SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊசமுனை ஓவியங்கள்

2017-05-08@ 14:12:27

நன்றி குங்குமம் தோழி

புதிய தொடர்

ஆடை வடிவமைப்பு என்பது ஒரு கலை. கலை சார்ந்த விஷயங்களில் பெண்களின் ஆர்வம் மிகமிக அதிகமாக இருக்கும். எந்த மாதிரியான உடையை எப்படி வடிவமைப்பது, அதில் என்னென்ன வண்ணங்களை சேர்த்து, எந்தமாதிரியான வேலைப்பாடுகளை செய்து ஆடையை மெருகூட்டுவது என்பதெல்லாம், இப்போது ஆடை வடிவமைப்பு துறையில் முக்கியத்துவம் பெறத் துவங்கிவிட்டன.திருமணம், வரவேற்பு, குடும்ப நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் என எல்லாவற்றிலும் கலர் கலரான வண்ண ஆடைகளை உடுத்தி, அந்த அரங்கத்தையே பெண்கள் தங்களின் அழகால் ஜொலிக்கவைத்துவிடுகிறார்கள். மணமக்கள் இப்போதெல்லாம் தீம் ஆடைகளை வடிவமைத்து உடுத்தத் தொடங்கியுள்ளனர்.

அதற்கேற்ப ஆடை அலங்காரம் தொடர்பான தயாரிப்புகளில் ஈடுபடுபவர்களின் தேவைகளும் அதிகமாகவே உள்ளது. குறைந்த முதலீட்டில் அதிகமான வருமானத்தை ஈட்டக் கூடிய ஒரு சிறந்த துறையாக இத்துறை மாறிவிட்டது. பெண்கள் வேலைக்கு சென்றுதான் சம்பாதிக்க வேண்டும் என்பதில்லை, வீட்டில் இருந்தே கைநிறைய சம்பாதிக்கலாம் என்கிறார் ஆடை வடிவமைப்பில் 20 ஆண்டுகளை தாண்டி இயங்கி வரும் செல்வி மோகன்.

ஆர்வம் மட்டும் நமக்கு இருந்தால் போதும், அதற்கான ஆற்றலை இவரே உருவாக்கித் தருகிறார். ஆடை வடிவமைப்பு பற்றி அறிந்துகொள்ள செல்வி மோகனை அணுகியபோது, ஆர்வத்துடன் பேசத் துவங்கினார். “என் உடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். அனைவரும் படித்து முடித்து ஐ.டி துறையில் பணியில் இருக்க, கடைக்குட்டியான என்னை, எனது அப்பா ஆடை வடிவமைப்பு தொடர்பான விஷயங்களை கற்றுக்கொள்வதற்கான பயிலகத்தில் சேர்த்துவிட்டார்.

நானும் ஆர்வமுடன் அது தொடர்பான அனைத்து விஷயங்களையும் கற்றுக்கொண்டேன். இதற்கு என் அப்பாவிற்குத்தான் நான் நன்றி சொல்லவேண்டும். மேலும் என் குடும்பத்தினரின் முழு ஒத்துழைப்புடன் இத்துறையில் நான் சிறப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறேன். பல பெண்கள், என்னால் இன்று சிறப்பான முறையில் இத்துறையில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆடை வடிமைப்பில் டிப்ளமோ, ஃபேஷன் டிசைனிங், ஆரி வேலைப்பாடுகள்,

எம்ப்ராய்டரி வேலைகள் மற்றும் மெஷின் மெக்கானிஷம் விசயங்களை என்னிடம் வரும் பெண்களுக்கு கற்றுக் கொடுக்கிறேன். அவரவர் ஆர்வத்தைப் பொறுத்து கற்றுக்கொள்ளலாம். குறைந்தது இரண்டு மாதங்களிலிருந்து நான்கு மாதங்கள் வரை போதும். ஆடையினை அழகூட்ட ஆகும் செலவு அதிகமாகிறது என்பதால், வேறு வேலைகளில் இருப்பவர்கள் கூட சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் எனது பயிலகத்திற்கு வந்து கற்றுக்கொள்கிறார்கள்.

ஐ.டி. துறையில் வேலை செய்பவர்கள், மருத்துவமனையில் வேலை செய்யும் பெண்கள், காவல் துறையில் இருக்கும் பெண்கள், தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் பெண்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், வீட்டில் இருக்கும் பெண்கள் என பல தரப்பைச் சேர்ந்தவர்களும் வந்து ஆர்வத்துடன் கற்றுக்கொள்கின்றனர். வேலைக்குச் செல்லும் பெண்கள், தாங்களே தங்கள் உடைகளை டிசைன் செய்து கொள்ளலாம்.அதற்காக ஆகும் செலவு குறையும் என்ற எண்ணத்திலே பெரும்பாலும் வருகின்றனர். இவர்கள் எம்ப்ராய்டரிங், சர்தோஷி, ஆரி, ஷரி, கண்ணாடி வேலைப்பாடுகளை ஆர்வமுடன் கற்றுக்கொள்கின்றனர். இதற்கு இரண்டு மாதங்கள் போதும் என்பதால் விடுமுறை தினங்களில் வந்து கற்கின்றனர். என்னிடம் வரும் பெண்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப நேரம் ஒதுக்கித் தருவதுடன், ஒவ்வொருவருக்கும் தனிக் கவனம் செலுத்தி அவரவர் மனநிலை அறிந்து கற்றுத் தருகிறேன். குறைந்த முதலீட்டில், அதிக லாபம் பெறக் கூடிய ஒரு துறை என்பதுடன், பெண்கள் தங்கள் சொந்தக் காலில் வருமானம் ஈட்ட இது ஒரு சரியான துறை” என்கிறார்.

