SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ப்யூட்டி பாக்ஸ்

2018-02-02@ 14:49:18

நன்றி குங்குமம் தோழி

ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது

பெண்களின் உளவியலை உணர்ந்த நிறுவனங்கள், பெண்களை மையப்படுத்தி, தங்கள் தயாரிப்புகளான அழகுசாதனப் பொருட்கள் அத்தனையையும் சந்தைப்படுத்தி, பெண்களிடத்தில் சேர்க்கக் கையாளும் யுக்திகளை அறிய, அவற்றை விற்பனை செய்யும் மிகப்பெரிய அங்காடிகளுக்குச் சென்றால் போதும். ஒவ்வொரு தயாரிப்பின் விற்பனைப் பிரிவிலும் இருக்கும் பெண்கள், தங்கள் நிறுவனத் தயாரிப்புகளை நுகர்வோரிடம் கொண்டு சேர்க்க படும்பாட்டை... அதை வாங்குங்கள், இதை வாங்குங்கள் எனத் தயாரிப்பின் சிறப்பை விளக்கிக் கொண்டே பின்தொடர்வார்கள். அவர்களின் பேச்செல்லாம் நம் தோற்றத்தை வெள்ளையாக்கிக் காட்டுவதிலே இருக்கும். நம் முகத்திலும், தோலிலும் ஏதாவது குறைபாடு என்றால் இதை பயன்படுத்துங்கள், அதை பயன்படுத்துங்கள் என நம் கவனத்தை நொடியில் திசை திருப்ப முயற்சிப்பார்கள்.

ஏன் நம் தோல் வெள்ளையாக வேண்டும்..? வெள்ளை என்பது அழகா..? நிறமா..? என யோசித்தால் கருப்பு என்பது எப்படி ஒரு நிறமோ அதே போன்றே வெள்ளை என்பதும் ஒரு நிறம். அவரவர் பிறந்த நாடு, அந்த நாட்டின் தட்பவெப்ப நிலை, சுற்றுப்புறம் மட்டுமன்றி, அவர்களின் தோலில் உள்ள மெலனின் என்ற நிறமியே அவர்களது தோலின் நிறத்தை தீர்மானிக்கிறது. தோலில் மெலனின் குறைவாக இருந்தால் தோல் வெள்ளை நிறத்தையும், மெலனின் அதிகமாக இருந்தால் தோல் மாநிறமாகவும், கருப்பு நிறமாகவும் மாறும். அமெரிக்கர்கள் வெள்ளை நிறமாகவும், இந்தியர்கள் மாநிறமாகவும், ஆப்ரிக்கர்கள் கருப்பு நிறமாகவும் இருப்பதற்கு நம் உடலில் இருக்கும் மெலனினே மிக முக்கியக் காரணம்.

வெள்ளை என்பது மட்டுமே அழகில்லை. அழகு நிலையத்திற்குச் சென்றால் அழகாகிவிடுவோம் அல்லது அறுவை சிகிச்சை செய்தால் அழகாகிவிடுவோம் என்பதல்ல அழகின் அடிப்படை. நம் அழகை நாம் எப்படி மேம்படுத்துகிறோம் என்பதில்தான் இருக்கிறது அழகியல் உணர்வு. அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதால் அந்த நேரத்தில் வேண்டுமென்றால் உங்கள் நிறம் வெள்ளையாகத் தோன்றலாம். கூடுதல் அழகாய் தெரியலாம். ஆனால் அது நிலையற்றது. நிலையான முகப்பொலிவும், தோலில் பளபளப்பும் அதிகரிக்க வேண்டும் என்றால் முறையான உணவுப் பழக்க வழக்கம், உடற்பயிற்சி, வீட்டில் நாம் பயன்படுத்தும் இயற்கை பொருட்களை பயன்படுத்தியே அழகை மேம்படுத்தலாம். இயற்கையில் வரும் கூடுதல் தோற்றப் பொலிவே நிலையானது என்கிறார் சென்னை முகப்பேரில் ‘ப்யூட்டி டச்’ என்கிற பெயரில் பெண்கள் அழகு நிலையத்தை நடத்தி வரும் அழகுக்கலை நிபுணரான ஹேமலதா.

‘‘விளம்பரங்களில் வரும் வெள்ளை நிறத்தைக் கூட்டும் அத்தனை அழகு சாதனங்களும் சுத்த ஹம்பக். சுவற்றுக்கு வெள்ளை அடிப்பது மாதிரிதான் இவை. முகத்தை கழுவினால் எப்படி பளிச்சென்று முகம் தெரியுமோ அதுமாதிரித்தான் இவை. க்ளோவிங், ஃபேசியல், ப்ளீச்சிங் இவற்றில் மிகக் குறைவான நாட்கள்தான் அதற்கான பலன் இருக்கும்.  ஆரோக்கியத்திற்குத் தேவையான சரியான உணவை சரி விகிதத்தில் எடுக்கும்போதே நம் தோலும், முடியும் ஆரோக்கியமானதாக இருக்கும். உள்ளிருக்கும் அழகு கூடுதலாக வெளிப்படும்” என்கிறார் இவர்.

