SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீக்கிரம் சம்பாதிக்கலாம்

2017-08-23@ 13:01:48

நன்றி குங்குமம் தோழி

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்பார்கள். ஆனால், என்ன கைத்தொழில் உள்ளது, அதை எங்கே கற்றுக்கொள்வது என்பதுதான் பிரச்னையே... எந்தத் தொழில் செய்தாலும் அதில் முழு ஈடுபாடு காட்டினால் வீட்டில் இருந்தபடி நல்ல வருமானம் பார்க்க முடியும்.

பிளாக் பிரின்டிங்

நாகரிகத்திற்கேற்ப டிசைன் மாறும் காலம் இது. என்னதான் ரெடிமேட் ஆடை வாங்கினாலும், தையல்காரரிடம் அளவுகொடுத்து தைத்துப்போடும் ஆடைபோல் வராது ஒருசிலருக்கு. அதேபோல், பெண்கள் டிசைன் டிசைனாக புடவை, சுடிதார் என துணிமணிகள் எடுத்தாலும் மனதிற்குள் ஏதோ ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும்.

ஆனால், நாம் விரும்பும் டிசைனை அந்தத் துணியில் போட்டுக்கொண்டால் மனதிற்கு நிம்மதி. அப்படி விரும்பியபடி பல்வேறு டிசைன்களை போட்டுக் கொடுக்கும் தொழில்தான் பிளாக் பிரின்டிங். இதற்கென நூற்றுக்கணக்கான அச்சு வடிவங்கள் கிடைக்கின்றன. வாடிக்கையாளர் விரும்பும் வகையில் செய்து கொடுத்தால் நல்ல லாபம் தரக்கூடிய தொழில்.இதற்குத் தேவை வீட்டில் ஓர் அறை மற்றும் ஒரு டேபிள், 4 டிரே, துணி. துணிகள் மட்டுமல்லாது சணல் பொருட்களிலும் பிளாக் பிரின்டிங் மூலம் டிசைன்  செய்து விற்பனை செய்யலாம். ரூ.15,000 முதல் 25,000 வரை முதலீடு செய்து துணிகளை வாங்கி வீட்டில் இருந்தபடியே  விற்பனை செய்யலாம். தனியான ஒரு ஷோரூம் ஆரம்பித்தால் விற்பனையை மேலும் அதிகப்படுத்தலாம். முதலீட்டுக்கு மோசம் வைக்காமல் லாபம் தரக்கூடிய அற்புதமான தொழில்.

ரசனை முக்கியம்
அருணா விஜயகுமார், தியாகராயநகர், சென்னை.
‘‘சிறு வயதில் இருந்தே கலை சார்ந்த தொழில் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். திருமணத்திற்கு பிறகு குழந்தைகள் பள்ளி சென்றவுடன் வீட்டில் சும்மா இருக்க பிடிக்கவில்லை. எனவே, எங்கள் தெருவில் துணிகளுக்கு அச்சு டிசைன் போடும் தொழிலில் பயிற்சி பெற்றேன். சேலை, சுடிதார் மற்றும் பல துணிகள் வாங்கி அதில் பெண்களைக் கவரும் வகையிலான டிசைன் போட்டு விற்க ஆரம்பித்தேன்.

இதற்கு இல்லத்தரசிகள், கல்லூரிப் பெண்கள், அலுவலகம் செல்லும் பெண்கள் என அனைவரிடமும்  நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து ரெடிமேடு துணிக்கடைகள் மற்றும் நடுத்தரமான ஜவுளிக்கடைகளிலும் ஆர்டர் பிடித்தேன். வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கிச் சென்றதால் ஆர்டர் அதிகரித்தது. பெண்களும் வீடு தேடிவந்து தங்களுக்குப் பிடித்த டிசைன் போடச் சொல்லி வாங்கிச் செல்கின்றனர்.தற்போது என்னிடம் 1000த்திற்கும் மேலான அச்சுகள் உள்ளன. ஒரு மாதத்திற்கு ரூ.50 ஆயிரம் வரை சம்பாதிக்கிறேன். ஆர்வமுள்ள பெண்களுக்கு இத்தொழிலை கற்றுக் கொடுக்கிறேன். இந்தத் தொழிலில் ரசனைதான் முக்கியம். குறைந்த முதலீட்டில் நிறைவான லாபம் தரக்கூடிய காலத்திற்கேற்ற தொழில்.”

