SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அடிக்கடி பழுதாகி நிற்கும் அரசு பஸ்

5/22/2019 2:42:19 AM

ஊட்டி, மே 22:  நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு பஸ்களுக்கு போதுமான உதிரி பாகங்கள், ஸ்டெப்னி டயர்கள் இல்லாத நிலையில், தொலை தூரங்களுக்கு செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால் பெரும்பாலான கிராமங்கள் ஊட்டியில் இருந்து தொலை தூரங்களில் உள்ளன. மலை மாவட்டம் என்பதால், வருவாய் குறைவு என்ற போதிலும் கடந்த பல ஆண்டுகளாக சேவை அடிப்படையிலேயே மலை மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.

மேலும், இங்கு தனியார் பஸ்கள் இயக்க தடையுள்ளதால், அனைத்து கிராமங்களுக்கும் அரசு பஸ்கள் மட்டும் இயக்கபடுகிறது. குறிப்பாக, ஊட்டியில் இருந்து மசினகுடி, மாயார், கிண்ணக்கொரை, கோரகுந்தா மற்றும் கெத்தை போன்ற கிராமங்கள் தொலை தூரங்களில் உள்ளன. அதேபோல், மாவட்டம் முழுவதும் பல்வேறு தொலை தூரங்களுக்கு செல்லும் கிராமங்களுக்கு இரவு நேரங்களில் ஒரு முறை மட்டும் சில பஸ்கள் செல்லும். பின், அதிகாலை நேரங்களில் அந்த பஸ் ஊட்டி வந்தடையும்.

இது போன்று தொலை தூரங்களுக்கு செல்லும் பஸ்களில் ஸ்டெப்னி டயர்கள் வழங்கப்படுவதில்லை. இதனால், இந்த பஸ்களில் டயர் பஞ்சரானால், வேறு ஒரு பஸ்சில் கொடுத்துவிட்டால் மட்டுமே மீண்டும் அந்த பஸ் செல்ல முடியும். இதனால், டயர் பஞ்சரானால் பஸ்கள் அங்காங்கே நடு வழியில் நிறுத்தப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு 7.15 மணிக்கு ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து, கெத்தைக்கு சென்ற பஸ், கடும் போக்குவரத்து நெரிசலால் 9.30 மணிக்கு லவ்டேல் பகுதியை சென்றடைந்தது.

பஸ்சில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அப்போது, அந்த பஸ்சின் பின்புறம் டயர் வெடித்தது. இதனால், அந்த பஸ் அங்கேயே நிறுத்தப்பட்டது. டயர் இல்லாத நிலையில், உடனடியாக அவர்கள் ஊட்டி கிளை அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டனர். அதிகாரிகள் மாற்று டயர் வேறு ஒரு பஸ்சில் கொடுத்து விடுவதாக கூறினர்.

மாற்று டயர் வருவதற்கு ஒரு மணி நேரம் ஆனது. ஆனால், அதற்குள் அவ்வழித்தடத்தில் வந்த வேறு பஸ்களில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், இந்த பஸ் டயர் மாற்றி மீண்டும் கெத்தைக்கு நள்ளிரவு 12 மணிக்கு சென்றுள்ளது. கெத்தை செல்லும் பயணிகள் இந்த பஸ்சிற்காக பல மணி நேரம் மஞ்சூரில் காத்திருந்த நிலையில், பஸ் வராததால் தனியார் ஜீப்கள் பிடித்து கெத்தை சென்றுள்ளனர்.

மேலும், தொலை தூர கிராமங்களுக்கு செல்லும் பயணிகள் உரிய ேநரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பலர் நண்பர், உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனர். எனவே, இது போன்று தொலை தூரங்களுக்கு செல்லும் பஸ்களுக்கு ஸ்டெப்னி டயர்களை கொடுத்து அனுப்ப போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுப்பது அவசியம். மேலும், போக்குவரத்து கழகத்தில் போதுமான உதிரி பாகங்கள் வாங்கப்படாமல், பழைய உதிரி பாகங்களை வைத்தே பஸ்சை இயக்கி வருவதாக கூறப்படுகிறது.

சில பஸ்களுக்கு தரமான லீப் இல்லாத நிலையில், பஸ்கள் தொங்கிக் கொண்டே செல்கின்றன. இதனால், விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் நீடிக்கிறது. மேலும், ஊட்டியில் இருந்து மஞ்சூர் வழித்தடத்தில் கோவை செல்லும் இரு அரசு பஸ்களுக்கும் ஒரே ஸ்டெப்னி டயர் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

கீழ்குந்தாவில் இருந்து கோவை செல்லும் போது, இவ்விரு பஸ்களும் முன் எச்சரிக்கையாக ஸ்டெப்னி டயர்களை மாற்றி மாற்றி ஏற்றிக் கொண்டு செல்வது வாடிக்கையாக உள்ளது. ஊட்டியில் இருந்து மஞ்சூர், கோவைக்கு வனப்பகுதி வழியாக செல்வதால் இந்த பஸ்களுக்கு மட்டுமே இச்சலுகை உள்ளதாம். மற்ற பஸ்களுக்கு இந்த ஸ்டெப்னி டயர்களை மாற்றும் வசதி கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • turkeyprotest

  துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

 • 21-08-2019

  21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • beijingroboshow

  பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

 • syriaairstrike

  சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

 • boliviafire

  பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்