SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹேப்பி ப்ரக்னன்ஸி

2017-08-01@ 11:52:35

இரண்டாம் டிரைமஸ்டர் பருவத்தை கர்ப்ப காலத்தின் அதிக சிக்கலற்ற பருவம் என்பார்கள் என்றாலும் சிலருக்கு சிறு சிறு உபாதைகள் இருக்கவே செய்யும். மருத்துவரின் ஆலோசனையுடன் உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது இரண்டாம் டிரைமஸ்டரின் சிக்கல்களை எளிதாகக் கடக்கலாம். இரண்டாம் டிரைமஸ்டர் பருவத்தில் கர்ப்பிணிகள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்று பார்த்துவருகிறோம். சென்ற இதழின் தொடர்ச்சியாக இதிலும் அதைப் பற்றிக் காண்போம்.

நெஞ்சு எரிச்சல் மற்றும் மலச்சிக்கல்கர்ப்ப காலத்தில் பல்வேறு ஹார்மோன் சுரப்புகள் அதிகமாக இருக்க வாய்ப்புகள் அதிகம். தாயின் உடலில் ப்ரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும்போது நெஞ்சு எரிச்சல் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த ஹார்மோன் அடிவயிற்று உணவுக்குழாய் உள்ளிட்டவற்றை ரிலாக்ஸாக வைத்திருந்து உண்ணும்  உணவு  மற்றும் செரிமானத்துக்கான அமிலங்களை பெருங்குடலிலேயே வைத்திருக்க உதவுகிறது. இந்த ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பதால் நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்தப் பிரச்சனையைத் தவிர்க்க உணவை ஐந்து அல்லது ஆறு வேளைகளாகப் பிரித்து உண்ணலாம். எண்ணெய் பலகாரங்கள், செரிமானத்துக்கு கடினமான உணவுகள், அமிலம் நிறைந்த உணவுகள், ஜங்க் ஃபுட்ஸ் போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு நார்ச்சத்து நிறைந்த கீரைகள், காய்கறிகள், பழங்கள்ஆகியனவற்றை உண்ணலாம். பழங்களில் சிட்ரஸ் அமிலம் நிறைந்த எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவற்றைத் தவிர்க்கலாம். நடைப்பயிற்சி, சின்னச் சின்ன ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளும் பயன்தரும்.

பைல்ஸ்
தாயின் உடலில் வயிற்றுப் பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதாலும், வளர்ந்துவரும் கருப்பை அடிவயிற்றை அழுத்துவதாலும் மலக்குடல் பகுதியில் உள்ள ரத்தக்குழாய்க்கு அதிகமான ரத்த ஓட்டம் இருக்கும். இதனால், மலக்குடல் பகுதிகளில் உள்ள ரத்தக்குழாய்கள் விரிவடைந்து பைல்ஸ் பிரச்சனையாக மாறுகிறது. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வது, உடல் உஷ்ணம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது, மருத்துவர் ஆலோசனைப்படி ஆயின்மென்ட்களைப் பயன்படுத்துவது ஆகியவற்றின் மூலம் பைல்ஸ் தொந்தரவில் இருந்து விடுபடலாம். பொதுவாக, பிரசவத்துக்குப் பிறகு பைல்ஸ் தொந்தரவு இருக்காது என்றாலும் ஒரு சிலருக்கு இந்தப் பிரச்சனை பிரசவத்துக்குப் பிறகும் தொடரக்கூடும். எனவே, உதாசீனப்படுத்தாமல் மருத்துவரை நாடுவது நல்லது.

கரு அசைதல்
கருவுற்ற 20வது வாரங்களில் வயிற்றில் உள்ள குழந்தை அசைவதை உணர முடியும். சிலர் அடிக்கடி இந்த அசைவை உணர்வார்கள். சிலரால் அசைவை உணர முடியாது. சிலருக்கு ஆறாவது மாதம் முதல் வயிற்றில் உள்ள பாப்பா அசைவதை உணர முடியும். இந்த அனைத்துமே இயல்பான விஷயங்கள்தான் என்பதால் பதற்றப்பட வேண்டியது இல்லை.