எந்த மாதிரியான முறைகளைக் கையாண்டு இயற்கை வழியில் அழகினை மேம்படுத்தலாம். அழகு நிலையங்களில் அழகை மேம்படுத்த செய்யப்படும் ஒவ்வொரு முறையும் எதற்காக செய்யப்படுகிறது. அதில் என்னென்ன பொருட்கள் சேர்க்கப்படுகிறது போன்ற விசயங்களை இனி வரும் வாரங்களில் தொடராக நம்மிடம் பேசவிருக்கிறார் இவர். இந்த இதழில் என்ன மாதிரியான உணவு வகைகளை தோலின் தோற்றப் பொலிவிற்காகவும், தலைமுடியின் உறுதித் தன்மைக்கும், வளர்ச்சிக்கும் எடுக்க வேண்டும் என்பதை தோழி வாசகர்களுக்காக தருகிறார் இவர்.

இயல்பான அழகை வெளிப்படுத்தும் உணவுகள்‘காலையில் ராஜா மாதிரி, மதியம் மந்திரி மாதிரி, இரவில் பிச்சைக்காரன் மாதிரி சாப்பிடு’ என ஒரு சொற்றொடர் உண்டு. காலையில் அதிகமான உணவில் தொடங்கி இரவில் குறைவான உணவு வரை எடுக்க வேண்டும் என்பதற்கே இப்பழமொழி. உணவை எப்போதும் சரியான நேரத்திற்கு உண்ண வேண்டும். நேரம் தவறி உண்டாலும், சத்தான உணவுகளை எடுக்கவில்லை என்றாலும் நமது தோல் பாழாகும்.

ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, தேன் இவைகள் நம் தோலுக்கு மினுமினுப்பைத் தரக்கூடிய வைட்டமின் சி உள்ள உணவுகள். மேலும் தோலுக்கு எப்போதும் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ண நிறத்தாலான பழங்கள் மிகவும் நல்லது. பூசணிக்காய், பப்பாளி, வாழைப்பழம் இவற்றிலும் தோலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது. வடநாட்டவரான சேட்டுகள் வண்ணம் நிறைந்த பழங்களை அதிகம் உணவாக எடுப்பார்கள். அதனாலே அவர்களின் தோல் மிகவும் மினுமினுப்பாகத் தோன்றும்.

பால், முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் இவை தோலுக்கு மட்டுமின்றி முடி வளர்ச்சிக்கும் மிகவும் நல்லது. கேரட், தர்பூசணி, பப்பாளி ஆகியவற்றை முடியின் ஆரோக்கியம் மற்றும் பொலிவான தோற்றத்திற்கான உணவாக எடுப்பது நல்லது. நமது உடலுக்கு நீர்ச்சத்து மிகவும் அவசியம். நீர்ச்சத்து உடலில் குறைந்தால் தோல் சுருங்குதல், தொங்குதல் போன்றவை நிகழும். மேலும் தோலின் நிறம் மங்கத் துவங்கும். எனவே தினம் எட்டு முதல் பத்து டம்ளர் வரை தண்ணீரை அருந்த வேண்டும். கீரைகளில் அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன. இவை தோலின் பளபளப்பிற்கும், முடி வளர்ச்சிக்கும் மிகவும் நல்லது. தினமும் ஏதாவது ஒரு கீரையினை உணவாக எடுப்பதே சிறந்தது.

கொண்டைக் கடலை, மஷ்ரூம், சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஆகியவற்றை தொடர்ந்து உணவில் எடுத்தால் தோல் பிரச்சனைகள், முடி பிரச்சனைகள் வராமல் மேலும் பாதுகாக்கலாம். பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட் இவற்றில் நிறைய புரதச் சத்து, வைட்டமின் இ, சி நிறைந்துள்ளது. அதனால்தான் வடநாட்டவர் இவற்றை அதிகம் உணவில் சேர்ப்பர். பாதாமில் அதிக அளவு புரோட்டீன் இருப்பதால் முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. பிஸ்தா வழுக்கை விழுந்த இடத்தில் முடிவளர உகந்தது.

