கலைராணிக்கு கற்றுக் கொடுத்த மணிரத்னம்
2013-06-06@ 15:50:27

கலைராணி
தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் / திரைப்பட நடிகை / பயிற்சியாளர் / இயக்குநர்
தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த அற்புதமானதொரு கலைஞி. பெரும்பாலும் அம்மா வேடங்களுக்கே நேர்ந்துவிடப்பட்ட குணச்சித்திர நடிகையாக நமக்கெல்லாம் பரிச்சயப்பட்டிருந்தாலும் அதிலும் வித்தியாசத்தைக் காட்டி, தன் விலாசமாக்கிக் கொண்டவர். மிகச்சாதாரண வேடத்தையும்கூட தன் அசாத்தியமான ஆற்றலால் பார்வையாளரின் மனதில் பதியம்போட வைக்கும் வல்லமை வாய்ந்த கலைராணி - நடிகை மட்டுமல்ல... அவருக்கு வேறு பல முகங்களும் உண்டு. அடிப்படையில் தியேட்டர் ஆர்ட்டிஸ்டான கலைராணி ஆவணப்படங்கள், குறும்படங்கள் இயக்குபவராகவும், நடிப்புப் பயிற்சியளிப்பவராகவும் வெவ்வேறு தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறார். ‘கடல்’ படத்தில் மணிரத்னம் அறிமுகப்படுத்திய கவுதம், துளசி இருவருக்கும் நடிப்புப் பயிற்சியளித்தது கூட கலைராணிதான்!
‘‘அழகம்பெருமாள் டைரக்ஷன்ல மணிரத்னம் சார் தயாரிச்ச ‘டும் டும் டும்’ படத்துல நடிச்சிட்டிருந்தேன். ஒருநாள் மணிரத்னம் சார் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார். ஹீரோ, தன்கூட ஒரு பெண்ணைக் கூட்டிட்டு வந்து, அம்மாவான எனக்கு அறிமுகப்படுத்தற மாதிரி சீன். நான் வீட்டுல வேலை பார்த்திட்டிருப்பேன். ‘அம்மா’ன்னு கூப்பிட்டதும், நான் சடார்னு திரும்பிப் பார்த்தேன். ‘சட்டுன்னு திரும்பக்கூடாது’ன்னு சொன்னார் மணி சார். ரெண்டு, மூணு வாட்டி திரும்பினேன். ‘அவசரமா திரும்பாதீங்க, நீங்க திரும்பப் போறீங்க’ன்னு உங்க முதுகுல தெரியுதுன்னு சொன்னார். நடிப்புல அவ்வளவு நுணுக்கத்தைக் கத்துக் கொடுத்து என்னைப் பிரமிக்க வச்சவர் மணிரத்னம் சார்.
‘கடல்’ படத்துல ஹீரோ கவுதமுக்கும், ஹீரோயின் துளசிக்கும் நடிப்பு கத்துக் கொடுக்கச் சொல்லி என்னைக் கூப்பிட்டார். முதல் நாளே என்கிட்ட ஸ்கிரிப்ட்டை கொடுத்து, நடிகரை, நடிகையைத் தயார்படுத்துங்கன்னு சொன்னார். 10 நாள்ல அடிப்படை நடிப்புப் பயிற்சி சொல்லித் தந்தேன். அந்த இடத்துல எனக்கு முழு சுதந்திரத்தைக் கொடுத்து, என்னை என் போக்குல வேலை செய்ய விட்டது பெரிய அனுபவம்...’’ - மொத்தப் பற்களும் தெரிய மனம் விட்டு சிரிப்பதுதான் கலைராணி ஸ்டைல். அதே ஸ்டைல் சிரிப்போடு உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார். ‘‘குழந்தைங்களா இருக்கிறப்ப நம்ம எல்லாருக்குள்ளேயும் ஏதோ ஒரு திறமை வெளிப்படுது. சில குழந்தைங்க பாடுவாங்க... சிலர் ஆடுவாங்க... வரைவாங்க... சில குழந்தைங்க உடையை அழகுப்படுத்திக்கும்.
ஒரு கட்டத்துக்கு மேல அவங்க வளர்ந்த பிறகு குழந்தையா இருந்தப்ப அவங்க செய்த அதே விஷயங்களை செய்யச் சொன்னா, கூச்சப்படுவாங்க. அந்தத் தயக்கத்தை, கூச்சத்தை உடைச்சு, மனத்தடையை நீக்கி, அவங்களுக்குள்ளே மறைஞ்சிருக்கிற திறமையை மறுபடி வெளியே கொண்டு வர்றதுக்குத்தான் பயிற்சி தேவைப்படுது. எந்த ஒரு கலையையும் கட்டாயப்படுத்தி கொண்டு வர முடியாது. நடிப்பும் அப்படித்தான். அடிப்படையில ஆர்வம் இருக்கிறவங்களுக்கு, அதுக்கான டெக்னிக்குகளை நான் சொல் லிக் கொடுக்கறேன். என்கிட்ட நடிப்புப் பயிற்சிக்கு வர்றவங்களை முதல்ல நான் ஸ்டடி பண்ணுவேன். அப்புறம்தான் பயிற்சி. பெரும்பாலும் 1 டூ 1 பயிற்சிதான்’’ என்கிற கலைராணி நாடகம் மற்றும் சினிமாவில் பிஸி நடிகை. ஆனாலும், பிறருக்கு நடிப்புப் பயிற்சியளிப்பதில் கலைராணிக்குப் பேரானந்தம்.
