SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறு தொழிலும் வாழ்க்கைக்கு உதவும்

2017-05-10@ 14:54:40

நன்றி குங்குமம் தோழி

தமிழகத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கலைப் பண்பாட்டு தளங்களில் முக்கியமான ஊர் மாமல்லபுரம். பல்லவர்களின் சிற்பக்கலை பற்றிய தகவல்களை சொல்லும் ஊர்களில் ஒன்று. சென்னையை ஒட்டி உள்ள இவ்வூர் வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்பதை நாமறிவோம். சுற்றுலா பயணிகள் அதிகம் வரக்கூடிய மாமல்லபுரத்தில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.வரலாற்று சிறப்பு மிக்க ஊராக இருந்தாலும், இங்கு வாழக்கூடிய மக்களின் வாழ்வாதாரம் பின்தங்கியே உள்ளது. கடற்கரைப் பகுதியை சார்ந்தே பலருடைய வாழ்வாதாரம் இருக்கிறது. இங்கு வியாபாரம் செய்பவர்களில் பெண்கள்தான் அதிகம். சிறு குறுதொழில் செய்யக்கூடியவர்கள் கால நிலைக்கு ஏற்றவாறு வியாபார யுக்தியை பயன்படுத்தி வருமானம் ஈட்டி வருகிறார்கள்.

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை பொருத்தே இவர்களின் வருமானம் நிர்ணயிக்கப்படுகிறது. குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை. சிறு தொழிலில் மிகப்பெரிய அளவில் வருமானம் இல்லை என்றாலும் குறைந்த முதலீட்டில் போதிய அளவு வருமானம் ஈட்டக்கூடிய பெண் வியாபாரிகள்தான் அதிகம். உணவு வகைகளிலிருந்து, கைவினைப்பொருட்களில் போதிய வருமானம் தருவதாக  கூறுகிறார் சிறுதொழில் செய்யும் ராஜேஸ்வரி.‘‘மாமல்லபுரத்தில் மன்னர் காலத்தில், பண்டைய கால தமிழர்களால் வடிவமைக்கப்பட்ட சிற்பங்களையும் சிலைகளையும் காண்பதற்கு வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் வருகிறார்கள். இங்கு இருக்கக்கூடிய ஐந்து ரதம் கோவிலைப் போலவே, கடற்கரைக் கோவில், மலைப் பகுதியில் கட்டிட கலைகளை காண பார்வையாளர்கள் வருவார்கள். இதைச் சுற்றியே எங்களுடைய வியாபாரமும் நடந்துகொண்டிருக்கிறது. கடற்கரையில் கிடைக்கக் கூடிய சங்கு, சிற்பிகளைதான் வியாபாரத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறோம்.

நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவள். திருமணத்திற்கு பிறகு மாமல்லபுரத்தில் குடியேறிவிட்டோம். திருமணத்திற்கு முன்பே ஃபேஷன் ஜூவல்லரி செய்வது எப்படி என்று வகுப்பு சென்று கற்றுக்கொண்டேன். இப்போது அதுதான் எனக்கு பயன்படுகிறது. மார்க்கெட்டில் கிடைக்கக்கூடிய சில அழகு பொருட்களை  பயன்படுத்தி செய்யக்கூடிய கைவினைப் பொருட்கள் இங்கு அதிகம் விற்கப்படுகிறது.  சிறிய வகை சங்குகள், சிற்பிகளை வைத்து வீட்டு அலங்காரப் பொருட்கள் செய்து விற்பனை செய்து வருகிறோம். அது மட்டுமல்லாமல் சங்கு வகைகளை பயன்படுத்தி தோடு, ஹேர் க்ளிப்ஸ் போன்ற ஃபேஷன் நகைகளையும் செய்து விற்பனை செய்கிறோம். இவ்வகை ஃபேஷன் நகைகளை விரும்பி வாங்கி செல்கிறார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிலர் எப்படி இதை செய்கிறீர்கள் என்று கேட்பார்கள். அப்படி கேட்போருக்கு செய்து காட்டுவேன்.

பாராட்டுவார்கள். சிற்பியும் சங்கும், இங்கு அதிகம் கிடைப்பதால் பெரிய முதலீடு தேவைப்படுவது இல்லை. ஆனால் இதற்கு செலவாகும் நேரம், வேலை பளுவை அதிகரிக்கிறது. இருந்தாலும் குறைந்த விலையிலே விற்பனை செய்து வருகிறோம். என்னுடைய கணவர் கடற்கரையில் இந்தப் பொருட்களை விற்கும் கடை வைத்துள்ளார். சங்குகளில் பெயர் எழுதித் தருவது, அரிசியில் பெயர் எழுதுவது என சிறு சிறு வியாபாரங்கள் செய்தே பிள்ளைகளை படிக்க வைத்துவிட்டோம்.மிகப்பெரிய வருமானம்  ஒன்றும் இல்லை என்றாலும், அன்றாட குடும்பச் செலவை பார்த்துக்கொள்ளும் அளவிற்கு வருமானம் கிடைத்து வருகிறது. கைவினைப் பொருட்களையே பயணிகள் அதிகம் விரும்புகிறார்கள். அதனால் மாமல்லபுரத்தில் கடைகளின் எண்ணிக்கை முன்பை விட அதிகமாகி விட்டது. கடைகளைப் போலவே பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் எங்களுடைய வியாபாரம் நஷ்டம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது” என்கிறார் ராஜேஸ்வரி.

