SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹேப்பி ப்ரக்னன்ஸி -பிரசவ கால கைடு

2017-07-18@ 12:24:40

ஹேப்பி ப்ரக்னன்ஸி தொடரில் இதுவரை முதல் ட்ரைமஸ்டர் பற்றிப் பார்த் தோம். இந்த இதழில் முதல் இரண்டாம் ட்ரைமஸ்டர் எனப்படும் இரண்டாவது மும்மாதம் பற்றிப் பார்க்கலாம். தாயாகும் பெண்ணின் உடலில் பொலிவான தோற்றத்தையும், வசீகரத்தையும் ஏற்படுத்தும் காலக்கட்டம் இது. இரண்டாவது மும்மாதம் என்பது, 13-வது வாரம் முதல் தொடங்குகிறது.

தாயின் வயிற்றில் உள்ள கருவுக்கு உடல் உறுப்புகள் ஆரம்பகட்ட வளர்ச்சியைப் பெற்றிருக்கும். மூளை, தலை, கழுத்து, கை, கால், விரல்கள், இதயம் என முக்கியமான உறுப்புகள் தோன்றி முழுமையான வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பருவத்தில் இரண்டாம் மும்மாதம் தொடங்குகிறது.

அதிகாலை எழுந்ததும் ஏற்படும் சோர்வு,  மயக்கம்,  தலைசுற்றல் போன்றவை மெல்ல குறையத்தொடங்கும். சிலருக்கு முழுமையாக இந்தப் பிரச்னைகள் நீங்கியிருக்கும். சிலருக்கு வாந்தி எடுப்பது இரண்டாம் மும்மாதத்திலும் தொடரும். பல பெண்களுக்கு இரண்டாம் மும்மாதம் என்பது ஒப்பீட்டளவில் மற்ற மும்மாதங்களை விடவும் சிக்கல்கள் இல்லாத எளிதான ஒன்று.

எனவே, உடல் மற்றும் மனதளவில் உங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்காக தயாராகுங்கள். இரண்டாம் மும்மாதத்தில் உங்கள் குழந்தை மிக வேகமாக வளரும். 18-22வது வாரத்துக்குள் உருவியல் மற்றும் குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிக்க இன்னொரு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்க வேண்டியது இருக்கும்.

உடலியல் மாற்றங்கள்

முதுகுவலி: கடந்த மும்மாதங்களாக உங்கள் உடலில் கூடியிருக்கும் எடையாலும் முதுகெலும்பில் உள்ள ஜவ்வுகளின் நெகிழ்ச்சி தன்மை அதிகரித்திருப்பதாலும் சிலருக்கு முதுகுவலி ஏற்படக்கூடும். இதிலிருந்து விடுபட நேராக அமர்வது, சரியான சாய்மானம் கொண்ட நாற்காலிகள், இருக்கைகளை பயன்படுத்துவது ஓரளவுப் பயனளிக்கும்.

உறங்கும்போது கால்களுக்கு இடையே அதிகப் பருமன் இல்லாத பருத்தித் தலையணையை வைத்துக்கொள்ளலாம். எடையுள்ள பொருட்களை தூக்குவதோ சுமப்பதோ வேண்டாம். ஹீல்ஸ் இல்லாத காலணிகள் அணியலாம். அதிக வலி இருந்தால் மருத்துவர் ஆலோசனைப்படி முதுகை மசாஜ் செய்யக் கற்றுக்கொண்டு வீட்டில் செய்யலாம்.

ஈறுகளில் ரத்தக் கசிவு: கர்ப்ப காலங்களில் தாயின் உடலில் எண்ணற்ற ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். இதன் ஒரு பகுதியாக வாயிலும்  ஈறுகளிலும் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். இதனால் சிலருக்கு ஈறுகள் மிகுந்த சென்ஸ்டிவ்வாகி எளிதாக ரத்தக் கசிவு ஏற்படும். பொதுவாக, பேறுகாலத்துக்குப் பிறகு ஈறுகள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும் என்பதால் அச்சப்படத் தேவை இல்லை.

கர்ப்ப காலத்தில் இந்தப் பிரச்னையை சமாளிக்க சாஃப்டான பிரெஷ்களைக் கொண்டு பல் துலக்கலாம். கர்ப்ப காலத்தில் ஈறுகளில் ரத்தக் கசிவு, பற்கள் பிரச்சனை இருந்தால் சிலருக்கு குறைப்பிரசவம் ஏற்படவும் குழந்தை எடைக்குறைவாகப் பிறக்கவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, கர்ப்ப கால பல் பராமரிப்பில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இந்தக் காலகட்டத்தில் பல் மருத்துவர் ஒருவரின் ஆலோசனைப் பெற வேண்டியது அவசியம்.

மார்பு பெரிதாகுதல்: முதல் மும்மாதங்களில் தாயின் மார்பில் இருந்த லகுத்தன்மை நீங்குவதை இரண்டாம் மும்மாதத்தில் உணரலாம். மார்புகள் மெல்ல வளர்ந்து பிறக்கப்போகும் குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு தயாராகிக்கொண்டிருக்கும். சரியான அளவு உள்ள உள்ளாடைகளை மாற்ற வேண்டியது அவசியம். இதனால், அசெளகர்யமான உணர்வைத் தவிர்த்து ரிலாக்ஸாக இருக்கலாம்.