‘‘நடிப்போடு சம்பந்தமில்லாதவங்களுக்கும் அதை எப்படிக் கொண்டு போறதுன்னு யோசிச்சேன். அப்பதான் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைங்களுக்கும், திருநங்கைகளுக்கும், இல்லத்தரசிகளுக்கும், ஐடி துறையில வேலை பார்க்கிறவங்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் நடிப்பு பத்தின ஒர்க்ஷாப் நடத்தற வாய்ப்பு வந்தது. இவங்க எல்லாம் நடிப்பு கத்துக்கிட்டு, உடனே நடிக்க வரப் போறதில்லை. ஆனா, காலங்காலமா ஒரே மாதிரியான வேலையைப் பார்த்துக்கிட்டு, ஒரு குறுகின வட்டத்துக்குள்ளயே இருக்கிறவங்களுக்கு நடிப்புப் பயிற்சி மூலமா, பல வருட இறுக்கத்தைத் தகர்க்க முடிஞ்சது.
ஒரு பாடகிக்குப் பயிற்சி கொடுத்தேன். பாடகியானாலும், அவங்களால ஒரு லெவலுக்கு மேல, உச்சஸ்தாயியில பாட முடியாது. அப்படிப் பாட வேண்டிய தருணங்கள்ல அவங்களுக்குள்ள ஒரு நடுக்கத்தைப் பார்த்தேன். அவங்கக்கிட்ட பேசின பிறகுதான், அந்த நடுக்கத்தோட பின்னணி புரிஞ்சது. அவங்களுக்குக் குழந்தை பிறந்தபோது, அது ‘ப்ளூ பேபி’யா இருந்திருக்கு. குழந்தையைப் பிரசவிக்கும்போது, அவங்க சந்திச்ச அந்த வலி அப்படியே மனசுல பதிஞ்சுபோச்சு. அதனாலோ என்னவோ, அதுக்கடுத்து அவங்களால ஹைபிட்ச்ல பாட முடியாமப் போயிருக்கு. அதைக் கண்டுபிடிச்சு, அந்தத் தடை நீங்க பயிற்சிகள் கொடுத்தேன்.
என்னோட சொந்த அனுபவமே இதுக்கொரு உதாரணம்தான். எங்கப்பா என்னை ரொம்பச் செல்லமா, ஒரு ஆண் பிள்ளையைப்போல வளர்த்தார். அதனால எனக்கு சிரிப்பையோ, அழுகையையோ கட்டுப்படுத்தத் தெரியாது. தியேட்டருக்கு வந்து பயிற்சி எடுத்துக்கிட்ட பிறகுதான் உணர்வுகளைக் கட்டுப்படுத்தற கலை எனக்குப் பிடிபட்டது’’ என்று சொல்லும் கலைராணிக்கு சில வருத்தங்களும் இருக்கின்றன. ‘‘நடிப்புன்னா நோட்ஸ் கொடுக்கறது, அது ரொம்ப சுலபம்னு பல பேர் நினைச்சிட்டிருக்காங்க. அந்த நினைப்புல என்கிட்ட பயிற்சிக்கு வந்து, தாக்குப் பிடிக்க முடியாம ஓடினவங்க எத்தனையோ பேர். நடனம் கத்துக்கிட்டா, அதை அரங்கேற்றம் பண்ண 10 வருஷப் பயிற்சி தேவைப்படுது. சங்கீதம் கத்துக்கிட்டு மேடையிலப் பாட பல வருஷப் பயிற்சி தேவைப்படுது. நடிப்புன்னு வரும்போதோ, ‘ஒரே ராத்திரியில கத்துக்க முடியுமா’ன்னு கேட்கறாங்க.
நடிகராகணுங்கிற எண்ணத்துல வர்றவங்க, ஜிம்முக்கு போய் மணிக்கணக்கா நேரத்தை செலவழிச்சு, உடம்பை விரைப்பா வச்சுக்க மெனக்கெடறாங்களே தவிர, நடிப்பைக் கத்துக்க எந்தவிதமான மெனக்கெடலுக்கும் தயாரா இல்லை. ‘நாளைக்கு ஷூட்டிங்... ராத்திரியோட ராத்திரியா ஏதாவது கத்துக்கொடுங்களேன்’னு கேட்கறவங்களும், போன்ல கிளாஸ் எடுக்கச் சொல்லிக் கேட்கறவங்களும் கூட இருக்காங்க. நடிப்புங்கிறது அப்படி வர்ற விஷயமில்லை. குரலை சரி பண்றதுலேருந்தே அதுக்கான பயிற்சியைத் தொடங்கணும். குரலை சரி பண்ணலைன்னா, முகத்துல எக்ஸ்பிரஷன்ஸ் சரியா வராது. கமல்ஹாசன் சொல்வார்... ‘வலியில்லாம எதுவும் சாத்தியமில்லை’ன்னு... நடிப்பு விஷயத்துல அது ரொம்ப சரி. வலிகளைத் தாங்கிக்கிறவங்களாலதான் என்கிட்ட நடிப்பு பழக முடியும்...’’ கண்ணை மூடினால் யாரோ ஒரு ஹீரோவின் அம்மாவாகவே கலை ராணியின் உருவம் நினைவில் படர்கிறது.
