே நிறத்தில், ஒரே மாதிரியாக உடை உடுத்தி, மேண்டலின் வாசித்து மேண்டலின் சகோதரிகளாக தங்களை அடையாளப்படுத்தி இருக்கிறார்கள் ஸ்ரீஉஷா, ஸ்ரீஷா சகோதரிகள். மார்கழி மாதத்தில் மிகவும் பரபரப்பான தங்களின் இசைக் கச்சேரிகளுக்கு நடுவே, நம்மிடம் பேசத் தொடங்கினர் இருவரும்.

‘‘நாங்கள் இருவரும் இரட்டையர்கள் அல்ல. ஆனால் இரட்டையர் மாதிரி ஒரே உடை உடுத்தி, மேண்டலினோடு வலம் வருகிறோம். எங்கள்இருவருக்கும் ஒன்றரை வயதுதான் இடைவெளி என்பதால் சின்ன வயதிலிருந்தே, எங்கள் பெற்றோர் எங்களுக்கு ஒன்றாக உடை உடுத்துவது, ஒன்றாக விளையாட விடுவது, ஒன்றாக பள்ளிக்கு செல்வது என எது செய்தாலும் ஒன்றாகவே செய்யத் தொடங்கினோம். அதேபோல் மேண்டலின் வாசிக்கப் பழகியதும் ஒன்றாகவே நிகழ்ந்தது. தொடர்ந்து கச்சேரிகளுக்கும் ஒன்றாகவே வாசிக்கச் சென்றோம். மேண்டலின் சகோதரிகள் என்ற அடைமொழி எங்களுக்கு தானாகவே வந்து ஒட்டிக் கொண்டது” என சிரிக்கின்றனர் இவர்கள்.

‘‘எங்களுக்கு நான்கு முதல் ஐந்து வயதிருக்கும்போது, எங்கள் அப்பா திருமூர்த்தி வீட்டில் கிட்டார் வாசிப்பார். வாய்ப்பாட்டு பாடுவார்.  அவர் வீட்டில் கிட்டார் பயிற்சி செய்வதை நாங்கள் இருவரும் குழந்தைகளாக இருக்கும்போது, கவனித்துக்கொண்டே இருப்போம். அவர் அலுவலகம் சென்றதும் அந்த கிட்டாரை எடுத்து அப்பாவைப்போல் வாசிக்க முயற்சிப்போம்.

இதை அறிந்த அப்பா எங்களுக்கு மேண்டலின் வாங்கிக் கொடுத்து கற்றுக் கொடுத்தார். மேண்டலின் கிட்டார் மாதிரியே சிறியதாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் ஆர்வமாகக் கற்றுக்கொள்வதைப் பார்த்து மேண்டலின் ஸ்ரீனிவாசன் சாரின் குருவான, ருத்ரராஜூ சுப்பாராஜூ சாரையே எங்களது குருவாகவும் ஏற்கவைத்து, முறைப்படி கற்க வைத்தார். அவரைத் தொடர்ந்து செங்காலிபுரம் எஸ்.வி. ராமமூர்த்தி சாரை, அடுத்த குருவாக ஏற்று பதினெட்டு ஆண்டுகளாக அவரிடம் மேண்டலின் கற்றுக்கொண்டோம்.

இசையோடு எங்கள் பள்ளிப் படிப்பும் +2வரை தொடர்ந்தது. நாங்கள் இருவருமே ரெகுலராக பள்ளிக்குச் சென்றோம். தொடர்ந்து எங்களுக்கு நிறைய இசைக் கச்சேரிகள் வரத் துவங்கவும், கல்லூரி செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு கச்சேரி உறுதியானால் பயிற்சி, பயணம் என எங்கள் படிப்பு தடைபடும், எனவே ரெகுலர் கல்லூரிக்குச் செல்ல முடியாமல், அஞ்சல் வழியாக இருவரும் பி.ஏ. பப்ளிக் அட்மினிஸ்டேரஷன் படித்தோம்.

