SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Perfume, Roll on, Deodorant, body spray... நல்லதா தீமையா?

2018-01-29@ 15:02:45

வாசனைத் திரவியங்கள் ஆதி காலம்தொட்டே மனிதனை வசீகரித்து வருபவை. வியர்வையும் வெக்கையுமாய் வெயில் வாட்டி எடுக்கும் மத்திய  கிழக்கு நாடுகளில் மட்டும் அல்லாமல் குளிர் கொன்றெடுக்கும் மேற்கத்திய நாடுகளிலும் இவற்றுக்கு எப்போதுமே மவுஸ் உண்டு. நம் நாட்டில் அந்தக்  காலம் முதலே அகில், சந்தனம், ஜவ்வாது, புனுகு, அத்தர் என பலவிதமான வாசனைப் பொருட்களை பயன்படுத்திவந்துள்ளோம். நவீன காலத்தின்  வருகையும் வேதியியல் துறையின் வளர்ச்சி யும் வாசனைத் திரவியங்களின் உற்பத்தியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தின. இப்போது பெர்ஃபியூம்,  டியோடரன்ட், ரோல் ஆன், பாடி ஸ்பிரே எனப் பலவிதங்களில் பல வண்ண வாசனைத் திரவியங்கள் சந்தையில் நிறைந்துள்ளன.

இவை அனைத்துமே ஆரோக்கியமானவைதானா? எதை, எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று தோல் மற்றும் அழகு சிகிச்சை நிபுணர் டாக்டர்  பிரியாவிடம் கேட்டோம். “சோப்புகளுக்கு எப்படி பிஹெச் (pH) லெவல் முக்கியமோ அதேபோல் வாசனைத் திரவியங்களுக்கு ஆல்கஹால் லெவல்  முக்கியம். இதில் பெர்ஃபியூமில் 15 - 20 சதவீதம் வரை வாசனையான வேதிப்பொருட்கள் இருக்கும். இதில் ஆல்கஹால் அளவும் அதிகமாக இருக்கும்.  பாடி ஸ்பிரேயில் 10 - 15 சதவீதம் வரை வாசனைப் பொருட்கள் இருக்கும். ஆல்கஹாலும் இதில் குறைவாகவே இருக்கும். பெர்ஃபியூம் என்பதை  ஆடையில் அடிக்க வேண்டும்.

பாடி ஸ்பிரே, ரோல் ஆன், டியோடரன்ட் போன்றவற்றை உடலில் அடிக்கவோ, தடவவோ வேண்டும். மிகவும் சென்சிட்டிவ்வான தோல் உள்ளவர்கள்  முடிந்த வரை இந்த பாடி ஸ்பிரே, ரோல் ஆன் போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். ஒருசிலருக்கு அதிக வியர்வை காரணமாகத் தோல்  அலர்ஜி, அல்லது தொற்று இருக்கும். அவர்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே இந்த வியர்வை வாடை பிரச்னை இருக்கும். சில மாத்திரைகள், அல்லது  சில அதீத மசாலா உணவுகள் காரணமாகக்கூட சிலருக்கு வியர்வை துர்நாற்றம் வரும். பொதுவாக, மசாலா வெரைட்டிகளைக் கொஞ்சம் குறைவாகச்  சாப்பிடலாம்.

சிலருக்குத் தோல் பிரச்னைகள், அரிப்பு, காளான் தொற்றுக் காரணமாக வியர்வை வாடை இருக்கலாம். இவர்கள் பெர்ஃபியூம், பாடி ஸ்பிரே  பயன்பாட்டை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக, பாதிப்பு உள்ள பகுதிகளில் இவற்றை பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும். மேலும் இந்தப்  பிரச்சனைக்காக முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளவும் வேண்டும். பெர்ஃபியூம், பாடி ஸ்பிரேக்களில் எத்தனால், அசிட்டால்டிஹைட், அசிட்டோன்,  பென்சைல்  ஆல்கஹால் போன்ற வேதிப் பொருட்கள் இருக்கின்றன. இதனால் அரிப்பு, தோல் அலர்ஜி முதல், கேன்சர் வரை பல பிரச்சனைகள்  ஏற்படக்கூடும்.

இப்போது வரும் விளம்பரங்களில் வியர்வை வாசனை என்பது ஏதோ அவமானகரமான விஷயம் என்பதைப் போல வேண்டும் என்றே  சித்தரிக்கப்படுகின்றன. இயல்பாகவே ஒவ்வொரு மனித உடலுக்கும் ஒவ்வொரு வாசனை இருக்கும். வியர்வை என்பது நம் உடலில் உள்ள  தேவையற்ற கழிவுகளை அகற்றவும், உடல் வெப்பநிலையை இயல்பாக வைத்திருக்கவும் உடலில் சுரக்கும் ஒரு அத்தியாவசியமான சுரப்பு. இதில்  அசிங்கப்படவோ அருவருப்பு அடையவோ எதுவும் இல்லை. நம் நாட்டைப் பொறுத்தவரை தினமும் இரண்டு வேளை குளித்து சுத்தமான ஆடைகளைப்  பயன்படுத்தினாலே வியர்வை துர்நாற்றப் பிரச்னை தீரும்.

சிலர் அளவுக்கு அதிகமான வாசனை உள்ள பெர்ஃபியூம்களைப் பயன்படுத்துவார்கள். இன்னும் சிலர் வீட்டில் ஒன்று அலுவலகத்தில் ஒன்று,  போதாக்குறைக்கு கைப்பையில் ஒன்று என வைத்துக்கொண்டு போகும் இடம் எல்லாம் அடித்துக்கொள்கிறார்கள். இது தவறான பழக்கம். இதனால்  இவர்களுக்கு மட்டும் அல்லாமல் சுற்றி உள்ளவர்களுக்கும் தலைவலி, சைனஸ் போன்ற ஆஸ்துமா பிரச்னைகள், பாதிப்புகள் வரக்கூடும். உடலில்  தேவையற்ற ரோமங்கள் உள்ள அக்குள் போன்ற பகுதிகளை முறையாகச் சுத்தம் செய்து பராமரித்து வந்தாலே வியர்வை துர்நாற்றம் கட்டுப்படும்.  வேண்டுமானால் மருத்துவர் ஆலோசனைப்படி மெடிக்கேர் பவுடர்களைப் பயன்படுத்தலாம்...’’ என்கிறார் டாக்டர் பிரியா.

கடைகளில் பெர்ஃபியூம் வாங்கும் முன்பு செய்ய வேண்டிய பரிசோதனையை நாம் தவறாகவே செய்து கொண்டிருக்கிறோம். டெஸ்டர் சேம்பிள் ஒன்றை  எடுத்து கைகளிலோ மார்பிலோ அடித்துவிட்டு வாசனை பிடித்திருந்தால் உடனே வாங்கி வருவதைத்தான் பெரும்பாலானவர்கள் செய்கிறார்கள். இது  தவறான முறை. இப்படிச் செய்துபார்த்தால் அந்த பெர்ஃபியூமால் உங்களுக்கு அலர்ஜி உள்ளதா என்பதை முழுமையாகக் கண்டுபிடிக்க இயலாது.

மணிக்கட்டுப் பகுதியில், மருத்துவர் நாடி பிடித்துப் பார்ப்பாரே அந்த இடத்தில் அடித்துவிட்டு 24 மணி நேரத்துக்குள் ஏதாவது எரிச்சலோ, அரிப்போ  உள்ளதா எனக் கவனிக்க வேண்டும். எந்தவித மோசமான அறிகுறிகளும் இல்லை என்றால் மட்டுமே அதை வாங்க வேண்டும். அதேபோல் ஒரு  நாளைக்கு ஒருமுறைக்கு மேல் வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தக் கூடாது. முடிந்தவரை பாடி ஸ்பிரேயைத் தவிர்த்திடுங்கள் என்றுதான்  சொல்ல வேண்டும். அவசியம் எனில் ஒருமுறை பயன்படுத்துவது தவறு இல்லை.

- ஷாலினி நியூட்டன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-08-2018

  18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • lastfinaldest111

  21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்

 • finaldesti000

  மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

 • kannirpeoplvaj

  மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

 • bjpvajpai123

  டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்