தோலில் ஏற்படும் மாற்றங்கள்
உடலில் ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்வதால் பளபளப்பான சருமம் ஏற்படும். இரண்டாம் டிரைமஸ்டர் காலத்தில் பொலிவான தோற்றம் இருக்கும். மெலனின் அளவு அதிகமாகவதால் சிலருக்கு ப்ரவுன் மார்க்ஸ் உருவாகும். அடிவயிற்றில் கறுப்பு நிற தடம் உருவாகும். பொதுவாக, பிரசவத்துக்குப் பிறகு இவை அனைத்தும் நீங்கிவிடும். தோற்றம் அழகாக இல்லை எனத் தோன்றினால் மருத்துவர் ஆலோசனைப்படி இயற்கையான, பக்கவிளைவு இல்லாத சிகிச்சைகள், மேக்அப் மூலம் இவற்றுக்குத் தீர்வு காண முற்படலாம். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை உள்ள வெயிலில் வெளியே செல்லாமல் தவிர்க்கலாம். இதனால் சூரியனின் உள்ள அல்ட்ரா வைலட் கதிர்கள் சருமத்தை பாதிக்காது. சிலருக்கு அடிவயிற்றிலும், மார்பிலும், தொடையிலும் செந்நிறப் புள்ளிகள் உருவாகும். வயிறு பெரிதாவதன் விளைவு இது. பிரசவத்துக்குப்பிறகு சரியாகிவிடும். இந்த புள்ளிகளுக்கு கிரீம்கள் தடவுவதால் சரியாகும் என்பதற்கு சரியான ஆதரங்கள் இல்லை என்பதால் அதைத் தவிர்ப்பது நல்லது.

கால் வீக்கம், வெரிகோஸ் வெய்ன்
வயிற்றில் வளரும் குழந்தைக்காக உடலில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் உடலில் உள்ள சிறிய ரத்தக்குழாய்கள் வெளியே தென்பட ஆரம்பிக்கும். இதை ஸ்பைடர் வெய்ன்ஸ் என்பார்கள். மேலும், கால் பகுதியில் ரத்த ஓட்டம் குறைவதால் அங்கு உள்ள ரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்பட்டு நீல வண்ண தோற்றம் ஏற்படுகிறது. இதை வெரிக்கோஸ் வெய்ன் என்பார்கள். இதற்கு என பிரத்யேக சிகிச்சைகள் இல்லை. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல் அவ்வப்போது எழுந்து நடப்பது,அமரும் போது கால்களை தொங்கவிட்டபடி அமராமல் நாற்காலி போன்ற ஏதேனும் உயரமான பொருளின் மீது நீட்டி அமர்வது போன்றவை சிறந்த பலன் தரும். பெரும்பாலும், பிரசவத்துக்குப் பிறகு மூன்று மாதங்களில் இந்தப் பிரச்சனை நீங்கிவிடும்.

எடை அதிகரிப்பு

காலை நேரத்தில் ஏற்படும் வாந்தி, தலைசுற்றல் போன்றவை முதல் மும்மாதத்தின் இறுதியில் முடிந்துவிடும் என்பதால் தாயின் பசியுணர்வு மேம்படும். எனவே எடை அதிகரிப்பும் இருக்கும். இரண்டாவது டிரைமஸ்டர் காலத்தில் வழக்கமாக நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவைவிட 300 முதல் 500 கலோரி வரை அதிகமாகத் தேவைப்படும். எனவே, மருத்துவர் ஆலோசனைப்படி உங்கள் உணவின் அளவைக் கண்காணிப்பது எடை மீதான கட்டுப்பாட்டை வைத்திருக்க உதவும்.

