SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இருமனம் கொண்ட திருமண வாழ்வில் மெஹந்தி

2018-01-11@ 14:54:44

நன்றி குங்குமம் தோழி

முன்பெல்லாம் மருதாணி இலையினை சேகரித்து அரைத்து, அதை கல்யாணப் பெண்ணின் இரண்டு கைகளிலும், கால்களிலும் போட்டுவிட்டால்தான் மணப்பெண்ணிற்கான களையே மணமகளுக்கு வரும். வடநாட்டவர்களின் வருகைக்கு பிறகு மருதாணி மெஹந்தியாக இங்கே உருமாறி, மணப் பெண்கள் தங்கள் கரங்களில் அழகழகான டிசைன்களை வரைந்து கூடுதல் அழகோடு தங்களை வெளிப்படுத்துகிறார்கள். மெஹந்தி வரைதல் என்பது திருமணத்தில் ஒரு முக்கிய நிகழ்வாக மாறிப்போனதுடன், வருமானம் தரும் ஒரு தொழிலாகவும் வளர்ந்து நிற்கிறது.

‘‘வடநாட்டில் மெஹந்தி போட்டு மணமகள் கைகளில் நன்றாக நிறம் வந்தால்தான் வரப்போகும் கணவர் தன்னை மிகவும் விரும்புகிறார் என அர்த்தம்” எனப் பேசத் துவங்கினார் குஜராத்தி மெஹந்திக் கலைஞரான தேஜல் தாவே. ‘‘முன்பெல்லாம் மருதாணியினை அரைத்து விரல்களில் தொப்பி மாதிரி போடுவோம். அது கொஞ்சம் மாற்றம் அடைந்து தீக்குச்சி முனைகளால் கைகளில் டிசைன் பண்ணத் துவங்கினார்கள்.  அதன் பிறகு வெண்டைக்காயினை எடுத்து கட் செய்து அதில் மருதாணியினை எடுத்து அச்சு பதித்து டிசைன் வரைந்தார்கள். அதைத் தொடர்ந்து கோன் வைத்து டிசைன் பண்ணத் துவங்கினார்கள்.

மெஹந்தியில் நார்மல் மெஹந்தி, அரபிக் மெஹந்தி, ராஜஸ்தான் மெஹந்தி, பாகிஸ்தானி மெஹந்தி, மணப்பெண் மெஹந்தி, ஷர்தோஷி மெஹந்தி என பல வகைகள் உள்ளது. அரபிக் மெஹந்தியில் அடர்த்தியான அவுட் லைன் இருக்கும். சிங்கிள் லைனாக அவர்களின் மெஹந்தி வேலைப்பாடு இருக்கும். ராஜஸ்தானி மெஹந்தியில் நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைய இருக்கும். அவர்கள் பழக்க வழக்கங்களை மெஹந்தியில் கொண்டுவந்துவிடுவார்கள். ராஜஸ்தானி பெண்கள் வளையலை தோள்பட்டையிலிருந்து போடுவதால் மெஹந்தி டிசைனையும் தோள்பட்டையிலிருந்தே வரைவார்கள்.

அரபிக் மற்றும் ராஜஸ்தான் மெஹந்தியின் கலவைதான் பாகிஸ்தானி மெஹந்தி. பிரைடல் ஷர்தோஷி என்பது திருமண நாள் அன்று  ஐந்து மணி நேரம் வரை தாங்குகிற மாதிரி மணமகளின் உடைக்கு ஏற்ப வண்ணத்தில் அதே நிறத்தில் கிளிட்டரில் அவுட்லைன் கொடுப்பது. அதில் மிரர் ஒர்க் எல்லாம் இப்போது வந்துவிட்டது. மெஹந்தியில் பிளாக் மெஹந்தியும் உண்டு. ஆனால் நம் இந்தியர்களின் தோல் நிறத்திற்கு சாதாரண மெஹந்தியே போதுமானது. மருதாணிப் பவுடரில் தண்ணீர், நீலகிரித்  தைலம்  மற்றும் லவங்கம் எண்ணெய் போட்டு கலந்து வைப்போம்.

