SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வானவில் சந்தை

2017-11-20@ 15:43:23

நன்றி குங்குமம் தோழி

புது உறவு புதுச் சந்தை


சென்ற மாதம் எனது நெருங்கிய உறவினர் வீட்டில் திருமணம். மதுரையில் கல்யாணம். மகளும் மருமகனும் வாழப்போவது சென்னையில். சீர் கொடுக்கும் பொருட்டு அவர்கள் என்னிடம் சொல்லிய ஒரு விசயம் ஆச்சரியமளித்தது. அவர்கள் மதுரையில் ஒரு எலெக்ட்ரானிக்ஸ் கடையில் விசாரித்த போது, இதை (கல்யாணச் சீர்) ஒரு பேக்கேஜாகவே அவர்கள் கொடுக்கிறார்கள் என்பதுதான் அது.

சில தினங் களுக்கு முன், முன்னணி மின் சாதனப் பொருட்கள் விற்கும் ஒரு நிறுவனம் சார்பில் தினசரிப் பத்திரிகையில் வந்த ஒரு விளம்பரம் அதை உறுதிப்படுத்தியது. கிட்டத்தட்ட அறுபதாயிரம் ரூபாய்க்கு, ஒரு குளிர்சாதனப் பெட்டி, ஒரு எல்.ஈ.டி. தொலைக்காட்சி, ஒரு ஏ. சி., ஒரு மிக்சி, ஒரு கேஸ் அடுப்பு, ஒரு கிரைண்டர், ஒரு சலவை எந்திரம் மற்றும் ஒரு தண்ணீர் சூடுபடுத்தும் சாதனம் என்று ஒரு தொகுப்பாக விற்கிறார்கள்.

இந்த சலுகை விலைத் (அப்படித்தான் விளம்பரப்படுத்துகிறார்கள்) தொகுப்பின் மொத்த விலையை மாதாந்திரத் தவணையாகவும் கட்டிக் கொள்ளலாம். தர்க்கப்படிப் பார்த்தால், ஒரு குடும்பம் இதை மொத்தமாக ஒரே நேரத்தில் வாங்க வேண்டிய தேவையிருக்காது. ஒவ்வொரு பொருளையும் வெவ்வேறு தருணத்தில்தான் வாங்க வேண்டியிருக்கும். ஒரு பொருள் உழைக்கும் கால அளவிற்குத் தக்கவாறு. ஆக, இந்த மாதிரியான சலுகை விலைத் தொகுப்புகள் பெரும்பாலும் புதிதாக மணமாகும் தம்பதியர் புகும் வீட்டை நோக்கி வடிவமைக்கப்படுபவைதான்.

அப்படி ஒரு சந்தை இருக்கத்தான் செய்கிறது. உண்மையில் ஒரு குடும்ப வாழ்வை ஆரம்பிக்கத் தேவையான அடிப்படையான பொருட்கள் என்ன? ஒரு நடுத்தரக் குடும்பத்தின் வீட்டை இப்படிப் பகுத்துக் கொள்ளலாம். சமையலறை, பொதுவிடம் (ஹால்), படுக்கையறை மற்றும் வாசிப்பறை. தனியாகச் சொல்லாவிட்டாலும் குளியலறையும் முக்கியமானதுதான். நாம் சமையலறையிலிருந்து ஆரம் பிக்கலாம். ஒரு புதுக்குடித்தனத்தில் மிக அடிப்படையான ஒன்று அடுப்புதான். இப்போது அது கேஸ் அடுப்பு.

கேஸ் அடுப்புகள் அடிப்படையான தேவை என்பது போய் சமையலறையின் அழகியலோடு தொடர்புடைய ஒன்று என ஆகிவிட்டது. மிகவும் நவீனமான வடிவமைப்பில் மூன்று நான்கு என்று எரிவாய்களைக் கொண்டு உடையாத கண்ணாடி மேற்பரப்போடு இப்போது அவை கிடைக்கின்றன. ஆயிரம் ரூபாயிலிருந்து ஆயிரக்கணக்கான ரூபாய் விலையில் அவை கிடைக்கின்றன. அவற்றை நேரடியாக விற்கும் கடைகளைத் தாண்டி அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இணைய விற்பனையாளர்களிடமும் அவை கிடைக்கின்றன.