டாக்டர் ஒரு டவுட் எனக்கு
ஆர்.ஜி.செண்பகா, திருத்துறைப்பூண்டி.
‘எனக்கு வயது 29. தற்போது ஐந்து மாத கர்ப்பமாக உள்ளேன். சமீபமாக எனக்கு நெஞ்சு எரிச்சல் பிரச்சனை உள்ளது. இதனால், இரவில் உண்ணாமல் தவிர்க்கத் தோன்றுகிறது. ஆனால், நள்ளிரவில் பசிக்கிறது. நெஞ்சு எரிச்சல் பிரச்சனைக்கு என்ன தீர்வு?’ ‘கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது இயல்புதான். முறையான ஆரோக்கியமான உணவுப் பழக்கம்  மூலமும் சில எளிய சிகிச்சைகள் மூலமும் இதை ஓரளவு கட்டுப்படுத்தலாம். ஆனால், இரவு உணவைத் தவிர்ப்பது என்பது கர்ப்பிணிகள்  மட்டும் அல்ல; யாருக்குமே நல்லது அல்ல. இரவில்தான் உடல் தனக்கான வளர்சிதை மாற்றப் பணிகளைச் செய்கிறது. இரவில் சாப்பிடாவிட்டால் இந்த அவசியமான பணிகள் பாதிக்கப்படும். மேலும், கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கும் நல்லது அல்ல. எனவே, இரவு நேரத்தில் செரிமானத்துக்கு எளிதான உணவுகளை உண்பது, இடது பக்கமாக திரும்பிப் படுப்பது, அதீத நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டால் சுக்கு கஷாயம் வைத்துக்கொடுப்பது போன்றவற்றின் மூலம் நெஞ்சு எரிச்சலுக்கு  தீர்வு காண்பதே நல்லது. நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். செரிமானத்துக்கு சிரமமான கொழுப்பு நிறைந்த உணவுகள், எண்ணெய் பலகாரங்கள், ஜங்க் ஃபுட்ஸ் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. சிட்ரிக் அமிலம் நிறைந்த பழங்களைத் தவிர்க்கலாம்.’

RED FLAG ALERT
கீழ்க்கண்ட   பிரச்சனைகள் இரண்டாம் டிரைமஸ்டரில் இருந்தால் அவை மோசமான பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கக்கூடும். எனவே, தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது.
1.கடுமையான அடிவயிற்று வலி
2.ரத்தக் கசிவு அல்லது ரத்தப்போக்கு
3.தீவிரமான தலைசுற்றல், சோர்வு
4.அளவுக்கு அதிகமான எடை அதிகரிப்பு அல்லது எடைக்குறைவு.

ப்ரக்னன்ஸி மித்ஸ்

கிரகணங்களின் போது வெளியே வருவது வயிற்றில் உள்ள கருவை பாதிக்கும். எனவே, கர்ப்பிணிகள் வெளியே வரக்கூடாது. குறிப்பாக, சந்திர கிரகணத்தைப் பார்ப்பதால் அன்னப்பிளவு உள்ள குழந்தைகள் பிறக்கும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது. இது ஒரு தவறான நம்பிக்கை. அஸ்டெக் பழங்குடிகளிடம் இருந்து இது உருவாகி இருக்கலாம் என்கிறார்கள். நிலவின் முகத்தை பாம்பு கடிப்பதால் ஏற்படுவதே சந்திரகிரகணம் என்று அவர்கள் நம்பினார்கள். எனவே, சந்திரகிரகணத்தைப் பார்க்கும் கர்ப்பிணியின் வயிற்றில் உள்ள கருவும் பாதிக்கப்படும் என்று நம்பிக்கை உருவானது. பொதுவாக, சூரிய கிரகணத்தை தொலை நோக்கி இல்லாமல் வெறும் கண்களால் பார்ப்பது கண்களை பாதிக்கும் என்பது உண்மை. அதனால் அந்தக் காலத்தில் கிரகணத்தின் போது வெளியே வர வேண்டாம் என்று சொல்லியிருக்கக்கூடும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-04-2019

  20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • iyesumakal11

  இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2019

  18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chinaautoshow

  சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்