ஏன் வேறு வகையான வேடங்களில் உங்களைப் பார்க்க முடியவில்லை? கேட்டால் அதற்கும் அதே சிரிப்புதான்! ‘‘முதல்வன் படத்துல டைரக்டர் ஷங்கர் எனக்கு அம்மா கேரக்டர் கொடுத்தார். வழக்கமான அம்மாவா இல்லாம, உங்க இஷ்டத்துக்கு இயல்பா நடிங்கன்னு சுதந்திரம் கொடுத்தார். எனக்கும் அந்தப் படம் பெரிய வாய்ப்புங்கிறதால என்னோட பெஸ்ட்டை கொடுத்து நடிச்சேன். அதுக்கப்புறம் 75 படங்கள் பண்ணியாச்சு. இப்பவும் அதே கொண்டை, காட்டன் புடவை, டல் மேக்கப்னு சொல்லிக்கிட்டுதான் வராங்க. ஹீரோவோட அம்மாவா நடிக்கிறப்ப, அந்த வயசு அம்மாவா, என் கேரக்டரைதான் நான் பார்க்கணுமே தவிர, என்னை எவ்வளவு நளினமா, அழகாக்காட்டிக்க முடியும்னு யோசிக்கக் கூடாது. ஒரு படத்துல எனக்கொரு ஃபைட் சீன் கொடுத்தாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷம்.
‘கூத்துப்பட்டறை’யில படிக்கிறப்ப, தற்காப்புக்கலைகள் படிச்சவள் நான். அந்த வகையில ஸ்டன்ட்டும் எனக்குத் தெரியும். ‘இந்தம்மாவா? அவங்களுக்கு ஃபைட்டெல்லாம் சரியா வராது’ன்னு அவங்களாவே முடிவு பண்ணி ‘வேண்டாம்’னு சொல்லிட்டாங்க, நான் தயாரா இருக்கேன். அந்த சீன்ல நடிக்க என் உடம்பு தயாரா இருக்கு. ஆனாலும், என் மேல குத்தப்பட்ட முத்திரை அதை ஏத்துக்கத் தயாரா இல்லை. அதே ஒரு ஆணுக்கு வித்தியாசமான கேரக்டர்களை உருவாக்கறதுலயோ, கொடுக்கிறதுலயோ இங்கே யாருக்கும் தயக்கமில்லை. நடிகைன்னா, அம்மா இல்லைன்னா அக்கா... அவ்வளவுதான்... இந்த விஷயத்துல தியேட்டர்தான் எனக்கு ஆறுதல்.
அங்கே நான்தான் என்னை டைரக்ட் பண்றேன். எனக்கு நானே ராஜா... நானே மந்திரி... தியேட்டர்ல எனக்கு உடனுக்குடன் பார்வையாளர்களோட விமர்சனம் கிடைக்குது. அது கைத்தட்டலாதான் இருக்கணும்னு அவசியமில்லை. அமைதியா இருக்கிறதுகூட ஒரு வகையிலான வரவேற்புதான்’’ என்று அரங்கத்தில் நிலவும் அமைதிக்கு புதிய அர்த்தம் சொல்லும் கலைராணி நடிப்புக்கும் புதிய அர்த்தம் சொல்கிறார்.‘‘எனக்கு நடிப்பு பிடிச்சிருக்கு... நான் நடிக்கிறேன். புகழ், வருமானம், அந்தஸ்து எல்லாத்தையும் மீறி, நடிப்புங்கிறது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிற ஒரு விஷயம். நான் நடிகையா இருக்கேங்கிறதுல ஒரு மகிழ்ச்சி கிடைக்குது. அதனால என் வாழ்க்கை அழகாகுது. நடிப்புங்கிறது எனக்கொரு தெரபி!’’
படங்கள்: விநாயகம்
(நன்றி குங்குமம் தோழி)
Tags:
The arputamanatoru kalaini Tamil cinema. Supporting Actress pariccaya have been left to us to be the mother vetankalukke happen and they showed no difference he has vilacamakki.மேலும் செய்திகள்
காதல் மலரும் தருணம்
ஒரு நிஜமான குடும்பம்
தீவினை களைவாள் தில்லைக்காளி
ஆளில்லா மளிகை கடை!
இது பெண்களின் கிராமம்!
நான்.. நீ.. நாம் வாழவே...
பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்
கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்
அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!
வங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு