SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாடித் தோட்டம்

2017-12-26@ 12:23:49

நன்றி குங்குமம் தோழி

அழகான கூடு சரஸ்வதி சீனிவாசன்

பூக்களை விரும்பாதவர் இருக்கவே முடியாது. அதனால்தானோ என்னவோ, நாம் நல்லதோ கெட்டதோ பூக்களையே பயன்படுத்துகிறோம். நல்ல விஷயங்களுக்கு பூங்கொத்துக்களைக் கொடுத்து, அன்பை வெளிப்படுத்துகிறோம். யாரேனும் இறந்து விட்டால் மலர் வளையங்களை வைக்கிறோம். பூக்களின் மகிமையே தனிதான். ஆனால் நிறையப் பேருக்கு என்ன மாதிரியான செடிகளை வளர்ப்பது, எப்படி வளர்ப்பது என்று தெரிவதில்லை. ஒரு மனிதரின் தோற்றத்தை சில அடையாளங்கள் மூலம் குறிப்பிடுவது போல, சில சமயங்களில் வீட்டை அடையாளம் காட்டுவதும் வீட்டுத் தோட்டம் தான். வீடு கட்ட நமக்கு பணம் நிறைய தேவை. ஆனால் தோட்டம் அமைக்க அவ்வளவு பணம் தேவையில்லை. மேலும் தோட்டம் அமைக்க சொந்த வீடு அவசியம் என்பதும் கிடையாது.

நம் இருப்பிடத்தை சொர்க்கமாக மாற்ற அடுக்குமாடி கட்டடமோ தனி வீடோ, பங்களாவோ அல்லது மிகச் சிறிய குடிசையாக இருந்தாலும் பரவாயில்லை. சொற்ப இடத்தைக் கூட சொர்க்கமாக மாற்ற நமக்கு தோட்டம் அமைப்பதில் விருப்பம் இருந்தால் போதும். திறம்பட அமைப்பது நம் ரசனையில்தான் உள்ளது. மிகச் சிறிய அடுக்குமாடிக் கட்டடம் என்றால் கண்டிப்பாக ஒவ்வொரு வீட்டிற்கும் என சிறிது இடம் மேலே விடப்பட்டிருக்கும் அல்லது பொதுவான மாடி இருக்கும். தனி வீடாக இருப்பின் முழு பாகத்திற்கும் ஓரங்களில் பாத்தி போன்று குட்டைச் சுவர் அமைத்துக் கொள்ளலாம் அல்லது ஓரங்களில் திண்ணை போன்ற அமைப்பு நீள வாக்கில் முழுவதும் அமைத்து நடுவே மண் நிரப்பலாம்.

குறிப்பிட்ட இடத்தையே ஓரங்களில் சதுரம், செவ்வகம் மற்றும் வட்ட வடிவங்களில் பாத்தி போன்று அமைக்கலாம். இப்படியாக இடம் அமைத்தபின், நாம் சில விஷயங்களை கவனத்தில் கொள்ளலாம். நல்ல வெயில் படும் இடமானால், அழகை மட்டும் தரும் குரோட்டன்ஸ் வகைகளை பயிரிடலாம். முழு மாடியும் தோட்டத்திற்கு பயன்படுத்தும் விதத்தில் அமைந்துவிட்டால், கிச்சன் கார்டன் என்று சொல்லக்கூடிய காய்கறித் தோட்டம் அமைக்கலாம். வெண்டை, கத்தரி, தக்காளி, பச்சைமிளகாய், கீரை போன்ற வெகு சீக்கிரத்தில் பலன் தரக்கூடியவை. மற்றொரு மூலையில் பந்தல் போன்று அமைத்து, பாகல், அவரை, புடலை ஆகியவற்றை படர விடலாம்.

பூசணி, பறங்கி, வெள்ளரி போன்றவற்றை தரையிலேயே படரவிடலாம். ஆனால், இப்பொழுது பெரிய செடிகளைக்கூட தொட்டி யிலேயே வளர்க்கும் முறை வந்துவிட்டது. மண்ணற்ற தரைப்பகுதிகளில் வளர்ப்பதற்காகவே, இப்பொழுது புதிய முறைகள் கையாளப்படுகின்றன. மாடிச் சுவரையொட்டி, வெயில்படும் ஓரங்களில் குட்டிச் சுவர் போன்று உட்புறமாக அமைக்கலாம். மண் சிந்தாமல் செடிகளை ஓரமாக வளர்த்து அழகுபடுத்துவதன் மூலம் மீதமுள்ள இடத்தை வேறு வேலைகளுக்கு பயன்படுத்தலாம். குட்டிச் சுவர் அமைப்பதற்காக சிரமப்பட வேண்டாம்.

