SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அழகான கூடு

2017-06-05@ 12:29:37

நன்றி குங்குமம் தோழி

-சரஸ்வதி சீனிவாசன்

உங்கள் செல்லங்களுக்கென தனி அறை


குழந்தைகள் என்றாலே குதூகலம் தான். குழந்தைகள் இருக்குமிடமே கலர்ஃபுல் தான். நம் கவலைகளை மறக்க வேண்டுமானால், குழந்தைகளிடம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தாலே போதும், அவர்களின் மழலை கொஞ்சும் பேச்சால் கலகலப்பான சூழ்நிலை அங்கே உருவாகிவிடும். குழந்தைகள் எப்போதும் ஒரே மாதிரிதான். ஆனால் இந்த காலச் சூழல் அவர்களின் செயல்பாட்டில் சில மாற்றங்களை கொண்டுவந்து விட்டது.அதனால் இந்தக் கால குழந்தைகள் பழைய தலைமுறையை போல தலையாட்டி பொம்மைகளுடன் விளையாடுவதில்லை. ‘கம்ப்யூட்டரும் செல்போனும்’தான் அவர்களின் தற்போதைய விளையாட்டுப் பொருட்கள். சிலேட்டும் பலப்பமும் பயன்படுத்திய காலம் எல்லாம் மாறிவிட்டது. ‘கம்ப்யூட்டரும் மௌஸும்தான் இப்பொழுது அவர்களுடைய தேவை. இதை பயன்படுத்தும் அளவுக்கு அவர்களுக்கு இடவசதி செய்து தரவேண்டியது நம் கடமை ஆகிவிட்டது.

ஆம். அதனால்தான் நம் வீட்டு வசதிகளை அமைக்கும்பொழுது பிள்ளைகளுக்கும் தனி அறை அல்லது ஒரு பகுதி ஒதுக்க வேண்டியுள்ளது. தனி அறை இருந்தாலும் நிறைய பிள்ளைகள் இரவில் தாய், தந்தையுடன் படுத்து உறங்குவதையே விரும்புவார்கள். ஆனால் பகல் பொழுதில் கம்ப்யூட்டரில் ‘கேம்’ விளையாட, கேரம், செஸ் என பிற விளையாட்டுகள் விளையாட அவர்களுக்கு என இடம் ஒதுக்க வேண்டியுள்ளது.பள்ளி போக ஆரம்பித்தவுடன் படிக்க, எழுத நோட்டுப் புத்தகங்கள் அடுக்க, ‘யூனிஃபார்ம்’ உடைகள் அடுக்க என எத்தனையோ விஷயங்களுக்கு இடவசதி தேவைப்படுகிறது. குழந்தைகளுக்கு அவர்களுடைய வேலைகளை செய்வதற்கான நல்ல சூழலை ஏற்படுத்தித் தந்தால்தான் சந்தோஷமாக அவர்கள் தன் செயலை செய்ய முடியும். உதாரணமாக பெரியவர் உட்காரும் ஒரு நாற்காலியில் உட்காரச் செய்து, மேசை மேலுள்ள ‘கம்ப்யூட்டரை’ பயன்படுத்தச் சொன்னால் அவர்களுக்கு மிகவும் கடினம்.

எம்பி எம்பி ‘கம்ப்யூட்டரை’ பயன்படுத்துவது அவர்களுக்கு கஷ்டமாக இருக்கும். அப்படியானால் நாம் என்ன செய்யலாம்? இப்பொழுது குழந்தைகள் உயரத்திற்கு ஏற்றவாறு அனைத்து ஃபர்னிச்சர்களும் கிடைக்கின்றன. சிறு வயதில் ‘குட்டி சைக்கிள்’ வாங்கித் தருகிறோம். அதன்மூலம் ‘சைக்கிள்’ ஓட்ட கற்றுக்கொள்வது சரிதான்.ஆனால் வளர்ந்தபிறகு அதே சைக்கிளை பயன்படுத்த முடியாதல்லவா? ஆனாலும் கற்றுக்கொண்ட திருப்தி அவர்களுக்கு கிடைத்துவிடுகிறது. வளர்ந்தவுடன் தானாகவே பெரிய சைக்கிள் ஓட்ட ஆரம்பித்து விடுவார்கள். நம் நோக்கம் கற்றுத்தருவதாக இருக்க வேண்டுமே தவிர, இப்போது ஒரு செலவு அப்புறம் ஒரு செலவு என்று நினைக்கக் கூடாது.

