பொன் விழாவை எட்டும் மாநகராட்சியில் முதன்முறையாக களத்தில் 50 பெண் கவுன்சிலர்கள்
12/3/2019 5:56:09 AM
மதுரை, டிச. 3: பொன்விழாவை எட்டும் மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில் 50 பெண் கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதில் மேயர் பதவி பெண்ணுக்கு ஒதுக்கீடா? என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. 1971ல் மாநகராட்சி அந்தஸ்துக்கு உயர்ந்தது முதல் பல்வேறு மாற்றங்களும் திருப்பங்களும் ஏற்பட்டுள்ளன. மீனாட்சி அம்மன் கோயிலை மையமாக கொண்டு 1866ம் ஆண்டு 2.6 சதுர கி,மீ. பரப்பில் மதுரை நகராட்சி அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. தொடர்ந்து 41 பேர் நகராட்சி தலைவர்களாக இருந்துள்ளனர். 1971 மே முதல் தேதியன்று மாநகராட்சி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டு, நகராட்சி தலைவராக இருந்த எஸ்.முத்து முதல் மேயரானார். கடந்த 1974ல் நகரை சுற்றிலும் இருந்த 13 கிராமங்கள் இணைக்கப்பட்டு மாநகராட்சி எல்கை 52 சதுர கி.மீ. ஆக விரிவடைந்தது. இதன் பிறகு 1978ல் மாநகராட்சி தேர்தல் நடந்தது. இதில் மாநகராட்சி பதவி காலம் 6 ஆண்டுகளாக்கி, மேயரை கவுன்சிலர்கள் தேர்வு செய்தனர். மேயர், துணை மேயர் பதவி காலம் 2 ஆண்டுகள் என நிர்ணயித்து, அதிமுகவை சேர்ந்த 3 பேர் தலா 2 ஆண்டுகள் மேயர், துணை மேயர்களாக இருந்தனர். இதன் பிறகு 12 ஆண்டுகள் மாநகராட்சி தேர்தல் நடைபெறவில்லை. 1996ல் மாநகராட்சி பதவி காலம் 5 ஆண்டுகளாக்கப்பட்டது. 72 கவுன்சிலர்களுடன் மேயரை மக்களே நேரடியாக தேர்தெடுக்கும் முறை முதன் முறையாக அமலானது. இதில் திமுக ஜெயித்து மேயர் தேர்வு செய்யப்பட்டார். இதன் பிறகு 2001ல் அதே முறைப்படி மாநகராட்சி தேர்தல் நடந்தது.
இதிலும் திமுக ஜெயித்து மேயர் தெர்ந்தெடுக்கப்பட்டார். 2006ல் நடைபெற்ற தேர்தலில் மேயர் தேர்தலில் மாற்றம் செய்யப்பட்டு, கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கும் முறை கொண்டு வரப்பட்டது. மேயர் பதவி பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு திமுகவை சேர்ந்தவரே மேயரானார். தொடர்ந்து 3 முறை திமுக மேயர் பதவி வகித்தனர். 2010ல் திருப்பரங்குன்றம், திருநகர், அவனியாபுரம். ஆனையூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் சுற்றிலுமுள்ள ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு, 148 சதுர கி.மீ. பரப்புக்கு விஸ்தரிக்கப்பட்டது. வார்டு எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது. இதன்படி 2011ல் மாநகராட்சி தேர்தல் நடந்தது. இதில் மேயரை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறை மீண்டும் கொண்டு வரப்பட்டது. இதில் அதிமுக ஜெயித்து மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்களின் பதவி காலம் முடிந்து 2016ல் நடைபெற வேண்டிய தேர்தல் இதுவரை நடைபெறவில்லை.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிச.27 மற்றும் டிச.30 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடக்கும் என்று நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு தேர்தல் தேதி பிறகு அறிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தற்போது மேயரை கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்க அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியாகி 48 ஆண்டுகள் நிறைவடைந்து 50 ஆண்டு பொன்விழாவை எட்டி உள்ளது. மாநகராட்சிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, இந்த முறை தேர்ந்தெடுக்கப்படுவோர் மாநகராட்சி பொன்விழா ஆண்டில் இடம் பெறும் பெருமைக்குரியவர்கள் ஆவார்கள். இந்த நிலையில் 100 வார்டுகளில் 50 வார்டுகள் முதன்முறையாக பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பொது வார்டிலும் பெண்கள் போட்டியிடலாம். எனவே பெண் கவுன்சிலர்களே அதிகம் இடம் பெறுவார்கள். மேயர் பதவி ஒதுக்கீட்டு முறை இன்னும் அறிவிக்கப்படவில்லை. பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
மேலும் செய்திகள்
மலேசியாவில் சாதித்த போலீசாருக்கு பாராட்டு
பாரம்பரிய மரக்கன்று நடும் விழா
சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர்கள் ஆலோசனை கூட்டம்
இன்னும் 3 நாட்களே உள்ளன இதுவரை 1925 பேர் வேட்பு மனு தாக்கல்
உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து வேட்புமனு தாக்கல் களைகட்டியது
டாஸ்மாக்கில் திருடிய நான்கு பேர் கைது
14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை
3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது