SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உடன்குடி அனல் மின்நிலையத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு 4 ஆண்டுகளாக இழப்பீடு வழங்காமல் இழுத்தடிப்பு கலெக்டரை சந்திக்க கூட்டமைப்பு முடிவு

9/11/2018 1:24:42 AM

உடன்குடி, செப். 11:  குலசேகரன்பட்டினம், உடன்குடி பகுதியில் ரூ.8 ஆயிரம் கோடியில் அனல் மின் நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்கு உடன்குடி அனல் மின் நிலையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இங்கு தலா 660 மெகாவாட் மின் உற்பத்தி திறன் ெகாண்ட 2 அலகுகள் அமைக்கப்படுகிறது. இந்த அனல் மின் நிலைய பணிகளுக்கான குலசேகரன்பட்டினம் - திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள விவசாய நிலங்கள் கையப்படுத்தப்பட்டு தற்போது ஆரம்ப கட்டப் பணி நடந்து வருகிறது. அனல் மின்நிலையத்திற்கு நிலக்கரி கொண்டு வருவதற்காக குலசை அருகே பகவத்சிங்புரம் கடற்கரை பகுதியில் கடலுக்குள் ஜெட்டி அமைக்கப்படுகிறது. இதற்காக அப்பகுதியில் கடலுக்கு செல்லும் வழி மின் வாரியத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இங்கு ஜெட்டி அமைக்க மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 இந்நிலையில் உடன்குடி அனல் மின் நிலையத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகள் தங்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை என போர்க்கொடி தூக்கியுள்ளனர். இது தொடர்பாக உடன்குடி அனல் மின்நிலைய திட்டப்பணிகளுக்கு நிலங்களை வழங்கியவர்களின் கூட்டமைப்பு கூட்டம் உடன்குடி கொத்துவா பள்ளி தெரு மண்டபத்தில் நேற்று நடந்தது. ஆசாத் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் நாகராஜன், தொழிலதிபர் ஆறுமுகப்பாண்டி, விவசாயி கந்தப்பன், பிர்த்வ்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் உடன்குடி அனல் மின் நிலைய பணிக்கு 72 தென்னை விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களை அரசு கையகப்படுத்தியுள்ளது. இதறகான இழப்பீட்டுத் தொகையை 4 தவணைகளில் தருவதாக அரசு உறுதி அளித்தது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முதற்கட்டமாக ஒரு ஹெக்டேருக்கு (2.47 ஏக்கர்) ரூ.6.75 லட்சம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.

 அதற்கு பிறகு 4 ஆண்டுகளாகியும் எஞ்சியுள்ள இழப்பீட்டு பணம் இதுவரை வரவில்லை. அனல் மின் நிலைய பணிக்காக பல ஆண்டுகளாக செழித்து வளர்ந்த தென்னைகள் அனைத்தும் வெட்டப்பட்டு விட்டன. இதனால் அனல் மின் நிலையத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. தங்களது நிலத்தையும் கொடுத்து விட்டு இழப்பீடும் உரிய காலத்தில் வழங்காமல் அரசு இழுத்தடித்து வருகிறது. எனவே 72 விவசாயிகளுக்கும் மீதி பணத்தை உடனே வழங்க கோரி ஆசாத் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைத்து போராடுவது. முதல் கட்டமாக  கலெக்டரை சந்தித்து மனு அளிப்பது. தற்போது நிலங்களுக்கு அரசு அதிக பட்ச நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் டாக்டர் சுப்பிரமணியன், லூக்காஸ், பெரியசாமி, ஜெயஜோதி, ஜெகதீஷ்வரன், சிவசங்கரன், சாகுல் உட்பட பாதிக்கப்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

