SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹேப்பி ப்ரக்னன்ஸி

2017-11-20@ 15:45:48

நன்றி குங்குமம் தோழி

பிரசவ கால கைடு - 13

- இளங்கோ கிருஷ்ணன்


ஹேப்பி ப்ரக்னன்ஸி தொடரில் மூன்றாவது ட்ரைமஸ்டர் எனும் பிரசவத்தின் ப்ரீக்ளைமேக்ஸ் காலகட்டத்தில் இருக்கிறோம். இதோ இன்னும் சில வாரங்களில் உங்கள் பாப்பா இந்த பூமிக்கு வந்து உங்களைப் பார்க்கப் போகிறது. கர்ப்பத்தின் 26வது வாரம் முதல் 30வது வாரம் வரை பாப்பாவின் வளர்ச்சி எப்படி இருக்கும்... தாயின் உடல்நிலை எப்படி இருக்கும் என்று இந்த இதழில் பார்ப்போம்.

வாரம் 26
இப்போது வயிற்றில் உள்ள உங்கள் பாப்பா நன்கு வளர்ந்திருக்கும். வெளிச்சத்தங்கள் நன்கு கேட்கும். அதன் நாடித்துடிப்பு மேம்பட்டிருக்கும். ஓசைக்கு ஏற்ப கை, கால்களை உதறவும் நகர்த்தவும் செய்யும். நுரையீரல்கள் இன்னமும் முழுமையாக வளர்ச்சியடைந்திருக்காது. அதன் மூளையின் அலைக்கற்றைகள் பிறந்த சிசுவுக்கு இணையான வளர்ச்சியை எட்டியிருக்கும். உறங்கி எழும் பழக்கம் உருவாகியிருக்கும்.

இந்தக் காலகட்டத்தில் தாய் வாரம் 2 கிலோ வரை எடை கூட வேண்டும். குழந்தையின் தொடர் அசைவுகள் இருக்கிறதா என்பதில் எப்போதும் கவனமாக இருங்கள். வயிற்றின் முன்பக்கம் பெரிதாகிக்கொண்டே செல்வதால் சிலருக்கு மார்புக்கூட்டின் அடிப்பகுதியில் விநோதமான வலி அல்லது அசெளகர்யம் ஏற்படக்கூடும். நெஞ்சு எரிச்சல், செரிமானப் பிரச்சனை இருந்தாலும் இந்த உணர்வு ஏற்படும். கர்ப்பப்பை தசைகள் ஸ்ட்ரெச் ஆவதால் சிலருக்கு சுரீர் சுரீர் எனும் தைக்கும் உணர்வும் அவ்வப்போது ஏற்படும். இப்படியெல்லாம் சிறுசிறு
அசௌகர்யங்கள் அவ்வப்போது தோன்றும் என்றாலும் அச்சப்படத் தேவை இல்லை.

வாரம் 27
குழந்தையின் கைகள் நன்கு அசைவுபெறும். விரல் சூப்பும் பழக்கம் ஏற்பட்டிருக்கும். இதனால், குழந்தை வெளி இரைச்சல்களில் இருந்து அமைதிபெறும். குழந்தையின் தாடைப்பகுதியும் ஈறும் வலுவாகும். சமயங்களில் குழந்தை அழவும் செய்யும். குழந்தை வளர்ந்துகொண்டே இருப்பதால் தாயின் வயிற்றுப் பகுதியில் ஸ்ட்ரெச் மார்க்ஸ் அடையாளங்கள் தோன்றும். எடை அதிகரித்து உடலின் போஸ்சர் மாறுவதால் தாய்க்கு பேலன்ஸ் செய்து நிற்பது நடப்பது சற்று சிரமமாக இருக்கும். சட்டென எழுந்ததும் நடப்பது, வேகமாக உட்காருவது போன்றவற்றை தவிர்த்துவிட்டு நிதானமாக இயங்குங்கள். பொய்வலி சிலருக்கு வந்து போகும்.

வாரம் 28
வயிற்றில் உள்ள குழந்தை சராசரியாக 15-16 இஞ்ச்சுகள் வளர்ந்திருக்கும். எடை சுமார் ஒரு கிலோவுக்கு மேல் இருக்கும். மூளையின் அலைக்கற்றைகள் செயல்படத் தொடங்கியிருக்கும். உறங்கும்போது REM  (Rapid Eye Movement) எனப்படும் வேகமான கண் அசைவும் தொடங்கியிருக்கும். ரெம் உறக்கம்தான் கனவுக்கு காரணம் என்பதால், உங்கள் குழந்தைக்கு இப்போது கனவுகளும் தோன்றத் தொடங்கியிருக்கும்.