அடுத்ததாகப் பாத்திரம் பண்டங்கள். மரபான வழியில் கொடுக்கப்படும் வெங்கல, பித்தளை மற்றும் எவர்சில்வர் பாத்திரங்களை யாரும் இப்போது பொதுவாகப் பயன்படுத்துவது இல்லை. பெரும்பாலும் குக்கரிலும் டெஃப்லான் பூசப்பட்ட சட்டிகளிலும் தான் உணவை சமைக்கிறார்கள். துரிதமாக உணவை தயாரிக்க முடியும் என்பதனாலும் கையாள எளிதானவை (குறைந்த எடை, கழுவுவது சுலபம்) என்பதனாலும் இவை மிகவும் பிரபலமாக விளங்குகின்றன. சில நூறு ரூபாய்களிலிருந்து பல ஆயிரம் ரூபாய் வரைக்கும் இவை விற்கின்றன.

உடல்நல விழிப்புணர்வு காரணமாகப் பழைய வெங்கல, இரும்புப் பாத்திரங்களுக்கு இப்போது தேவை கூடி வருகிறது. இவற்றோடு, ஒரு சமையலறையில் தேவைப்படும் நவீன மின் சாதனங்களில் முதன்மையானவை என குளிர்சாதனப் பெட்டியையும் மிக்சியையும் மாவரைக்கும் கிரைண்டரையும் சேர்த்துக்கொள்ளலாம். குளிர்சாதனப் பெட்டி இன்று நடுத்தர வர்க்கத்தின் இன்றியமையாத தோழனாகி விட்டது. அதிலும், கணவன்-மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் குடும் பங்களில், ஒரு குளிர்சாதனப் பெட்டி பெரும் பங்கு வகிக்கிறது.

மாவை அரைத்துப் பல நாட்களுக்கு வருமாறு சேமிக்கத் தோதானது என்பதிலிருந்து, பால், தயிர், சட்னி, காய்கறிகள் எனப் பலவற்றையும் கெடாமல் பாதுகாக்கும் ஒரு மந்திரப் பெட்டி என அது ஆகிவிட்டது. எனது நண்பர் ஒருவர், தேதி தாண்டிவிட்ட ஒரு மாவுப் பாக்கெட்டை தூக்கியெறிய முயன்ற போது அவரது மனைவி குறுக்கிட்டு, ‘‘அது ஃப்ரிட்ஜ்ஜிலதான இருக்கு, கெட்டுப்போயிருக்காது” என்றாராம்.

சில ஆயிரம் விலையில் கிடைக்கும் மினி ஃப்ரிட்ஜிலிருந்து சில லட்சங்கள் விலையில் கிடைக்கும் அதிநவீன வசதிகள் கொண்ட குளிர்சாதனப் பெட்டி வரை சந்தையில் உள்ளன. தமிழ் சமையலறையின் மிக அடிப்படையான மின் சாதனங்கள் என்று மிக்சியையும் மாவரைக்கும் கிரைண்டரையும் சொல்லலாம். சென்ற ஆட்சியில், ஏழை எளிய மக்களுக்கு தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டுப் பின்னர் விநியோகமும் செய்யப்பட்டன.

ஓரிரு ஆயிரம் ரூபாயிலிருந்து பல ஆயிரம் ரூபாய் வரையிலான விலையில் இவை கிடைக்கின்றன. மின் சாதனப் பொருட்களில், வெளிநாட்டு நிறுவனங்களைக் காட்டிலும் கூடுதலான பிரபலத்தை இந்திய நிறுவனங்கள் கொண்டிருப்பது இவற்றில்தான். பொதுவிடமான ஹாலைப் பொறுத்த வரை பிரதானமான மின் சாதனம் என்பது இன்றைய நிலையில் தொலைக்காட்சிப் பெட்டிதான். ஏசி, மின் விசிறி போன்றவை பல அறைகளுக்கும் பொதுவானவை என்பதால் பழைய தொலைக்காட்சிப் பெட்டிகள் வழக்கொழிந்து இப்போது மெல்லிய திரை கொண்ட எல்.ஈ.டி. தொலைக்காட்சித் திரைகள் வந்து விட்டன.

