SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சரித்திரம் படைத்த சாதனை நாயகன்

8/9/2018 12:38:56 AM

சாமானியனாக இருந்து முதல்வராகி சரித்திரம் படைத்தவர் கலைஞர் கருணாநிதி. தமிழுக்கும், தமிழினத்துக்கும் அவர் செய்த சாதனைகள் கொஞ்சநஞ்சமல்ல. பூப்பாதையில் நடந்து வந்து சாதனைகளை அவர் படைத்தாரில்லை; நெருப்பாற்றில்
நீந்தியே அவர் சாதனைகளை படைத்தார். அவரின் வரலாற்றில் சிறுதுளிகள்...

திமுகவை கட்டிக் காத்தவர்;
கடந்த 1969ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி, அப்போதைய முதல்வர் அறிஞர் அண்ணா மறைந்தார். தமிழகமே துக்கத்தில் மூழ்கியது. அண்ணாவின் லட்சியங்களைத் தொடர்ந்து நிறைவேற்றவும், திமுக கழகத்தைக் கட்டி காத்திடவும், தமிழகத்தின் நலனைப் பாதுகாக்கவும், கழகத்தின் தலைமைப் பொறுப்பு கலைஞர் கருணாநிதியின் தோளில் சுமத்தப்பட்டது. அதை தொடர்ந்து, தமிழக முதல்வராக கடந்த 1969ம் ஆண்டு, பிப்ரவரி 10ம் தேதி கருணாநிதி பதவி ஏற்றார். தொடர்ந்து, நெருக்கடி நிலைக்கு எதிராகப் போராடியதற்காக, மிரட்டியும், ஆசை காட்டியும் திமுகவை பணியவைக்க மத்திய அரசு முயற்சி செய்தது. ஜனநாயகத்தின் மீதும், அடிப்படை உரிமைகள் மீதும் லட்சிய பிடிப்பும் கொண்ட கலைஞர் கருணாநிதி, எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியவில்லை. இதனால் 1976ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. ஆட்சியை இழந்தாலும், அநீதியை எதிர்த்து தொடர்ந்து போராடி திமுகவை கட்டிக்காத்தார் கருணாநிதி.

முதல் சொற்பொழிவு
கடந்த 1939ம் ஆண்டு பள்ளியில் நடைபெற்ற சொற்போட்டியில், ‘நட்பு’ என்ற தலைப்பில் கருணாநிதி பேசினார். அப்போது எட்டாம் வகுப்பு மாணவர். அதுவே அவர் ஆற்றிய முதல் சொற்பொழிவு. அதேசமயம், சிறுவர் சீர்திருத்தச் சங்கம் ஒன்றை அமைத்து, வாரம்தோறும் மாணவர்களுக்கு பேச்சுக் கலை பயிற்சி அளித்தார். கடந்த 1940ம் ஆண்டு மாணவர் ஒற்றுமைக்கென, ‘தமிழ்நாடு’  மற்றும் ‘தமிழ்நாடு மாணவர் மன்றம்’ என்கிற தனி அமைப்புகளை ஏற்படுத்தி வாரம்தோறும் கூட்டங்களை நடத்தினார். கடந்த 1941ம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தின் கிளைகள் தஞ்சை மாவட்டத்திலும், தமிழகத்தின் பல இடங்களிலும் ஏற்படுத்த அயராது பாடுபட்டார். அதே ஆண்டிலேயே மாணவர்களிடையே எழுத்தாற்றலைச் வளர்க்க, ‘மாணவ நேசன்’ என்ற மாத இதழை கையெழுத்து ஏடாகத் தொடங்கி நடத்தினார்.

