SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுகவின் ஊழல்களை பட்டியல் போட்டு புத்தகமாக வெளியிட்டவர் ராமதாஸ்: ஆம்பூரில் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

2/20/2019 1:19:06 AM

ஆம்பூர், பிப். 20: அதிமுகவின் ஊழல்களை பட்டியல் போட்டு புத்தகமாக வெளியிட்டவர் ராமதாஸ். இன்று பாமக - அதிமுகவுடன் கூட்டு சேர்ந்துள்ளது என ஆம்பூரில் நடந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். வேலூர் மாவட்டத்தில் நேற்று ஆம்பூர் சட்டமன்ற தொகுதி அகரம்சேரி ஊராட்சி, சோளிங்கர் சட்டமன்ற தொகுதி கரடிகுப்பம் ஊராட்சி என இரண்டு இடங்களில் நடந்த ஊராட்சி சபை கூட்டங்கள் மற்றும் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக்கூட்டங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். ஆம்பூர் சட்டமன்ற தொகுதி அகரம்சேரியில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ேபசியதாவது: இன்று தமிழகத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்றுதான் நீங்கள் வாக்களித்தீர்கள். அவர் இறந்தபிறகு முதலில் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக வந்தார். அவர் வந்ததை சசிகலாவால் தாங்கி கொள்ளமுடியவில்லை. இதனால் தன்னைதானே முதல்வர் என்று அறிவித்தார்.

அதற்குள் ஊழல் வழக்கில் பெங்களூரு சிறைக்கு சென்றுவிட்டார். இதனால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வந்தார். ஓபிஎஸ், ெஜயலலிதா காலில் விழுந்து முதல்வர் ஆனார். பழனிச்சாமி, சசிகலா காலில் மண்புழு போல் விழுந்து, வளைந்து, நெளிந்து முதல்வர் ஆனார். இவர்கள் எல்லாவற்றிலும் கலெக்ஷன், கரப்ஷன், கமிஷன் என்று ஊழலில் திளைத்துள்ளனர். ரூபாய் நோட்டுகளில் மட்டும் அல்ல, அமெரிக்க டாலர்களிலும் ஊழல் நடத்தியுள்ளனர். அமெரிக்கா கோர்ட்டில் தமிழகத்தின் மானம் சந்தி சிரிக்கிறது. தற்போது எல்இடி பல்புகளில் நடந்த கொள்ளை குறித்து பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. தேர்தல் வந்தால் ஜெயிக்க மாட்ேடாம் என தெரிந்து, இருக்கும் வரை கொள்ளையடித்து கொள்ளலாம் என செயல்படுகின்றனர்.

அதனால் உங்களுக்கு என்ன அடிப்படை பிரச்னைகள் என்பதை தெரிவிக்கலாம். இந்த ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை. இப்பிரச்னைகளுக்கு எல்லாம் திமுக ஆட்சியில் தீர்வு கிடைத்துள்ளது. ஆகவே பிரச்னைகள் குறித்து நீங்கள் பேச வேண்டும். குறிப்பாக பெண்கள் மட்டுமே பேச வேண்டும். உங்களது மனுக்களை நானே வாங்கி கொள்கின்றேன். இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து 20க்கும் மேற்பட்ட பெண்கள், கழிவுநீர் கால்வாய் வசதி, குடிநீர் வசதி, மருத்துவமனை, பள்ளி, கல்லூரி வசதி, முதியோர் உதவி தொகை, மகளிர் சுயஉதவி குழு கடன், இலவச வீட்டுமனை பட்டா, தொகுப்பு வீடு, வேலை வாய்ப்பு வசதி, மின்சார வசதி என பல்வேறு குறைகளை மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தனர்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ‘இந்த ஊராட்சி சபை கூட்டம் எதற்காக என்று சொன்ேனன். அதன் அடிப்படையில் 25க்கும் மேற்பட்ட பெண்கள் குறைகளை கூறினீர்கள். அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொண்டேன். இங்கு தெரிவித்த பிரச்னைகள் பெரும்பாலானவை உள்ளாட்சி அமைப்புகள் தீர்க்க வேண்டியது. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை. உள்ளாட்சி அமைப்புகள் இருந்தால் ஊராட்சி சபை நடத்த வேண்டிய நிலை வந்திருக்காது. திமுக ஆட்சி வந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் உடனடியாக நடத்தப்படும். கட்சி பாகுபாடின்றி முதியவர்கள் அனைவருக்கும் முதியோர் உதவி தொகை வழங்கப்படும். 2006ம் ஆண்டு ₹7 ஆயிரம் கோடி விவசாய கடனை ஒரே கையெழுத்தில் ரத்து செய்து உத்தரவிட்டவர் கலைஞர். இன்று 200க்கும் ேமற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். டெல்லிக்கு சென்று விவசாயிகள் போராடினர்.

