SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கர்ப்பகாலத்தில் தாம்பத்யம், அசைவம் சரியா?

2017-06-29@ 15:12:53

மத்திய யோகா மற்றும் நேச்ரோபதி கவுன்சில் (ஆயுஷ்) கர்ப்பிணிகள் பின்பற்றவேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் அடங்கிய கையேட்டை வெளியிட்டுள்ளது. அதில், `கர்ப்பிணிகள் அசைவம் சாப்பிடக் கூடாது. கோபப்படக் கூடாது. ஆசைப்படக் கூடாது. கர்ப்பக் காலத்தில் கணவன் – மனைவி தாம்பத்தியம் வைத்துக்கொள்ளக் கூடாது. பெட்ரூமில் அழகான படங்களை மாட்டி வைத்துக்கொண்டு, பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும். நல்ல புத்தகங்கள் படிக்க வேண்டும். பிரார்த்தனை பண்ண வேண்டும். நல்ல இசை கேட்க வேண்டும்’ என்பது உட்பட பல்வேறு வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் அழகான, ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போல் கடந்த மாதம் ஆரோக்கிய பாரதி (ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மருத்துவ அணி) சார்பாக ஒரு பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது. அதில் அழகான, உயரமான, அறிவான குழந்தைகளைப் பெற ஜெர்மனியின் ஆயுர்வேதா முறையை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, குறிப்பிட்ட கிரகங்கள் ஒன்று சேரும் நேரத்தில் மட்டும் கணவன் – மனைவி தொடர்ந்து 3 மாதங்கள் தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டும். இதனால் உடனே கருத்தரித்து, அழகான, உயரமான ஆரோக்கியமான குழந்தையைப் பெற முடியும். கருத்தரித்ததில் இருந்து குழந்தை பிறக்கும் வரை தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகம் தழைத்தோங்க ஆண் – பெண் உறவு என்பது அவசியமான ஒன்று. பசி, தாகம் போல் தாம்பத்தியம் என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்படும் அத்தியாவசியமான உணர்வு. நம் முன்னோர்கள் கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவு அவசியம்; அதன் மூலம் சுகப்பிரசவம் ஆகும் என வலியுறுத்தியுள்ளனர். `இந்த நேரத்தில்தான் உறவுகொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் உறவுகொள்ளக் கூடாது’ என்று சொல்வதும், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தாம்பத்திய ஆசை ஏற்படுவதை தண்டனைக்குரிய குற்றம் போல் சித்திரிப்பதும்… விந்தையாக உள்ளது. ஏற்கெனவே மனைவியுடன் கணவன் பலவந்தமாக உடலுறவுகொள்வது குற்றமாகப் பார்க்கப்படுவது இல்லை. இச்சூழலில் கருத்தரித்த நாளில் இருந்து பெண் உறவுகொள்ளக் கூடாது என்பது தனி மனித உரிமைக்கு விரோதமாகவும், பெண்களுக்கு எதிராகவும் உள்ளது.

தாம்பத்தியம்“கர்ப்ப காலத்தில் பெண்கள் கண்டிப்பாக மாமிசம் சாப்பிடக் கூடாது; தாம்பத்தியம் கூடாது என்பது சொல்வது முற்றிலும் பிற்போக்குத்தனம்” என்று கூறுகிறார், மதுரை மகப்பேறு மருத்துவர் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் மாநில உறுப்பினர் மீனாம்பாள்….

”கர்ப்ப காலத்தில் தாய்க்கும், குழந்தைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் எல்லாம் சாப்பிடுகிற உணவு மூலமாகவேத்தான் கிடைக்கின்றன. இந்தச் சமயத்துல கர்ப்பிணிகள் அதிகளவுல இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்த உணவு சாப்பிட வேண்டும். காய்கறிகளைவிட மாமிசத்துல அதிக அளவில் இந்தச் சத்துகள் இருக்கின்றன. காய்கறிகளில் கிடைக்காத நிறைய சத்துகள் மாமிசத்துல மட்டும்தான் இருக்கின்றன. அதனால கர்ப்பிணிகளை புரோட்டீன், இரும்புச்சத்து அதிகமுள்ள மாமிச உணவுகளைச் சாப்பிடச் சொல்வோம். காய்கறிகளைவிட மாமிசம் சாப்பிடறப்ப எளிதாக சத்துக்களை உடல் உறிஞ்சும். அதனால கர்ப்ப காலத்தில் பெண்கள் காய்கறிகளோட இறைச்சி, மீன், முட்டை, பால் எல்லாம் கண்டிப்பா சேத்துக்கிறது அவசியம்” என்றவர் கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவின் அவசியம் பற்றியும் விவரித்தார்…

”கர்ப்ப காலத்துல தாம்பத்திய உறவே கூடாதுனு சொல்றதை ஏத்துக்க முடியாது. கர்ப்பம் உறுதியானதும் ஒரு மாசம் ரொம்ப ஹார்ஷா வேணாம்னு கொஞ்சம் அவாய்ட் பண்ண சொல்வோம். அதுக்கப்பறம் பொண்ணுக்கு எந்த காம்ப்ளிகேஷனும் இல்லேனா எப்பவும் போல கம்ஃபர்டபிளா தாம்பத்திய உறவு வெச்சுக்கலாம். தாம்பத்திய உறவால குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் வராது. குழந்தை நல்ல பாதுகாப்பா அம்மாவோட பனிக்குடத்துலதான் வளருது. கர்ப்பமா இருக்குற பொண்ணு உடல் அளவுல சௌகரியமா பீல் பண்ணினா அதுக்கேத்தமாதிரி இரண்டு பேரும் ஃபாலோ பண்ணிக்கணும்.

சில பெண்களுக்கு அடிக்கடி அபார்ஷன் ஆகியிருக்கும். சிலருக்கு நச்சுக்கொடி கீழ் நோக்கி இறங்கி இருக்கும், சிலருக்கு கர்ப்பவாய் பிரசவிக்கிற காலத்துக்கு முன்னாடியே திறந்திருக்கும். இந்த மாதிரி சில உடலளவுல பிரச்னை இருக்கறவங்களை சில குறிப்பிட்ட காலம் மட்டும் தாம்பத்திய உறவை தவிர்க்கச் சொல்லுவோம். இது தவிர எச்.ஐ.வி நோயாளிகள் கண்டிப்பாக தாம்பத்திய உறவை தவிர்க்கணும். சில இன்ஃபெக்‌ஷன் இருக்கிறவங்களும் குறிப்பிட்ட காலம் தாம்பத்திய உறவை தவிர்க்கணும். கர்ப்ப காலத்துல பெண்கள் ஆரோக்கியமான சாப்பாட்டோடு, மன அழுத்தம் இல்லாம, கணவன் – மனைவி ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பா, அனுசரணையா இருக்குறது அவசியம். கணவன் – மனைவிக்கு இடையே தாம்பத்தியம் அதிகளவுல பாசப்பிணைப்பை ஏற்படுத்தும். கர்ப்ப காலத்துல அரசோட இந்த நெறிமுறைகளை தவிர்த்துட்டு ஒவ்வொருத்தரும் அவங்க செக்கப் போற டாக்டர்கள் என்ன சொல்றாங்களோ அதை ஃபாலோ பண்ணினாலே நல்ல ஆரோக்கியமான குழந்தையைப் பெத்தெடுக்கலாம்…”என நம்பிக்கை ஊட்டுகிறார் டாக்டர் மீனாம்பாள்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-01-2019

  15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • MakarSankrantiFestival

  வட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை

 • 14-01-2019

  14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-01-2019

  13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 12-01-2019

  12-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்