SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா தாக்குதல் எதிரொலி தொட்டியம் மதுரகாளியம்மன் கோயில் திருவிழா நடத்த தடை

3/20/2020 2:41:36 AM

முசிறி, மார்ச் 20: கொரோனா தாக்குதல் எதிரொலியால் தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் தேர் திருவிழா நடத்துவதற்கு அதிகாரிகள் தடை விதித்ததையடுத்து பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சமாதான கூட்டத்தில் இருந்து நிர்வாகிகள் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொட்டியத்தில் மதுரை காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் நடைபெறும் திருத்தேர் உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாகும். இந்த திருவிழாவில் சுமார் 30 அடி உயரமுள்ள இரண்டு திருத்தேர்களை பக்தர்கள் தோளில் சுமந்து கொண்டு வீதிஉலா வருவது காண்போரை பிரமிக்க வைக்கும். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக மதுரை காளியம்மனை பக்தர்கள் வணங்கி வருகின்றனர். இத்திருவிழா காலத்தில் கோயில் முன் ஆயிரம் பானை பொங்கலிட்டு வழிபடுதல், பூத்தட்டு சாத்துதல், திருத்தேர் தலையலங்காரம், திருத்தேர் உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் சிறப்பானவை ஆகும். இத்திருவிழாவை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து சுவாமியை வழிபாடு செய்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கமான ஒன்று.

இந்நிலையில் தொட்டியம் மதுரை காளியம்மன் கோயிலில் இவ்வருட தேர்த்திருவிழா கடந்த 16ம் தேதி பகுப்படைதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. வரும் 31ம் தேதி திருத்தேர் உற்சவம் நடைபெற இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் குறித்த தேதியில் தொடர்ந்து திருவிழா நடத்துவதற்கு அரசு அலுவலர்கள் தடைவிதித்துள்ளனர். இதனால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து முசிறி சப் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் பெருந்திருவிழா தொடர்பான சமாதான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் பத்மஜா தலைமை வகித்தார். தாசில்தார் பன்னீர்செல்வம், இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன், உதவி ஆணையர் ராணி, மதுரகாளியம்மன் கோயில் செயல் அலுவலர் சுந்தர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுமக்கள் தரப்பில் கோயில் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது உலக நாடுகளில் வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளதால் வைரஸ் நோய் தொற்று தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டு தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் பெருந்திருவிழா வைரஸ் பாதிப்புகள் முடிந்த பிறகு நடத்திக் கொள்ளலாம் எனவும், இதற்காக கோயிலில் ஒரு பரிகார பூஜை மட்டும் நடத்திக் கொள்ளலாம் என அலுவலர்கள் தரப்பில் தீர்மானித்து முடிவு எடுத்தனர். இதற்கு கோயில் முக்கியஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் சமாதான கூட்ட உடன்படிக்கையில் கையெழுத்திடாமல் வெளியேறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகாரிகள் எடுத்த முடிவினை செயல்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில் கோயில் முக்கியஸ்தர்களுக்கு அவர்களின் கருத்தை மீண்டும் அறிய ஒரு நாள் அவகாசம் எடுத்துள்ளதாக தெரிகிறது. தொன்றுதொட்டு நெடுங்காலமாக நடைபெற்று வரும் பங்குனி திருவிழாவில் தற்போது தடை ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 03-07-2020

  03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்