விவசாயம் காப்போம் மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள்
வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம்  நடப்பு 2018-19ம் நிதிஆண்டில், மானியவிலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல் மற்றும் வேளாண் இயந்திரங்கள், கருவிகளை வாடகைக்கு வழங்கும் மையம் அமைத்தல் முதலான திட்டங்கள் நெல்லை மாவட்டத்தில் ரூ1.848 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் டிராக்டர்கள், சுழல் கலப்பை, விசை களையெடுப்பான், விதைக்கும் கருவி, வரப்பு அமைக்கும் கருவி, நிலம் சமன் செய்யம் கருவி, விசைத் தெளிப்பான், டிராக்டரால் இயங்கும் தெளிப்பான் உள்ளிட்ட பல்வேறு கருவிகள் மானிய உதவியுடன் வழங்கப்படும்.வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற்றிட முதலாவதாக விவசாயிகள், உழவன் செயலியில் தனது ஆதார் எண்ணுடன் பதிவு செய்திட வேண்டும். பின்னர் அவரது விண்ணப்பம் மத்தியஅரசின் இணையதளமான ‘agrimachinery.nic.in’ ல் இணைக்கப்படும். விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளையும் ஒப்புதல் வழங்கப்பட்ட டீலரையும் தங்களது சுயவிருப்பத்தின் அடிப்படையில்
தேர்வு செய்யலாம். விவசாயிகள் டீலரின் விற்பனை விலையை பேரம் பேசி குறைத்திடலாம். குறைக்கப்பட்ட விலைக்குரிய மானியம் இணையதளத்திலேயே கணக்கிடப்படும்.

பின்னர் விவசாயி மற்றும் விற்பனை செய்த முகவரால் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து விபரங்கள் மற்றும் ஆவணங்கள் வேளாண்மை பொறியியல் துறை அலுவலர்களால் சரிபார்க்கப்படும். அதன் பின்னர் மேலாய்வு செய்த அறிக்கை மற்றும் சரிபார்ப்பு பட்டியல் மற்றும் அலுவலரின் குறிப்புரையும் 10 நாட்களுக்குள் வேளாண்மை பொறியியல் துறை அலுவலர்களால் பதிவேற்றம் செய்யப்படும். இறுதியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் உரிய மானியமானது ஆய்வு முடிந்த 10 தினங்களுக்குள் வரவு வைக்கப்படும். இதுகுறித்து உரிய விவரங்கள் அறிய உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம்.

பயறு வகை பயிர்களுக்கு முக்கியத்துவம்
வேளாண்மையில் பயறு வகைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பயறு வகை பயிர்கள் குறைந்த நாளில் குறைந்த செலவில் அதிக வருவாயை ஈட்டித்தரக்கூடியதாகும். இப்பயிர்களில் வேர் முடிச்சு உள்ளதால் சாகுபடி செய்யும் நிலங்களின் வளம் கூடுகிறது. பயறு வகை பயிர்கள் கால்நடை தீவனமாகவும், வயலுக்கு பசுந்தாள் உரமாகவும் பயன்படுகிறது. இதில் உள்ள புரதச்சத்து உடல் வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. பயறு வகைகள் சிறுதானியங்களை விட 2 முதல் 3 மடங்கு புரதச்சத்து மிக்கவையாகும்.
பயறு வகை பயிர்கள் ஒரு ஆண்டில் ஒரு எக்டேருக்கு 170 முதல் 270 கிலோ வரை தழைச்சத்தை நிலத்தில் சேமித்து வைக்கும். எனவே இவற்றை ஊடு பயிராகவும், கலப்பு பயிராகவும் சாகுபடி செய்யலாம். பயறு வகை பயிர்களில் நன்மை செய்யும் பூச்சியான பொறி வண்டு அதிகம் காணப்படுவதால், பயிர்களை தாக்கும் தீமை செய்யும் பூச்சிகள் இயற்கையாகவே கட்டுப்படுகின்றன.

பயறு வகை பயிர்களில் உளுந்தில் வம்பன் 5, வம்பன் 6, 7, 8 மற்றும் கோ 6, எம்டியூ 1 உள்ளிட்ட வகைகளும், பாசி பயறு என்றால் வம்பன் ஜிஜி 3, கோ 8 உள்ளிட்ட ரகங்களும் உள்ளன. இவை அனைத்துமே 65 முதல் 75 நாட்களுக்குள் பலன் தரக்கூடியதாகும்.பயறு வகைகளுக்கு விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பிறகு உயிர் தண்ணீர் 3வது நாளிலும் பாய்ச்ச வேண்டும். காலநிலை மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ப 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் கட்ட வேண்டும். பயறு வகை பயிர்களை பயிரிட்டு விவசாயிகள் பயன்பெற வேளாண்துறை கேட்டுக் கொண்டுள்ளது.     

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்