தேசம் காக்க நிதி
தஞ்சாவூரில், கடந்த 1954ம் ஆண்டு ஏற்பட்ட புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் கண்ணீரை துடைக்க திமுகவின் சார்பில் நிதியும், உடையும் வழங்கப்பட்டது. 1962ம் ஆண்டு சீன ஆக்கிரமிப்பின் போது காங்கிரஸ் அரசுக்கு திமுக முழு ஆதரவு அளித்தது. இத்தனைக்கும் மேலாக கட்சியின் நலனைவிட நாட்டு நலனை முன்நிறுத்தி, அறிஞர் அண்ணா திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கையை கைவிட்டார். திமுகவின் தேசியப் பார்வையில் அண்ணாவின் அறிவிப்பு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. கடந்த 1971ம் ஆண்டு இந்திய - பாகிஸ்தான் போரில், அப்போது தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி, தேசிய பாதுகாப்பு நிதிக்கு ரூ.6 கோடி அளித்தார். இந்தியாவிலேயே இந்த அளவிற்கு நிதி அளித்த ஒரே மாநிலம் தமிழகம் என்ற பெருமையை பெற்றுத்தந்தார். அதேபோல், கடந்த 1999ம் கார்கில் போர் நடந்த போது, தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி, ரூ.50.43 கோடி நிதியை திரட்டி தமிழகத்தின் தனிப்பெருமையை மீண்டும் நிலைநாட்டினார்.

மயங்காதவர்; கலங்காதவர்
தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோதும், வெற்றிவாய்ப்பை இழந்தபோதும், கட்சி தொண்டர்களான உடன்பிறப்புகளை சந்திப்பதை தவிர்க்க மாட்டார் கலைஞர் கருணாநிதி.  அவர் வெற்றியைக் கண்டு மயங்கவும் மாட்டார். தோல்வியைக் கண்டு கலங்கவும் மாட்டார். இயக்கத்தை அவர் இயக்குகிறாரா, இயக்கம் அவரை இயக்குகிறதா என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு தன்னை கட்சியின் தலைமைத் தொண்டனாக கருதி செயல்பட்டுக் கொண்டே இருப்பவர் தான் கருணாநிதி.

தனி ஆளாக நின்றும் தளராத போராட்டம்
கலைஞர் கருணாநிதி எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுப்பார்; ஆனால், எதற்காகவும் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டார். நெருக்கடி நிலைக்கு எதிராக நெஞ்சுரத்தோடு கருணாநிதி தீர்மானம் நிறைவேற்றியதால், திமுக ஆட்சி கலைக்கப்பட்டு ஜனநாயகப் படுகொலை நிகழ்த்தப்பட்டது. திமுகவினர் இரவோடு இரவாக ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டனர். தனது உடன்பிறப்புகள் மற்றும் குடும்பத்தினர் என்று பலரும் சிறைக் கொடுமைக்கு உள்ளான நிலையிலும், மனம் தளராமல், நெருக்கடி நிலையை எதிர்த்து நின்று, சென்னை அண்ணா சாலையில் தனி ஆளாக உரிமைக்குரல் எழுப்பி, துண்டுப் பிரசுரங்களை வழங்கி போராடியவர் தான் கருணாநிதி.

பெண்களுக்கு  சொத்துரிமை  தந்த பிதாமகன்:

1989ம் ஆண்டு திமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, பெண்களுக்கு சொத்துரிமை, மிக பிற்படுத்தப்பட்டோருக்கான 20% உள்ளடக்கிய 69 சதவீத இடஒதுக்கீடு போன்ற சாதனை திட்டங்களை செயல்படுத்தினார். அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங்கிடம் வலியுறுத்தி, காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தார். மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி, நாடே ஆச்சரியத்துடன் பார்க்கும் வகையில், திராவிட இயக்கத்தின் சமூக நீதிக் கொள்கையை கருணாநிதி நிலைநாட்டினார்.

உதயசூரியனுக்கு அங்கீகாரம்
‘சட்டசபைக்குள் சென்றால் மட்டுமே ஜனநாயக வழியில் கழக லட்சியங்களை நிறைவேற்ற முடியும்’ எனக்கருதிய அறிஞர் அண்ணா, 1956ம் ஆண்டு திருச்சியில் நடந்த திமுகவின் மாநில மாநாட்டில் அதற்கான ஒப்புதலை  பெற்றார். கடந்த, 1957ம் ஆண்டு பொதுத் தேர்தலில் திமுக 15 சட்டசபை தொகுதிகளிலும், 2 எம்பி தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகிய முன்னணி தலைவர்கள் வெற்றிவாகை சூடினர். இந்த வெற்றியால், திமுகவிற்கு உதயசூரியன் சின்னம், தேர்தல் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-05-2019

  26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • colorado

  கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

 • trainchina

  சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

 • 24-05-2019

  24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்