SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாசிக் உழவரகங்களை மூட உத்தரவு

6/18/2019 1:22:25 AM

புதுச்சேரி, ஜூன் 18:  புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் இயக்குநர் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பாசிக் உழவரகங்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கு உண்டான மறைமுக உத்தரவும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. புதுவையில் 1986ம் ஆண்டு வேளாண்துறையால் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் அனைத்தும் மானியத்தில் வழங்குவதற்காக பாசிக் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு வந்த இந்நிறுவனத்தில் ஆட்கள் திணிப்பு, நிர்வாக சீர்கேடு போன்ற காரணங்களால் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இப்பிரச்னைகளை சரி செய்து பாசிக் நிறுவனத்தை தொடர்ந்து நடத்தாமல், அதனை மூடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வேளாண்துறையே செய்து வருகிறது. முதலில் கம்போஸ்ட் (உரம்) உற்பத்தி செய்வதை நிறுத்தியது. பின்னர் மினரல் வாட்டர் உற்பத்தியை நிறுத்தியது. தற்போது பாசிக் உழவரகங்களை மூட முடிவு செய்துள்ளது. இதற்காக ஆரம்பம் முதலே துறை உயர் அதிகாரிகள் தீவிரமாக செயல்படுவதாக தெரிகிறது. இந்நிலையில் வேளாண் துறை இயக்குநகரத்தில் வேளாண் இயக்குநர் தலைமையில் நேற்று கூட்டம் நடந்தது. இதில் கூடுதல் வேளாண் இயக்குநர்கள், இணை வேளாண் இயக்குநர்கள், துணை வேளாண் இயக்குநர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில்,  நடப்பாண்டு வேளாண்துறை எந்த இடுபொருட்களையும் பாசிக் மூலமாக மானியத்தில் வழங்காது என்றும், விவசாயிகள் இடுபொருட்களை வெளியில் வாங்கி கொண்டு அதற்குண்டான பில்லை இணைத்து விண்ணப்பித்தால் மானியத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்ற கொள்கை முடிவை அரசு ஒப்பு கொண்டதாகவும், அதற்குண்டான நிர்வாக ஒப்புதலை அரசு வழங்கியுள்ளதாகவும் வேளாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அரசு வழங்கிய நிர்வாக ஒப்புதலின் நகலை அதிகாரிகளிடம் வழங்கி, அதன் அடிப்படையில் திட்டங்களை செயல்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

 அந்த நிர்வாக ஒப்புதலில், வேளாண்துறை உற்பத்தி செய்யும் விதை நெல்லை, விவசாய உற்பத்தியாளர் கம்பெனி மூலமாக மானியத்தில் வழங்கப்படும் என்றும், மற்ற இடுபொருட்களான பூச்சி மருந்து, வளர்ச்சி ஊக்கி, நுண்ணூட்ட சத்து மற்றும் இதர இடுபொருட்களை தனியாரிடம் அல்லது விவசாய உற்பத்தியாளர் கம்பெனி, பஜன்கோ வேளாண் கல்லூரி, கேவிகே ஆகியவற்றில் பெற்று உரிய பில்லோடு விண்ணப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பாசிக் இடம் பெறவில்லை என்பது குறிப்படத்தக்கது. இதன் மூலம் பாசிக் உழவரகங்கள் விரைவில் மூடப்படும் என்று மறைமுகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாசிக் ஊழியர்கள் கூறுகையில், `மாணவர்களுக்கு வேளாண் கல்வியை போதிப்பதற்காகவும், அதற்கு உண்டான ஆராய்ச்சியை செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட பஜன்கோ வேளாண் கல்லூரியையும், விவசாயிகளிடம் நவீன தொழில்நுட்பத்தை பரப்புவதற்காகவும் அதற்குண்டான செயல் விளக்கங்களையும் நடத்துவதற்காகவும் ஆரம்பிக்கப்பட்ட காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் ஆகிய இரண்டு நிறுவனங்களை விவசாய இடுபொருட்கள் வாங்கி விற்க அரசு ஊக்குவிக்கிறது. ஆனால், வேளாண்துறையால் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் அனைத்தும் மானியத்தில் வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட பாசிக்கை இடுபொருட்கள் வாங்கி விற்க வேண்டாம் என்று நிர்வாக ஒப்புதலில் அரசு கூறியிருப்பது நிர்வாக சீர்கேட்டை காட்டுகிறது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பால் பாசிக் ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. அரசு இந்த தவறான அணுகுமுறையை கைவிட வேண்டும்’ என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-08-2019

  24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • FloatingNuclearPlant23

  ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

 • robo

  பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

 • france_modi11112

  பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

 • cleb_11_kri

  கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்