SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

"இயக்குநர் ஆவேன்" தங்கமீன்கள் சாதனா

2017-10-26@ 14:29:33

நன்றி குங்குமம் தோழி

இயக்குநர் ராமின் படைப்பான ‘தங்கமீன்கள்’ மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாதனா. சாதனா என்று சொல்வதை விட‘தங்கமீன்கள்’ செல்லம்மா என்றால்தான் அனைவருக்கும் எளிதில் தெரியும். சற்றே மிகையான நடிப்பு என்றாலும் படம் முழுவதும் துறுதுறுவென நடித்திருந்தார். நடிப்புத் திறமையால் பல விருதுகளையும் பெற்றார். அதன் பிறகு வேறெந்த திரைப்படத்திலும் அவரைப் பார்க்க முடியவில்லை. தற்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிந்து கொள்ள ஒரு மாலை வேலையில் சந்தித்தேன். ‘தங்கமீன்கள்’ படத்தில் பார்த்தது போலவே சற்றும் மாறாத அதே தோரணையில் பேசினார்.

“இப்போ துபாயில் 10ம் வகுப்பு படிச்சிட்டிருக்கேன், ‘தங்கமீன்கள்’ படத்தில் நடிக்கும்போது எனக்கு 8 வயசு. அந்தப் படம் ரிலீஸ் ஆனபிறகு எல்லாரும் என்னை செல்லம்மான்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. அந்தப் படத்துக்காக விருதுகளும் கிடைச்சது. அப்புறம் நிறைய பட வாய்ப்பு வந்தது. ஆனால் எந்தப் படத்திலும் நடிக்கலை. இப்போ மறுபடியும் ராம் சாரோட ‘பேரன்பு’ படத்துல நடிச்சிருக்கேன். படம் சீக்கிரமாவே ரிலீசாக இருக்கு. இந்தப் படத்துலயும் நான் மகள் கேரக்டர் தான் பண்ணியிருக்கேன். ராம் சாரோட ஒர்க் பண்ணினது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அவருடைய மகளாவே என்ன பார்த்துகிட்டார்.

என்னை அவர் ராட்சஷினு செல்லமா சொல்லுவாரு” என்றவர் தன் எதிர்கால திட்டங்களையும் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். “ராம் சார் போலவே நானும் டைரக்டர் ஆகணும்னு ஆசை இருக்கு. எதிர்காலத்துல ஏழைப் பசங்களுக்கு ஒரு டிரஸ்ட் தொடங்கி அவர்களுக்கு உதவி செய்யணும்னு ஒரு ஐடியா வெச்சிருக்கேன். துபாய்ல இருந்தாலும் தாய் மொழி தமிழ் மீது எனக்கு ஆர்வம் உண்டு. அங்கு இருக்கக்கூடிய இரண்டு மாணவிகளுக்கு ஏற்படும் மொழி பிரச்சனையை Hear Me Out என்கிற குறும்படமாக இயக்கினேன். சமூக வலைத்தளங்களில் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனக்கு மியூசிக், டான்ஸ்னா ரொம்ப பிடிக்கும், ஸ்கூல் விட்டு வந்ததும் மியூசிக் கிளாஸ் போறேன்.

அம்மா கிட்ட பரதநாட்டியம் கத்துட்டேன். அம்மாதான் என்னுடைய பரதநாட்டிய குரு. அவரிடம் 100 பசங்க டான்ஸ் கத்துட்டு இருக்காங்க. அந்த நூறு பசங்கள்ல என்னையும் ஒருவராத்தான் அம்மா பார்த்துகிட்டாங்க. அவங்ளோட பொண்ணுனு எனக்கு எந்த சலுகையும் கொடுத்தது இல்லை. மத்த பசங்க மேல கோபம்னாக்கூட என்னைத்தான் திட்டுவாங்க. எனக்கு அப்போ மட்டும் கொஞ்சம் கோபம் வரும். அம்மாதானே என்று நானும் எந்த சலுகையும் கேட்டது இல்லை. எனக்கு எங்க அம்மா கிட்ட பிடிச்ச விஷயம் எல்லாரையும் அன்பா, கவனமா பார்த்துக்குவாங்க. பிடிக்காத விஷயம் அவங்களை ஒழுங்கா பார்த்துக்கவே மாட்டாங்க.

எங்க அப்பாவைப் பொறுத்தவரைக்கும் அவர் மல்டி டேலன்டட் மனிதர். ரொம்ப அன்பானவர். என்னுடைய எல்லா விருப்பத்தையும் பூர்த்தி செய்யக்கூடியவர். ஒவ்வொரு முறையும் நான் வெற்றி பெறும்போதும் என்னை ஊக்கப்படுத்தும் உந்துசக்தியாக இருப்பவர்” என்றவரை தொடர்ந்து சாதனாவின் அம்மா லக்ஷ்மி வெங்கடேஷ் நம்மிடையே பேசினார். “சாதனா சின்ன வயசுல இருந்தே துறுதுறுன்னு இருப்பா. பரதநாட்டியப் பயிற்சியின் போதுதான் ராம் சாதனாவைப் பார்த்தார். அவளுடைய சுட்டித்தனம் பிடித்துபோக படத்தில் நடிக்க அழைத்துக்கொண்டார். யார் எந்த ஒரு சிறிய உதவி செய்தாலும் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்கிற நல்ல பண்பு அவளிடம் உண்டு.

நானே அவளைப் பார்த்துதான் இந்தப் பண்பை வளர்த்துக்கொண்டேன். சினிமா, டான்ஸ், மியூசிக் என தனித்திறமைகளில் அவள் கவனம் செலுத்தினாலும், படிப்பில் கெட்டிக்காரிதான். துபாய் நாட்டின் மாணவர்களுக்கான சிறந்த விருதை சாதனா பெற்று பெருமை சேர்த்தாள். அவளுடைய விருப்பத்திற்கு நாங்கள் எந்த தடையும் விதித்ததில்லை. பயிற்சி வகுப்பில் மற்ற மாணவர்களைக் காட்டிலும் ஆர்வமாக கற்றுக்கொள்வாள். அவளுடைய இந்த ஆர்வம்தான் அவளுக்கு பல விருதுகளை பெற்றுத் தந்துள்ளது. ‘பேரன்பு’ படத்தில் நன்றாக நடித்திருக்கிறாள். ‘தங்க மீன்கள்’ படத்தை விட பல மடங்கு அவளுடைய நடிப்புத் திறனை இந்தப் படம் வெளிப்படுத்தும் என்று நம்புகிறோம். ‘பேரன்பு’ படத்திற்கு காத்திருக்கிறேன்” என்றார் லக்ஷ்மி வெங்கடேஷ்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-08-2018

  22-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • birdfestivalcanada

  கனடாவில் வான்கூவர் நகரில் நடைபெற்ற பறவை திருவிழாவில் பறவைகள் போல உடையணிந்து தன்னார்வலர்கள் பங்கேற்பு

 • militaryparangimalai

  ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

 • guwahatidiadhani

  குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

 • koreanwarmeet

  கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்