SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுவையை நிதிக்குழுவில் சேர்க்காவிட்டால் 2021ல் யார் ஆட்சிக்கு வந்தாலும் திட்டத்தை செயல்படுத்த முடியாது

12/5/2019 5:43:24 AM

புதுச்சேரி, டிச. 5: புதுவையை நிதிக்குழுவில் சேர்க்காவிட்டால் 2021ல் யார் ஆட்சிக்கு வந்தாலும் திட்டத்தை செயல்படுத்த முடியாது என அமைச்சர் கந்தசாமி கூறினார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின்  பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் தினவிழா ஏனாம்  வெங்கடாசலம் பிள்ளை தெருவில் உள்ள வக்ஃப் வாரியத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கி பேசியதாவது: நான் 3 முறை அமைச்சராக  இருந்துள்ளேன். 2 முறை அமைச்சராக இருக்கும்போது சிறுபான்மையினருக்கு 2, 3 முறை  கடனுதவி வழங்கியுள்ளேன். ஆனால், 3வது முறையாக அமைச்சரான பிறகு யாருக்கும் கடனுதவி வழங்க முடியவில்லை. அதனை நான்  மறுக்கவில்லை. மத்திய அரசிடமிருந்து ரூ.20 கோடிக்கு  மேல் நிதி பெற்று கடனுதவி வழங்கியுள்ளோம். கடனை வாங்கியவர்கள் திரும்பி செலுத்தவில்லை. இதனால் புதுவை அரசு பெற்ற கடனை கேட்டு மத்திய அரசு நீதிமன்றம் சென்றுள்ளது. இதனால் வசூல் செய்யப்படும் தொகையை மத்திய அரசிடம்தான் கட்ட  வேண்டும் என ஏற்கனவே நிதித்துறை செயலராக இருந்த கந்தவேலு அரசாணை பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் கடனுதவி வழங்குவதற்காக பட்ஜெட்டில் ரூ.5 கோடி  ஒதுக்கியுள்ளோம். அதனை மத்திய அரசிடம் கட்டிவிட்டு, அங்கிருந்து ரூ.10 கோடி  அல்லது ரூ.15 கோடி நிதி பெற்று சிறுபான்மையினருக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏற்கனவே மத்திய  அரசு 70 சதவீதம் மானியம் வழங்கியது. அதனை 26  சதவீதமாக குறைத்துவிட்டது. மேலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டியால்  மாநில வருவாய் குறைந்துவிட்டது. இதனால் 26 சதவீத மானியத்தை வைத்து கொண்டு எல்லா திட்டங்களையும் செயல்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. புதுவையை நிதிக்குழுவில் சேர்க்கவில்லை என்றால் அடுத்து ஆட்சிக்கு யார் வந்தாலும் திட்டங்களை செயல்படுத்த முடியாது. தமிழகத்தில் பொங்கல்  பரிசாக குடும்பத்துக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.2,363 கோடி ஒதுக்கி  வழங்கி வருகின்றனர். புதுவையில் 2 கிலோ சர்க்கரை வழங்க கோப்பு அனுப்பினால்  ஒப்புதல் வழங்கவில்லை. 6 மாதத்திற்கு இலவச அரிசி வழங்க பேசி கொண்டிருந்த  நேரத்தில், அரிசிக்கு பதில் பணம் கொடுங்கள் என எதிர்க்கட்சிகள் போராட்டம்  நடத்துகின்றன. இதற்காக எதிர்கட்சிகளை குறை கூற மாட்டேன். தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு  அதிகாரம் உள்ளது.

ஆனால், புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  பிரதிநிதிகள் வந்தால் அரசு அதிகாரிகள் தங்களுக்குதான் அதிகாரம்  இருக்கின்றது என்று கூறுகிறார்கள். இதனால் கோப்புகளுக்கு ஒப்புதல் பெற  காலதாமதம் ஏற்படுகிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் ஒருவருக்கு கூட  பட்டா வழங்க முடியவில்லை. கடந்த ஆட்சியில் தகுதியற்ற 292 பேருக்கு கூடுதலாக  பட்டா வழங்கியுள்ளனர். அதனை நீக்கி விடுங்கள் என கவர்னர்  உத்தரவிடுகிறார். ஏற்கனவே பட்டா கொடுத்துவிட்டு தற்போது வீடு கட்டியவர்களிடம் போய் எதுவும் கேட்க  முடியாத நிலை உள்ளது. அரசு சுதந்திரமாக செயல்படுவதற்கு நிறைய தடைகள் உள்ளது. அதன் பாதிப்பு புதுச்சேரி மக்களுக்கும்,  அரசியல்வாதிகளுக்கும் உள்ளது. நெல்லித்தோப்பு, தட்டாஞ்சாவடி, காமராஜ் நகர்  இடைத் தேர்தல் பாராளுமன்ற தேர்தல் ஆகிய நான்கிலும் காங்கிரசுக்கு வெற்றி  கொடுத்துள்ளனர். புதுச்சேரி மக்கள் படித்தவர்கள், நல்ல சிந்தனையாளர்கள்.  ஆட்சியாளர்களால் செயல்பட முடியவில்லை என்பதை புரிந்து கொண்டு வாக்கு  அளித்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில் அன்பழகன்  எம்எல்ஏ, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர்  சாரங்கபாணி, வினோபா நகர் செயின்ட் ஜோசப் ஆலய அருட்தந்தை சின்னப்பன், புதுவை  அரசு காஜியார் மவுலவி, அஸ்ஹாபிழ், அல்ஹாஜ் இஜாவுத்தீன் மன்பயீ உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர். உதவி இயக்குநர் சுகந்தி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gggg20

  ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

 • QuarantineWuhan24

  சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

 • rp23

  நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

 • thai_ammamam

  தை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு

 • mouni_amavaaa1

  வட இந்தியாவில் மவுனி அமாவாசை : திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்