உஷா பிரகாஷ்

‘‘பிளஸ்டூ வரை படித்துள்ளேன். மூன்று மாதங்கள் இங்கு வந்து ஃபேஷன் டிசைனிங் கற்றுக் கொண்டேன். வீட்டில் இருந்தே பெண்கள் உடை விஷயத்தில் கவனம் செலுத்தி ஆடை வடிவமைப்பு செய்து கொடுக்கிறேன். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறக் கூடிய ஒரு தொழில் இது. இப்போது செல்வி மேடம் மூலம் அவர்களின் ஃபேஷன் டிசைனிங் பயிலகத்தை ப்ரான்சைஷிஸ் எடுத்து மதுரவாயலில் நடத்திக் கொண்டிருக்கிறேன். மாதம் இருபதாயிரத்திற்கு மேல் எனக்கு வருமானம் வருகிறது’’.

ஃபாத்திமா

‘‘மோகன் பயிற்சியகம் மூலம் செல்வி மேடத்திடம் ஆரி மற்றும் ஷரி வேலைப்பாடுகளைக்  கற்றுக்கொண்டேன். இப்போது என் வீட்டிற்குத் தவிர வெளியில் யாராவது விரும்பிக் கேட்டால் டிசைன் செய்து தருகிறேன். பெண்கள் அணியும் ஒரு ப்ளவுஸ் மட்டுமே குறைந்தது 1500ல் இருந்து துவங்கி திருமண ப்ளவுஸ் என்றால் 4000ம் 5000ம் வரை செய்து தருகிறேன். இதில் ஷரி வேலைப்பாடு, எம்ப்ராய்டரிங், ஆரி, கண்ணாடி, ஸ்டோன் வேலைப்பாடு எல்லாம் சேரும். ஒரு ப்ளவுஸ் முடிக்க குறைந்தது 2 நாள் வரை ஆகும். பெண்கள் அணியும் சுடிதார், சேலை என எல்லா உடைகளையும் டிசைன் பண்ணித் தருகிறேன். என்னாலும் சொந்தக் காலில் நிற்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இதில் செயல்பட முடிகிறது’’.

அனுராதா ஆரி வொர்க் பயிற்சியாளர்

‘‘நான் இங்கு ஆரி வேலைப்பாடுகளை பயிற்சி அளிப்பவராக உள்ளேன். எங்களின் சமூகத்தில் பெண்கள் கட்டாயம் இந்த கை வேலைப்பாடுகளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதால் இந்த வேலைகளை என் சிறு வயதிலே தெரிந்து வைத்திருந்தேன். திருமணம் முடித்து சென்னை வந்த பிறகு வெட்டியாக பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தேன்.

என்னை செல்வி மேடம்தான் ஊக்கப்படுத்தி உனக்கு தெரிந்த இந்த விசயங்களை, இங்கு வரும் பெண்களுக்கு சொல்லிக் கொடுக்கலாமே என்று என்னை ஊக்கப்படுத்தி இங்கு வரவழைத்தார்கள். இன்று நான் இங்கு வரும் பல பெண்களுக்கு எனக்கு தெரிந்த இந்த ஆரி வேலைப்பாடுகளை கற்றுக் கொடுக்கிறேன். செல்வி மேடம் என்னை சொல்லித்தர அழைத்தபோது என்னால் முடியுமா எனத் தோன்றியது, ஆனால் இப்போது என்னை நினைத்தால் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. என்னால் பல பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்க முடிந்திருக்கிறது”.

தீபா தொலைக்காட்சி தொடரில் நடிப்பவர்


‘‘ஆண்டாள் அழகர், பகல் நிலவு, ராமானுஜம், பைரவி போன்ற தொலைக்காட்சித் தொடரிலும், முத்துராமலிங்கம், பகடி ஆட்டம் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறேன்.  எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் இங்கு வந்து ஃபேஷன் டிசைனிங் கற்றுக்கொண்டு எனக்குத் தேவையான ஆடைகளை நானே வடிவமைத்துக்கொள்கிறேன். எனது உடைகளை நானே வடிவமைப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது’’.

ஆரி வேலைப்பாடு


இப்போதெல்லாம் பெண்கள் அணியும் சேலையினை ஒரே கலரில் மிகவும் எளிமையாக எடுத்துக் கொண்டு, அதில் கை வேலைப்பாடுகளால் மேலும் மெருகூட்டி அழகுப்படுத்தி அந்த சேலையினை ரிச் காம்பினேஷனில் கொண்டுவந்து காட்ட முடியும். அதற்கேற்றார்போல் ஜாக்கெட்டையும் தயார் செய்து போட்டுக்கொண்டால் பார்ப்பதற்கு பெண்கள் கொள்ளை அழகுதான்.