ஆடைகள் விற்பனை
ஆள் பாதி ஆடை பாதி என்பது பழமொழி. புடவை அணியும்போது நாம் உடுத்தும் புடவைக்கு தகுந்தாற்போல் உள்பாவாடையை அனைவருமே மேட்சிங்காக வாங்குவது வழக்கம். ஒரு தரமான துணியில் தைத்த உள்பாவாடை என்றால் அனைவரும் வாங்குவார்கள். தரமான ஆடை எந்த நகரங்களில் கிடைக்கும் என்பதை தெரிந்துகொண்டு அங்கிருந்து வரவழைத்து விற்பனை செய்யலாம்.

விலையில் குறைவாகவும், அதே நேரத்தில் தரமாகவும் இருந்தால், ஒருமுறை வாங்கியவர்கள் பிறகு எங்கேயும் வாங்க மாட்டார்கள். முதலீடு அவரவர் தகுதிக்கேற்ப செய்து கொள்ளலாம். இதில், டிசைன் ரொம்ப முக்கியம், அதேநேரத்தில அளவு வாரியாக, நிறம் வாரியாக வாங்க வேண்டும். கிராமப்புறம் மட்டுமல்லாது நகரங்களிலும் செய்யக்கூடிய தொழில்.

மார்க்கெட்டிங் முக்கியம்
சுதா, சென்னை.
‘‘நான் மேற்குவங்கத்தில் பிறந்து வளர்ந்தவள். எனக்கு அங்குள்ள ஆடைகள், அதன் தரம் பற்றி நன்கு தெரியும். சென்னையில் வசிப்பதால் அந்தத் துணிகளை வரவழைத்து விற்பனை செய்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணியதன் விளைவுதான் இந்தத்  துணி வியாபாரம். சென்னையில், உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தின் துணைத் தலைவராக உள்ளேன். எங்கள் நிறுவனம் மூலமாக நகரின் ஒவ்வொரு பகுதியிலும் கண்காட்சி நடத்தும்போது என துணிகளை அங்கு காட்சிப்படுத்தி விற்பனை செய்கிறேன். இதில், பெங்கால் காட்டன் சாரீஸ், கொல்கத்தா உள்பாவாடை, காந்தா ஒர்க் ஜாக்கெட் பிட், குர்தி மெட்டீரியல்ஸ் என பல காட்சிக்கு வைக்கப்படும்.  நைட்டி, சேலை, பிளவுஸ், ஜாக்கெட், பேன்ட், ஷர்ட் போன்றவற்றை பாதுகாப்பாக வைக்க பவுச்சும் உள்ளது.

இந்த பவுச்சில் துணிகளை வைத்தால் பாதுகாப்பாக இருப்பதுடன், வெளியூர் செல்லும்போது எடுத்துச் செல்லலாம். மடிப்பு கலையாமல் இருக்கும். இதையெல்லாம் கொல்கத்தாவில் இருந்து வாங்கிவந்து இங்கு விற்பனை செய்கிறேன். இந்தப் பொருட்கள் கொல்கத்தாவில் தரமாகவும், விலை குறைவாகவும் கிடைக்கின்றன. பெண்களிடம் நல்ல வரவேற்பு. கடந்த 24 ஆண்டுகளாக விற்பனை செய்து வருகிறேன். ஒவ்வொரு முறையும்  கொல்கத்தா  சென்று துணிகளை செலக்ட் பண்ணி பார்சல் போட்டுவிட்டு சென்னை வந்து எடுத்துக்கொள்வேன். போதுமான வருமானம் கிடைத்து வருகிறது.’’

