SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

selfie பொண்ணா நீங்க?

2017-06-12@ 15:09:46


‘நீங்கள் எதை அதிகமாக நேசிக்கிறீர்கள்?’ என்று கேட்டால் அம்மா, அப்பா, கணவன், மனைவி, குழந்தைகள் என அவரவர் குடும்பத்தில் உள்ளவர்களைத்தான் அனைவருமே சொல்வோம். ஆனால் இந்த நூற்றாண்டில் ஒவ்வொரு தனி மனிதனும் அதிகமாக நேசிப்பது எது தெரியுமா? அவரவர் செல்போனைதான். இதுவரை மானுடகுல வரலாற்றிலேயே இந்தப் பொருளை நேசித்தது போல் மனிதர்கள் இன்னொரு பொருளை நேசித்திருப்பார்களா என்பது சந்தேகமே என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஒரு நபர் சராசரியாக ஒரு நாளைக்கு 300 முறைக்கும் மேல் செல்போனை எடுத்துப் பார்க்கிறாராம். போன் வருகிறதோ இல்லையோ அடிக்கடி எடுத்துப் பார்ப்பது வழக்கமாகிவிட்டது.

இந்த போனை வைத்துக்கொண்டு நாம் செய்யும் அட்ராசிட்டிகள் கொஞ்சநஞ்சமல்ல. எங்கும் எப்போதும் செல்போனும் கையுமாகத்தான் திரிகிறார்கள் அனைவரும். குறிப்பாக, இளம் தலைமுறையினருக்கு இதன் மீதான மோகத்துக்கு அளவே இல்லை. டாய்லெட்டுக்குப் போகும்போது போனுடன் போய் இந்தியன் டாய்லெட்டில் காலைச் சிக்கவைத்து சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் நண்பர் ஒருவரை எனக்குத் தெரியும். இன்னும் சிலர் டாய்லெட்டில் செல்போனை தவறவிட்டுவிட்டு தவிப்பார்கள். ஆத்திரத்தை அடக்கினாலும் அதை அடக்கக்கூடாது என்பார்கள். ஆத்திரத்தையும் ‘பீப்’திரத்தையும் விட முக்கியமாகிப்போனது செல்போன்.
பெருநகரங்களில் சாலைகளில் டூவீலர் ஓட்டுவதே சர்க்கஸ்தான் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், சிலர் வண்டியில் செல்லும் போது தங்கள் செல்ல செல்போனை காதுக்குக் கொடுத்து, தோளால் முட்டுக்கொடுத்தபடி தலையைச் சாய்த்து பேசியபடியே பறக்கிறார்கள். அடப்பாவி மக்கா அழைப்பது எமனாக இருக்கலாம் என்ற கிளிஷேவாகாத கிளிஷே டயலாக்தான் நமக்கு நினைவுக்குவருகிறது.கோயில் என்பது அமைதியாக ஆண்டவனையும் நம்மையும் நினைத்துப் பிரார்த்திக்கும் புனித ஸ்தலம். ஆனால் அங்கும் நம் மக்கள் செல்போனும் கையுமாகத்தான் திரிகிறார்கள். கருவறை முன்பு நின்றுகொண்டு ரத்தம்கொதிக்க உரக்கப் பேசிக்கொண்டிருப்பவரைக் கடவுள் கூட காப்பாற்ற முடியுமா என்பது சந்தேகமே?

 மருத்துவமனைகளை மட்டும் விட்டுவைத்திருக்கிறோமா என்றால் அதுவும் இல்லை. சில மருத்துவமனைகளில் மருத்துவர்களே செல்போனும் கையுமாகத்தான் இருக்கிறார்கள். சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் அறுவைசிகிச்சையின்போது வயிற்றில் செல்போன் வைத்து தைத்த சம்பவம் வைரலானது. சினிமாவில் நடப்பது போன்ற கறுப்பு நகைச்சுவைகள் எல்லாம் நிஜத்திலும் நடக்கத் தொடங்கிவிட்டன.சிலர் செல்போனில் வைத்திருக்கும் ரிங்க்டோன் ரகளை ரகமாக இருக்கும். ஒருமுறை அலுவலக மீட்டிங்கில் அனைவரும் சீரியஸாக புதிய புராஜக்ட் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது ஒரு 50+ அங்கிளின் செல்போன் ‘நடக்கும் என்பார் நடக்காது’ என்று அலர பாஸ் மட்டும் அல்ல மொத்த டீமும் கடுப்பானது.

