கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சிைய தடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்
9/12/2018 12:17:08 AM
மன்னார்குடி, செப்.12: கர்நாடகாவில் இந்த ஆண்டு வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிந்தது. அதன் உபரி நீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையும் 4 முறை நிரம்பியது. எதிர்பாராத வெள்ளம் அதிக நாட்கள் வந்ததால் முக்கொம்பில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 2 லட்சம் கனஅடிக்கும் அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த வெள்ளத்தை தாக்கு பிடிக்க முடியாமல் முக்கொம்பு அணை உடைந்தது. இதனால் காவிரியில் வந்த வெள்ளம் 120 டிஎம்சி வரை கடலுக்கு வீணாக சென்றது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் ஏற்பட்ட வெள்ள சேதத்திற்கு நிவாரணம் கோர டெல்லி சென்ற கர்நாடக முதல்வர் குமாரசாமி, நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் உள்ளிட்ட குழுவினர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து மனு கொடுத்தனர்.இதற்கு பதில் அளித்த பிரதமர், குடகு மாவட்ட சேதத்தை பார்வையிட மத்திய குழுவை அனுப்பி வைப்பதாக உறுதி அளித்தார்.
அப்போது கர்நாடக முதல்வர், கர்நாடகத்தில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரை தமிழகத்தால் சேமிக்க முடியவில்லை. தமிழகம் 120 டிஎம்சி தண்ணீரை கடலுக்கு திருப்பி விட்டு வீணாக்கி விட்டனர். இதனை தடுத்து தமிழகத்திற்கு தேவையானபோது விடுவிக்கும் வகையில் கர்நாடகத்தில் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடகாவில் அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். இந்த கோரிக்கைக்கு பிரதமர் என்ன பதில் அளித்தார் என்பது உறுதியாக தெரியவில்லை. அதே நேரத்தில் இது குறித்து தமிழகத்துடன் பேசுகிறேன் என்று பிரதமர் கூறியதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கிறது. கர்நாடக அரசு கடந்த 15 வருடமாக தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை தராமல் இருந்தது. இந்த ஆண்டு அங்கு வரலாறு காணாத மழை பெய்ததால், அந்த மாநில அணைகளை பாதுகாக்க தமிழகத்திற்கு வெள்ளத்தை திருப்பி விட்டு தமிழகத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதுடன், மேலும் தமிழகத்தின் விவசாயத்திற்கு பெரும் பாதகம் ஏற்படுத்தும் வகையில் புதிய அணை கட்டவும் அனுமதி கேட்டு உள்ளனர்.
இந்த அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்தால் அது தமிழகத்தில் குறிப்பாக டெல்டா விவசாயத்திற்கும், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்ட குடிநீருக்கும் பெரிய பாதிப்பு ஏற்படுத்தும் என தமிழக மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு குரல் கொடுத்து வருகிறார்கள். இது குறித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தமிழகத்துக்கு வரும் உபரி நீரையும் தடுத்து மேகதாதுவில் சட்டவிரோதமாக அணை கட்ட அனுமதி கேட்டு அனைத்துக் கட்சி தலைவர்களோடு பிரதமர் மோடியை சந்தித்து கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வலியுறுத் தியதாகவும், அதற்கு பிரதமர் தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தெரிவித்ததாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்திற்கு செல்லும் உபரி நீரை தடுப்பதற்கு கர்நாடகாவிற்கு உரிமை இல்லை என்றும், தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் அனுமதியின்றி மின் உற்பத்தி திட்டங்களோ, அணை கட்டுமானப் பணிகளையோ மேற்கொள்ளக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வாண்டு ஏற்பட்ட பேரிடரால் கேரளா, கர்நாடகாவிலிருந்து வெளியேற்றப்பட்ட பெரும் வெள்ள நீர் தமிழகம் வழியே கடலிலே சென்று கலந்தது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கர்நாடக அரசு தமிழகத்தில் உபரி நீரை சேமிக்க வழியில்லை என்ற தவறான காரணத்தைக் காட்டி சட்டத்திற்கு புறம்பாக மேகதாது அணைக்கட்ட முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்நடவடிக்கைக்கு மத்திய அரசு துணை போவதும், தமிழகத்தோடு பேச்சுவார்த்தை நடத்துவேன் என்று பிரதமர் அறிவிப்பதும் அரசியல் உள்நோக்கம் கொண்டது மட்டுமல்ல, தமிழகம் அழிவதற்கு பிரதமர் துணை போகிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.
கர்நாடகாவின் சதிச்செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ராசி மணலில் புதிய அனையை கட்டி 100 டிஎம்சி வரை தண்ணீரை தேக்குவதற்கான அவசரகால நடவடிக்கையை உடன் தமிழக அரசு மேற் கொள்ள வேண்டும். மேலும் தமிழகத்தில் அவசரமாக அனைத்துக் கட்சி, விவசாயிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும். அனைத்துக் கட்சி, விவசாயிகள் சங்க தலைவர்களோடு பிரதமரை சந்தித்து உண்மை நிலையை எடுத்துரைத்து சட்ட விரோதமாக மேகதாது அணை கட்ட முயற்சிப்பதை தடுத்து நிறுத்த வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
அடிப்படை வசதி செய்து தராததால் மணலூர் கிராம பொதுமக்கள் அவதி
கும்பகோணத்தில் நடைபாதையை மறித்து கட்டிய தடுப்பு கட்டையை அகற்ற வேண்டும் நகராட்சி ஆணையரிடம் மக்கள் மனு
ரசாயனம் இல்லாத இயற்கை காய்கறி சாகுபடி பயிற்சி
வேளாண் அதிகாரி தகவல் சுவாமிமலை முருகன் கோயில் அன்னதான கூடத்தின் சுவர் இடிந்து விழுந்தது
உழவன் செயலி மூலம் பூச்சி நோய் தாக்குதலை விவசாயிகள் கண்காணிக்கலாம்
கும்பகோணம் பகுதி கடைகளில் ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா
ரிசாட்-2பிஆர்1 உள்ளிட்ட 10 செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.
சுவீடனில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார பேராசிரியர்கள் !!
நஞ்சைக் கக்கும் பாம்பிடமிருந்து உயிரைக் காக்கும் மருந்து தயாரிக்கும் பிரேசில் ஆய்வாளர்கள்