மணப்பெண்ணின் இரண்டு கைகள் மற்றும் கால்களில் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய மெஹந்தியைப் போட 8 முதல் 10 மணி வரை நேரம் எடுக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள், நேரமில்லை என்பவர்கள் நார்மல் மெஹந்தி போடுவார்கள். நார்மல் மெஹந்தி என்றால் 2 மணி நேரத்தில் முடியும். மெஹந்தி காயும்போது எலுமிச்சைச் சாற்றுடன் சர்க்கரை கலந்த தண்ணீரை கைகளில் தெளிக்கலாம் அல்லது பஞ்சில் நனைத்து அதன் மேல் மெதுவாக வைக்க வேண்டும். மெஹந்தி விரைவில் காய்ந்துவிடாமல், நன்றாக கைகளில் இறங்கி கூடுதல் வண்ணம் கிடைக்கும்.

திருமணப் புகைப்படங்களும் நன்றாக வரும். பாரம்பரியத்தை விரும்புபவர்கள், கடவுள் உருவம், மணமக்கள் முகம்  பொறித்த உருவம், தீம் மெஹந்தி போன்றவற்றை விரும்புவதுண்டு. தீம் மெஹந்தியில் இரண்டு கைகளிலும் வெவ்வேறு உருவங்கள் வரும். டிரம்ஸ் அண்ட் பப்பட், ஷெனாய் வாசிப்பது, கலசம், டோலியில் பெண் வருவது போன்ற உருவங்கள் இருக்கும். மணப் பெண்களை அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார வைக்கவும் முடியாது. எனவே இருவர் அமர்ந்து கைகளில் ஒருவர், கால்களில் ஒருவர் என தனித்தனியாக போடத் துவங்குவோம்.

மெஹந்தி சங்கீத் நிகழ்ச்சியில் ஊஞ்சல் முழுவதும் அலங்கரித்து அதில் மணப்பெண்ணை அமர வைத்து வந்திருக்கும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மணப்பெண்ணிற்கு மெஹந்தி போடுவார்கள். பாட்டு, நடனம் என எல்லா குதூகலங்களும் இதில் உண்டு. மணப்பெண் கால்களில் முதல் நாளே மெஹந்தி போட்டு விடுவார்கள். மார்வாடி மற்றும் குஜராத்தி மக்கள்தான் நிறைய மெஹந்தி நிகழ்ச்சி பண்ணுவார்கள். மார்வாடி மணப் பையன்  என்றால் கட்டாயம் மெஹந்தி இட்டுக் கொள்வார்கள். குஜராத்தி மணமகனில் சிலர் மட்டும் சின்னதாகப் போட்டுக் கொள்வார்கள்” என முடித்தார்.

தேஜல் தாவே, மெஹந்திக் கலைஞர்

எனக்கு படம் வரைவது நன்றாக வரும். ஆர்வமாக எப்போதும் எதையாவது வரைந்து கொண்டே இருப்பேன். 7வது படிக்கும்போது எப்போதும் என் இரு கைகளிலும் மெஹந்தி போட்டுக் கொண்டே இருப்பேன். எனது கைகள் எப்போதும் வண்ணம் நிறைந்திருக்கும். விரும்பும் டிசைன்களை கோனில் வரையத் துவங்கினேன். நான் வரைந்த டிசைன்களை பெரிய பியூட்டி பார்லர்களில் காண்பித்து 12 வயதிலே மெஹந்தி ஆர்டர் எடுக்கத் துவங்கினேன்.

அப்போதே ஒரு மணப்பெண்ணிற்கு மெஹந்தி இட 1000ம் கிடைத்தது. குழந்தைகள் பெரியவர் ஆனதும், பழைய மெஹந்தி தொழிலை மீண்டும் துவங்கினேன். நிறைய வாடிக்கையாளர்கள் வரத் துவங்கினார்கள். லண்டன், துபாய் செல்லும் வாய்ப்புகளும் வந்தது. முகூர்த்த மாதத்தில் இதில் கிடைக்கும் வருமானம் 50 ஆயிரங்களை கூடத் தாண்டும்.

லெஷ்மி, விருத்தி நிகழ்வு மேலாண்மை இயக்குநர்

திருமணத்திலும் சரி, வரவேற்பிலும் சரி இரண்டு குடும்பத்து முக்கிய நபர்கள்  மேடையில் நின்று அனைவரையும் வரவேற்க வேண்டிய நிலையில், திருமண வேலைகளும்  அடுத்தடுத்து அவர்களுக்கு நிறையவே இருக்கும். தங்கள் வீட்டுத் திருமண  நிகழ்வை முழுமையாக அனுபவிக்க முடியாத சூழலில் இருப்பார்கள். வந்திருக்கும்  உறவினர்கள் அனைவருடனும் மகிழ்வோடு அளவளாவ முடியாமல் போகும். திருமணம்  நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே மெஹந்தி சங்கீத் நிகழ்ச்சியினை  நடத்தினால் இரு குடும்பங்கள் மட்டுமின்றி, இருவீட்டு உறவுகள், நண்பர்கள்  கலந்து பழகி, திருமணத்தை கூடுதல் மகிழ்ச்சியாக்க வசதியான ஒரு நிகழ்ச்சியாக, மறக்க முடியாத ஒரு ஃபன் மூவ்மென்டாக இது இருக்கும்.

வடநாட்டவர்களின்  கலாச்சாரம்தான் என்றாலும் தமிழ்நாட்டவர்களும் இதைச் செய்வதில் தப்பில்லை. மெஹந்தி சங்கீத் நிகழ்வு அன்று மணமகன்-மணமகள் இருவரையும் ரிச்சான கிரான்ட் என்ட்ரி  தர வைப்போம். வடநாட்டவர்களாக இருந்தால் மணமகளை டோலியில் வைத்து தூக்கி  வருவார்கள். மணமகனை ரதம் அல்லது  வெள்ளைக் குதிரையில் அமர வைத்து,  உறவுகள், நட்புகள் சூழ அழைத்து வருவார்கள். ஒரு மீட்டிங் பாயின்ட்டில்  மணமகன்-மணமகளை சந்திக்க வைத்து மணமகனின் குதிரை அல்லது அவரது ரதத்தில்  மணமகளை மணமகன் தூக்கி அமர வைத்து இருவரும் ஒன்றாக வருவார்கள்.

டோல், ரதம்,  குதிரை இவைகளை விரும்பாத மணமக்கள் எனில் காரை அழகாக அலங்கரித்து  அவர்களை அழைத்து வருவோம்.  அவர்களுக்கு முன்பு டோல் பிளேயர்ஸ் டோலை  வாசித்தபடி செல்வர். நிகழ்ச்சி நடக்கும் இடத்தின் நுழைவாயிலுக்கு  வந்ததும். மணமகள் வீட்டார் ஆரத்தி எடுத்து, எளிமையான மாலையினை இருவருக்கும்  அணிவித்து வரவேற்று அழைத்துச் செல்வார்கள். அழைத்துச் செல்லும்போது அலங்கரிக்கப்பட்ட அழகிய மலர்களால் ஆன வண்ண அகலமான துணியினை நான்கு  முனைகளில் நால்வர் பிடிக்க மணமக்கள் அதன் நடுவே டோல் மற்றும் மெல்லிசையோடு  நடந்து, நிகழ்ச்சி நடக்கவிருக்கும் ஹாலுக்குள் நுழைவார்கள்.

ஹாலின் உள்  அலங்காரம் எல்லாம் ராஜஸ்தானி, குஜராத்தி முறைப்படி செய்யப்பட்டிருக்கும்.  கை வேலைப்பாடுகளால் ஆன பொருட்களால் அந்த ஹால் முழுவதையும் அழகுப்படுத்தி இருப்போம். மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ணங்களையே இந்த நிகழ்வுக்கு அதிகம்  பயன்படுத்துவோம். ராஜஸ்தானி முறை என்றால் லாந்தர் விளக்குகளை ஆங்காங்கே தொங்க விடுவோம். அவர்கள் ஹாலுக்குள் நுழைந்ததும், குஜராத்திகளின்  கார்பா நடனமான (கோலாட்ட நடனம்) நடக்கும். மணமக்களும், நண்பர்களும் கார்பா  நடனக் கலைஞர்களோடு இணைந்து மகிழ்ச்சியாக நடனமாடுவார்கள்.