பிறகு என்ன ‘சேலையில வீடுகட்டவா…’ என பாட வேண்டியது தான். இந்த இதழில் ஆரி வேலைப்பாட்டுடன் நமது கை வண்ணத்தில் சேலையினை எவ்வாறு அழகுப்படுத்தலாம் என்பதை நமக்கு சொல்லித் தருகிறார் மோகன் ஃபேஷன் டிசைனிங் நிறுவனத்தின் பயிற்சியாளர் அனுராதா.

தேவையான பொருட்கள்

ஆரி நீடில்ஸ் 2,
வெள்ளை மணி மற்றும் மணி
கோர்க்கும் வயர்,
சமுக்கி,
ஷரி நூல் (3 வண்ணங்களில்),
டிரேஷ் பேப்பர்,
பென்சில்,
கத்திரிக்கோல்,
துணி மாட்டும் உட் ஃபிரேம் மற்றும் இரும்பு ஸ்டாண்ட்.

செய்முறை


1.ஆரின் டிசைன் செய்யப்போகும் துணியினை உட் ஃபிரேமில் சுருக்கம் இல்லாமல் இழுத்து இணைத்து அதை இரும்பு ஸ்டாண்டில் பொருத்திக்கொள்ள வேண்டும்.

2. நீங்கள் விரும்பும் வடிவத்தை அப்படியே வரையத் தெரியும் என்றால் துணியில் வரைந்துகொள்ளலாம். இல்லை என்றால் தேவையான வடிவத்தை டிரேஸ் பேப்பரை வைத்து டிரேஸ் செய்து துணியின் மேல் கார்பன் பேப்பர் வைத்து அதன் மேல் டிரேஸ் பேப்பரை வைத்து விரும்பிய டிசைனை துணியில் டிரேஸ் செய்து கொள்ளவும்.

3. இரும்பு ஸ்டாண்டுக்கு கீழே இடது கையின் ஆட்காட்டி விரலில் ஷரி நூலின் ஒரு முனையினை சுற்றிக் கொண்டு, ஃபிரேமுக்கு மேல் பகுதியில் வரைந்துள்ள வடிவத்தில் ஆரி ஊசியின் வளைந்திருக்கும் நுனிப் பகுதியினை நம்மை நோக்கி இருக்கும்படி கோட்டு வடிவத்தில் குத்தி உள்ளிருக்கும் நூலை ஊசி முனை வழியாகச் சுத்தி முடிச்சிட்டு மேல்பக்கமாக அருகே அருகே அடுத்தடுத்து குத்தி நூலை மேலே இழுக்க வேண்டும்.

4. மணி கோர்க்கும் வயரை, அதே பாணியில் ஆட்காட்டி விரலில் சுத்திக் கொண்டு, மேல் பகுதியில் மணிகளை ஊசியில் வரிசையாக கோர்த்துக்கொண்டு, ஊசியின் வளைந்த நுனியினை உள் சொறுகி மேலே வயரை இழுக்கும்போது ஊசியில் கோர்க்கப்பட்டுள்ள மணியினை ஒவ்வொன்றாக வயறுக்குள் செலுத்தி, வயரால் முடிச்சிட்டு, இணைத்து துணியில் தைத்து வடிவத்திற்கு ஏற்ப வளைத்து கோர்க்க வேண்டும்.

5. மேலும் அழகுபடுத்த விரும்பினால் ஷரி நூலை அதேபோல் விரலில் சுற்றி ஊசியில் ஜமுக்கியினை ஒவ்வொன்றாக கோர்த்து அதே பாணியில் ஊசியின் வளைந்த நுனி பகுதியினை உள் செலுத்தி ஷரி நூலை மேல் இழுத்து அடுத்தடுத்த ஜமுக்கியினை இணைக்க வேண்டும். இதே போன்று வரைந்துள்ள வடிவம் முழுவதும் நம் எண்ணத்திற்கு ஏற்ப, பல வண்ணங்களில் சேலையினை அழகுபடுத்தி மெருகூட்டலாம்.

சேலையின் முந்தியில் மட்டும் வேலைப்பாடு என்றால் 3000ல் துவங்கி சேலை முழுவதற்குமான வேலைப்பாடுகளுக்கு, வேலைப்பாட்டின் தன்மை, எடுத்துக்கொண்ட நேரம் இவைகளைப் பொருத்து 6000ல் இருந்து 15 ஆயிரம்வரை கூட இதற்கான விலை நிர்ணயம் செய்யலாம். சேலை மட்டுமல்லாது பெண்கள் அணியும் ஜாக்கெட், சுடிதார் டாப்ஸின் முன் பக்கத்தை இந்த வேலைப்பாடுகளால் அழகூட்டலாம்.

எழுத்து வடிவம்: மகேஸ்வரி
படங்கள்: ஆர்.கோபால்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-04-2019

  24-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • vote

  3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

 • hailstrom

  தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

 • bookday

  இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

 • ukraine

  உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்