மூக்குத் தொல்லைகள்: ஹார்மோன் மாற்றங்களால் மூக்கில் உள்ள ம்யூக்கஸ் மெம்பரேன்ஸ் எனும் நுண்ணிய பகுதிகள் பாதிக்கப்படக்கூடும். இதனால், சிலருக்கு உறங்கும் போது மூக்கடைப்பு, குறட்டை போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். மூக்கில் உள்ள திசுக்கள் பலவீனமடைவதால் சிலருக்கு எளிதாக சில்மூக்கு உடையும் வாய்ப்பும் உண்டு.

மூக்கடைப்பை நீக்குவதற்கு மருத்துவரின் பரிந்துரைப்படி எளிமையான சலைன் வாட்டர் சொட்டு மருந்துகள், ஆவி பிடித்தல் போன்ற இயற்கையான வழிமுறைகளைக் கடைப்பிடிக்கலாம். சிறுமூக்கு உடைந்தால், மூக்கு துவாரத்தை இருவிரல்களாலும் அடைத்து, தலையை சற்று முன்புறமாக நீட்டியபடி இருக்க வேண்டும். பின்புறம் தலையைச் சாய்த்தால் உதிரம் வாயில் சென்று புரை ஏற்படக்கூடும். உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

பிறப்புறுப்பில் திரவக் கசிவு: இரண்டாம் மும்மாதத்தில் சிலருக்கு பிறப்புறுப்பில் லுக்கோரியா (Leukorrhea) எனப்படும் ஒருவகை  மெல்லிய  திரவக் கசிவு நிகழக்கூடும். இது இயல்பானதுதான் அச்சப்படத் தேவை இல்லை. பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது. அவசியம் எனில் மருத்துவர் பரிந்துரைப்படி நாப்கின் பயன்படுத்தலாம். திரவத்தில் துர்நாற்றம், மஞ்சள் அல்லது பச்சை வண்ணம், ரத்தம், அளவுக்கதிகமான திரவச்சுரப்பு ஆகியவை இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

அடிக்கடி சிறுநீர் கழித்தல்: இரண்டாம் மும்மாதத்தில் கர்ப்பப்பை வளர்ந்து கொண்டிருப்பதால் இடுப்புப் பகுதியில் ஏற்படும் மாற்றங்களால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை உருவாகும். பொதுவாக கடைசி மும்மாதத்தில் இந்தப் பிரச்சனை நீங்கிவிடும் என்பதால் அச்சப்படத் தேவை இல்லை. உடலில் தேவையான நீர்ச்சத்து இருக்க வேண்டியது அவசியம் என்பதால், நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள் உண்பது, தினசரி 3-4 லிட்டர் தண்ணீர் பருக வேண்டியது அவசியம்.

கூந்தல் வளர்ச்சி:  ப்ரக்னன்ஸி ஹார்மோன் செய்யும் இன்னொரு முக்கியமான மாற்றம் முடிவளர்ச்சி. சிலருக்கு தலையில் உள்ள கூந்தல் அடர்த்தியாகும். சிலருக்கு தலையில் மட்டும் அல்லாமல் உடலில் கைகள், கால்கள், முகம் உட்பட சில இடங்களில் முடி வளர்ச்சி ஏற்படும். உடலில் ஏற்படும் முடி வளர்ச்சியைக் கட்டுப்படுத்த ஹேர் ரிமூவல் க்ரீம்கள், வேக்சிங் போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

தலைவலி: சிலருக்கு தலைவலி பிரச்சனை இருக்கக்கூடும். முடிந்தவரை டென்ஷனாகாமல் இருப்பது, மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்வது, தலைக்கு வெறும் கைகளால் மசாஜ் செய்வது, மூச்சுப் பயிற்சி போன்றவற்றால் தலைவலியை ஓரளவுக் கட்டுப்படுத்தலாம். பொதுவாக, கர்ப்ப காலத்தில் வலி நிவாரணிகள் போன்ற மாத்திரைகள் எடுத்துக்கொள்ளக் கூடாது. இவை குழந்தையை பாதிக்கக்கூடும். அளவுக்கு அதிகமான தலைவலி என்றால் மருத்துவர் பரிந்துரைப்படி சிகிச்சை பெறுவது நல்லது. இதனுடன் மேலும் சில உடலியல் மாற்றங்கள், பிரச்சனைகள் இந்த  இரண்டாம் மும்மாதத்தில் ஏற்படக்கூடும். அவற்றை அடுத்த இதழில் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • SouravGangulyBCCI

  பிசிசிஐ அமைப்பின் 39வது தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதவியேற்பு..: புகைப்படங்கள்

 • SkyCityFireAuckland

  நியூசிலாந்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த மாநாடு மையத்தில் 2வது நாளாக பற்றி எரியும் தீ..: அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம்!

 • NorthKarnatakaRain23

  கர்நாடகாவில் மீண்டும் கொட்டித் தீர்க்கும் கனமழை..: 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின

 • DiwaliPrep2k19

  நெருங்கி வரும் தீபாவளி...: விளக்குகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்...பட்டாசு, பரிசுப் பொருட்கள் விற்பனை படுஜோர்!

 • DanishLightHouse

  கடலரிப்பினால் நகர்த்தி வைக்கப்படும் 120 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம்...: டென்மார்க்கில் ஆச்சரியம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்