SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தும்பலஅள்ளி- எண்ணேகொல் புதூர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் விழிப்புணர்வு நடைபயணம்

2/18/2020 6:03:15 AM

தர்மபுரி, பிப்.18: தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தொடர்ந்து வறண்டுகிடக்கும் தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீர் கொண்டுவர, எண்ணேகொல் புதூர் நீர்பாசன திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டனர். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம், பாலக்கோடு வட்டத்தில் விவசாய நிலங்கள் அதிகம் உள்ளன. காவிரியில் வீணாக கலக்கும் நீரைத் தேக்கி விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில், கடந்த 1979ம் ஆண்டு தும்பலஅள்ளி அணையை கட்டும் பணியை, பொதுப் பணித் துறை தொடங்கியது. 14.76 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 131 மில்லியன் கன அடி நீரைத் தேக்கும் வகையில், 7 ஆண்டுகளில் அணை கட்டி முடிக்கப்பட்டது. அணைக்கு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் வரையில் நீர்வரத்து இருக்கும். இந்த நீரைப் பயன்படுத்தி பாலக்கோடு, காரிமங்கலம் ஒன்றியங்களில் 2,617 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்த நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக நீர்வரத்து முற்றிலும் தடைபட்டு அணை வறண்டு கிடக்கிறது.இதனால், இந்த பகுதியில் விவசாயம் கேள்விக் குறியானதால், 1 லட்சம் பேர் பிழைப்புக்காக வெளியிடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இந்த பகுதி மக்கள் இடம் பெயர்வதைத் தடுப்பதுடன், பாசன வசதிக்கு தும்பலஅள்ளியில் தண்ணீரை தேக்கவும், எண்ணேகொல்புதூர் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கு விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்து வருகின்றனர். இதையடுத்து எண்ணேகொல்புதூர்- தும்பலஅள்ளி அணை நீர்பாசன திட்டத்திற்கு அரசு ₹276 கோடி மதிப்பீட்டில் கால்வாய் அமைப்பதாக அறிவித்தது. ஆனால் இந்த திட்டம் கிடப்பில் உள்ளது. இந்நிலையில் தும்பலஅள்ளி- எண்ணேகொல்புதூர் திட்டத்தை நிறைவேற்றக்கோரி நேற்று தும்பல அள்ளிஅணையில் இருந்து கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு விவசாயிகள் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டனர். இதில், தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யக்கண்ணு நடைபயணத்தை தொடங்கி வைத்தார். நடைபயணத்திற்கு சங்கத்தின் மாநில துணை தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். முனிராஜ், மணி, ராஜவேல், மாவட்ட தலைவர் சுப்ரமணி உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த நடைபயணத்தில், போர்கால அடிப்படையில், தமிழக நதிகளை இணைக்க வேண்டும். பாசனத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோஷம் எழுப்பினர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் எண்ணேகொல் புதூர் அணையிலிருந்து தும்பலஅள்ளி அணைக்குத் தண்ணீரைக் கொண்டு வந்தால், 70 ஏரிகளும், 20 தடுப்பணைகளிலும் தண்ணீரைத் தேக்க முடியும் என்பதால், உடனடியாக பணியை தொடங்க வேண்டும். தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள எண்ணேகொல்புதூர் அணைக்கட்டில் இருந்து வலது, இடதுபுற கால்வாயை ₹276 கோடி செலவில் அமைக்கும்பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்