83 வயதில் மற்றும் ஒரு சாதனை
மாற்றம் செய்த நேரம்:3/14/2013 3:33:30 PM
இந்த வயதிலும் இத்தனை துடிப்போடு இருக்கிறார் லதா மங்கேஷ்கர். 70 ஆண்டுகள் தன் மதுரக் குரலால் பாலிவுட் படங்களில் பாடி ரசிகர்களை மயங்க வைத்தவர், இப்போது சொந்த மியூசிக் கம்பெனி (எல் எம் மியூசிக்) ஆரம்பித்திருக்கிறார்! அவரோடு 5 கேள்விகள்...
இப்போது உங்கள் குரலை அடிக்கடி திரைப்படங்களில் கேட்க முடிவதில்லையே... ஏன்?
நான் பாடலைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பவள். ஒரு பாடலை ஒப்புக்கொள்வதற்கு முன் பாடல் வரிகளை முழுமையாகப் படிப்பேன்... ட்யூன் கேட்பேன். இந்தச் செயல்பாடு இன்றைய இசையமைப்பாளர்களுக்குப் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். அதனால்தான் நான் திரைப்படங்களில் அதிகம் பாட விரும்புவதில்லை... பாடலும் வருவதில்லை.
இசைத்துறையில் என்ன வித்தியாசத்தைக் காண்கிறீர்கள்?
இன்றைய தினங்களில் ஒரு பாடல் சில மாதங்களுக்கு மட்டும் பிரபலமாக இருக்கிறது. பிறகு, காணாமல் போய்விடுகிறது. தொழில்நுட்பத்தில் நாம் வெகுவாக முன்னேறியிருக்கிறோம். ஆனால், நம் இசைக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. திரைப்படங்களில் எண்ணிக்கையிலும் சரி, வகைகளிலும் சரி பாடல்கள் வெகுவாகக் குறைந்து விட்டன. இது எனக்கு அதிர்ச்சிதான்... 1960ல் ‘மொகல் இ ஆசம்’ படத்தில் 11 விதமான பாடல்கள் பாடியதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். இன்றைய இசை என்பது நடனத்துக்காக என்று மாறிவிட்டது. எங்கள் காலத்தைச் சேர்ந்த பாடகர்கள் மிகக்கடினமாக உழைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஒரு பாடல் வாய்ப்பைப் பெற பல தடைகளைத் தாண்டி வர வேண்டியிருந்தது. இன்றைக்கு எல்லாமே எளிதாகிவிட்டது. ஆனால், அதற்காக இசையமைப்பாளர்களையோ, பாடகர்களையோ நான் குற்றம் சொல்லவில்லை. எல்லோரும் இன்றைய போக்குக்கு ஏற்ப போய்க் கொண்டிருக்கிறார்கள்... அவ்வளவுதான்!
இசைத்துறையில் அடுத்த லதா மங்கேஷ்கராக யாரை நீங்கள் கருதுகிறீர்கள்?
நம்மிடம் நிறைய திறமையான பாடகர்கள் இருக்கிறார்கள். எனக்கு இன்னொரு லதா மங்கேஷ்கரைப் பற்றித் தெரியாது, ஆனால், ஒவ்வொரு கலைஞருமே ஸ்பெஷலானவர்தான். ஆஷா போஸ்லே, சுனிதி சௌஹான், ஸ்ரேயா கோஷல் என்று எல்லோருமே அவரவர்களுக்கான இடத்தில் இருக்கிறார்கள். என்னைவிட சிறந்தவராக யாரோ ஒருவர் இருக்கிறார் என்பதையும் நான் நம்புகிறேன்.
இப்போது நீங்கள் தொழில் தொடங்க வேண்டிய தேவை என்ன?
திரைத்துறை அல்லாத வேலைகளைச் செய்வதில் நான் எப்போதும் ஆர்வத்துடன் இருப்பேன். அதே நேரத்தில், இப்போதெல்லாம் மக்கள் இசை ஆல்பங்களை வாங்குவது குறைந்து விட்டது என்பதையும் கவலையோடு பார்க்க வேண்டும். ‘எல் எம் மியூசிக்’ நிறுவனத்தை மேலே கொண்டு வர நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். அமிதாப் பச்சன், சங்கர் மகாதேவன், சுரேஷ் வாடேகர் போன்றவர்கள் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறார்கள். நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன். என் வாழ்க்கையில் 70 வருடத்துக்கும் மேலான காலத்தை இசைத்துறையில் கழித்துவிட்டதால், என் நன்றியை அதற்குத் தெரிவிக்க இந்த நிறுவனமும் ஒரு வழி!
எல் எம் மியூசிக்கின் திட்டம் என்ன?
இளம் பாடகர்களுக்காக ஒரு போட்டி நடத்தி, அவர்களுக்காக ஒரு தனி மேடையை உருவாக்க வேண்டியது அவசியம். ரியாலிட்டி ஷோக்களில் நிறைய திறமைசாலிக் குழந்தைகள் கிடைக்கிறார்கள். ஆனால், அதில் ஒரே ஒரு வெற்றியாளர்தான். அப்படியே வெற்றி பெற்றாலும், அந்த
வெற்றியாளருக்கு ஒரு பெரிய திருப்புமுனை எப்போதும் அமைவதில்லை. இது போன்ற அரும்புக் குழந்தைகளுக்கு இசை ஆல்பங்களை உருவாக்கும் வாய்ப்புகளை உருவாக்கப் போகிறோம்.





