சிறிய சைஸ் மேசை நாற்காலி அல்லது  நீள ‘டெஸ்க்’ போட்டால் தான் அவர்கள் உயரத்திற்கு எளிதாக செயல்களைச் செய்ய முடியும். இரவில் பெற்றோர்களுடன் உறங்கினாலும் அவர்கள் பள்ளி வேலைகளைச் செய்யவும், இஷ்டம்போல் பேசி, ஆடி மகிழவும் ஒரு இடம் அமைத்துத் தருவதில் ஏன் நாம் தயங்க வேண்டும்? அதுபோல், குழந்தைகள் அறை என்றால் கேட்க வேண்டுமா? இடமிருந்தால் போதும்! அப்படியே அனைத்தையும் இறக்கி விடலாம்.இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்களா? கவலையை விடுங்கள். இருக்கவே இருக்கிறது ‘பங்க் பெட்’. அவர்களுக்குக் கொண்டாட்டம் தான். ‘டிரெயினில்’ போவது போன்று ‘அப்பர் பெட்’டுக்கு போட்டி போடுவார்கள். சுவர் முழுவதும் வார்ட் ரோப். பிள்ளைகளே கையாளும் விதத்தில் குட்டி குட்டி ‘வார்ட் ரோப்புகள்’ ரெடிமேடாகக்கூட கிடைக்கின்றன. தரை முழுவதும் பசுமையான ‘லான் கார்பெட்’.

இடறி விழுந்தாலும் அடிபடாது. புல்தரை போன்று இருப்பதால் அதன் நடுவில் ஒரு சிறிய சறுக்கு மரம், சோஃபா, ஊஞ்சல் போன்றவற்றை வைக்கலாம். பொம்மைகளை அழகாக அடுக்கி வைக்க ஒரு அலமாரி. என்ன ஒரு அழகு! அவர்கள் வாழ்க்கையை, அருமையான குழந்தைப் பருவத்தை இதைவிட அழகாகக் காட்ட முடியாது.

இதன்மூலம் அவர்கள் சந்தோஷமாக இளமைப் பருவத்தை எப்படியெல்லாம் ஆடிப்பாடிக் கழிக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்க முடியும். இதோடு மட்டுமல்ல, அலமாரியில் துணி அடுக்குவதன் மூலமும், விளையாட்டுப் பொருட்களை அடுக்கி வைப்பதன் மூலமும், தரையை அழகாக வைத்துக்கொள்வதன் மூலமும், சிறு வயதிலேயே எவ்வளவு பொறுப்புடன் நடந்துகொள்கிறார்கள் என்பதை நம்மால் காண முடியும்.‘பொருட்களை எடுத்த இடத்தில் வை’ என்று நாம் சொன்னால் அடம் பிடிப்பார்கள். ஆனால் அதே அவர்களின் இடம், அவர்களின் பொருட்கள் எனும் பட்சத்தில் அது அழகாக இருக்க வேண்டும் என்று, தானே அதனை அடுக்கி வைக்கும் பாடத்தைக் கற்றுக்கொள்வார்கள். குழந்தைகள், பிள்ளைகள் என்றால் அப்படித்தான். நாம் வளைந்து கொடுத்து அன்பு ஆதரவு தந்தால் அனைத்தும் ‘சக்ஸஸ்’தான்.

சரி, இதுபோல் தனி அறை கிடையாது. சிறிய இடம்தான் எப்படி மேலே சொன்னது சாத்தியம் என்கிறீர்களா? கவலையை விடுங்கள்! இருக்கும் இடத்தை அவர்களுக்குப் பிடித்த மாதிரி மாற்றி விடலாம். இருக்கும் இடத்தில் நான் முன்பு சொன்னதுபோல் அவர்கள் உயரத்திற்கு ஏற்றவாறு மேசை, நாற்காலிகள் போடலாம்.நாற்காலிகள் மேசையுடன் கூடியதாக அல்லது பயன்படுத்திய பிறகு மேசைக்கு அடியில் தள்ளி வைக்கும்படி இருப்பதாக வாங்கிப் போடலாம். ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறதா? கவலையை விடுங்கள். இருக்கவே இருக்கிறது ‘பிளாஸ்டிக்’ நாற்காலிகள். அழகாக ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கிவிடலாம். தேவைப்படும்பொழுது மட்டும் போட்டுக்கொள்ளலாம்.

