SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாதவிடாய்க் கறையின் விலை ஓர் உயிர்

2017-10-30@ 15:34:03

நன்றி குங்குமம் தோழி

- பி.கமலா தவநிதி


இது  முன்னேற்றம் காணாத சமூகம் என்பதை மீண்டுமொருமுறை  நிரூபணப்படுத்தியிருக்கிறது 12 வயது பள்ளி மாணவியின் தற்கொலை. திருநெல்வேலி அருகே பாளையங்கோட்டை அரசுப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவியின் தற்கொலைக்குக் காரணம் உடல் சார்ந்த புரிதலை ஏற்படுத்தாத நமது கல்வி முறை.

மாதவிடாய் காரணமாக ஏற்பட்ட ரத்தக்கசிவினால் அச்சிறுமியின் சீருடையில் ரத்தக்கறை படிந்திருக்கிறது. இதன் காரணமாக வகுப்பில் சக மாணவ - மாணவிகள் முன்னால் அச்சிறுமியை திட்டி அவமானப்படுத்தியிருக்கிறார் அவ்வகுப்பு ஆசிரியை.

அது மட்டுமல்லாமல் தலைமை ஆசிரியரைப் பார்த்து விட்டுத்தான் வர வேண்டும் எனப் பணித்திருக்கிறார். இந்த அவமானத்தைத் தாங்கிக் கொள்ள இயலாத அச்சிறுமி வீட்டில் எல்லோரும் தூங்கிய பிறகு நள்ளிரவில் மொட்டை மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவர் தன் அம்மாவுக்கு எழுதிய கடிதத்தில் அவரது மனக்குமுறல்கள் பதிவாகியிருக்கின்றன. ‘அந்த மிஸ் நல்லாவே இருக்க மாட்டாங்க’ என தன் வெதும்பலை அழுத்தமாகவே எழுதியிருக்கிறார். பெண் உடலின் இயற்கை நிகழ்வான  மாதவிடாய் காரணமாக ஒரு சிறுமி அவமானப்படுத்தப்பட்டு தற்கொலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறாள் என்பது வேதனையளிக்கிறது.

இத்தற்கொலைக்குக் காரணம் சிறுமியைத் திட்டிய வகுப்பு ஆசிரியை என்று சொல்லி அவரை மட்டும் குற்றவாளி ஆக்க முடியுமா? முடியாது. உடலியல் மற்றும் உளவியல் ரீதியிலான புரிதல்களை இக்கல்வி ஏற்படுத்தவில்லை. ஆகவே இக்கல்வி முறையில் பயின்று வந்த ஆசிரியர்களுக்கும் இது குறித்தான புரிதல் இருப்பதில்லை என்று சொல்லலாம்.

ஆனால் இது ஒரு சிறுமியின் உயிரைப் பறித்த பிறகு சாதாரணமாக விட்டு விட முடியாது. இது போன்ற சூழல்களை குழந்தைகள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்  என்பதை பெற்றோரும், ஆசிரியரும்தான் பயிற்றுவிக்க வேண்டும். அதற்கு முன் அவர்களுக்கு அது குறித்து பயிற்றுவித்தல் அவசியம் என்கிறார் மனநல மருத்துவர் கவிதா... ‘‘குழந்தைகள் தங்கள் பருவ வயதை நெருங்கும்போது அவர்களுக்கு தங்கள் உடல் குறித்து நிறைய கேள்விகள் எழும்.

அந்த கேள்விகள் எல்லாம் சரியா? தவறா? இதை யாரிடம் கேட்கலாம்? எப்படி கேட்பது? கேட்டால் தவறாகி விடுமோ? என்ற பல கேள்விகளும் சந்தேகங்களும் மேலோங்கி நிற்கும். இதனால் சீரற்ற எண்ண ஓட்டங்களில் மாட்டி தவித்து கொண்டிருப்பார்கள்.

 பதின்ம வயதில் அடியெடுத்து வைக்கும் இருபாலருக்கும் பெற்றோர்களோ ஆசிரியர்களோ மனித உடலின் செயல்பாடுகள், ஹார்மோன்கள், குட் டச், பேட் டச் எனப்படும் தொடுதலை வகைப்படுத்துவது தொடங்கி அதிலிருந்து மனம் மற்றும் உடல் அளவில் எப்படி தங்களை தயார் செய்வது என்பதை நிதானமாக பேசி புரியவைக்க வேண்டும்.  

பெண் குழந்தை என்றால் பூப்பெய்துதலில் தொடங்கி உடலில் ரோமம் மற்றும் பாகங்களின் வளர்ச்சி, உணவுப் பழக்கம், மாதவிடாயை எதிர்கொள்ளுதல், மாதவிடாய் நாட்களில் ஏற்படும் மனநிலை மாற்றங்கள்,  நாப்கின் பயன்படுத்தும் முறை மற்றும் அகற்றும் முறை, ஆண்கள் மற்றும் சமூகத்தை எவ்வாறாக அணுகுவது?, எப்படி அவர்களை எல்லையில் நிறுத்துவது?, சரியான மற்றும் தவறான தொடுதல் எது என்பதையெல்லாம் தெளிவாக மற்றும் பொறுமையாக விளக்க வேண்டும்.

இதே போன்று ஆண்குழந்தையிடமும் பேச தவறக்கூடாது.  எப்படி குழந்தைகளுக்கு புரியவைக்கிறோமோ அதேபோல அவர்களை அதிகம் கையாளும் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்தான் அதிகம் ஆலோசனைகள் தேவைப்படுகின்றது. ‘பாலியல் கல்வி’ எனும் சொற்பதம் இங்கு தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. இது வெறும் பாலுறவு சார்ந்த கல்வி மட்டும் அல்ல.

உண்மையில் இது வாழ்க்கைக்கான கல்வி. வளர்  இளம் பருவத்தினர் எதிர்கொள்ளும் உடல் ரீதியிலான மாற்றங்களுக்கான  விளக்கங்களை இக்கல்வி வாயிலாக அளிக்க முடியும். ஆண், பெண் நிறைந்ததுதான் வெளியுலகம் என்பதை மறந்த பள்ளிக்கூடங்கள் வெளியில் கோ-எஜுகேஷன் என்று சொல்லிக்கொண்டு பாலின வேறுபாட்டையே புகட்டுகின்றன.

இருபாலரையும் தனித்தனியே உட்காரவைத்தல் அல்லது ஆண் பிள்ளைகளை முன் வரிசையிலும் பெண் பிள்ளைகளை பின் வரிசையிலும் உட்கார வைத்தல் மேலும் பள்ளி நேரம் முடிந்தவுடன் பெண் பிள்ளைகளை முதலில் அனுப்பியவுடன் ஆண்  பிள்ளைகளை 10 நிமிடம் கழித்து அனுப்புவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. இருபாலரும் பேசிப் பழகும்போது அவர்களுக்கிடையே காதல் மலர்ந்து விடக்கூடாது என்பதற்காக இந்த  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆனால் இருபாலரும் பேசி கொள்ளக்கூடாது என்பதுதான் தவறுகள் நடப்பதற்கு துவக்கமாக இருக்கிறது. போதிய அளவு அனுபவ அறிவு இல்லாத ஆசிரியர்கள் உபயோகிக்கும் சில வார்த்தைகளாலும் நடவடிக்கைகளாலும்தான் சில குழந்தைகள் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். பெற்றோர்களை காட்டிலும் ஆசிரியர்களின் சொல்லிற்கு வலிமை அதிகம்.

அதை ஆசிரியர்கள் உணர வேண்டும். ஒரு குழந்தையை எப்படி அணுகுவது என்பதை ஆசிரியர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். உடல்ரீதியான மாற்றங்கள் ஒரு பெண் குழந்தைக்கு நிகழ்வது சகஜம்தான் என்கிற உணர்வு முதலில் ஆசிரியருக்கு வேண்டும். அதன் காரணமாக நிகழும் எதற்கும் குழந்தையை பொறுப்பாக்கி திட்டுவது, துன்புறுத்துவது போன்றவற்றை செய்வது தவறு என்பதை ஆசிரியர் பயிற்சியின்போதே அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும்.

வெளிநாடுகளில் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உளவியல் ஆலோசனை  வழங்குவதற்காக மன நல மருத்துவரை நியமித்திருக்கின்றனர். மன நலம் சார்ந்த விழிப்புணர்வு இன்றைய காலத்தின் அவசியத் தேவை. ஏனென்றால் இந்த டிஜிட்டல்  யுகத்தில் மொபைல், இணையம், கேம் என பலவற்றுக்கும் அடிமையாகி விடுகின்றனர்.

இதனால் தனிப்பட்ட வாழ்வில் பல இடர்பாடுகளை சந்திக்க நேரிடுகிறது. இவற்றிலிருந்தெல்லாம் விடுபட்டு வளமான வாழ்க்கையைச் சாத்தியப்படுத்த மன  நலத்தையும் பேணிக்காக்க வேண்டும்.

கல்வியியலில் மன நலத்துக்கான பாடம்  இருந்தாலும் அது ஆழமான புரிதலை ஏற்படுத்துவதாக இல்லை. ஆகவே நமது பள்ளிகளிலும் மன நல மருத்துவரை நியமித்து மன நலம் தொடர்பான விளக்கங்களையும்  ஆற்றுப்படுதல்களையும் மேற்கொள்வதின் வாயிலாக இது போன்ற பிரச்னைகளுக்கு  முடிவு கட்டலாம்’’ என்கிறார் கவிதா.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-10-2018

  22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-10-2018

  21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • dussehraa_11

  நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

 • 20-10-2018

  20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்