SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏஎப்டி மில்லின் தற்போதைய நிலையே தொடர வேண்டும்

1/24/2020 12:07:08 AM


புதுச்சேரி, ஜன. 24: புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா நேற்று முதன் முறையாக கொண்டாடப்பட்டது. மாநில தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். இதில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் அவர் பேசியதாவது: மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தை புறக்கணிப்பது மட்டுமல்லாமல் பக்கத்து மாநிலமான தமிழகத்தையும் புறக்கணிக்கிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டிப்பாக நாங்கள் கொண்டு வருவோம் என 2 ஆண்டுகளுக்கு முன்பு கூறி கடிதம் அனுப்பினார்கள். அதனை அனுமதிக்க மாட்டேன் என நான் பதில் அளித்தேன். தற்போது சட்டத்தை மாற்றி, மாநில அரசு அனுமதி தேவையில்லை என்று கூறி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு உத்தரவை போட்டு அனுமதி கொடுத்துள்ளனர். புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை எக்காலத்திலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சி தலைவர்களுடன் இணைந்து 38 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினோம். அப்போது அமைச்சரவை முடிவுபடி ரோடியர், சுதேசி மற்றும் பாரதி மில் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்க வேண்டும் என முதல் கோரிக்கை வைத்தோம். ஆனால், கவர்னர் இந்த மில்லை மூட வேண்டும் என கூறினார். அதனை தொழிலாளர்களும் ஏற்கவில்லை. தொடர்ந்து கவர்னருடன் நடந்த பேச்சு வார்த்தையில் விருப்ப ஓய்வு கொண்டுவர ஒரு குழு அமைத்து, அக்குழுவில் என்ன முடிவு எடுக்கிறதோ, அதன்படி கவர்னர் ஒப்புதல் அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்காக குழு அமைப்பதற்கு கோப்பு அனுப்பினால், கவர்னர் கிரண்பேடி ஏஎப்டி மில்லை மூட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதனை நாங்கள் ஏற்கவில்லை. இக்கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
 மத்திய அரசிடமிருந்து வந்த கடிதத்தில், தொழிலாளர்களின் விருப்பம் என்ன? என்று கேட்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தங்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

ஆனால், கவர்னர் கிரண்பேடி மத்திய அரசின் அதிகாரத்தையும், குடியரசு தலைவர் அதிகாரத்தையும் தன் கையில் எடுத்து கொண்டு மில்லை மூட வேண்டும் என தன்னிச்சையாக அதிகாரிகளை மிரட்டி உத்தரவிடுகிறார். அந்த கோப்பு என்னிடம் வரவில்லை. அமைச்சரிடம் செல்லவில்லை. இப்படி அராஜகம் செய்கிற, கிரண்பேடி புதுவைக்கு தேவையா? என பல முறை நான் கேள்வி கேட்டு கொண்டிருக்கிறேன். ஆனால், மத்திய அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.
 மில்லை மூடினால் தொழிலாளர்கள் நாளை எங்களை எதிர்த்து தான் போராடுவார்கள். கவர்னரை எதிர்த்து போராடமாட்டார்கள். ஏஎப்டி மில் விவகாரம் தொடர்பாக தொழிலாளர் தலைவர்கள், பாஜக தலைவர் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அப்போது, அரசு நிலைப்பாட்டை தெரிவித்து ஆதரவு கொடுப்பீர்களா? என கேட்டேன். அதற்கு, விருப்ப ஓய்வுதான் கொடுக்க வேண்டும். தொழிற்சாலையை மூடுவதை நாங்கள் ஏற்று கொள்ள மாட்டோம் என மாநில பாஜக தலைவர் கூறினார். தொழிலாளர்கள், மக்கள், அமைச்சரவை, எம்எல்ஏக்கள் என எல்லோரும் ஒருங்கிணைந்து தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்க சொல்லும்போது, மில்லை மூட வேண்டும் என உத்தரவு போட கவர்னருக்கு யார் அதிகாரம் கொடுத்தது. இந்த கேள்வியை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அமைச்சர் ஷாஜகானும், நானும் கிரண்பேடிக்கு கடிதம் அனுப்ப உள்ளோம்.  அதில், நாங்கள் விருப்ப ஓய்வுதான் கூறுகிறோம். நீங்கள் மூட சொல்கிறீர்கள். குடியரசு தலைவர் உத்தரவு வரும் வரை இருக்கின்ற நிலையே தொடர வேண்டும் என கூறி கடிதம் அனுப்ப உள்ளோம். புதுவை மக்களுக்கு துரோகம் செய்கிற கவர்னரை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த விழாவில் புதுச்சேரி மாநிலத்துக்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரும், அகில இந்திய காங்., செயலாளருமான சஞ்சய் தத், அமைச்சர் கந்தசாமி, அரசு கொறடா அனந்தராமன் எம்எல்ஏ, முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன், துணை தலைவர் தேவதாஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-02-2020

  23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • theepam2020

  மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • UkraineCoronaProtest

  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

 • puthu2020

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்