SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரை தமுக்க மைதானத்தில் களைகட்டிய அறிவுத்திருவிழா 5 நாட்களில் 1 லட்சம் வாசகர்கள் குவிந்தனர்

9/6/2018 3:59:21 AM

மதுரை, செப். 6: தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் மதுரை தமுக்க மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் 5 நாட்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகை தந்துள்ளனர். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின்(பபாசி) சார்பில் 13ம் ஆண்டாக மதுரை தமுக்க மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் சூரியன் பதிப்பகம் உள்ளிட்ட முன்னணி பதிப்பகங்களின் 256 ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன.

கதை,கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் என பல்வேறு தலைப்புகளில் ஏராளமான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தாண்டு சிறப்பம்சமாக, குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலி வாசகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. திருவிழாவில் ரூ.10ல் இருந்து ரூ.10ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரு லட்சம் தலைப்புகளில், 1 கோடிக்கும் அதிகமான புத்தகங்கள், லட்சக்கணக்கான வாசகர்கள் என ஒவ்வொரு நாளும் புத்தகத் திருவிழா களைகட்டி வருகிறது. செப்.10ம் தேதி வரையிலும் காலை 11மணிக்கு துவங்கி இரவு 9மணி வரையிலும் கண்காட்சி நடைபெறுகிறது. இதற்கான அனுமதி இலவசம்.


தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்க செயலாளர் வெங்கடாச்சலம் கூறு கையில், ‘ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கிச்செல்கின்றனர். குறிப்பாக, மாணவர்களின் வருகை கடந்த ஆண்டை விடவும் அதிகமாக உள்ளது. கடந்த 5 நாட்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் புத்தக திருவிழாவை பார்வையிட்டு சென்றுள்ளனர். சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது. மேலும் சில தினங்கள் இருப்பதால், 8லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம். கடந்த ஆண்டைவிட இந்தாண்டு விற்பனை விகிதம் அதிகரித்துள்ளது’’ என்று தெரிவித்தார்.

புத்தகத் திருவிழாவிற்கு வந்த மாணவன் கிஷோர் கூறுகையில், ` ராமாயணம், மகாபாரம் குறித்தெல்லாம் ஆசிரியர்கள் பேசி மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், புத்தகம் மூலம் முழுமையாக படித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை நீண்டநாட்களாக இருந்தது. தற்போது, இவற்றை வாங்கியுள்ளேன். அப்பாவிற்காக பெண்ணிய விடுதலை ‘பெண்ணியம் என்றொரு கற்பிதம்’ என்ற நூலை வாங்கி பரிசளிக்க உள்ளேன் ’ என்றார்.புத்தகத்திருவிழா செப்.10ம் தேதி வரை நடைபெறுவதால் வாசகர் கூட்டம் அலைமோதி வருகிறது.

புதுசு கண்ணா புதுசு!
மதுரை 13வது புத்தக திருவிழாவில், 225வது அரங்கில் சூரியன் பதிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. கதை, கட்டுரை,கவிதை, சிறுகதை, நாவல், உடல்நலம், ஆன்மிகம் என பல்வேறு தலைப்புகள் ஆயிரக்கணக்கான புத்ததங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. 10 சதவீத தள்ளுபடி விலையில் புத்தகங்கள் இங்கு கிடைக்கிறது. சூரியன் பதிப்பகத்தின் புதிய வரவுகள்; டாக்டர் கு.கணேசனின் ’செகண்ட் ஒப்பினியன்’, கே.என்.சிவராமனின் ‘தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்’ மற்றும் ’சிவந்த மண்’, நெல்லை பாரதியின் ’பாட்டுச்சாலை’, திருப்புகழ் திலகம் மதிவண்ணனின் ’வாழ்வாங்கு வாழலாம் வா’ பாகம்-1, பாகம்-2, முத்தாலங்குறிச்சி காமராசுவின் ’ஜமீன் கோயில்கள்’, கோமல் அன்பரசனின் ’தமிழ்நாட்டு நீதிமான்கள்’, ரா.வேங்கடசாமியின் ‘அரசியல் படுகொலைகள்’, பா.சு.ரமணனின் ’யோகி ராம்சுரத்குமார்.

நெகிழ வைத்த வாசகர்
மதுரை சோழவந்தான் அரசு பள்ளி தமிழாசிரியர் பாலமுருகன். பிறவியிலேயே கிட்டப் பார்வை குறைபாடு கொண்ட பாலமுருகன் 13வது ஆண்டாக தவறாமல் மதுரை புத்தகத் திருவிழாவிற்கு வந்திருந்தார். கூடவே, தன்னுடைய மாணவர்களையும் அழைத்து வந்திருந்தார். என்னென்ன புத்தகங்களை வாங்கலாம் என வழிகாட்டியதுடன், தன்னுடைய பணத்தைக்கொண்டு மாணவர்கள் சிலருக்கு புத்தகங்களை வாங்கிக்கொடுத்து அசத்தினார். அவர் கூறுகையில், ‘பார்வைத்திறன் குறைந்த போதும், ஒருபோதும் புத்தக வாசிப்பை நிறுத்தவில்லை. இனியும் நிறுத்தப்போவதில்லை. பாடப்புத்தகங்களை விடவும் வாழ்வியல் புத்தகங்களை மாணவர்கள் படிக்க வேண்டும். அவர்கள் புத்தகங்களை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே, வகுப்பறையில் புத்தகங்கள் குறித்து அதிகம் பேசுவேன். இதிகாசங்கள், புராணங்கள், பண்டைய வரலாறு குறித்தெல்லாம் மாணவர்களிடம் பேசியிருக்கிறேன். அதை புத்தகங்களாக மாணவர்கள் வாங்கியுள்ளனர். நீண்ட நாள் தேடிய புத்தகத்தைத் தேடி வாங்கினேன். இந்த ஆசிரியர் தினத்தில் மாணவர்களுடன் வந்த இந்த புத்தக திருவிழா இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது’ என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • MummifiedFoal

  42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

 • SriLankaHomage

  இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உலகச் சமூகங்கள் அஞ்சலி: பிரான்சின் ஈபிள் டவரில் விளக்குகள் அணைப்பு!

 • selphiGorilla

  கொரில்லாக்களையும் விட்டு வைக்காத செல்ஃபி மோகம் : குஷியான போஸ்கள்

 • QingdaoNavalParade

  சீனாவில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பை ஒட்டி துறைமுகம் வந்தடையும் பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள்!

 • CaucaLandslide

  கொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி..: மீட்பு பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்