மார்கழி மாதம் என்றால் எங்களுக்கு தொடர்ந்து நிறைய கச்சேரிகள் கிடைக்கும். அதில் வரும் பார்வையாளர்கள் நாங்கள் மேண்டலின் வாசிப்பதைப் பார்த்து, அவர்கள் வீட்டு சுபகாரியங்களுக்கு எங்களை மேண்டலின் வாசிக்க அழைப்பர். மார்கழி மாதம் என்றால் தினமும் ஒன்றரை மணிநேரம் வரை வாசித்து எங்கள் திறமையால் ரசிகர்களை கட்டிவைப்போம். திருமண நிகழ்ச்சி என்றால் இரண்டு மணிநேரம் வரை எங்களின் இசை நிகழ்வு நீடிக்கும். வந்திருக்கும் சுற்றத்தையும், நட்பையும் எங்கள் இசையால் மயக்கி அவர்களைப் பரவசப்படுத்தி விடுவோம்.

கச்சேரிக்கு எங்களை அழைப்போரின் விருப்பத்தைக் கேட்டு, இளையராஜா சார் பாடல்கள், கர்நாடக சங்கீதம், பஜனைப் பாடல்கள், ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் என அதற்கேற்ற மாதிரி மேண்டலின் இசைப்போம். கர்நாடக சங்கீதம் என்றால் மிருதங்கமும், கடமும் தேவைப்படும், இதற்கு 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை ஆகும். இளையராஜா சார் பாடல்கள், பஜனைப் பாடல்கள் என்றால் தபேலா, ரிதம் பேட், ஒரு மிருதங்கம் இருக்கும். இதற்கு ஐம்பதாயிரம் வரை ஆகும்.

ஏ.ஆர்.ரகுமான் சார் பாடல்கள் அல்லது முழுவதும் ஃப்யூசன் பாடல்களாக வேண்டும் என்றால் டிரம்ஸ், கீ போர்டு, ரிதம் பேட் தேவைப்படும். இதற்கு 60 ஆயிரம்வரை ஆகும். டிரம்ஸ் மற்றும் கீ போர்ட் இசைப்போருக்கு சற்று அதிகமாக ஊதியம் வழங்க வேண்டியது இருக்கும். எங்களின் மேண்டலின் இசைக் கச்சேரியில் ஆறு முதல் ஏழு பேர் வரை பக்க வாத்தியக்காரர்கள் இருப்பர். அவர்களுக்கான ஊதியமும் சேர்த்தே இதில் அடக்கம்.

பெண்களாக எங்களின் இசைப் பயணம் எங்களுக்கு சிறப்பாகவே உள்ளது. எங்களது மேண்டலின் இசை நிகழ்ச்சிக்கு வருவோர் எங்களை மிகவும் பாராட்டவே செய்கிறார்கள். எங்கள் இசையை ரசிக்கிறார்கள். மதிக்கிறார்கள். சகோதரிகளாகிய நாங்களும் எங்களுக்கு வரும் கச்சேரி நிகழ்ச்சிகளை மிகவும் ரசித்து உணர்வுபூர்வமாகவே நிகழ்த்துகிறோம். வெளிநாடுகளிலும் எங்கள் இசைக் கச்சேரிக்கு நிறைய ஆதரவு உள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்த், ஜெர்மனி, இத்தாலி, சுவிட்சர்லாந்த், டென்மார்க் இங்கெல்லாம் எங்கள் இசைக் கச்சேரிகள் நடந்திருக்கின்றன.

மேண்டலின் சகோதரிகளாகிய எங்கள் இருவருக்குமே திருமணம் ஆகிவிட்டது. இருவர் குடும்பமும் வெவ்வேறு என்றாலும் எங்களின் இசைப் பயணம் திருமணத்திற்கு பின்பும் எந்த பாதிப்பும் இல்லாமல் தொடர்கிறது. கல்யாணத்திற்கு வரன் தேடும்போதே, என் பெற்றோர்கள் எங்கள் இருவருக்கும் சென்னையில் இருப்பது மாதிரியே மணமகன்களைப் பார்த்ததால், எங்களின் இணைந்த இசைப் பயணமும் இன்றுவரை தொடர்கிறது. பயிற்சி எடுக்கும்போது மட்டும் எங்கள் பெற்றோர் வீட்டில் ஒன்றாக இணைவோம். மற்றபடி கச்சேரிக்கு கிளம்பும்போது அவரவர் வீட்டிலிருந்து கிளம்புகிறோம்” என்று விடை கொடுத்தனர் இந்த இசை சகோதரிகள்.
 
- மகேஸ்வரி

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-11-2018

    19-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்