SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சூளகிரி-பேரிகை சாலையில் வாகன நெரிசலில் சிக்கி கலெக்டர் அவதி சுமார் ஒரு கி.மீ., நடந்தே சென்றார்

9/12/2018 4:13:18 AM

சூளகிரி, செப்.12: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வளர்ந்துவரும் பகுதியாகும். தனி தாலுக்காவாக அறிவித்தபோதிலும் வளர்ச்சி பணிகள் என்னவோ மந்தகதியிலேயே நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சூளகிரி-பேரிகை சாலை மிகவும் குறுகலாக உள்ள நிலையில், சுற்றுப்புற பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த சாலையை கடந்து தான் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். தினசரி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தும் நிலையில், காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து மிகுந்து காணப்படும். எனவே, சூளகிரி-பேரிகை சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக இருந்து வந்தது.

இந்நிலையில், சூளகிரி அருகே கடத்தூர் பகுதியில் நேற்று காலை புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில், பங்கேற்பதற்காக சென்ற கலெக்டர் பிரபாகர் மற்றும் அதிகாரிகளின் வாகனங்கள் பேரிகை சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டன. நேரம் நேரம் செல்ல வாகன நெரிசல் அதிகரித்தது. இதனால், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவ, மாணவிகள் ஆங்காங்கே தவித்துக்கொண்டிருந்தனர். இதுபற்றி அறிந்த கலெக்டர் பிரபாகர், காரை விட்டு கீழே இறங்கினார். பின்னர், விழா நடைபெற்ற இடத்திற்கு நடந்தே சென்றார். அப்போது, சாலை நெடுகிலும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியவாறு வாகனங்கள் அணிவகுத்து நின்றிருப்பதை கண்டார். அந்த வாகனங்களை கடந்து செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்த மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இதையடுத்து, அங்கிருந்த போலீசாரிடம் போக்குவரத்தை விரைந்து ஒழுங்குபடுத்துமாறு கேட்டுக்கொண்டார். மேலும், சீரான போக்குவரத்துக்கு வசதியாக வட்ட சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? என ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர், சுமார் ஒரு கி.மீ., நடந்தே சென்று பேரிகை-கும்பளம் பிரிவு சாலையை அடைந்த கலெக்டர் பிரபாகர், அங்கு நடைபெற்ற விழாவில் ரேஷன் கடையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆத்மா பேகம், சுந்தர் பாஸ்கர், பொறியாளர்கள் சுமதி, தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
₹2 கோடி செலவில் பிரச்னைக்கு தீர்வு

சூளகிரி-பேரிகை சாலையில் போக்குவரத்தினை சீர்செய்யும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையில், சுமார் 8 மீட்டர் அகலத்துடன், 2 கி.மீ., தொலைவிற்கு வட்ட சாலை அமைத்திட ₹2 கோடி வரையிலும் செலவாகும். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக பேரிகை சாலையை இணைக்க வழி உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது, சூளகிரி-கும்பளம் சாலையில் தினசரி வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் கனரக வாகனங்களை இயக்கிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தெரிவித்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-02-2019

  17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 16-02-2019

  16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • BrightBrussels

  ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

 • francelemon

  பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

 • TitanicReplicaChina

  முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்