இழவு வீடு ஒன்றில், இறந்தவரின் சிறிய மகன் ‘ஜிங்கிண மணி ஜிங்கிண மணி சிரிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி’ என்று காலர் ட்யூன் வைத்திருந்தான். அது ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை அலறி சூழலின் இயல்பையே கெடுத்துக்கொண்டிருந்தது. இப்படி, எங்கு செல்போனை ம்யூட் செய்ய வேண்டும். எங்கு எந்த ட்யூனை வைத்திருக்க வேண்டும். எவ்வளவு வால்யூம் இருக்க வேண்டும் என்று எந்தப் புரிதலுமே இல்லாமல் போய்விட்டதுதான் துயரம். இன்னும் சிலர் இடம் பொருள் தெரியாமல் செல்போனில் உரக்கக் கத்துவார்கள். இவர் ஏன் போன் பேசுகிறார். இவர் கத்தும் கத்துக்கு போன் இல்லாமலேயே கேட்குமே என்று தோன்றும்.
செல்ஃபீ அலப்பறைகள்

செல்போனை வைத்துக்கொண்டே அலப்பறைகள் செய்துகொண்டிருந்தவர்களுக்கு செல்போனில் கேமரா வந்தது சும்மா ஆடுபவன் காலில் சலங்கை கட்டிவிட்டது போல ஆனது. செல்போன் கேமராவின் வரவில் உலகுக்கு ஒரு புதிய மனநோய் கிடைத்தது அதன் பெயர் ‘செல்ஃபீ மேனியா’. இதிலும் 20+ வயதினர்தான் லீடிங்.காலையில் எழுந்ததும் பல் துலக்காமல் ஒரு செல்ஃபீ, காலை குளித்துவிட்டு உடை மாற்றியதும் செல்ஃபீ. கல்லூரிக்கு, அலுவலகத்துக்குச் செல்லும்போது சிக்னனில் நின்று கொண்டு ஒரு செல்ஃபீ. தெருவில் நாயைக் குட்டியோடு பார்த்தால் செல்ஃபீ. ஷாப்பிங் போனாலும் செல்ஃபீ. தியேட்டர் போனாலும் செல்ஃபீ. ஃபிளைட்டில் ஏறினாலும் செல்ஃபீ. பஸ்ஸில் ஏறினாலும் செல்ஃபீ. நடிகர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை எந்த பிரபலத்தை சந்திக்க நேர்ந்தாலும் அவரோடு ஒட்டிக்கொண்டு ஒரு செல்ஃபீ. இப்படி காலை முதல் மாலை வரை செல்ஃபீயாக எடுத்துத் தள்ளுவது அவற்றைத் தன்னுடைய வாட்ஸப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் வலையேற்றுவது இதுதான் பலருக்கும் பொழுதுபோக்கு, பொழப்பு எல்லாமே.

வித்தியாசமாக எதைப் பார்த்தாலும் மனம் உடனே ஆச்சர்யப்படுவது இயல்புதான். ஆனால், செல்ஃபீ மேனியா உள்ளவர்கள் வித்தியாசமான எதையாவது பார்த்தால் உடனே அதனுடன் ஒரு செல்ஃபீ எடுத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். இந்த எல்லை வரைகூட தவறு இல்லை. இப்படி செல்ஃபீயாக எடுத்துக் குவிக்கத் தொடங்கிவிட்டால், நம் மனம் வித்தியாசமான காட்சிகளைத் தேடி ஓடத் தொடங்கும்.ஆபத்தான இடங்களுக்குப் பயணிப்பது, ஆபத்தான சூழ்நிலைகளைத் தேடிச் செல்வது, ஆபத்தான சூழ்நிலைகளை வேண்டும் என்றே உருவாக்குவது என மனம் வித்தியாசம் என்று எண்ணி ஆபத்தைத் தேடிக்கொள்வது நடக்கும். கடல் அலைகள் அதிகமாக உள்ள பாறைகளில் ஏறி செல்ஃபீ எடுப்பது, பாம்புடன் செல்ஃபீ எடுக்க முயல்வது, மிருகக்காட்சி சாலையில் புலி, சிங்கம் போன்றவற்றுடன் செல்ஃபீ எடுக்க முயல்வது, காடுகளுக்குப் பயணிக்கும்போது ஆபத்தான மிருகங்களுடன் செல்ஃபீ எடுப்பது போன்றவை சில உதாரணங்கள்.

இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் இன்றுகூட அமெரிக்காவில் ஒரு விமானி, தன்னுடைய குட்டி விமானத்தில் பறக்க பறக்க செல்ஃபீ எடுக்க முயன்றதில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.‘இது எல்லாம் எங்கோ வெளிநாட்டில்தானே நடக்குது?’ என்று நினைக்காதீர்கள். நம் ஊரிலும்தான் நிறைய இப்படி நடக்கின்றன. கொஞ்சம் இந்தத் துயரக் கதையைக் கேளுங்கள். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே டி.காளிபாளையம் என்ற கிராமம் உள்ளது. இங்கு உள்ள காந்தி நகரைச் சேர்ந்தவர் சந்திரகுமார். 27 வயது இளைஞர். கூலி வேலைக்குச் செல்பவர். சிறுக சிறுக சேர்த்த காசில் ஆசை ஆசையாய் செல்போன் வாங்கியவர், அதில் செல்ஃபீ எடுத்துப்பார்த்தார். ஒவ்வொரு செல்ஃபீயாய் எடுக்க எடுக்க மெல்ல மெல்ல செல்ஃபீ மேனியாவுக்கு ஆட்பட்டார்.

