SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அருப்புக்கோட்டை அருகே அடிப்படை வசதியில்லாத கோவிலாங்குளம்

6/25/2019 2:10:09 AM

அருப்புக்கோட்டை, ஜூன் 25: அருப்புக்கோட்டை அருகே, கோவிலாங்குளம் கிராமத்தில் பஸ்நிறுத்தத்தில் பஸ்கள் நிற்காததால், 2 கி.மீ தூரம் நடந்து கிராமத்திற்கு வருகின்றனர். குடிநீர், வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அவதிப்படுகின்றனர். அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கோவிலாங்குளம் கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உள்ளனர். இங்கு போதிய அடிப்படை வசதியின்றி அவதிப்படுகின்றனர். கிராமத்திற்கு மதுரை-தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் இருந்து சாலை பிரிந்து செல்கிறது. இந்த சாலை குறுகியதாக இருப்பதால், கனரக வாகனங்கள் செல்லும்போது, டூவீலர்கள் செல்ல முடிவதில்லை. சாலையின் இருபுறமும் மண் பரப்பி சமப்படுத்தாமல் இருப்பதால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

2 கி.மீ நடைபயணம்:
மதுரையிலிருந்து கோவிலாங்குளத்திற்கு பஸ்சில் வரும் பொதுமக்களை, கோவிலாங்குளம் விலக்கில் நிறுத்தி இறக்கிவிடுவதில்லை. பஸ்நிறுத்தம் இல்லை என கூறி 2 கி.மீ தொலைவில் உள்ள பாலையம்பட்டியில்தான் இறக்கி விடுகின்றனர். இதனால், கிராம மக்கள் ஊருக்கு நடந்து வருகின்றனர். கிராம விலக்கில் பஸ்களை நிறுத்தி, பொதுமக்களை ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டும் கலெக்டர் உத்தரவிட்டும், அதனை யாரும் செயல்படுத்துவதில்லை. மேலும், நான்குவழிச்சாலை எதிர்புறம் ‘வேண்டுதல் நிறுத்தம்’ என்ற போர்டு வைக்கப்பட்டுள்ளது. அங்கும் பஸ்களை நிறுத்துவதில்லை. இதனால், கோவிலாங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 10க்கு மேற்பட்ட கிராம மக்கள் மதுரை செல்ல சிரமப்படுகின்றனர்.

பயன்பாடில்லா நூலகம்
கிராமத்தில் உள்ள பஸ்நிறுத்த மேற்கூரை இடிந்தும் சேதமடைந்தும் உள்ளது. இதனால், பயணிகள் அங்கு ஒதுங்க முடிவதில்லை. கிராமத்தில் முறையான வாறுகால் இல்லை. மழை காலங்களில் மழைநீரும், கழிவுநீரும் கலந்து சாலைகளிலும், அப்பகுதியில் உள்ள ஊராட்சி அலுவலகத்தில் தேங்கி நிற்கிறது. கிராமத்தில் ரூ.17 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி சேவை மையம் காட்சிப் பொருளாக உள்ளது.
2010ல் ரூ.4 லட்சத்தில் கட்டப்பட்ட நூலகம் பயன்பாடின்றி கிடக்கிறது. இதனை திறக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
ஆதிதிராவிடர் காலனியில் சாலையின் ஒரு பகுதியில் வாறுகால் கட்டப்பட்டுள்ளது. மற்றொரு பகுதியில் வாறுகால் இல்லாததால், கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால், கொசுத்தொல்லை ஏற்பட்டுள்ளது.

கண்மாய்களை தூர்வார வேண்டும்:
கிராமத்தில் உள்ள பெரியகண்மாயின் மழைநீர் வரத்து ஓடை அடைக்கப்பட்டுள்ளது. இதனால், கோவிலாங்குளம், கட்டங்குடி, தாதம்பட்டி என 10க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பெரிய கண்மாயை தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல, ஊராட்சி ஒன்றிய கண்மாயின் மழைநீர் வரத்து ஓடை அடைபட்டுள்ளதால், கண்மாயில் மழைநீர் தேங்குவதில்லை. எனவே, கோவிலாங்குளம் கிராமத்தில் உள்ள இரண்டு கண்மாய்களை தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து உழவர் விவாத குழு அமைப்பாளர் குமார் கூறுகையில், ‘ கோவிலாங்குளத்தில் முறையான வாறுகால் வசதி இல்லை. நூலகம் திறக்கப்படுவதில்லை. பெரிய கண்மாயில் வரத்துக்கால்வாய் அடைப்பட்டுள்ளது. இதனை சீரமைக்க கலெக்டர் தலைமையில் நடக்கும் விவசாயிகள் கருத்தரங்கில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மேலும், கோவிலாங்குளத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் மதுரை சென்று வர கோவிலாங்குளம் விலக்கில் அனைத்து பஸ்களும் நின்று, பொதுமக்களை ஏற்றி, இறக்கி செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • vagaidamflood

  பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது!

 • bangladeshtrain

  வங்கதேசத்தில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 16 பேர் பலியான சோகம்!

 • wildfireaus

  காட்டுத்தீ காரணமாக அபாய நிலையை எட்டியுள்ள ஆஸ்திரேலியா: பேரழிவு காரணமாக அவசரநிலை பிரகடனம்

 • hongkongprofire

  ஹாங்காங் போராட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்: வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபருக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

 • chicagosnow

  பனிப்பொழிவின் உச்சத்தில் சிகாகோ: 6 அங்குலத்திற்கு பனிப்போர்வை படர்ந்து காட்சியளிக்கும் நகரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்