SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாய்ப்பாலில் நகை செய்ய முடியுமா?

2017-11-20@ 15:47:03


நன்றி குங்குமம் தோழி


நம் பீரோவின் உள் அறையை திறந்து பார்த்தால் சுருண்ட முடி, குட்டி பல், தொப்புள் கொடி, பால் பாசி, வசம்பு பாசி, காப்பு போன்ற விஷயங்கள் மிகவும் பத்திரப்படுத்தப்பட்டிருப்பதை காண முடியும். அவை எல்லாம் ஒவ்வொரு அம்மாவும் தன் குழந்தையின் குழந்தைப்பருவ ஞாபகங்களாக சேர்த்து வைத்திருப்பவை தான்.  பின்னாளில் பயனற்றது என்று தெரிந்தும் சேமித்து வைக்கப்படும் பொக்கிஷம் இவை.

தாய் மற்றும் சேய் இருவருக்குமே பசுமையான நினைவுகளை மீட்டெடுத்து கொடுத்துக்கொண்டே இருக்கும். அப்படியான மனமகிழ்ச்சியை  வாழ்நாள் முழுக்க நிலைக்க வைக்கவும், நினைவுகளை மேலும் அழகாக்கவும் தான் தாய்ப்பாலை வைத்து அழகான அணிகலன்களை செய்து தருகிறார் சென்னையை சேர்ந்த ப்ரீத்தி விஜய். தாய்ப்பாலை மருந்துப் பொருளாகவும், தானமாகவும் தந்தது போக தற்போது அதை வைத்து நகைகளும் செய்யப்படுவது ஆச்சரியமான விஷயம் தான்.

இதுவரை டெரகோட்டா, பேப்பர், சில்க் த்ரெட் மற்றும் ஃபிளவர் ஜூவல்லரி போன்றவற்றை மட்டுமே நாம் அறிந்திருப்போம். சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த ப்ரீத்தி என்பவர் கடந்த ஒரு வருடமாக தாய்ப்பாலை கொண்டு ஜூவல்லரி செய்து வருகிறார். முழுக்க முழுக்க தாயின் பாலை வைத்து மோதிரம், லாக்கெட், பெண்டென்ட், இயர் ரிங் ஆகியவற்றை செய்து தரும் இவர் பலரின் ஞாபகங்களை சேமித்தும்  தருகிறார். ஞாபகமாக பத்திரப்படுத்தி வைக்க நினைப்பவர்களுக்கு வேறு, அந்த நகைகளை தினமும் அணிந்து மகிழ நினைப்பவருக்கு வேறு என விதவிதமாக நகைகளை வடிவமைத்து தருகிறார். பெண்டென்ட்களை அவரவர் விருப்பத்திற்கும், கற்பனைக்கும் ஏற்ற வகையில் நேர்த்தியாக செய்து அசத்தி வருகிறார் ப்ரீத்தி.
 
பெண்டென்ட்களில் பல்வேறு வண்ணங்கள் கொண்ட பின்னணிகளோடு குழந்தைகளின் பெயர்கள் பல வடிவங்களில் செய்யப்படுகிறது.  மரம் மற்றும் ஹார்ட்டின் தான் அதிகம் பயன்படுத்தப்பட்ட வடிவங்களாக இருக்கின்றன. இந்த டிசைன்கள்தான் அன்பை மற்றும் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருக்கும் என்பதால் இவை பயன்படுத்தப்படுகிறது. தாய்ப்பால் கொண்டு நகைகளை உருவாக்குவதற்கு பல்வேறு முறைகள் இருப்பதால், அவரவர் வசதிக்கு ஏற்றவாறு கையாளப்படுகிறது. தாய்ப்பாலை பதப்படுத்தி பலவருடங்கள் பாதுகாப்பாக இருக்க சுத்தமான பிசின்கள் உபயோகிக்கப்படுகிறது.

தயாரிப்பு மற்றும் பதப்படுத்தும் செயல்முறைகளை தாண்டி நீண்ட காலத்திற்கு பார்த்து பிரமிக்கும் வகையில் உருவாக்கப்படுகிறது. இந்த தாய்ப்பால் நகைகள் 2012ல் முதல்முறையாக ஆன்லைன் விற்பனைக்கு வந்து சர்ச்சைக்குரிய ஒன்றாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. தாய் மற்றும் குழந்தைக்கு இடையே உள்ள பிணைப்பை பரிசளிக்கும் ப்ரீத்தியை சந்தித்தபோது, ‘‘பிரசவத்தில் தொடங்கி தாய்மைக்கான பயணம் என்பது சிலருக்கு மென்மையானதாகவும், பலருக்கு வலிமிக்கதாகவும் இருப்பது விவரிக்க முடியாத சுகம்.