கடந்த மார்ச் மாதம் அவர் வீட்டின்திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அவர் மீது நாகப்பாம்பு ஒன்று ஊர்ந்து வந்துள்ளது. சந்திரக்குமார் நிலைமையின் விபரீதம் புரியாமல் அதை கையில் பிடித்தபடி செல்ஃபீ எடுக்க முயன்றுள்ளார். பாம்பு அவரை பல இடங்களிலும் கடித்துள்ளது. ஆனால், செல்ஃபீ எடுக்கும் ஆவலில் அதைப் பொருட்படுத்தவே இல்லை. கொடும் விஷம் உடலில் பாய்ந்ததால் அந்த இடத்திலேயே நுரை தள்ளி இறந்துவிட்டார் சந்திரக்குமார். சந்திரக்குமார் ஓர் உதாரணம் மட்டுமே. ஊர் எங்கும் இப்படி நூறு நூறு சந்திரக்குமார்கள் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் துயரமே.

இப்படி ஆபத்தான செல்ஃபீ முயற்சிகள் ஒருபுறம் என்றால் வித்தியாசமான காட்சியைத் தேடி அலையும் மனதுக்கு ஒருகட்டத்தில் அனைத்து விஷயங்களுமே வித்தியாசமாகத் தோன்ற ஆரம்பிக்கும். உதாரணமாக, சிலர் துடைப்பதுடன் நின்றபடி செல்ஃபீ எடுப்பார்கள், சிலர் சட்டையை கழட்டிவிட்டு வெறும் உடலுடன் செல்ஃபீ எடுப்பார்கள். உண்மையில் ஒரு பெண் துடைப்பம் கையில் வைத்திருப்பதிலும், ஓர் ஆண் வெறும் உடலுடன் சட்டையில்லாமல் இருப்பதிலும் எந்த அதிசயமும் வித்தியாசமும் இல்லை. ஆனால், அப்படி செல்ஃபீ எடுப்பது வித்தியாசம் என்று நம்பத் தொடங்கும் மனம். இப்படி சின்ன விஷயங்களை எல்லாம் செல்ஃபீயாக எடுத்துக் குவித்தால் ஒரு கட்டத்தில் எது முக்கியமான விஷயம், எது முக்கியமற்றது என்பதே மறந்து போகும்.
செல்ஃபீ மேனியா அதிகமாக இளைஞர்களிடம்தான் உள்ளது.

அதிலும் குறிப்பாக பெண்களே இந்த விஷயத்தில் ஆண்களைவிடத் தீவிரமாக உள்ளனர் என்கிறார்கள். மேலும், செல்ஃபீ எடுத்துக்கொண்டே இருக்கும்போது ஒருவிதத் தனிமையுணர்வும் அதனால் விரக்தியும் டிப்ரஸனும் அதிகரிக்கும் என்றும் சொல்கிறார்கள். அளவுக்கு அதிகமாக செல்ஃபீ எடுப்பவர்களில் 15 சதவிகிதம் பேருக்கு தீவிரமான மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். மேலும், எப்போதும் போனையே நோண்டிக்கொண்டிருப்பதால் வீட்டிலும் பணியிடத்திலும் உறவுகளில் சிக்கல் ஏற்படுகிறது. இதனாலும் மனிதர்களுக்கு இடையே இடைவெளி அதிகரித்து தனிமை உருவாகிறது. இந்தத் தனிமை மன அழுத்தத்துக்கு வழியாகிறது.

செல்ஃபீ எல்போ

செல்ஃபீ எல்போ என்பது தற்போது மெல்ல அதிகரித்துவரும் ஒரு எலும்புப் பிரச்சனை. டென்னிஸ் எல்போ என்று ஒரு பிரச்சனை உள்ளது. தச்சர்கள், பாரம் தூக்குபவர்கள், டென்னிஸ், கோல்ஃப், பேட்மின்டன் விளையாடுபவர்கள் போன்றவர்கள் போதுமான உடற்பயிற்சி, ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள், ஓய்வு இல்லாமல் கைகளைப் பயன்படுத்திக்கொண்டே இருக்கும்போது முன் கையிலிருந்து தோள்பட்டை வரை உள்ள தசைகள் பாதிக்கப்பட்டு வலி உருவாகும். இதை டென்னிஸ் எல்போ என்பார்கள். தொடர்ச்சியாக செல்ஃபீ எடுப்பவர்களுக்கு இதுபோல செல்ஃபீ எல்போ பிரச்சனை உருவாகும் என்கிறார்கள்.

