SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உத்தமபாளையம் பேரூராட்சியில் ஆமை வேகத்தில் நடக்கும் வளர்ச்சி திட்டப் பணிகள்

6/19/2019 5:15:32 AM

உத்தமபாளையம், ஜூன் 19: உத்தமபாளையம் பேரூராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியில் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனை கண்காணிக்க வேண்டிய பேரூராட்சி பொறியியல் துறை அதிகாரிகள் கண்டும், காணாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. உத்தமபாளையம் பேரூராட்சி மாவட்டத்திலேயே பெரிய ஊராக உள்ளது. இங்கு அதிகமான மக்கள் தொகை இருக்கிறது. கடந்த 40 வருடங்களுக்கு முன்பு பி.டி.ஆர்.காலனி உருவானது. இங்கு மட்டும் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். 5வது வார்டாக உள்ள இது நகரின் விரிவாக்கம் செய்யப்பட்ட இடங்களை அதிகம் கொண்டுள்ளது. இதனால் கடந்த 40 வருடமாகவே சாக்கடை வசதிகள் இல்லாமலும், சாலை வசதிகள், தெருவிளக்கு வசதிகள் இல்லாமலும் மக்கள் வாழ்கின்றனர். இதற்காக கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக மக்கள் போராடி வருகின்றனர். இதன் பயனாக கடந்த 2018ம் வருடம் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி வளர்ச்சி திட்டப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் பி.டி.ஆர். காலனியில் புதிதாக சாக்கடை வசதி, சேதம் அடைந்துள்ள தரைப்பாலத்திற்கு பதிலாக புதிய சிமென்ட் பாலம், மற்றும் தார்ச்சாலை போன்றவை புதிதாக போடுவதற்காக கடந்த டிசம்பரில் டெண்டர் விடப்பட்டது.

இதனை 3 காண்ட்ராக்டர்கள் எடுத்துள்ளனர். 6 மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட வேண்டும். அவசர கதியில் செய்யக்கூடாது, தரமான பணியாக இருக்க வேண்டும், எக்காரணம் கொண்டும் பேரூராட்சி பொறியியல் துறையின் செயற்பொறியாளர், மற்றும் உதவிபொறியாளர், ஓவர்சியர் மேற்பார்வையில் பணிகள் நடக்க வேண்டும். பணிகள் நடக்கும்போது பேரூராட்சி துறை அதிகாரிகள் எந்தநேரமும் கண்காணிக்கலாம். ஆனால் டெண்டர் விதிமுறைகள் எதுவுமே பின்பற்றப்படவில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக பணிகள் அனைத்தும் மந்த கதியில் நடக்கிறது. பாளையம் பி.டி.ஆர்.காலனி- அனுமந்தன்பட்டி சாலையில் பள்ளிவாசலுக்கு அருகே நடக்கும் சாக்கடை கட்டுமான பணி மிக மோசமான நிலையில் நடந்தும் இதனை பேரூராட்சி பொறியியல் துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர். இதனால் சாக்கடைக்குள் இரவில் டூவீலர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் உள்ளே விழுந்து விபத்திற்குள்ளாகும் நிலை உண்டாகி உள்ளது.
குறிப்பாக இரவில் அடிக்கடி விபத்துக்களும் உண்டாவதால் முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் நடந்து செல்லவே முடியாத நிலை உள்ளது. இதேபோல் மிக முக்கியமான போக்குவரத்து தரைப்பாலம் பி.டி.ஆர்.காலனியில் சேதம் அடைந்துள்ளது. இங்கு இரவில் விழுந்து காயம் அடைந்தவர்கள் பலர் உள்ளனர். குறிப்பாக வெளியூர்களில் இருந்து வருபவர்கள் மிக மோசமாக கீழே விழக்கூடிய நிலையில் உள்ளதால் இதனை உடனடியாக சரிசெய்ய பலமுறை கோரிக்கை விடுத்து, டெண்டர் விட்டும் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிப்பு தொடர்கதையாகி வருகிறது.

ரூ.2 கோடி அரசினால் டெண்டர் விட்டும் ஆமை வேகத்தில் நடப்பதும், அப்படியே நடந்த பணிகள் தரமில்லாமல் இருப்பதும் மக்களை மிகவும் நொந்து போகச்செய்துள்ளது. எனவே உடனடியாக பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் இங்கு நடக்கக் கூடிய பணிகளை மேற்பார்வை இடுவதுடன், பேரூராட்சிகளின் பொறியியல் துறை அதிகாரிகளை இந்த பக்கம் செல்ல உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் ஒதுக்கப்பட்ட பணிகளுக்கு உரிய தரம் இங்கு கிடைக்குமா என்பதே சந்தேகம்தான்.
இதுகுறித்து இந்த பகுதியை சேர்ந்த அப்பாஸ் கூறுகையில், ‘பி.டி.ஆர்.காலனியில் ரூ.2 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு ஒதுக்கப்பட்டாலும் இன்னும் பல தெருக்களின் சாக்கடைகள், சாலைகள் இருப்பதே தெரியாத நிலைதான் உள்ளது. ஒதுக்கப்பட்ட நிதிக்கான பணியும் ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனை பற்றி பேரூராட்சி அதிகாரிகளிடம் புகாராக கொண்டு சென்றால் கண்டு கொள்வதில்லை. ஏற்கனவே அரைகுறையாக கட்டப்பட்டு வரும் சாக்கடை மிக மோசமான தரத்தில் உள்ளது. பேரூராட்சிகளின் பொறியாளர், உதவிபொறியாளர், ஓவர்சியர் என யாருமே வருவதில்லை. அப்படியே வந்தாலும் தரமற்ற வேலைகளுக்கு சர்டிபிகேட் தரும் நிலைதான் உள்ளது. எனவே தேனி கலெக்டர் இந்த பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். இதற்கு முன்பாக பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஸ்பாட் விசிட் அடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakmissiletest

  இந்தியாவுக்கு போட்டியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஷாஹீன்-1 ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்!

 • indhragandhi102

  இந்திரா காந்தியின் 102வது பிறந்த தினம் இன்று: சோனியாகாந்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை

 • californiagunshot

  பார்ட்டியில் புகுந்து மர்மநபர்கள் சரமாரி துப்பாக்கிசூடு: கலிஃபோர்னியாவில் நடந்த இந்த சம்பவத்தில் 4 பேர் பலி!

 • isisterrorbabies

  ரஷ்ய சிறையில் உள்ள ISIS பயங்கரவாத சந்தேக நபர்களின் குழந்தைகள் ஈராக் சிறையில் இருந்து டஜன் கணக்கில் மீட்பு

 • 19-11-2019

  19-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்