கெடிலம் ஆற்றில் சுற்றுச்சூழல் விஞ்ஞானி ஆய்வு
1/4/2018 10:43:26 AM
கடலூர், ஜன. 4: கடலூர் மாவட்டம் வழியாக பாயும் கெடிலம் ஆறு புண்ணிய ஆறாக புராணங்களில் குறிப்பிடப்படுகிறது. விவசாயத்தையும் மீன் வளத்தையும் ஒரு சேர பாதுகாத்து இந்த ஆறு 60 ஆண்டுகளுக்கு முன் மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்தது. ஆனால் இன்று கெடிலம் ஆறு கறுப்பு நிறமாக மாறி துர்நாற்றத்துடன் காணப்படுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே கடலூர் கம்மியம்பேட்டையில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணையில் அடிக்கடி பல்லாயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் அடிபம்பு மூலம் வெளி வரும் நிலத்தடி நீரும் துர்நாற்றத்துடன் வருவதால் ஆற்றை யொட்டிய பகுதிகளில் வீடுகள் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
அப்பகுதியில் வீடு கட்டியுள்ளவர்களும் தங்கள் வீடுகளை விற்று விட்டு வெளியேறும் நிலை உள்ளது. மேலும் கெடிலம் ஆற்று மீன் வளத்தை நம்பி வாழ்ந்து வரும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு மீனவர்களும் இதனால் பாதிக்கப்பட்டனர். நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் நேரடியாக தடுப்பணையில் தேங்குவதே மீன்கள் இறப்பிற்கு காரணமென பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டி வந்தன. இதற்கு காரணமான தனியார் ஆலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு அமைப்புகள் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே உத்தரவின் பேரில் சார் ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் கெடிலம் தடுப்பணையை ஆய்வு செய்து அதன் அறிக்கையை சமர்பித்தார். அதனடிப்படையில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இந்த தடுப்பணையை ஆய்வு செய்ய முடிவு செய்தது. அதன்படி அமைச்சகத்தின் சார்பில் விஞ்ஞானி பிருஜாலிலால் நேற்று முன்தினம் கடலூர் வந்தார். பின்னர் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு அலுவலர்களுடன் சென்று நெல்லிக்குப்பம் ஆலையில் தண்ணீர் வெளியேறும் பகுதியை பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து பில்லாலியில் கழிவுநீரால் பாதிக்கப்பட்டு வரும் விவசாய நிலங்களையும், கம்மியம்பேட்டையில் உள்ள கெடிலம் தடுப்பணையையும் பார்வையிட்டு தண்ணீர் மாதிரிகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டது. மேலும், 3 இடங்களிலும் தண்ணீரின் மாதிரிகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டது. இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலக அதிகாரிகள் கூறுகையில், தண்ணீரின் மாதிரி ஆய்வுகள் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கை சமர்பிக்கப்படும், என்றனர்.
மேலும் செய்திகள்
இளம்பெண் மாயம்
ஐடிஐ மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி துவக்கம்
விளை நிலங்கள் பாதிப்பு வன விலங்குகளை பிடிக்க வலியுறுத்தல்
வெட்டிவேர் சாகுபடி அமோகம்
தெற்குவிருதாங்கன் கிராமத்தில் திமுக கிராமசபை கூட்டம்
பண்ருட்டி டிஎஸ்பி பொறுப்பேற்பு
22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்
கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்
அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!