தஞ்சாவூர் மோடிஃப் கலைப்பொருட்கள்
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்கள். ஒரு கலையைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் அதை நிச்சயம் கற்றுக்கொள்ளலாம். ஓவியங்களில் தஞ்சை ஓவியத்திற்கு என ஒரு சிறப்பு உண்டு. அந்த ஓவியத்தின் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொண்டு பரிமாணத்தின் அடிப்படையில் ஒரு கலைப் பொருட்களை உருவாக்க முடியும். தற்போது, அப்படி ஏராளமான கலைப்பொருட்கள் தஞ்சை அன்பளிப்பு ஓவியங்கள் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முதலீடு என்பது வீட்டில் ஓர் அறை மற்றும் தேவையான பொருட்கள் வாங்க ரூ.5,000 போதுமானது. இந்த ஓவியத்தை  குங்குமச்சிமிழிலோ, பல்லாங்குழியிலோ, பெண்கள் விரும்பி அணியும் ஹேர் க்ளிப் போன்றவற்றிலோ திறம்பட செய்து நன்கு வியாபாரம் செய்யலாம்.

நேர்த்தியான ஓவியம் வரைந்து அதன்மேல் மக் வேலைப்பாடுகள் செய்து பின்பு அதன்மேல் தரமான ‘தங்க மாக்கு’களை ஒட்டி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. குறைந்த முதலீட்டில் வீட்டில் இருந்தபடியே  செய்யக்கூடிய தொழில். கொஞ்சம் படைப்பாற்றலும், நேரமும், தொழில் தொடங்குவதற்கான சிறு முதலீடாக ரூ.5,000 இருந்தாலே போதும்.

மனதில் நிற்கும் அன்பளிப்பு
கே.சித்ரா, சென்னை.
‘‘முக்கியமான நிகழ்வுகளுக்குத் தரவேண்டிய அன்பளிப்புகள் அல்லது நமக்கு பிடித்தவர்களுக்குத் தர நினைக்கும் பரிசுகள் என நாம் கடைகளில் உள்ள பொருட்களை வாங்கி அன்பளிப்பு கொடுப்பது நம் வழக்கம். அப்படி கொடுக்கப்படும் அன்பளிப்புகளில் தஞ்சாவூர் ஓவியத்திற்கும் ஒரு முக்கிய இடம் உண்டு. ஆனால், அதன் விலை அதிகம் என்பதால் சிலர் அதை வாங்கிக் கொடுக்க தயங்குவதுண்டு.

அதனால், அந்தக் கலையை கற்றுக் கொண்ட நான் எல்லோரிடமும் கொண்டு சேர்க்கும் வண்ணம் மாத்தியோசித்ததுதான் இந்த தஞ்சாவூர் மோடிஃப் கலைப்பொருட்கள். தஞ்சாவூர் ஓவியம் வரைய தேவையான அதே பொருட்களைக் கொண்டுதான் இதனை தயாரிக்கிறோம். சிம்பிளான பொருளை கலைநயம் மிக்க காஸ்ட்லியான பொருளாக மாற்றுவதுதான் இதன் சிறப்பு.

மரப்பொருட்கள், குங்குமச்சிமிழ், பென் ஸ்டாண்ட், வளையல், கிளிப், நகைப்பெட்டி, போட்டோ ஃப்ரேம், மரப்பாச்சி பொம்மைகள்,  வெல்வெட் ஜுவல் பாக்ஸ் போன்றவற்றின் மீது இந்த வேலைபாடுகளை செய்யலாம். இந்தக் கலைப்பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. திருமணங்கள் மற்றும் இதர நிகழ்வுகளில் வருவோருக்கு வைத்துக் கொடுக்க அனைவரும் கேட்டு வாங்குகிறார்கள். இதன்மூலம் இன்று மாதம் ரூ.20,000 சம்பாதிக்கிறேன். இந்தக் கலையைக் கற்றுக்கொண்டு தொழில் செய்ய விரும்புகிறவர்களுக்கு கற்றும் கொடுக்கிறேன். ரசித்துச் செய்யக்கூடிய தொழில் இது.’’