அதிலும் இப்பொழுது நல்ல தரத்தில் நிறைய வண்ணங்களில், நல்ல டிசைன்களில் கிடைக்கின்றன. சுவர் நிறத்திற்கு ஏற்ற நிறத்தில் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இடத்தை மிச்சப்படுத்தும் வகையில், இப்பொழுது அனைத்துமே ‘செட்’ செட்டாகக் கிடைக்கின்றன. நம் வேலைகள் நன்கு நடைபெற வேண்டுமே தவிர, எந்த ஃபர்னிச்சராக இருந்தாலும் நம் கை பட்ஜெட்தான் நமக்கு முக்கியம்.
ஒரு ‘கிரிக்கெட் பேட்’ எடுத்துக்கொண்டால் முப்பதாயிரத்தில் கிடைக்கிறது. அதையே ‘ஆயிரம்’ ரூபாய் விலையிலும் வாங்கி பிள்ளைகள் விளையாடுகிறார்கள். சிறிது சிறிதாக முன்னேறுவதில் தப்பில்லையே! அவர்கள் நோக்கம் ‘கிரிக்கெட்’ விளையாட வேண்டும் என்பதுதான். நாமும் சில நல்ல நோக்கங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அதற்கேற்ற வசதியைத் தர தயங்க வேண்டாமே! விரலுக்குத் தகுந்த வீக்கம்தானே?
 
அறையில் இடம் மிகச் சிறியதாக இருக்கிறதா? படுக்கை வசதி தர இயலவில்லையா? ஒரு ‘திவான்’ அமைப்பு தந்து விடுங்கள். இரவில் எப்படியும் பெற்றோருடன் படுக்கும் பட்சத்தில், ‘படுக்கை’ என்று தனியாக போட வேண்டியதில்லை. அந்த படுக்கையின் அடியில் முழுவதும் ‘ஸ்டோரேஜ்’ வசதி கொண்ட ‘டூஇன்ஒன்’ அமைப்பு இருக்கும் படி வாங்கி தரலாம் அல்லது கார்பென்டரிடம் சொல்லி வீட்டில் செய்யலாம்.இதன்மூலம் பொருட்கள் அடுக்க இடம் கிடைக்கும். பகலில் உட்கார ‘சோபா’ போல் பயன்படுத்த முடியும். இரவில் வேண்டுமானால் படுக்க வசதி செய்து கொள்ளலாம். இப்படிப்பட்ட படுக்கைகளும் கிடைக்கின்றன. இப்படி, இருக்கும் சிறிய இடத்தை, எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என யோசித்து நன்றாக திட்டமிட்டு அந்த அறையை அதற்கேற்றபடி நாம் பயன்படுத்தலாம். இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு சதுர அடி இடமும் விலை மதிப்புடையது.

நாம் செய்யும் பிளான் இடத்தை மிச்சப்படுத்துவதாகவும், பொருட்களை அடுக்க வசதியாகவும், தேவைகள் பூர்த்தியாகும் விதத்திலும் இருத்தல் வேண்டும். தனியறை இல்லாவிடில், பெரிய பெட்ரூமில் ஒரு பகுதியை ஒதுக்கிக்கொண்டு, அங்கு வேண்டிய அனைத்தையும் செய்ய முயற்சிக்கலாம். சில வீடுகளில் அதாவது தனி வீடுகளில் மாடிப்படி அருகே, படிகளின் அடியில் இடம் காலியாக இருக்கும்.அங்கு வேண்டாத பொருட்கள், பழைய சைக்கிள், ஷூ ஸ்டாண்டு ஆகியவற்றை வைத்திருப்பர். அந்த இடத்தைக்கூட நாம் ஒரு ‘ப்ளே ஸ்டேஷன்’ போன்று அமைத்துத் தரலாம். டேபிள் டென்னிஸ் விளையாடும் குழந்தைகளாக இருந்தால், ஒரு மேசை அமைத்து விளையாட இடம் தரலாம். இரண்டு மூன்று நாற்காலிகள், மேசை போட்டு கேரம், செஸ் போன்ற உள் விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்யலாம்.

