வீட்டு பத்திரத்தின் நகலை கேட்டு வாங்கி சரிபாருங்கள்
மாற்றம் செய்த நேரம்:3/13/2013 4:50:03 PM
சொத்து வாங்கும்போது உங்கள் தேவைகளுக்கு பொறுத்தமானது எது என தீர்மானித்துவிட்டீர்களா? அப்படியென்றால் இனி சொல்லப்படுபவையையும் கூர்ந்து கவனிப்பது நல்லது. நீங்கள் வாங்கப்போகும் சொத்தை காட்டியவர் நம்பகத்தன்மை வாய்ந்தவரா, அவர் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் தந்துள்ளாரா என சரிபார்த்துக் கொள்ளுங்கள். அந்த சொத்தின் மீது ஏதாவது வில்லங்கமோ, புகாரோ இருக்கிறதா என்பதை அக்கம்பக்கத்தில் விசாரித்து தெரிந்துகொள்ளுங்கள்.
சொத்து தொடர்பான வழக்குகளில் அனுபவம் உள்ள நம்பிக்கையான வழக்கறிஞர் மூலம் லீகல் ஒப்பீனியன் வாங்கிவிடுவது சிறந்தது அதேபோல சரியான விலையைத்தான் கூறியுள்ளார்களா என்பதையும் நாலு பேரிடம் விசாரித்தால்தான் தெரிந்துகொள்ள முடியும். கட்டப்பட்ட வீட்டை வாங்குவதாக இருந்தால் அதன் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்பதை அந்த வீடு இருக்கும் இடத்தைப் பொறுத்து ஓரளவுக்கு மதிப்பிட முடியும். வீட்டின் மதிப்பை தெரிந்துகொள்ள சொத்து பதிவு செய்வதில் அனுபவம் உள்ள வல்லுநர்கள் மூலம் விசாரிக்கலாம்.
அடுக்குமாடி குடியிருப்பை வாங்குவதாக இருந்தால் அனைவருக்கும் பொதுவான இடங்கள் எவ்வளவு, அது பத்திரத்தில் சரியாக குறிப்பிடப்படுமா என அறிந்துகொள்ள வேண்டும். வீடு கட்ட அரசு அனுமதி பெறப்பட்டுள்ளதா என்று கேட்க வேண்டும். கட்டிடத்தை கட்டும் பில்டர் நம்பகத்தன்மை வாய்ந்தவரா என்பதை அறிந்துகொள்ள அவர் ஏற்கனவே கட்டிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சென்று அங்கு குடியிருப்போரிடம் விசாரித்து தெரிந்துகொள்ளலாம்.
அடுத்ததாக அந்த வீட்டுக்கு பயன்படுத்தப்படும் சிமென்ட், கம்பி, மரம், மின்சாதனங்கள் என அனைத்தும் சரியான தரத்தில் உள்ளதா என்பதை ஆர்கிடெக்ட் உதவியுடன் தெரிந்துகொள்ளலாம். பத்திரம் பதிவு செய்வதற்கு முன் அந்த பத்திரத்தின் நகலை கேட்டு வாங்கி வீட்டின் அளவுகள் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதா, பில்டர் நம்மிடம் கூறிய அனைத்து அம்சங்களையும் அதில் சரியாக குறிப்பிட்டுள்ளாரா என்பது போன்ற தகவல்களை ஒன்றுக்கு இரண்டு முறை நன்றாக படித்து பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஏதாவது திருத்தம் செய்ய விரும்பினால் முன்கூட்டியே பில்டரிடம் பேசி அவரது ஒப்புதலை பெற்றுவிடுவது நல்லது. பத்திரத்தை பதிவு செய்யும்போது ஒரு சில ஆயிரங்களை மிச்சம் பிடிக்க வேண்டும் என நினைத்து கண்டவர்களிடம் செல்லாமல், திறமையான அனுபவம் வாய்ந்தவர்கள் மூலம் பத்திரப்பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.






