முந்திரி தோலுக்கு எலாஸ்டிசிட்டி மாதிரியான நெகிழ்ச்சித் தன்மையினை தரவல்லது. அதேபோல் வால்நட்டில் எண்ணெய்  தன்மை உள்ளது. இதிலும் எலாஸ்டிசிட்டி தன்மை அதிகமாக இருப்பதால் முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. ரப்பர்பேண்டை இழுத்தால் எப்படி உடையாமல் இழுப்புத் தன்மையோடு இருக்குமோ அதுபோல வால்நட்டிலும் எலாஸ்ட்டிசிட்டி இருப்பதால் முடி உதிராமல்  இழுப்புத் தன்மையினை முடிக்கு வழங்கும். முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடு, குழி இவற்றை இது சரி செய்யும். தயிருக்கும் இந்தத் தன்மை உள்ளது.

அதேபோல் பருப்பு வகைகளில் ஃபோலிக் ஆசிட், புரதச்சத்து, இரும்புச்சத்து, துத்தநாகம் (Zinc), பயோட்டின் நிறைந்துள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கும், மாதவிடாய் சரியாக இல்லாதவர்களுக்கும் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை மருத்துவர்கள் எழுதித் தருவார்கள். அதற்குப் பதிலாக அதிக சத்துக்கள் நிறைந்த தானியவகை உணவுகளை உணவில் சேர்க்க வேண்டும். பேரீச்சம் பழத்திலும் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. கொய்யாப் பழம் முடி உதிர்வைத் தடுக்கும். ஓட்ஸ் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவு. உடல் எடை குறைப்பிற்கு இது உகந்தது. பார்லி கஞ்சி குடித்தால் சூரியனில் இருந்து தோலை நேரடியாகத் தாக்கும் யூவி ரேசை தடுக்கலாம்.

அசைவ உணவிலும் புரதச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. சிக்கன், மட்டன், மீன் இவற்றில் புரதம் அதிகம் நிறைந்துள்ளது. சிப்பியில் செய்யப்படும் உணவில்  முடிகால்கள் (ஸ்கால்ப்) மற்றும் தோலிற்குத் தேவையான ஊட்டச்சத்து உள்ளது. மீனுக்கு தோலில் தோன்றும் ஒவ்வாமையை தடுக்கும் சக்தி உண்டு. தயிரிலும் தோலுக்குத் தேவையான வைட்டமின்கள் உள்ளது. முட்டை முடிக்கும் தோலுக்கும் நல்லது.

ஆரோக்கியம் தரும் டிப்ஸ்
* மிகவும் சூடான தண்ணீரை முகம் மற்றும் தலைமுடிக்குப் பயன்படுத்தக் கூடாது. சுடுநீரை பயன்படுத்தினால் தோலில் வறட்சித்தன்மை ஏற்படும். தலையில் உள்ள மயிர்க்கால்களில் உள்ள ஃபாலிக்கல்ஸ் (follicles) பாதிப்படையும். ஃபாலிக்கல்ஸ் பாதிப்பானால் முடி கொட்டத் துவங்கும். மழை காலத்தில் மிதமான இளம் சூட்டில் குளிக்கலாம்.

* வீட்டில் முகத்திற்கு ஃபேஸ் பேக் போடும்போது முகத்திற்கு மட்டும் போட்டால் முகம் பளிச்செனத் தெரியும். கழுத்து மற்றும் காது மடல்கள் டல்லடிக்கும். எனவே முகம், கழுத்து, காது என எல்லாப் பகுதிகளையும் சேர்த்து ஃபேஸ் பேக் போட வேண்டும். எந்த ஒரு ஃபேஸ் பேக்கையும் 20 நிமிடத்திற்கு மேல் நீடிக்க விடக்கூடாது. ஈரப்பதம் லேசாக இருக்கும்போதே பேக்கினை நீக்கவேண்டும். நீண்ட நேரம் விட்டால், தோல் வரண்டு சுருக்கமடையத் துவங்கும்.

* சன் ஸ்க்ரீனாக வாழைப்பழத் தோலில் உள்ள நாரை எடுத்து முகத்தில் ஐந்து நிமிடம் போட்டு முகத்தை கழுவிவிட்டுச் சென்றால் நல்லது. மழை நேரத்தில் தோலில் ஏற்படும் வறட்டுத் தன்மையினை குறைக்க ஜெல் கலந்த மாயிஸ்சரைசரைப் பயன்படுத்தலாம். வாழைப்பழம், அவகடோ
ஆகியவற்றை மாயிஸ்சரைசராக பயன்படுத்தலாம்.

* சமையலுக்குப் பயன்படுத்தும் பட்டையினை பவுடராக்கி முகத்திற்குப் ஃபேஸ் பேக்காகப் போடலாம். இது முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை சரி செய்யும் சக்தி வாய்ந்தது. முடிக்கும் இதனைப் பயன்படுத்தலாம். முக்கியமாக கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை, மருதாணி இதெல்லாம் முடிக்கு மிகவும் நல்லது.

* மஞ்சள் தடவி குளிக்கும்போது, வெறும் மஞ்சளை மட்டும் தடவாமல் தண்ணீர், பால் அல்லது ரோஸ் வாட்டர் எதையாவது கலந்து தடவ வேண்டும். அதேபோல் மஞ்சளை அடிக்கடி பயன்படுத்தினால் தோலில் எரிச்சல் உண்டாகும். வாரத்தில் இரண்டு நாட்கள் மஞ்சள் பூசிக் குளித்தால் போதும். பாக்கெட்டில் பொடியாக வருவதை வாங்காமல் அசல் மஞ்சளை வாங்கிப் பயன்படுத்துவதே சிறந்தது.

* குளியலுக்கு பயன்படுத்தும் சோப்பில் சுண்ணாம்பு அதிகம் உள்ளது. எனவேதான் உங்கள் முகத்தை வெள்ளையாகக் காட்டுகிறது. முகத்தில் இருக்கும் எண்ணெய்த்தன்மையை எடுக்கத்தான் சோப். ஒரு நாளைக்கு இரண்டு முறை பயன்படுத்தலாம். சாதாரண தண்ணீரில் முகத்தைக் கழுவினாலே போதுமானது.

* ஈரமான தலைமுடியில் எப்போதும் சீப்பை பயன்படுத்தக் கூடாது. ஈரமுடியில் ஃபாலிக்கல்ஸ் மிகவும் மென்மையாக இருக்கும். அப்போது சீப்பை பயன்படுத்தினால் முடி சீப்புடன் வந்துவிடும். அடிக்கடி ஷாம்பூவை மாற்றி பயன்படுத்தக் கூடாது. ஷாம்பூவை தண்ணீரில் கலந்து பயன்படுத்த வேண்டும். ஷாம்பூவால் முடியை சுத்தம் செய்த பிறகு கண்டிஷனரை போடுதல் வேண்டும்.

* பாடி ஸ்க்ரப்பிற்கு சர்க்கரையை நன்றாகப் பொடி செய்து, தேனை சேர்த்து கை, கால், முட்டிப் பகுதி மற்றும் முகத்தில் இரண்டு அல்லது மூன்று நிமிடம் வைத்து ஸ்க்ரப் பண்ணலாம். கசகசா, ஓட்ஸ் இவற்றைக்கொண்டும் ஸ்க்ரப் பண்ணலாம். முகத்தை ஸ்க்ரப் செய்ய இரவு நேரமே உகந்தது. இரவில்தான் நம் செல்கள் புதுப்பிக்கப்படும். இரவில் ஸ்க்ரப் செய்யும் போது இறந்த செல்கள் உதிர்ந்து, புது செல்கள் உருவாகும் இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள், வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே ஸ்க்ரப் செய்ய வேண்டும்.

* முகம் மற்றும் கால்கள் இரண்டுமே உடலில் அழுக்கு படியும் இடங்கள். இரவில் தூங்கச் செல்லும் முன் முகத்தையும் கால்களையும் கழுவி சுத்தம் செய்துவிட்டு படுத்தால் நல்லது.  சாதாரணமான நீரில் முகத்தை கழுவினாலே போதுமானது.

1. உடம்பில் ஏன் முடி வளர்கிறது?
2. உடலைவிட தலையில் முடி அதிகம் வளரக் காரணம் என்ன?
3. ஒருசிலர் தலையில் மட்டும் வழுக்கை எதனால் வருகிறது?
4. முடிகொட்டுதல் யாருக்கெல்லாம் அதிகம் நிகழும்?
5. இளம் வயதில் வெள்ளை முடி வளரக் காரணம்?

இவற்றுக்கெல்லாம் பதில் அடுத்த இதழில்…

- மகேஸ்வரி

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ramalan_sirapu111

  இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் ரமலான் நோன்பு ! : சிறப்பு படங்கள்

 • cake_decor11

  ஆஸ்திரேலிய சர்வதேச கேக் திருவிழா : மனதை கொள்ளை கொள்ளும் கேக் அலங்காரங்கள்

 • RajivGandhi27thanniversary

  ராஜீவ் காந்தியின் 27-வது நினைவு தினம் இன்று: சோனியா காந்தி, ராகுல் காந்தி அஞ்சலி

 • lasvegas_theme111

  அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் மேடிசன் சதுக்கத்தில் வெவ்வேறு தீம்களில் ஜொலிக்கும் பிரம்மாண்ட கோள அரங்கம்

 • rajiv_27anni

  27வது நினைவு தினத்தை அனுசரிக்கும் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அரிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்