பிரதான மொட்டை மாடிச் சுவருக்கு இணையாக உட்புறம் இரண்டு அல்லது மூன்று அடி அகலத்திற்கு சுமார் 7 - 8 செங்கற்கள் உயரத்திற்கு அமைப்பு தந்தால் போதும். இப்படியாக சுவர் ஓரங்கள் முழுவதையும் தோட்டத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். உள்பாகம் முழுவதையும் செம்மண் நிரப்பி, உரம் போட்டு வண்ண ரோஜாக்களை வளர்க்கலாம். அவை பூத்துக் குலுங்கும் பொழுது, வெளியிலிருந்து பார்த்தால், வீடே அழகாய் காணப்படும். ரோஜாக்கள் வளர்க்க முடியாவிடில், எந்த பூச்செடிகளை வேண்டுமானாலும் குறிப்பிட்ட இடத்திற்குள் அழகாக அமைக்க முடியும். சுவற்றின் ஓரங்களில் இடமிருந்தால், அழகிய மணி பிளான்ட் கொடிகளை ஆங்காங்கே தொட்டிகள் மூலம் தொங்கவிடலாம்.

மேலும் ‘போன்சாய்’ முறையில் பெரிய மர அமைப்பு கொண்ட செடிகளைக் கூட வளர்க்க முடியும். வாழை முதல் பல்வேறு மரங்கள் தொட்டிகளில் வளர்க்கப்படுகின்றன. மாடிகளில் மண் போட்டு வளர்க்க முடியாதா? அதற்கும் வேறு வழியுள்ளது. மாடிச் சுவரையொட்டி நீள வாக்கில் பெஞ்சுகள் போன்று ‘சிமென்ட்டில் அமைத்து விடுங்கள். தொட்டிகளை வரிசையாக அதன் மேல் அடுக்கிவிடலாம். சிறிதளவு இடைவெளிவிட்டு நீள பெஞ்சுகள் போன்று சுற்றிலும் அமைத்து விட்டால் போதும். ஒவ்வொரு சிமென்ட் திண்ணையிலும் ஒவ்வொரு விதமான செடிகளை வளர்க்கலாம்.

உதாரணத்திற்கு இரு ஓர திண்ணைகளிலும் ‘இக்ஸோரா’ என்று சொல்லக்கூடிய கொத்து கொத்தான மலர்களைக் கொண்ட செடிகளின் தொட்டிகளை வைக்கலாம். இதில் சிவப்பு ரோஸ், ஆரஞ்சு என பல நிறங்கள் உள்ளதால் கண்ணைப் பறிக்கும். அதே போல் வண்ணமயமான செம்பருத்திச் செடிகளை வைக்கலாம். மேலும் குண்டு மல்லி, நந்தியாவட்டை போன்றவற்றை நடுவில் வைத்துவிட்டால், வெள்ளைக்கு பார்டர் அமைத்தாற்போல், வண்ணப் பூங்கொத்துகள் சேர்ந்து கண்ணைப் பறிக்கும். போகன்வில்லா போன்ற செடிகளை உயரத்தில் வைக்கலாம். இதுவும் பலவித நிறங்களில் பூக்களை அள்ளித் தந்தாலும், முட்களைக் கொண்டவற்றை பாதிப்பு இல்லாத இடங்களில் வைத்துவிடலாம்.

மிகப் பெரிய மாடியாக இருந்தால் சிமென்ட் பெஞ்சு அமைக்கும் பொழுது, படிப்படியாக அமைக்கலாம். அதாவது, ஒரு பெஞ்சு குட்டையாகவும், அதைவிட அடுத்தது சிறிது உயரமாகவும், அடுத்தது மேலும் சிறிது உயரமாகவும் இருப்பது போன்று அமைக்கலாம். இப்பொழுதெல்லாம் பெயின்ட் செய்யப்பட்ட சிமென்ட் தொட்டிகள் ரெடிமேடாகக் கிடைக்கின்றன. ஒரு வரிசையில் சிவப்புத் தொட்டிகள், ஒன்றில் பச்சை, மற்றொன்றில் நீல நிறம் என வரிசைப்படுத்தலாம் அல்லது ஒவ்வொரு வரிசையிலும் நிறம் மாற்றி வைத்து அலங்கரிக்கலாம். எல்லாமே பார்க்க அழகுதான. தனி வீடாக இருந்தால், தோட்டத்தின் அமைப்பே சிறிய வீட்டைக்கூட பங்களாவாக மாற்றிக் காட்டும். எவ்வளவு பெரிய பங்களாவாகயிருப்பினும், பசுமையில்லாவிடில் அந்த இடம் சோபிக்காது.

வீட்டுச் சுவரையொட்டி சுமார் 3 அல்லது 4 அடி மண்விட்டு பின் நடைபாதை அல்லது தரையிருந்தால் போதும். சுவரையொட்டி அமைக்குமிடத்தில் அழகிய வண்ண வண்ண குரோட்டன்களை வளர்க்கலாம். ஒரே மாதிரி ஒரே அளவு அடர்த்தியில் வளரும் செடிகளை நடலாம். வீட்டின் முன்புறச் சுவற்றின் மீது கூட நமக்கு விருப்பமுள்ள வடிவத்தில் அமைத்து அதற்குள் செடிகள் வளர்க்கலாம். பொதுவாக நிறைய இடங்களில் விதவிதமான மணிபிளான்ட் வளர விட்டிருப்பார்கள். அடர்த்தியான அழுத்தமான பச்சை, வெளிர் பச்சை வெண்மையுடன் காணப்படுவது மற்றும் பெரிய பெரிய இலைகள் மரத்தின் மீது படரக்கூடியவை என இதில் பல வகைகள் உண்டு.