இவற்றைப் பற்றி வானவில் சந்தையில் ஏற்கனவே நாம் விரிவாகப் பேசியிருக்கிறோம் (ஒளியும் ஒலியும்). பல்வேறு அளவுகளில், சில ஆயிரம் ரூபாயிலிருந்து பல லட்சங்கள் வரையிலான விலையில் இவை விற்கப்படுகின்றன. ஏ.சி... சிறிது காலம் முன்பு வரை ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்திற்கு ஆடம்பரப் பொருளாகவே இருந்தது. இரண்டாயிரத்திற்குப் பின், தனியார் துறையில் அதிகரித்த வேலை வாய்ப்புகளும், உயர் சம்பள விகிதமும், மக்களின் வாழ்வுத் தரத்தைப் பெருமளவு மாற்றியிருக்கிறது.

எது ஆடம்பரம் என்பது குறித்த மனப்பாங்கையும் அதன் ஒரு வெளிப்பாடாகவே இப்போது ஒரு வீட்டின் பல அறைகளிலும் ஏசியைப் பார்க்க முடிகிறது. தோராயமாக,பதினைந் தாயிரம் ரூபாயிலிருந்து ஒன்றரை லட்சம் வரையிலான விலைகளில் இவை கிடைக்கின்றன. ஒரு கட்டில் என்பது படுக்கை யறைக்கானது. ஆனால், மேற்கண்ட எல்லா அறைகளுக்கும் பொதுவானவை (வாசிப்பறை உட்பட) நாற்காலிகள், மேசைகள் மற்றும் அலமாரிகள்தான். தரையில் உட்கார்ந்து, உண்டு, உறங்கிய காலம் இப்போது மலையேறிவிட்டது.

விருந்தினரைத் தரையில் பாய் விரித்து அமரச் செய்வதெல்லாம் இன்று கவுரவக் குறைச்சல். ஏழை எளியவர் வீட்டில் கூட விருந்தினர்க்கென்று ஒரு நாற்காலியை எடுத்துப் போடுகிறார்கள்.  முன்பெல்லாம், ஊரிலேயே உள்ள தச்சரிடம் செய்து வாங்கிய பிரத்யேகமான நாற்காலி மேசைகள் வீட்டிலிருக்கும். இப்போது அப்படிச் செய்வது சாத்தியக் குறைவுதான். தயார்நிலை பொருட்களின் காலம் இது. குறிப்பாகப் பிளாஸ்டிக்கின் வருகை, நாற்காலி மேசைகளின் உலகையே மாற்றி விட்டது எனலாம்.

குறைந்த விலை, பராமரிப்பு தேவையற்ற நிலை, எளிதாகக் கையாளும் தன்மை ஆகியவற்றால் இவை நடுத்தர வர்க்கத்தின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. பிளாஸ்டிக் நாற்காலிகள் இல்லாத வீடுகளே இல்லை எனத் துணிந்து கூறலாம். சில நூறு ரூபாயிலிருந்து பல ஆயிரம் வரை விலையில் இவை கிடைக்கின்றன. அதே நேரம், மரத்தாலானவையும் உலோகத்தாலானவையும் இப்போது சில ஆயிரத்திலிருந்து பல லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகின்றன. www.pepperfry.com, www.urbanladder.com போன்ற இணையதளங்கள் மூலமும் இவற்றை வாங்க முடியும்.

(வண்ணங்கள் தொடரும்!)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • CaucaLandslide

  கொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி..: மீட்பு பணிகள் தீவிரம்

 • BombBlastLanka19

  இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 290 பேர் உயிரிழப்பு: கொடூர நிகழ்வின் புகைப்படங்கள்

 • 22-04-2019

  22-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-04-2019

  21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-04-2019

  20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்