அறை போன்று பிரித்து ‘கம்ப்யூட்டர்’ டேபிள் செட் செய்து வைக்கலாம். மேல் பாகம் முழுவதையும் அலமாரிகள் அமைத்து புத்தகங்கள் அடுக்கலாம். அதே இடத்தை படிக்கும் அறை போன்ற இடமாக பயன்படுத்திக் கொள்ளலாம். பிள்ளைகளுக்குத் தனி அறை என்று வசதி இல்லாவிட்டால்கூட பரவாயில்லை. ஆனால் படிப்பதற்கு அமைதியான இடம் ஒதுக்கித்தந்து, படிப்பில் ஆர்வமும், கவனமும் செலுத்தும் விதத்தில் சூழ்நிலை உருவாக்கித் தருதல் மிக முக்கியம்.வீட்டில் பலரும் வேலை செய்துகொண்டிருக்கும் பொழுது பிள்ளைகள் புத்தகத்துடன் வலம் வந்தால், அவர்கள் கவனம் சிதற வாய்ப்புண்டு. மேஜையில் ‘டேபிள் லேம்ப்’ வைக்கும்பொழுது அவர்களின் இடப்புறம் இருப்பதுதான் நல்லது. வெளிச்சம் சரியாகக் கிடைக்கவும், விளக்கின் நிழல் புத்தகத்தின் மேல் விழாமலும் படிக்க வசதியாக இருக்கும்.

வளர்ந்த பிள்ளைகள் தங்களையும், தங்கள் அறையையும் தங்கள் விருப்பப்படி வைத்துக்கொள்வார்கள். மிகச்சிறிய மற்றும் பள்ளி வயது பிள்ளைகளுக்கு நாம்தான் செய்துதர வேண்டி வரும். பொதுவாக மிகவும் வண்ணமயமாக இருத்தல்தான் பிள்ளைகளுக்குப் பிடிக்கும். அதிலும் குறிப்பாக, வயலட், ரோஸ், நீலம் போன்ற நிறங்கள் ரொம்பவும் அவர்களைக் கவரும்.நமக்கு முழுமையாக ஓர் அறையை அமைத்துத்தர முடியவில்லை என்றாலோ, இடவசதி போதாது என்று நினைத்தாலோ, அனைத்து வண்ணங்களையும் கொண்டவாறு பி.வி.சி.யிலாவது புத்தக அலமாரிகள் அமைக்கலாம். படங்களையும் அவர்கள் விருப்பம் போல் ஒட்டித் தரலாம். ஒவ்வொரு குழந்தையின் விருப்பமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். உதாரணமாக, சிலர் இயற்கைக் காட்சிகளை விரும்புவர்.

சிலர் ஓவியங்களை விரும்புவர். சிலர் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை விரும்புவர். மொத்தத்தில் படங்கள் ஒட்டியிருந்தால், அவர்களுக்கு அந்த இடம் மிகவும் விருப்பமான இடமாக மாறிவிடும். நிறைய சிறார் பள்ளிகளில் அவர்கள் விளையாடும் இடங்களில், சுற்றுச் சுவர்களில் படங்கள் ஒட்டியிருப்பதைக் காணலாம்.நம் பிள்ளைகள் விருப்பமறிந்து அதற்கேற்ற படங்கள் ஏதேனும் சுவற்றில் ஒட்டலாம் அல்லது பொது அறிவை விளக்கும் சார்ட்கள் ஏதேனும் தொங்க விடலாம். உதாரணமாக, பெரிய உலக வரைபடங்கள் தொங்க விடலாம். சரித்திர பூகோள பாடங்கள் படிக்கும்பொழுது எழும் சந்தேகங்களை அதனைப் பார்த்து அவர்கள் தெரிந்து கொள்ள முடியும். நல்ல மேற்கோள்கள், பொன்மொழிகள் கொண்ட போர்டுகள் வைக்கலாம்.முடிந்தவரை பிள்ளைகளுக்குப் பிடித்த நிறங்களை அனைத்திலும் புகுத்தினால் வண்ண மயமான இடமாக அவர்கள் அறை ஜொலிக்கும். நல்ல ஒரு சாப்பாடு தயார் செய்ய வேண்டுமானால் வேண்டிய அனைத்துப் பொருட்களும் தயாராக இருந்தால்தான் நாம் ஆசையுடன் சாப்பாடு செய்வோம். குழந்தைகள் தங்கள் பள்ளி வேலைகளை அழகாகச் செய்ய வேண்டுமானால், நல்ல ஒரு சூழ்நிலையும் அழகான அமைப்பும் இருந்தால் அவர்களும் உற்சாகத்துடன் விளையாடுவார்கள், படிப்பார்கள்.
 
எழுத்து வடிவம்: ஸ்ரீதேவி மோகன்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-05-2020

  22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்