SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீட்டுமனை பெற்றுத்தருவதாக லட்சக்கணக்கில் பணம் மோசடி

7/16/2019 1:50:23 AM

நாமக்கல், ஜூலை 16:  ராசிபுரம் அடுத்த தொப்பப்பட்டியில் இலவச வீட்டுமனை பெற்றுத்தருவதாக கூறி, லட்சக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்த பெண் உள்பட இருவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாதிக்கப்பட்டவர் நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தார்.ராசிபுரம் தாலுகா தொப்பப்பட்டி ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாய கூலி வேலை செய்து வரும் இவர்களில் பெரும்பாலானோர், வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், பெருமாள்கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சோமு (எ) சோமசுந்தரம், லோகாம்பாள் ஆகியோர், தொப்பப்பட்டி கிராம மக்களிடம், அரசின் இலவச வீட்டுமனை பெற்றுத்தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். மேலும், இலவச வீட்டுமனை பெற முன்பணம் கட்டவேண்டும் என கூறி, 50க்கும் மேற்பட்டவர்களிடம் ₹5 ஆயிரம் முதல் ₹20 ஆயிரம் வரை வாங்கியுள்ளனர். ஆனால், கூறியபடி வீட்டுமனையை பெற்றுத்தராமல் ஏமாற்றி விட்டனர். இதனையடுத்து, பணத்தை திரும்ப கேட்டகிராம மக்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வீட்டுமனை தருவதாக கூறி பண மோசடி செய்த சோமசுந்தரம், லோகாம்பாள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் குப்பண்ணன் என்பவர், நேற்று கலெக்டர் ஆசியா மரியத்தை சந்தித்து மனு கொடுத்தார். மேலும், இதுதொடர்பாக மாவட்ட எஸ்பி அருளரசுவிடமும் புகார் மனு வழங்கினார்.

இதேபால்  திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள், அணிமூர் கிராமத்தில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. தற்போது, இங்கு கழிவுநீரை தேக்கி வைக்க புதிய திட்டம் துவங்கப்பட உள்ளது.  இதற்கு அப்பகுதி மக்கள்  எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நேற்று, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு அணிமூர் கிராமத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்தனர். பின்னர், கலெக்டர் ஆசியாமரியத்திடம் அளித்த புகார் மனுவின் விபரம்: திருச்செங்கோடு நகராட்சி நிர்வாகம் முறையாக சட்ட விதிகளை பின்பற்றாததால், அணிமூர் பகுதியில் சுற்றுப்புற சூழல் மாசடைந்து, தொற்றுநோய்கள் உருவாகி உள்ளது. நிலத்தடி நீரும் மாசடைந்து விட்டது.குப்பை கிடங்கு சரியாக பராமரிக்கப்படவில்லை. பிளாஸ்டிக் கழிவுகள், மின்சாதன கழிவுகள், மருத்துவ கழிவுகள்  மலைபோல் குவிந்துள்ளது. மேலும், புதிய திட்டத்தை வேலை முடித்ததும், பராமரிப்பு இன்றி கைவிட்டால், அதில் இருந்து வெளியேறும் கழிவால், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். எனவே, புதிய திட்ட கட்டுமான பணிக்கான ஆணையை ரத்து செய்ய வேண்டும்.  இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

அதுபோல் ராசிபுரம் அடுத்த மலையம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கிய மனுவில், ராசிபுரம் அடுத்த மலையம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல் பட்டு வருகிறது. இதில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் கட்டடம் இடிந்து விழும்  ஆபத்தான நிலையில் இருந்தது. இதையடுத்து கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு, புதிதாக கட்டடம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பள்ளி கட்டடத்தை இடிக்க முடிவு செய்த அதிகாரிகள், பள்ளியை தற்காலிகமாக அருகில் உள்ள பல்லவநாயக்கன்பட்டி சமுதாயக் கூடத்துக்கு இடமாற்றம் செய்தனர். தொடர்ந்து பழுதடைந்த கட்டடத்தை இடித்து விட்டனர். ஆனால், அந்த இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டப்படவில்லை. இதனால் சமுதாய கூடத்தில் இடநெருக்கடியில் மாணவ, மாணவிகளை உட்கார வைத்து பாடம் நடத்தி வருகின்றனர். இதில் கலெக்டர் தலையிட்டு, மலையம்பாளையம் தொடக்கப்பள்ளிக்கு உடனடியாக புதிதாக கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மனுவில் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-08-2019

  24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • FloatingNuclearPlant23

  ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

 • robo

  பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

 • france_modi11112

  பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

 • cleb_11_kri

  கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்