மாமல்லபுரத்தில் உள்ள பாறைப் பகுதியில் சிறு வியாபாரம் செய்யக்கூடிய வயதான மகேஸ்வரியிடம் பேசியபோது, “ஏழெட்டு வருசமா இதே இடத்துலதான் வியாபாரம் பாத்துட்டு இருக்கேன். என் வீட்டுக்காரர் சிற்பம் செதுக்கும் கடையில வேலை செய்றார். எனக்கு ரெண்டு பொம்பளைப் புள்ளைங்க, ரெண்டு பேரையுன் கட்டிக் கொடுத்தாச்சு. வீட்டுல சும்மா இருந்தா எப்படி வாடகை குடுக்குறது?’’ என்று மெல்லிய குரலில் பேசத் துவங்கினார்.‘‘வீட்டுப் பக்கத்துல கிடைக்கக் கூடிய மாங்காய், வெள்ளரிக்காய், நெல்லிக்காய் எல்லாம் வாங்கிட்டு, வாட்டர் பாக்கெட் எடுத்துகிட்டு, மதியான சாப்பாடு கட்டிக்கிட்டு காலையில 10 மணிக்கு மலைக்கு வந்துடுவேன். இங்க வர்ற வெள்ளகாரங்க யாரும் இதை வாங்க மாட்டாங்க. அவங்க வாட்டர் கேன் கூலிங்கா இருந்தா வாங்குவாங்க அவ்வளவுதான். இங்கே வரக்கூடிய காலேஜ் பசங்க, காதல் ஜோடிங்கதான் விரும்பி வாங்கி சாப்பிடுவாங்க. இங்க 6 மணிக்குமேல இருக்க முடியாது.

அதனால 5 மணிக்கு கிளம்பிடுவோம். விழா நாட்கள்ல நல்லா வியாபாரம் நடக்கும். மற்ற நேரத்தில் கொஞ்சம் டல்லாத்தான் இருக்கும். சனி, ஞாயிறுனா ஓரளவுக்கு வியாபாரம் நடக்கும். ஒரு நாளைக்கு 150ல் இருந்து 200 வரைக்கும் கிடைக்கும். விழா டைம்ல 600 வரைக்கும் வியாபாரம் நடக்கும். இந்தக் காசு ஏதாவது கைசெலவுக்காவது ஆகும்னு வந்துடுவேன். மாசத்துக்கு ஒரு தடவை அதிகாரிங்க வந்து கடை வெக்கக்கூடாதுனு துரத்தி விட்ருவாங்க, மத்த டைம்ல எந்தப் பிரச்சனையும் இருக்காது.நான் முதல்ல வந்தபோது இங்க அவ்வளவா கடைகளே கெடையாது. இப்போ அங்க அங்க கடை வந்துடுச்சி அதனால வியாபாரமும் கம்மி ஆயிருச்சு. வீட்லேயே மோர் செஞ்சி எடுத்துட்டு வந்துடுவேன். வெயில் டைம்ல கொஞ்சம் வியாபாரம் ஆகும். மார்க்கெட்ல மாங்காய் விலை ஏத்திட்டாங்கனா கஷ்டமா இருக்கும். பெரிய வருமானம் இல்லைனாலும் வீ்ட்டு செலவுக்கு ஆகும்னு பலபேர் கை குழந்தையெல்லாம் தூக்கிக்கிட்டு வியாபாரத்துக்கு வந்துடுவாங்க.

இங்க மரம், செடி அதிகமாஇருக்குறதால பாம்பு கூட இருக்கும். இருந்தாலும் பழகிருச்சு. மழை சீசன்ல வியாபாரமே இருக்காது. இங்க உக்கார கூட  இடம் கிடையாது. மரத்துக்கு அடில எங்கேயாவது உட்கார்ந்துட்டு இருப்போம். பக்கத்து கிராமத்துல இருந்து வரக்கூடிய பசங்க யாராச்சும் குடிச்சிட்டு வந்தா கத்திக்கிட்டு கிண்டல் பண்ணிட்டு வருவாங்க. இப்போ அதிகாரிங்க அடிக்கடி வந்து போறதால பசங்க அவ்வளவா இம்சை பண்ணுறது கிடையாது.வயசான காலத்துல ஓடி ஆடி வேல செய்ய முடியாது. அதனால இங்க வந்து இருக்கோம். பேரப் பிள்ளைங்க வீட்டுக்கு வந்தா அத வாங்கிக்குடு இதை வாங்கிக் குடுன்னு கேட்குங்க. அதுக்காகவாது சம்பாதிக்கணும். அவருக்கு ஒரு நாளைக்கு 250 ரூபா  சம்பளம் தருவாங்க, நானொரு 200 எடுத்துட்டுப் போவேன். இப்படியே குடும்பம் ஓடிட்டு இருக்கு” என்கிறார்.

படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்

- ஜெ.சதீஷ்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

 • 03-06-2020

  03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • schoolopen3

  சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்