பிச்சை, அரை நிர்வாணம், முழு நிர்வாண போராட்டங்கள் நடத்தியும், பிரதமர் மோடியோ முதல்வரோ வரவில்லை. ஆனால் இப்போது மோடி, விவசாயிகளுக்கு ₹6 ஆயிரம் வழங்கப்படும் என்கிறார். எடப்பாடி பழனிச்சாமி ₹2 ஆயிரம் வழங்கப்படும் என கூறுகிறார். எல்லாம் ஒரு நாடகம். மோடி என்ன சொன்னார்?, வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்டு அனைவரது வங்கி கணக்கிலும் ₹15 லட்சம் வழங்குவதாக தெரிவித்தார். அதில் ₹15 ஆயிரமாவது வழங்கினாரா? அப்பட்டமாக பொய்சொல்லி ஆட்சிக்கு வந்தார். திமுக ஆட்சியில் மகளிர் குழுக்களுக்கு சுழல்நிதி, மானிய கடன், வங்கி கடன் வழங்கப்பட்டது என்று கூறினீர்கள். இதில் எனக்கு பெருமை. நான் துணை முதல்வராக, உள்ளாட்சி அமைச்சராக இருந்தபோது எல்லா மாவட்டங்களுக்கும் சென்று 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் மகளிர் குழுக்களுக்கு சுழல் நிதி கொடுத்தேன்.

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல், மே மாதத்தில் முடிந்துவிடும். அந்த தேர்தலுடன் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் வரும். இங்கு எம்எல்ஏ இருந்தால் உங்களது பிரச்னைகள் குறித்து சட்டசபையில் பேசியிருப்பார். இவை உட்பட 18 சட்டமன்ற தொகுதிகள், இப்போது கலைஞர் இறந்ததால் திருவாரூர், அதிமுக எம்எல்ஏ இறந்ததால் திருப்பரங்குன்றம், இப்போது ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 21 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது. எம்பி தேர்தலுடன் இடைத்தேர்தல் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் வந்தால் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இப்போது நான் கிராம சபை கூட்டங்களில் கலந்து கொள்வதை கூட, இப்போதுதான் கிராமங்கள் தெரிந்ததா என்று எடப்பாடி கேட்கிறார். அதோடு புதிதாக முதல்வர் கனவில் அரசியலுக்கு வந்துள்ள ஒருவர், அவரை பார்த்து காப்பிஅடிப்பதாக சொல்கிறார். கிராமசபை கூட்டம் என்பது சோழர்கள் ஆட்சிக்கு பிறகு கலைஞர் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. திமுக ஆட்சிக்கு வரும் என்பதில் என்னை விட, உங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது. திமுக ஆட்சி வந்தவுடன் உங்களது அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும் என உறுதி அளிக்கிறேன். நீங்கள் கொடுத்த மனுக்களை அதிகாரிகளிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க கூறுகிறேன்' என்றார்.

தொடர்ந்து அகரம்சேரியில் முன்னாள் எம்பி சண்முகம் வீட்டுக்கு சென்று மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். பின்னர் திமுக கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து ஆம்பூர் அடுத்த சோலூரில் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ்செல்வி தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்குமார், வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆம்பூர் நகர செயலாளர் எம்.ஆர்.ஆறுமுகம் வரவேற்றார்.

கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் கிராமங்களில் தற்போது திமுக கிராம சபை நடத்துவது பற்றி பேசுகிறார். எனது கட்சி பணி கிராமங்களில் இருந்துதான் துவங்கியது. தமிழகத்தில் எனது கால் தடம் பெரும்பான்மையான கிராமங்களில் பதிந்துள்ளது. திமுகவின் கிராம சபை என்பது புதிதல்ல. கலைஞர் ஆட்சியில் தான் சுதந்திரதினம், குடியரசு தினங்களில் கிராம சபை நடத்தபட்டு, அதில் உயர் அதிகாரிகள் மட்டுமின்றி அந்தந்த பகுதி எம்எல்ஏ, எம்பி ஆகியோர் கலந்து கொண்டு கிராம மக்கள் துயர் துடைக்க திட்டங்கள் வகுத்தார்.

இப்போதுதான் கிராமங்கள் தெரிந்ததா? என்று கேட்கும் பழனிசாமியிடம் ஒரு பந்தயம்? தமிழகத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் தன்னந்தனியாக சென்று அப்பகுதியினர் முன் நான் நிற்கிறேன். உடனே என்னை அடையாளம் கண்டு கொள்வார்கள். ஆனால், பழனிசாமி அவரது சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு சென்றால் அடையாளம் கண்டு கொள்வார்களா? அதிமுகவின் தம்பித்துரை பாஜகவுடன் கூட்டணி தற்கொலைக்கு சமம் என்று பேசிய நிலையில் இன்று அச்சுறுத்தலுக்கு பயந்து பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. ஊழல் செய்து முதலமைச்சர்கள் சிக்கி சிறைக்கு சென்ற நிலை மாறி கொலை செய்து சிறைக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளார் பழனிசாமி. ஆட்சிக்கு ஆபத்து ஏற்படக் கூடாது என்பதற்காக ஆம்பூர் உட்பட 18 எம்எல்ஏக்கள் பதவி பறிக்கப்பட்டது.

ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் எதிர்ப்பு ஓட்டுகள் போட்டு தற்போது பதவியில் உள்ள விவகாரம் குறித்து திமுகவின் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கில் மார்ச் முதல் வாரம் தீர்ப்பு வர உள்ளது. அந்த தீர்ப்பால், இந்த ஆட்சி நிலைக்குமா என்பது சந்தேகமே. தற்போது பாமக, அதிமுக மற்றும் பாஜ கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. அதிமுகவின் கதை என பாமக தலைவர் ராமதாஸ் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அதில் மறைந்த ஜெயலலிதா முதல் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் வரை அனைவரது ஊழல்களையும் பட்டியலிட்டு விட்டு இந்த கூட்டணியில் இணைந்துள்ளார். இவர்களுக்கு மக்களை பற்றி, நாட்டை பற்றி கவலை இல்லை. தற்போது காலியாக அறிவிக்கப்பட்ட ஓசூர் உட்பட 21 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாராக உள்ளது. ஆம்பூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் சிறப்பாக பணியாற்றும் பொறுப்பு ஒவ்வொரு வாக்குச்சாவடி முகவருக்கும் உள்ளது.

ஆம்பூர் தொகுதியில் உள்ள 242 பூத்களிலும் உள்ள வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்காக உழைக்க வேண்டும். கட்சியின் தலைமை மற்றும் இதர பொறுப்பாளர்கள் யார் ஆணையிட்டாலும் இந்த பணியை சிறப்பாக முடிக்கும் பணி உங்களுடையது. இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் எம்எல்ஏ, மாவட்ட செயலாளர்கள் ஆர்.காந்தி எம்எல்ஏ, ஏ.பி.நந்தகுமார் எம்எல்ஏ, எம்எல்ஏக்கள் நல்லதம்பி, கார்த்திகேயன், மாவட்ட பொருளாளர் அண்ணா அருணகிரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-08-2019

  23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mamtateashop

  மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

 • chidambaramprotest

  ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

 • delhiprotest22

  காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

 • sandisreal

  இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்