கார்பா நடனத்திற்கு  நடுவே கொஞ்ச நேரம் டி.ஜே. ப்ளே செய்யப்படும். அதில் இருவீட்டு உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொண்டு மாறி மாறி நடனமாடி மகிழ்வார்கள். குழந்தைகள்,  இளைஞர்கள் மட்டுமின்றி தங்கள் குடும்ப வாரிசுகள் மகிழ்ச்சியாக இருப்பதைக்  காண்பதில், இருவீட்டு பெரியவர்களுக்குமே இது ஒரு மறக்க முடியாத  கொண்டாட்டமான நிகழ்வுதான். ஹாலுக்குள் வந்திருக்கும் பெண்களுக்கு  மெஹந்தி போடுவதற்கு என நான்கு அரங்குகளை ஆங்காங்கே அமைத்திருப்போம்.  மெஹந்தி டிசைனர் அமர்ந்து அவர்கள் விரும்பும் டிசைன்களை கைகளில்  இடுவார்கள்.

மணமக்களை அவர்களுக்கென தனியாக அலங்கரிக்கப்பட்ட அழகிய மர  ஊஞ்சலில் அமர வைத்து உறவுகள், நட்புகள் சூழ இசை இசைத்தபடி மெஹந்தி  இடுவார்கள். ஹாலுக்குள் பெண்களுக்காக தனித்தனியே வளையல், பொட்டு,  ஜிமிக்கி கம்மல் என சின்னச் சின்ன அரங்குளை அமைத்திருப்போம். வந்திருக்கும் உறவினர்கள், நண்பர்கள் விரும்பினால் வளையலை அங்கேயே அணிவிப்போம். வீட்டுக்கு எடுத்துச் செல்ல விரும்பினால் சின்னச் சின்ன கிஃப்ட் பேக்கில் போட்டு கொடுத்து அவர்களை மகிழ்வித்து அனுப்புவோம். மெஹந்தி சங்கீத் நிகழ்ச்சி பெரும்பாலும் மாலை நேரத்தில் நடப்பதால் சாட் அயிட்டங்களே மாலை நேர உணவாக  இடம்பெறும்.

மகேஸ்வரி, மருதாணிக் கலைஞர்

12ம் நூற்றாண்டில் மருதாணி இடும் பழக்கம் துவங்கியது. வடமாநிலத்தவர்களிடம் இருந்து வந்த பழக்கம் மெஹந்தி நிகழ்ச்சி. அங்கு ஆண்களும் போட்டுக் கொள்கிறார்கள்.  குண்டாக இருக்கும் கையினை ஒல்லியாகக் காட்டுகிற மாதிரியும், ஒல்லி யாக உள்ள கைகளை தடிமனாகக் காட்டுகிற மாதிரி டிசைன்கள் உள்ளது. ஜாக்கெட்டிற்கு கீழே கொஞ்சம் இடைவெளி விட்டு போடத் துவங்க வேண்டும். பெரும்பாலும் மணப் பெண்கள்  இன்ஸ்டன்ட் மெஹந்தி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

டிப்ஸ்

மணப்பெண் தன் கைகள் மற்றும் கால்களை பத்து  தினங்களுக்கு முன்பே ப்ளீச் மற்றும் வாக்சிங் செய்ய வேண்டும். வாக்சிங்  மற்றும் ப்ளீச் செய்யும்போது கை மற்றும் கால்களில் உள்ள முடிகள் எல்லாம்  இன்றி வழுவழுப்பாக இருக்கும். அதன் பிறகு மெஹந்தி போட்டால் கைகளில் நன்றாக  ஒட்டுவதுடன் டிசைன் வரையும்போது சின்னச் சின்ன முடிகளால் தொந்தரவு இருக்காது.

மருதாணி  இயற்கையிலே குளிர்ச்சி நிறைந்தது. முதல் நாள் வாக்சிங் அல்லது ப்ளீச்சிங்  போன்றவற்றை செய்தால் வேதிப்பொருட்களோடு குளிர்ச்சி இணையும்போது சில சமயங்களில் ரசாயன மாற்றம் நிகழும். மணமக்கள் பாடி வாக்சிங், ப்ளீச்சிங் போன்றவைகளை  பத்து தினங்களுக்கு முன்பே முடித்துக் கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-09-2019

  22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-09-2019

  21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • aljemerss_nadai11

  உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

 • china20

  சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

 • bo20

  ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்