SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேறு இடத்திற்கு நிரந்தரமாக மாற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்

2/15/2019 5:06:23 AM

மன்னார்குடி, பிப்.15:  மன்னார்குடி நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அடிக்கடி தீவைப்பு சம்பவம் ஏற்படுவதால் குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு 32வது வார்டு  டெப்போ ரோட்டில் ஏழு ஏக்கர் பரப்பளவில் சுமார் 35 வருடங்களுக்கு மேலாக உள்ளது. ஒவ்வொரு நாளும் நகரம் முழுவதிலும்  உள்ள 33 வார்டுகளில் சேரும் 50 டன்னுக்கும் மேற்பட்ட குப்பை கூளங்கள் இந்த கிடங்கில் சேகரிக்கப்படுகிறது. இக்குப்பைக் கிடங்கை சுற்றி உள்ள பல்வேறு நகர்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். குப்பைக் கிடங்கில் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து மக்கும் குப்பைகளை தனியாக பிரித்து உரம் தயாரிக்க போவதாகவும், மக்கா குப்பைகளை தனியாக பிரித்து திடக் கழிவு மேலாண்மை திட்டத்தின் முலம் மறுசுழற்சி செய்து பிளாஸ்டிக் சாலைகள் போடுவதற்கு பயன்படும் வகையில் பொது ஏலம் விட்டு நகராட்சிக்கு வருமானம் ஈட்டப்படும் என முன்பு சொல்லப்பட்டது. ஆனால் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கா குப்பைகளை மறு சுழற்சி செய்ய பல்வேறு இயந்திரங்கள் நகராட்சி நிர்வாகத்தால் வாங்கப்பட்டு அவைகள் பயன்படுத்தாமல் கிடப்பதாக மக்கள் கூறுகின்றனர்.  இந்நிலையில் மன்னார்குடி நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்புத் துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அடிக்கடி தீவைப்பு சம்பவம் ஏற்படுவதால் குப்பை கிடங்கை நிரந்தரமாக வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுகுறித்து நகர அமமுக செயலாளர் வக்கீல் ஆனந்தராஜ் கூறுகையில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கா குப்பைகளை மறு சுழற்சி செய்ய பல்வேறு இயந்திரங்கள் நகராட்சி நிர்வாகத்தால் வாங்கப்பட்டு பயன்படுத்தாமல் துருப்பிடித்து கிடக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக பிளாஸ்டிக் கழிவுகள் தரம் பிரித்து மறுசுழற்சி செய்யாமல் மக்கும் குப்பைகளோடு கலந்து மலை போல் குவிந்து கிடக்கிறது. கோழி இறைச்சிகளை சாக்கு பைகளில் கட்டி குப்பைகளோடு சேர்ந்து கிடப்பதால் மிகக் கடுமையான துர்நாற்றத்தை அப்பகுதி மக்கள் தினமும் அனுபவிப்பது வாடிக்கையாகி விட்டது. மிகப் பெரிய குப்பைக் கிடங்கை கண்காணிப்பதற்கு குறைந்த அளவிலான  துப்புரவு பணியாளர்களை  மட்டும் நகராட்சி நிர்வாகம் நியமித்துள்ளது.
 இந்த குப்பை கிடங்கை நகராட்சி பணியாளர்கள் சிலரே கோடை காலங்களில் தீ வைப்பதாக அப்பகுதி மக்கள் கூறுவதை நகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே இக்குப்பை கிடங்கை வெகு விரைவில் நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.   15வது வார்டு திமுக செயலாளர் பழனிச்செல்வன் கூறுகையில், மழை காலங்களில் குப்பைக் கழிவுகளில் தேங்கும் நீர் முலம் மலேரியா, டெங்கு காய்ச்சல் என பரவி பொதுமக்களுக்கு பெரும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. நகராட்சியின் இக்குப்பை கிடங்கை நகருக்கு வெளியே வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்ததோடு இல்லாமல் பல்வேறு போராட்டங்களையும்  நடத்தியுள்ளனர். கிடங்கு தீப்பிடித்து எரியும்போது  ஏற்படும் கடுமையான புகை மூட்டத்தால் குப்பைக் கிடங்கை சுற்றி வசிக்கும் ஏராளமான முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு திமுகவை சேர்ந்த பழ.மணி நகர் மன்ற தலைவராக  இருந்தபோது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இக்குப்பைக் கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற ரூ.25 லட்சம் நிதி  ஒதுக்கி மாளிகை மேடு, தருசுவேலி போன்ற பகுதிகளில் புதிய இடத்தை தேர்வு செய்தும் இருந்தார். ஆனால்  பல்வேறு அரசியல் காரணங்களினால் அந்த திட்டமும் கைவிடப்பட்டது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வை கொண்டு வருவதற்கு நகராட்சி நிர்வாகம் குப்பைக் கிடங்கை நகருக்கு வெளிய வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றார்.  இதுபற்றி மன்னார்குடி நகராட்சி நிர்வாக தரப்பில் விசாரித்தபோது, டெப்போ ரோட்டில் இயங்கும் குப்பை கிடங்கு வெகு விரைவில் அப்புறபடுத்தப்பட உள்ளது. அதற்கு பதிலாக நகரம் முழுவதிலும் உள்ள வார்டுகளில் சேரும் குப்பைகள் அந்தந்த வார்டுகளிலேயே மக்கும் மக்கா குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகளை உரமாக்கவும். மக்கா குப்பைகளை மறுசுழற்சி செய்து விற்பனை செய்யவும் வடசேரி ரோடு, ஆர்பி சிவம் நகர், டெப்போ ரோடு ஆகிய 3 இடங்களில் பெரிய யூனிட்டுகளும், மேலும் பல்வேறு வார்டுகளில் 8 இடங்களில் யூனிட்டுகளை அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் அதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளதாக கூறினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-08-2019

  23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mamtateashop

  மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

 • chidambaramprotest

  ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

 • delhiprotest22

  காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

 • sandisreal

  இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்