கண் இமைகள் திறந்து மூடும். நுரையீரலின் பிற பாகங்கள் வளர்ந்துகொண்டிருக்கும். கர்ப்பப்பை தாயின் தொப்புள் பகுதிக்கு மேலே நன்கு வளர்ந்திருக்கும். இந்த வாரத்தில் என்று இல்லை இந்த மாதம் முழுக்கவே கால் வலி, மூட்டு இணைப்புகளில் வீக்கம், வலி, மெல்லிய மூச்சிரைப்பு, அடிவயிற்று வலி, அசமந்தமான உணர்வு, பொய்வலி, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஆகிய பிரச்சனைகள் ஏற்படும்.

வாரம் 29
பாப்பாவின் கருவிழிகள் நன்கு வளர்ச்சி அடைந்திருக்கும். தாயின் வயிற்றில் சூரிய ஒளியோ மற்ற வெளிச்சமோ படும்போது கர்ப்பப்பை சுவரைக் கடந்து அது ஊடுருவி வருவதை குழந்தையால் உணர முடியும். கண்களை இமைத்தும், தலையைத் திருப்பியும் உடனே அது தான் உணர்ந்ததை வெளிப்படுத்தும். தாயின் வயிற்றை உதைத்தும், உடலை முறுக்கியும் அசைவை வெளிப்படுத்தும். இந்த வாரத்தில் சராசரியாக 8-12 கிலோ வரை தாயின் உடல் எடை அதிகரித்திருக்க வேண்டும்.

பிரசவத்துக்கு இன்னும் சில வாரங்கள் உள்ளன என்பதால் கவனமாக இருங்கள். மாதவிலக்கில் வலி ஏற்படுவதுபோல் அடிவயிற்று வலி இருந்தாலோ, மெல்லிய ரத்தக்கசிவு, ப்ரவுன் நிறத்தில் திரவக் கசிவு இருந்தாலோ உடனடியாக மருத்துவரை நாடுங்கள். போதுமான அளவு ஓய்வு, மனமகிழ்ச்சி, எளிய உடற்பயிற்சிகள், ஆரோக்கியமான உணவுகள் இந்தக் காலகட்டத்தில் முக்கியம்.

அரிதாகச் சிலருக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கும். தலைவலி, பார்வைத்திறனில் பாதிப்பு, கைகள், பாதங்கள், மூட்டுகள் வீக்கம், அளவுக்கு அதிகமான எடை அதிகரிப்பு ஆகியவை இருந்தால் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள். இது ப்ரீஎக்லேம்சியா எனும் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கக்கூடும். உயர் ரத்த அழுத்தம், சிறுநீரில் புரதங்கள் அதிகரிப்பது ஆகியவற்றால் ஏற்படும் ஆபத்தான சூழல் இது. எனவே, கவனமாக இருக்க வேண்டும்.

வாரம் 30
குழந்தையின் உயரம், பருமன் அதிகரித்துக்கொண்டிருக்கும். எடை இரண்டு கிலோவை நெருங்கி இருக்கும். உயரம் 17 இஞ்ச் வரை இருக்கும். குழந்தையின் உடல் வெப்பம் தன்னைத் தானே கட்டுப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கும். கண் இமை மற்றும் புருவங்கள் நன்கு வளர்ந்திருக்கும். தலைமுடியும் வலுவாக வளரும். மொத்தத்தில் குழந்தையின் தலையும் உடலும் ஒரு சராசரி பிறந்த குழந்தையின் வளர்ச்சி நிலையை அடைந்திருக்கும். விரல்கள், நகங்கள் முழுமையடைந்திருக்கும்.

குழந்தை பிறக்க இன்னும் சில வாரங்கள் இருந்தாலும் தாயின் வயிறு நன்கு பெருத்திருக்கும். இடுப்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதியிலும் மார்புக்கூட்டிலும் அசெளகர்யமான உணர்வு ஏற்படும். பனிக்குடம் நன்கு ஊறியிருக்கும். அரிதாகச் சிலருக்கு பனிக்குடம் உடைந்து கசிவு ஏற்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை நாட வேண்டும். பனிக்குடம் உடைவது குறைப்பிரசவத்துக்கு வழிவகுக்கும் என்பதால் கவனம்.

மொத்தத்தில் இந்த மாதம் பிரசவம் எனும் தாய்மையின் தலைவாசலுக்குள் நுழைவதற்கான தொடக்கக்கட்டமாக இருக்கும். கடந்த ட்ரைமஸ்டரில் இருந்தது போன்று இல்லாமல் சிறுசிறு அசெளகர்யங்கள் ஏற்படத் தொடங்கும். தன்னம்பிக்கையோடு மனதை உற்சாகமாக வைத்துக்கொண்டு ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் அடுத்தடுத்த மாதங்களை வெற்றிகரமாகக் கடக்கலாம். அடுத்த இதழில் 31வது வாரம் முதல் குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

(வளரும்)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • germanyrecord

  ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

 • omancyclerace

  ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

 • bangladeshfire

  வங்கதேசத்தில் குடியிருப்பு பகுதியில் திடீர் தீ விபத்து : 9 பேர் உயிரிழப்பு

 • 18-02-2019

  18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-02-2019

  17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்