SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போம் போம்!

2017-09-04@ 15:34:12

ஒவ்வொரு காலமும் ஒவ்வொரு மாற்றம் உண்டாவதே ஃபேஷன் உலகின் சிறப்பு. ஆனால், அந்த மாற்றங்களுக்கு இடையில் ஒருசில ஃபேஷன் ட்ரெண்டுகள் மட்டும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் நம்முடன் அமைதியாகப் பயணிக்கும். ஜீன்ஸ், அனார்கலி சல்வார்கள் வரிசையில் இந்த போம் - போம் அல்லது டஸ்ஸல் எனப்படும் குஞ்சங்களையும் இணைத்துக் கொள்ளலாம்.

உல்லனில் கைகளால் செய்யப்பட்ட பல வண்ண பந்துகள்தான் இந்த போம் - போம். துப்பட்டாக்களில் குட்டிக் குட்டி பந்துகள் தொடங்கி, பட்டுச் சேலைகளின் முந்தானை முடிவு, சல்வார்களில் சின்ன கயிறுகள், அதில் ஆடும் பெரிய பந்துகள்... என தொடர்ந்து காவலர்கள் / சான்டா க்ளாஸ் தொப்பி வரை இவையே வண்ணமயமாக அலங்கரிக்கின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை இந்த போம் - போம்கள் வட இந்திய வரவுகளாகவே பார்க்கப்படுகின்றன. உண்மையில் இவை 1930களிலேயே சியர் கேர்ள்ஸ் கைகளில் பெரிய அளவில் வந்துவிட்டன. இந்தியாவின் முக்கிய குடிசைத் தொழிலாக இதை சொல்லலாம் என்கிறார்கள் ஃபேஷன் ஆர்வலர்கள்.

டன் கணக்கில் குடும்பம் குடும்பமாக இந்த வண்ண உருண்டைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். செருப்பு, கைப்பை, தொப்பி என எங்கும் எதிலும் பளிச்சென அமர்ந்து கண்ணடிக்கின்றன இந்த போம் - போம். ‘‘வாரே வாவ்! போம் - போம் எனக்கு ரொம்ப பிடிச்ச ஃபேஷன்...” உற்சாகம் காட்டி ஜாலியாக பேச ஆரம்பித்தார் ஃபேஷன் டிசைனர் செந்தாமரை.

“பெரும்பாலும் ஜாலி கேலி, கோமாளித்தனம், உற்சாகமான மனநிலைனு இருக்கிற எல்லாருமே தங்களோட ஃபேஷன் அயிட்டங்கள்ல இந்த போம் - போம் இருக்கறதை விரும்புவாங்க. அப்புறம் 30 வயதுக்குக் கீழ இருக்கிற இளைஞர்கள், குழந்தைகள், குழந்தை மனம் கொண்டவர்களையும் இது ஈர்க்குது. நாங்க துப்பட்டா ஓரங்கள்ல சின்னச் சின்ன பார்டர் கொண்ட போம் - போம் பயன்படுத்தறோம்.

ஆனா, இப்ப ஃபேஷன் உலகையே இதுதான் ஆட்சி செய்யுது. வெள்ளை டாப்ல ரேடியம் அல்லது நியான் கலர் பந்துகளைக் கூட யோசிக்காம வெச்சுக்கறாங்க. உடைக்கு சம்பந்தமே இல்லாத கலர்கள்ல கூட போம் - போம் வைக்கிற வழக்கம் வர ஆரம்பிச்சுடுச்சு. அவ்வளவு  ஏன், பட்டுப்புடவைகளோட முந்தில தங்க நிற பந்து, லாங் ஸ்கர்ட்ல இடுப்புல இருந்து இரண்டு கயிறுகள்ல தொங்கக்கூடிய போம் - போம், ப்ளவுஸுக்கு பின்புற குஞ்சம்... இப்படி நிறைய பயன்படுத்தறோம்.

50 ரூபாய்ல தொடங்கி 500 ரூபாய் வரைக்கும் கல் வைச்ச போம் - போம்ஸை அனார்கலி மாதிரியான உடைகள்ல வைச்சிக்கறாங்க. இதை செய்யறதும் ஈஸி.டூரி, டஸ்ஸல்னு ரெண்டு வகை இருக்கு. ஒண்ணு பந்து மாதிரி இருக்கும். இன்னொண்ணு சியர் கேர்ள்ஸ் கைல இருக்க மாதிரி இருக்கும். இந்த ரெண்டையும் பெரும்பாலும் நாங்களே செய்துடுவோம்...’’ என்கிறார் செந்தாமரை.

உடைகள், செருப்புகள் தாண்டி மேக்கப் டிரெண்ட் ஆகக் கூட போம் - போம் வந்து விட்டது. இதில் ஹைலைட் என்ன தெரியுமா? இந்த வருட சம்மர் சிறப்பாக பிரபல அமெரிக்க ஜீன்ஸ் தயாரிப்பு நிறுவனமான குட் அமெரிக்கன் (Good American by Khloe Kardashian & Emma Grede) வெளியிட்டுள்ள ஜீன்ஸ்களின் விளிம்புகளையும் போம் - போம் அலங்கரிக்கின்றன என்பதுதான்!

-ஷாலினி நியூட்டன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 01-06-2020

  01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 31-05-2020

  31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 30-05-2020

  30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 29-05-2020

  29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 28-05-2020

  28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்