அதாவது, செல்ஃபீ எடுக்கும்போது கைகளை நன்கு முன்புறம் நீட்டி செல்போனைப் பிடித்தபடி கட்டைவிரலால் கேமராபட்டனைத் தொட முயல்வார்கள். இதை அடிக்கடி செய்யும்போது மணிக்கட்டு முதல் விரல்கள் வரை உள்ள இடங்களில் உள்ள தசைப்பகுதி பாதிக்கப்பட்டு வலி ஏற்படும். இதை செல்ஃபீ எல்போ என்கிறார்கள். பொதுவாக, கைகளுக்குப் போதுமான பயிற்சிகள், ஸ்ட்ரெச்சிங் தராதவர்கள், எலும்பு அடர்த்தி குறைவாக உள்ளவர்கள், டென்னிஸ் எல்போ பிரச்சனை உள்ளவர்கள் போன்றவர்கள் செல்ஃபீ
எல்போ பிரச்சனையில் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

செல்ஃபீ மேனியாவிலிருந்து எப்படித்தப்பிக்கலாம்?

தினசரி ஐந்து செல்ஃபீக்கு மேல் எடுக்கும் வழக்கம் ஒருவருக்கு இருந்தால் அவர் செல்ஃபீ மேனியா பிரச்சனையில் சிக்கியிருக்கிறார் என்று பொருள். உண்மையில் தினசரி செல்ஃபீ எடுப்பது என்பதே கவனிக்க வேண்டிய ஒரு மன இயல்புதான்.
செல்ஃபீ எடுக்கும் முன் இது மிகவும் அவசியமா என்று யோசியுங்கள். இதை எடுத்து என்ன பயன் என்று யோசியுங்கள். வெறுமனே அதில் உள்ள த்ரில்லுக்காக என்றால் அதைத் தவிர்க்க முடியுமா என்று பாருங்கள்.

அளவுக்கு அதிகமாக செல்ஃபீ எடுப்பவர்கள் முதல் கட்டமாக செல்ஃபீ எடுக்கும் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்க முயற்சி செய்யுங்கள். பிறகு அதிலும் பாதி என எடுக்கும் செல்ஃபீகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டே இருங்கள். ஒவ்வொரு முறை குறைவான எண்ணிக்கையில் செல்ஃபீ எடுக்கும்போதும் உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள்.எப்போதும் செல்போனை பக்கத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடுங்கள். உறங்கும்போது தலையணைக்கு அடியில் செல்போனை வைக்காமல் ஸ்டாண்டிலோ வேறு எங்காவதுமோ வைக்கலாம்.

இது நள்ளிரவில் தூக்கம் கலைந்தால் செல்போன் நோண்டுவதைத் தடுக்க உதவும். வாய்ப்பு இருந்தால் கேமரா செல்போனை பயன்படுத்தாமல் சாதாரண செல்போனுக்கு மாறுங்கள். இதனால், கொஞ்ச நாட்களுக்கு வெறுமையாக இருக்கும்தான். ஆனால், அதுவும் பிறகு பழகிவிடும். ஒருகாலத்தில் செல்போன் இல்லாமல்தான் நாம் வளர்ந்தோம் என்பதை மறந்துவிடாதீர்கள்.அளவுக்கு அதிகமாக செல்ஃபீ எடுப்பவர்கள் தயங்காமல் ஒரு மனநல மருத்துவரிடம் சென்று கவுன்சலிங் பெறுங்கள். இதனால் இந்தப் பிரச்சனையில் இருந்துவிடுபட நடைமுறை சார்ந்த புரொபஷனல் அட்வைஸ் கிடைக்கும்.  

- இளங்கோ கிருஷ்ணன்
படங்கள்: வின்சென்ட் பால்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • salemchennairoad

  பொதுமக்கள் எதிர்ப்பு மீறி நடைபெறும் சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் : விளை நிலங்கள் அழியும் அபாயம்!

 • icffactorychennai

  சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் ஆய்வு

 • RaghulGandhi48thBday

  ராகுல் காந்தியின் 48வது பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

 • IndonesiaTobaLake

  இந்தோனேஷிய ஏரியில் 80 பேரை ஏற்றி கொண்டு சென்ற படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, பலர் மாயம்

 • KiteWarPalestine

  பட்டத்தில் தீவைத்து இஸ்ரேல் மீது புதுவிதமாக தாக்குதல் நடத்திய பாலஸ்தீனர்கள்: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்