வீட்டு உணவு தயாரிப்பு
சென்னை போன்ற பெருநகரங்களில் வேலை நிமித்தமாக தங்கியுள்ளவர்கள் எங்கே நல்ல தரமான உணவு கிடைக்கும் என்று தேடி அலைகிறார்கள். எங்கு பார்த்தாலும் உணவகங்கள். அவற்றில், அலைமோதும் கூட்டம். ஆனால், தரமான உணவுதான் எங்கும் கிடைப்பதில்லை.துரித உணவு என்ற பெயரில் வேகவேகமாக வெந்ததும் வேகாததுமாய் சாப்பிட்டுவிட்டு வேகமாய் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அதேவேளையில், வீட்டுச் சாப்பாடு கிடைத்தால் நன்றாக இருக்குமே என ஒவ்வொரு வரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு குறைந்த அளவில் நிறைவானதாய் வீட்டில் உணவு தயாரித்து காலை, மதியம், இரவு என்று கொடுத்தால் நல்ல வருமானம் பார்க்கலாம்.

வாடிக்கையாக சாப்பிட ஆரம்பித்துவிடுவார்களேயானால், யாருக்கு எந்த வேளை, என்ன உணவு தேவை எனத் தெரிந்துகொண்டு, அதனை பார்சலாகக் கட்டிக் கொடுக்கலாம் அல்லது அவர்களே வந்து சாப்பிட்டுவிட்டு செல்லும் அளவில் ஓர் இடத்தை அமைத்துக் கொள்ளலாம். அலுவலகத்தில் வேலை செய்பவர்களாக இருந்தால் அங்கு சென்று கொடுக்கலாம். சமையலறையும், சமைக்கத் தேவையான பாத்திரங்கள், மளிகை சாமான்கள், கேஸ் போன்றவற்றோடு தொழிலை ஆரம்பிக்கலாம். தரமான வீட்டுச் சாப்பாடு வழங்கினால், சாப்பிடுபவர்களின் வாய் வாழ்த்தாவிட்டாலும், வயிறு வாழ்த்தும். ரூ.10,000 முதலீட்டில் தொடங்கக்கூடிய ஓர் அற்புதமான தொழில் இது.

நிறைந்த மனதுடன் நிம்மதி தரும் வருமானம் ரேவதி, சென்னை.
‘‘எனக்கு நன்றாக சமைக்கத் தெரியும். ஏதாவது ஒரு தொழில் செய்யலாமே என எண்ணும்போது உணவு தயாரித்து அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்கோ, ஹாஸ்டலில் தங்கி இருப்பவர்களுக்கோ கொடுத்தால் நன்றாக இருக்குமே எனத் தோன்றியது. அதன்படி முதலில் குறைந்த அளவில் சமைத்து ஹாஸ்டலில் தங்கி இருப்பவர்களுக்குக் கொடுத்தேன். அடுத்து ஐடி கம்பெனி உள்ளிட்ட பிற அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்கும் கொடுத்தேன்.வீட்டுச் சாப்பாட்டுக்கு நல்ல வரவேற்பு இருக்கவே இதையே தொழிலாக செய்து வருகிறேன். காலையில் டிபன், மதியம் சாப்பாடு, இரவு டிபன் என வகை வகையாக அவர்கள் விரும்பும் வண்ணம் செய்து கொடுத்து வருகிறேன். இதில், காய்கறி கொண்டு தயாரிக்கப்பட்ட கூட்டுப் பொரியல் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். பெரும்பாலும் கலவை சாதம்தான்.சனி, ஞாயிறுகளில் சாம்பார், வத்தல்குழம்பு, ரசம், மோர் என செய்வதுண்டு.  மற்ற நாட்களில் 20:20  அதாவது, ஒரு தயிர் சாதம் என்றால், ஒரு சாம்பார் சாதம். எனது இந்தத் தொழிலுக்கு கணவர் வெங்கட்ரமணி பெரும் உதவியாக இருக்கிறார். மாதம் குறைந்தது ரூ.30,000 வரை வருமானம் வருகிறது. சாப்பிடுபவர்கள் மனதார வாழ்த்துகிறார்கள், எனக்கும் மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது.''

-தோ.திருத்துவராஜ்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • newyork

  நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

 • singaporebirds

  சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

 • turkey

  துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

 • climate

  ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

 • 25-06-2019

  25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்