SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கர்ப்பக்கால சந்தேகங்கள்!

2017-08-07@ 14:28:47

புதிதாக திருமணமான ஒவ்வொரு பெண்ணுடைய அடுத்த கனவு தாய்மை. பிஞ்சு கால்கள் வயிற்றில் உதைக்கும் போது உணர்வு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. அந்த சந்தோஷத்தை அனுபவிக்கும் முதல் கட்டத்தில்தான் என் மனைவி வசந்தி இருக்கிறார். திருமணமாகி ஒரு வருடத்திற்கு பிறகு, இப்போதுதான் கருவுற்று இருக்கிறார். டாக்டரிடம் சென்று முறையாக ஆலோசனை பெற்றாலும், எங்களுக்கு சின்ன பயம் இருக்கிறது. அதை விட எங்களை சுற்றி இருப்பவர்கள் எல்லாரும் ஒவ்வொரு ஆலோசனை சொல்கிறார்கள். பார்ப்பவர்கள் எல்லாரும் தங்களுடைய அனுபவங்களை கூறுகிறார்கள். இதனால் ஒரு வித குழப்பமாக இருக்கிறது. எதை எடுப்பது எதை விடுப்பது. என்ன சாப்பிடலாம். இந்த காலத்தில் என் மனைவி உடற்பயிற்சி செய்யலாமா? இப்படி பல கேள்விகள் என் மனதில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. இதற்கு என்ன செய்யலாம்  என்று எனக்கு ஆலோசனை வழங்கினால் நன்றாக இருக்கும்.

முதன்முதலாக கருவுறும் எல்லாப் பெண்களுக்கும் இருக்கும் சந்தேகங்களும், அச்சங்களும் வசந்தகுமார் அவர்களின் மனைவிக்கும் இருக்கிறது. இவர் சொன்னது போல், பலர் தங்களின் அனுபவத்தின் பேரில் பாதாம் சாப்பிடு, படுக்கும் முன் பால் குடி, பேரீச்சை சாப்பிடு என்றெல்லாம் ஏகத்துக்கும் ஆலோசனை சொல்வார்கள். அறிவியல்பூர்வமான பரிந்துரைகளை இவர்களுக்கு நிபுணர்களே வழங்க முடியும் என்பதால் உணவு ஆலோசகர் அம்பிகா சேகர் மற்றும் உடற்பயிற்சி நிபுணர் ராக்கி ஆகியோருக்கு வசந்தகுமாரின் டெக்ஸ்டை வாட்ஸப்பில் மெசேஜ் செய்தோம்.

அவர்கள் ஆலோசனை வழங்க ஒப்புக் கொண்டபோது இருவரையுமேகான்ஃபெரன்ஸ் கால் போட்டு பிடித்தோம்.‘‘கர்ப்பக்காலத்தை மூன்று வகையாக பிரிக்கலாம்...’’ என்று ஆரம்பித்தார் உணவு ஆலோசகர் அம்பிகா சேகர்.
‘‘முதல் மூன்று மாதம், வாந்தி, மயக்கம், சோர்வு போன்ற பிரச்னைகள் இருக்கும். எந்த உணவையும் சாப்பிட பிடிக்காது. எனவே மாதுளம் பழச்சாற்றுடன் சிறிது எலுமிச்சைசாறு சேர்த்து குடித்து, அரை மணிநேரம் கழித்து உணவு சாப்பிட்டால் வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்படாது.

நான்கு முதல் ஆறு மாதம் வரையிலான காலத்தில் குழந்தையின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக உருவாகும். தவிர கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைகள் ஒட்டுண்ணிகள். அவை தனக்கு தேவையான ஆகாரத்தை அம்மாவின் உடலில் இருந்தே உறிந்துக்கொள்ளும் என்பதால் தேவைக்கு அதிகமான போஷாக்கான உணவுகளை சாப்பிட வேண்டும். குழந்தையின் வளர்ச்சிக்கு கால்சியம், இரும்பு மற்றும் இதர புரதசத்துகள் மிகவும் அவசியம். பால், பால் சார்ந்த பொருட்கள், மீன், நண்டு, இறால் போன்றவற்றில் அதிக கால்சியசத்துள்ளது. தினமும் குறைந்த பட்சம் மூன்று டம்ளர் பால் குடிப்பது அவசியம். கீரை வகை, பேரீச்சை, கேழ்வரகு ஆகியவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் தேவையான இரும்புச் சத்து கிடைக்கும்.

நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்துள்ளது. எனவே தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிடலாம். தவிர எல்லா வகையான காய் மற்றும் பழங்களையும் சாப்பிட வேண்டும். புரதசத்துக்கு பாதாம், பிஸ்தா, அக்ரூட், வேர்க்கடலை, மீன், முட்டை சாப்பிடலாம். இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது. ஆனால், கர்ப்பக்காலத்தில் கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். சராசரி எடையில் இருந்து பத்து முதல் பன்னிரெண்டு கிலோ அதிகரிக்க வேண்டுமே தவிர அதற்கும் மேல் எடை
கூடக்கூடாது. கடைசி மூன்று மாதங்களில் குழந்தை முழு வளர்ச்சி அடைகிறது. இந்த சமயத்தில் தாயின் உடலில் அதிக நீர்ச்சத்து சேரும். அதனால் கை மற்றும் காலில் வீக்கம் ஏற்படும். எனவே உணவில் உப்பின் அளவை குறைக்கவேண்டும். படுக்கும் போது காலை உயர்த்தி வைத்து படுக்கலாம். இரவு நேரத்தில் எளிதில் ஜீரணமாகும் உணவை சாப்பிடவேண்டும். ரசம்சாதம், பால்சாதம் சாப்பிடலாம். பிறகு படுக்கும் முன் ஒரு டம்ளர் பால் அல்லது பழம் சாப்பிட்டுவிட்டு படுக்கலாம். பொதுவாக கர்ப்பக்காலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவது இயல்பு என்பதால் தினமும் ஒரு பழம் மற்றும் நார்சத்துள்ள உணவுகளை சாப்பிடவேண்டும்...’’ என்றார் அம்பிகாசேகர்.

‘‘இப்படி உணவுகளில் கவனம் செலுத்தினால் மட்டும் போதாது. கூடவே உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்...’’ என்று ஆரம்பித்தார் உடற்பயிற்சி நிபுணர் ராக்கி.‘‘கர்ப்பக் காலத்தில் பெண்களின் உடல் எடை அதிகரிக்கும். அதனால் மூட்டு, முதுகு மற்றும் கனுக்காலில் வலி ஏற்படும். அதைத்தடுக்க உடற்பயிற்சி மிகவும் அவசியம். அப்போதுதான் இடுப்பு எலும்பு மற்றும் உடல் தசைகள் வலுவடையும். இப்போது கர்ப்பக்காலத்தில் சர்க்கரை நோய் வருவது சகஜமாகிவிட்டது. அவர்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்யவேண்டும். தினமும் இருபது நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்யவேண்டும். உட்காரும்போது சேரில் அமராமல் தரையில் உட்காரவேண்டும். காலை நீட்டி தரையில் அமர்வதால், இடுப்புக்கு பயிற்சி மற்றும் கால் வீக்கம் ஏற்படாது.

கீழே அமர்ந்து எழும்போது தொடை மற்றும் கணுக்காலில் உள்ள தசைகள் வலுவடையும். இரண்டு கால் பாதங்களை ஒன்றாக சேரும்படி தரையில் ஐந்து நிமிடங்கள் அமரவேண்டும். இது தொடை மற்றும் இடுப்பு தசைகளை வலுவடையச் செய்யும். இறுதியாக ஒன்று எந்த உடற்பயிற்சியாக இருந்தாலும் மருத்துவரிடம் ஆலோசனை செய்த பிறகே மேற்கொள்ள வேண்டும்...’’ என்றார் ராக்கி.
தொகுப்பு: ப்ரியா

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-09-2018

  24-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-09-2018

  23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-09-2018

  22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • muharamfest

  நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

 • nasaevanaktrump

  அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்