தாய்ப்பால் என்பது எளிதில் கெட்டுப்போகக்கூடிய திரவம். அதை கொண்டு நகைகள் செய்வது என்பது வெகு சுலபமான காரியம் இல்லை. ஆரம்ப நாட்களில் தாய்ப்பால் கெட்டுப் போகாமல் இருக்க நிறைய ரசாயனங்கள் பயன்படுத்தி இருக்கிறேன். ஒரு மாத காலம் ஆனவுடன் தாய்ப்பாலின் நிறம் மாறிவிடும். பிறகு நானாக நிறைய பரிசோதனைகளும் பயிற்சிகளும் செய்து தற்போது வெற்றிகரமாக செய்து வருகிறேன்.

தற்போது வாரத்திற்கு 12 ஆர்டர் எடுத்து ஒவ்வொன்றையும் பணம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொள்ளாமல் முழுமனதோடு செய்து வருகிறேன்.  ஸ்டெர்லிங் சில்வர் என்று சொல்லப்படும் வெள்ளியைத்தான் நகைகள் செய்ய பயன்படுத்துகிறேன். தாய்ப்பாலில் செய்யப்படும் நகை என்ற ஒன்றை மட்டும் தெரிந்துகொண்டு, அதைப் பற்றிய ஆழ்ந்த புரிதல்கள் இல்லாமல் இருக்கிறார்கள் சிலர். ஒவ்வொரு தாயிடம் இருந்தும் 15 மில்லி அதாவது இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் பால் மட்டுமே வாங்கப்படுகிறது.

நகைகள் வாங்க ஆசைப்படுபவர்கள் மூன்று மாதத்திற்கு முன்ன தாகவே தாய்ப்பாலை கொடுத்து விட வேண்டும். ஒவ்வொரு தாயை பொருத்தும்  தாய்ப்பாலின் நிறம் வேறுபடும். எனக்கு சிறுவயதில் இருந்தே ஆர்ட், கிராஃப்ட் போன்ற விஷயங்களில் ஆர்வம் அதிகம்.  நிறைய பரிசுகளும் வாங்கியதுண்டு.  கல்லூரி முடித்த பின் நான்கு வருடங்களாக பிரெட்டி க்ரியேஷன் என்ற முகநூல் பக்கம் தொடங்கினேன். அதை தொடர்ந்து கிஃப்ட் செய்வது, பிறந்தநாள் விழாவிற்கு தீம் அமைத்து தருவது போன்றவை செய்து வந்தேன்.

பிறந்த நாள் மட்டுமின்றி அனைத்து விழாக்களுக்குமான கிஃப்ட் செய்து வந்ததோடு, மினியேச்சர், போட்டோ ப்ரின்ட்ஸ், களே டால்ஸ் போன்றவை செய்து விற்பனை செய்து வந்தேன்.  ஏர் ட்ரை க்ளெய் வைத்து வால் ஹாங்கிங்ஸ், கேண்டில்ஸ் என அதை வைத்து எது வேண்டுமானாலும் செய்யலாம். பாலிமர் க்ளே வைத்து ஜூவல்லரி செய்து வந்தேன். இது மட்டும் தான் யூட்யூப் பார்த்து கத்துக்கொண்டேன்.  மற்றவை எல்லாம் என் சொந்த யோசனைதான்.

எந்த பயிற்சி வகுப்பிற்கும் செல்லவில்லை. தாய்ப்பால் வைத்து நகை செய்ய ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிறது. புதுமையான டிசைன்கள் இப்போது செய்ய ஆரம்பித்திருக்கிறேன். வெளிநாடுகளில் தினசரி பயன்பாட்டில் வைத்திருப்பார்கள். ஆனால் நம் இந்திய தாய்மார்கள் தாய்ப்பாலில் செய்யப்படும் நகைகளை ஞாபகார்த்தமாக வைத்திருக்க மட்டுமே வாங்குகிறார்கள். எட்டில் ஏழு தாய்மார்கள் பீரோவில் பத்திரப்படுத்தி வைக்க மட்டுமே என்று சொல்லியே வாங்குகிறார்கள்.

எனக்கு மிகவும் மனநிறைவாக இருக்கிறது” என்கிறார் ப்ரீத்தி விஜய். குழந்தையின் பல், தொப்புள் கொடி, முடி போன்றவற்றை வைத்து செய்துவரும் இதன் விலை டிசைன்களுக்கு ஏற்றாற்போல் ரூபாய் ஆயிரம் தொடங்கி நாலாயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இப்படி தாய்ப்பால் கொண்டு நகைகள் செய்வது குறித்து மருத்துவர் ரவீந்திரநாத்திடம் கேட்டபோது, “தாய்மார்கள் முடி, பல் என சேகரித்து வைப்பது அவர்களின் தனிப்பட்ட விஷயம்.

ஆனால் தாய்ப்பாலை தருவதும் அதை வைத்து நகைகள் செய்வதும் மூட நம்பிக்கைதான். இரண்டு டீஸ்பூனாக இருந்தாலும், 15 மில்லியாக இருந்தாலும் அது தாய்ப்பால்தானே? அதை விரயம் செய்யக்கூடாது. இது போன்றவற்றை ஊக்குவிக்கக் கூடாது” என்கிறார்.

-பி.கமலா தவநிதி

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-04-2019

  20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • iyesumakal11

  இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2019

  18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chinaautoshow

  சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்