SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாலிகண்டபுரத்தில் 300 ஆண்டு பழமையான பள்ளிவாசலில் ஆண்டுக்கு ஒருநாள் மட்டுமே தொழுகை ரம்ஜான் பண்டிகைக்காக சீரமைப்பு

6/24/2016 11:04:00 AM

பெரம்பலூர் :  பெரம்பலூர் அருகே வாலிகண்டபுரத்தில் ஆண்டுக்கு ஒருநாள் மட்டுமே தொழுகை நடக்கும் 300 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் தற்போது ரம்ஜான் பண்டிகைக்காக சீரமைக்கப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வால்கொண்டாபோர் நடந்த ரஞ்சன்குடி கோட்டை, 12கோடி ஆண்டுக்கு முந்தைய பழமையான சாத்தனூர் கல்மரம், வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயில், காரைஅருகே முதுமக்கள் தாழிகள் அதிகமுள்ள கம்பிவேலிப்பகுதி ஆகியவை இந்திய அரசின் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

அதேபோல் வாலிகண்டபுரத்தில் உள்ள சமஸ்கான் பள்ளிவாசலும் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது பலருக்கும் ஆச்சர்யமளிக்கிறது.
கான் மரபினர்களில் ஒருவரான சமஸ்கான் என்பவர் ஆற்காட்டைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தபோது, வாலிகண்டபுரத்தில் 293 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1723ம் ஆண்டில் கட்டப்பட்ட மிகப் பழமையான பள்ளிவாசல் ஒன்று உள்ளது. இந்த பள்ளிவாசல் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளதே தவிர இதனை பராமரிக்கவோ, சீரமைக்கவோ, பாதுகாக்கவோ இந்தியஅரசின் தொல்லியல் துறை எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

இதனால் பாழடைந்துகிடக்கும் இந்த பள்ளிவாசல், ராமநாதபுரத்திலிருந்து செம்மறியாடு மேய்ப்போர், கலைக்கூத்தாடிகள் வந்து டேராபோட்டு தங்குமிடமாகவும், இரவு நேரங்களில் குடிமகன்களின் கூடாரமாகவும் மாறியுள்ளது. இதனால் 364 நாட்களும் கண்டுகொள்ளப்படாமலே இருக்கும். இருந்தும் ஆண்டுக்கு ஒருமுறை இந்தப் பள்ளிவாசலில் ரம்ஜான்பண்டிகை சமயத்தில் மட்டும் அதிசயமாகத் தொழுகை நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது, வரும் ஜூலை மாதம் 6, 7 தேதிகளில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் கவனிப்பாரற்றுக் கிடந்த சமஸ்கான் பள்ளிவாசல் ஊராட்சி நிர்வாகத்தால் புத்துயிர் பெற்றுள்ளது. வாலிகண்டபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ரவிச்சந்திரன் உத்தரவுபடி ஊராட்சியின் துப்புரவுப் பணியாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் அங்கு சென்று, பள்ளிவாசலை நெருங்க முடியாதபடிக்கு சூழ்ந்திருந்த முட்புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பள்ளிவாசல் உட்புறத்தை தண்ணீர் தெளித்து சுத்தப்படுத்தி வருகின்றனர். அழிந்துவரும் நிலையிலுள்ள இந்தப் பள்ளிவாசலை இஸ்லாமிய அமைப்புகள் சீரமைத்துப் பாதுகாக்கக்கோரி பலமுறை அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியும் கண்டுகொள்ளாத தொல்லியல்துறை, வழிபாட்டுத் தலமென்பதை கருத்தில்கொண்டு இனியாவது அக்கறை செலுத்தவேண்டுமென உள்ளூர் இஸ்லாமியர்களோடு ஊராட்சி நிர்வாகமும் வலியுறுத்தி வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-05-2019

  24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

 • libya_sandai11

  தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

 • thuppaki-12jk

  13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்