SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒழுக்கம் Vs உயிர்

2018-01-23@ 14:59:50

நன்றி குங்குமம் தோழி

சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 18 வயதான ராகமோனிகா என்ற பொறியியல் மாணவி கல்லூரி விடுதியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி நடந்த வன்முறைச் சம்பவங்களால் பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலைமையை சரியாகக் கையாளாமல் விட்டதால்தான் அவர் தற்கொலை வரை சென்றார் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்வில் ராகமோனிகா காப்பி அடித்தபோது ஆசிரியர் கண்டுபிடித்ததால் மாணவர்கள் முன்னிலையில் வகுப்பறையில் இருந்து மோனிகா வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலுக்குள்ளான ராகமோனிகா விடுதிக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து கல்லூரிக்கு வந்த ராக மோனிகாவின் பெற்றோர் பல்கலைக்கழக நிர்வாகம் மீது செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது போன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர் நிகழ்வாக இருக்கிறது.

மாணவர்களை தற்கொலைக்குத் தள்ளும் சூழல் குறித்து மன நல மருத்துவர் சித்ரா அரவிந்திடம் பேசினேன்.  “ராக மோனிகா சம்பவத்தில் பரீட்சை பயம் என்று நாம் சொல்ல முடியாது. காப்பி அடித்ததைக் கண்டுபிடித்து விட்டார்கள். சக மாணவர்கள் மத்தியில் வகுப்பறையில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார் எனத் தெரியவருகிறது.  இதனால் தமக்கு அவமானம் ஏற்பட்டிருக்கிறது என்று அவர் எண்ணியிருக்கலாம்.  தொடர்ந்து அதே கல்லூரியில் படிக்க வேண்டும், சக மாணவர்கள் இதைச் சொல்லி கேலி செய்வார்கள். எப்படி அவர்களின் முகத்தை பார்க்கப் போகிறோம் என்ற தாழ்வு மனப்பான்மை அவருக்கு ஏற்பட்டிருக்கலாம்.
 
இதோடு வாழ்க்கை முடிந்துவிட்டது என்று  நினைத்திருக்கலாம். இது போன்ற மனநிலைதான் அவரை தற்கொலைக்குத் தூண்டியிருக்கும். ஆனால் தற்கொலை ஒருபோதும் தீர்வு ஆகாது என்பதை அந்தப் பெண் யோசிக்கும் மனநிலையை கடந்து சென்று விட்டார் என்பதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது.
மாணவர்கள் தாங்கள் விரும்புகின்ற படிப்பை படிக்கிறார்களா என்றால் இல்லை என்கிற பதில்தான் 70 சதவீதமாக உள்ளது. மருத்துவம், பொறியியல் படிப்பதுதான் சிறந்த படிப்பு என்கிற மாய பிம்பம் இந்த சமுதாயத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

பெற்றோர்  இந்த இரண்டு துறை சார்ந்த வேலைகளை செய்வதுதான் கவுரவமாக இருக்கும். அதிகம் சம்பாதிக்கலாம் என்று எண்ணுகிறார்கள். இதனால் பல பிள்ளைகள் தங்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும் அந்தப் படிப்பை படிக்க நேரிடுகிறது. இதுவும் மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். இந்த சமயத்தில் கல்லூரியில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறும்போது மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள். மேலும் நம்முடைய கல்வி முறை மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

இதனால் தனக்கு விருப்பம் இல்லாத பாடத்தை படிக்கும் மாணவர்கள், அதிலிருந்து விடுபட முடியாமல் எப்படியாவது மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று காப்பி அடிக்கும் செயல்களில் ஈடுபட நேரிடுகிறது. பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு என்ன பிடிக்கிறது என்று கேட்டு அந்த துறைசார்ந்த கல்வியை வழங்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தேவை ஏற்படும் போது மனநல ஆலோசனை பெற அந்தந்த நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். ஏனென்றால் எல்லா மாணவர்களும் ஒரே குணமுடையவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.

அப்படி எல்லா மாணவர்களையும் அந்த ஆசிரியர் எப்படி வழிநடத்த வேண்டும். இதற்கு ஆலோசனை கண்டிப்பாக தேவைப்படும். கடுமையான வார்த்தைகளால் சக மாணவர்கள் முன்னிலையில் ஒரு மாணவன் சரியாக படிக்கவில்லை என்று கேவலமாகவோ அல்லது கோபமாகவோ பேசும்போது அந்த மாணவனின் மன நிலை என்னவாக இருக்கும் என்பதை அவர்கள் உணர்ந்து சரியான முறையில் மாணவர்களை வழிநடத்த வேண்டும். அப்படி செய்தால் இது போன்ற மரணங்கள் நிகழாமல் தடுக்க முடியும்” என்றார் சித்ரா அரவிந்த்.ஒழுக்கம் முக்கியம்தான். ஆனால் அது ஓர் உயிரை எடுக்கும் அளவுக்கு கடுமையாக நடந்துகொள்ள வைப்பது துயரமானதே.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • lastfinaldest111

  21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்

 • finaldesti000

  மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

 • kannirpeoplvaj

  மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

 • bjpvajpai123

  டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி

 • dangerrrkerala123

  கேரளாவில் கனமழை - மீட்பு பணியில் ஈடுபட்ட பொதுமக்களின் துணிகர செயல்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்