ஆனால் நாம் சிறிய இலைகள் கொண்ட குரோட்டன்ஸ் வகைகளைக் கூட வளரவிடலாம். அழகிற்காக மட்டும் வளர்ப்பதானால் மேஜை ரோஜா போன்ற செடிகளை வைக்கலாம். அனைத்து நிறங்களிலும் வைத்தால், வெளியிலிருந்து பார்க்கும்பொழுது, கொத்துக் கொத்தான வண்ணமய பூக்கள் கண்களுக்கு விருந்தளிக்கும். அதே சமயம் முன்புறம் நிறைய இடமிருந்தால், அழகிற்காக போகன்வில்லா செடிகளை வளர்க்கலாம். இவை ஆரஞ்சு, சிவப்பு ரோஸ், மஞ்சள், வெள்ளை என பல நிறங்களில் பூத்துக் குலுங்கி கண்களுக்கு விருந்தளிக்கும். மரங்களை காம்பவுண்டுக்குள் வைக்க நினைத்தால், போதிய இடைவெளியாக சுமார் 15 அடி தூரம் விட்டோமானால், ஒன்றுக்கொன்று இடைஞ்சல் இல்லாமல் வளரும்.

தென்னை போன்ற மரங்கள் வைக்கும்பொழுது, அந்த இடத்தில் அதிக நிழலடிக்கும். அப்படியானால் அங்கு என்ன வளர்க்கலாம்? சில மரம், செடி, கொடிகள் நிழலில் வளர்பவை இருக்கின்றன. அவற்றை இடையில் நிழல்படும் இடங்களில் வளர்க்கலாம். சந்தேகம் ஏற்படுமானால், தோட்டக்கலை நிபுணரை அணுகி கேட்டுக் கொள்ளலாம். எலுமிச்சை, சப்போட்டா போன்றவையும்கூட வீட்டுத் தோட்டத்தில் இடம் பெறலாம். மேலும் முன்பக்கம் இடமிருப்பின் புல்தரை வளர்க்க விரும்புபவர்கள் வளர்க்கலாம். புல்தரையை ஒட்டிய ஓரங்களில் பனை (palm) வகைகளை வரிசைப்படுத்தலாம்.

புல் தரையின் நடுவில் அழகிய செயற்கை நீரூற்றுகள் அமைக்கலாம். ஒரு பக்கம் அழகிய சிமென்ட் பெஞ்சு அமைத்து, சிற்பங்கள் வைக்கலாம். பெரிய தோட்டமாகயிருப்பின், பிரம்பு நாற்காலிகள் போட்டு வைக்கலாம். புல் தரையில் சிறிய ஊஞ்சல் ஸ்டாண்டு கூட நிற்க வைக்கலாம். சிறுபிள்ளைகள் இருந்தால், விளையாட சிறிய சறுக்குமரம் போடலாம். மழைக் காலங்களில் ஊஞ்சல், நாற்காலிகளை அப்புறப்படுத்திவிடலாம். மேலை நாடுகளில் பெரும்பாலான வீடுகளில் புல் தரையில் பெரிய குடை போன்று அமைத்திருப்பர். சாதாரணமாக மூடிய அமைப்பு கொண்டிருக்கும். மாலை மற்றும் இரவு நேரங்களில் பிரித்துவிடுவர்.

நாம் ஏன் வீட்டிற்கு ஒரு சிறிய தோட்டமாவது அமைக்க முயற்சிக்கக் கூடாது? அமெரிக்காவில், ஒரு சில அடுக்குமாடிக் கட்டடங்களில், மேலிருந்து கீழ்வரை நம் மணிபிளான்ட் போன்று ஒரு மெல்லிய கொடியை படரவிட்டிருப்பார்கள். கட்டடம் முழுவதும், பச்சைப் பசேலென போர்வை போல் காணப்படும். ஆனால், அதன் வேர் எதுவும் கட்டடத்தில் படுவதில்லை. ஒருவித டிசைன் போட்டாற்போல் பச்சைப்பசேலென வெளிப்புறம் முழுவதும் கண்ணைப் பறிக்கும் அழகு. இயற்கைக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது. வாழையைக்கூட தொட்டியில் வளர்க்கும் காலம் வந்து விட்டதே! வேறென்ன வேண்டும்? முழுவதும் அலங்கரித்து முடிப்போம்!
 
(அலங்கரிப்போம்)
எழுத்து வடிவம்: ஸ்ரீதேவி மோகன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்