SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவண்ணாமலையில் மகாசிவராத்திரியையொட்டி அண்ணாமலையார் கோயிலில் லட்சதீபம் ஏற்ற கட்டுப்பாடு பக்தர்கள் வேதனை

2/14/2018 11:06:57 AM

திருவண்ணாமலை, பிப்.14: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், மகா சிவராத்திரி விழா நேற்று விமரிசையாக நடந்தது. அதையொட்டி, விடிய, விடிய சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலில் லட்சதீபம் ஏற்ற தடை கட்டுப்பாடு விதித்ததால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

மகா சிவராத்திரி உருவான திருத்தலம் எனும் சிறப்பு மிக்கது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். பிரம்மாவுக்கும், திருமாலுக்கும் இடையே ஏற்பட்ட ‘நான்’ எனும் அகந்தையை அழித்து, லிங்கோத்பவ மூர்த்தியாக சிவபெருமான் காட்சியளித்த மாசி மாதம் சதுர்த்தி நாளில், மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

அதன்படி, அண்ணாமலையார் கோயிலில் மகா சிவராத்திரி விழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதையொட்டி, அதிகாலை 3 மணிக்கு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதிகாலை 5 மணி முதல் பகல் 12.30 மணிவரை லட்சார்ச்சனை நடைபெற்றது. அதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

மேலும், மதியம் 12.05 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மாலை 5 மணிக்கு சாயரட்சை அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர், இரவு 8 மணிக்கு சந்திரசேகரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பட்டு வீதியுலா வந்து அருள்பாலித்தார்.

இந்நிலையில், மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு முழுவதும் கோயில் நடை திறந்திருந்தது. மேலும், இரவு 7.30 மணிக்கு மகா சிவராத்திரி முதல் கால பூஜையும், இரவு 11.30 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், அதிகாலை 2.30 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், அதிகாலை 4.30 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடைபெற்றது.

முதல் கால பூஜையை பிரம்மாவும், இரண்டாம் கால பூஜையை திருமாலும், மூன்றாம் கால பூஜையை உமையாளும், நான்காம் கால பூஜையை முப்பத்து முக்கோடி தேவர்களும் நிறைவேற்றுவதாக ஐதீகம். எனவே, நான்கு கால பூஜைகள் நடந்ததால், இரவு முழுவதும் பக்தர்கள் கண்விழித்திருந்து தரிசனம் செய்தனர்.

மேலும், மகா சிவராத்திரியின் சிறப்பு நிகழ்வான லிங்கோத்பவர் சிறப்பு பூஜை, நள்ளிரவு 12 மணியளவில் நடந்தது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயில் கருவறையின் மேற்கு திசையில் அமைந்துள்ள லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. மேலும், சிவபூஜைக்கு உதவாது என இறைவனால் சபிக்கப்பட்ட தாழம்பூ, இந்த பூஜையின்போது மட்டுமே பயன்படுத்தப்படுவது தனிச்சிறப்பு.

மகா சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று மாலை 6 மணியளவில் அண்ணாமலையார் கோயில் பிரகாரங்களில் லட்ச தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, கோயில் 3ம் பிரகாரத்த்தில் இருந்து முதலாம் பிரகாரம் வரை லட்ச தீபம் ஏற்ற தடை செய்யப்பட்டிருந்தது.

விழாவையொட்டி, கோயில் கலை அரங்கத்தில் மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை பரதநாட்டியம், தேவார பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தது. இதுதவிர, ராஜகோபுரம் எதிரில், 108 தவில் நாதஸ்வர கலைஞர்களின் தொடர் இசை நிகழ்ச்சியும் நடந்தது.

அண்ணாமலையார் கோயிலில், மகா சிவராத்திரி தினத்தன்று மாலை 6 மணியளவில் கோயில் பிரகாரங்களில் லட்ச தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபடுவது வழக்கம். அதனால், கோயில் முழுவதும் தீப ஒளியில் பிரகாசிக்கும். அதேபோல், கோயில் பிரகாரங்களில் அழகிய வண்ணங்களில் உப்புக் கோலங்களால் இறைவனின் திருவுருவங்கள் தீட்டப்படுவதும் வழக்கம்.

ஆனால், மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீவிபத்து எதிரொலியாக, கோயில் பிரகாரங்களில் லட்ச தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம் கட்டுப்பாடு விதித்தது. கோயில் பிரம்ம தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் மற்றும் 3ம் பிரகாரத்தின் உட்பகுதிகளில் தீபம் ஏற்றக்கூடாது என தெரிவித்திருந்தனர்.

மேலும், மற்ற பிரகாரங்களிலும் தீபம் ஏற்றுவதற்கு திடீர் கட்டுப்பாடுகள் விதித்து, தீபம் ஏற்ற வந்த பக்தர்களை அனுமதிக்காமல் கெடுபிடி காட்டினர். அதனால், லட்ச தீபம் ஏற்றி வழிபடும் பக்தர்கள் ஏமாற்றமும் வருத்தமும் அடைந்தனர். அதேபோல், வண்ண உப்புக்கோலங்கள், திருவுருவங்கள் வரையவும் அனுமதிக்கவில்லை.

அதனால், வழக்கமாக மகா சிவராத்திரியன்று அண்ணாமலையார் கோயிலில் காணப்படும் உற்சாகம் நேற்று குறைந்திருந்தது. ஆண்டுதோறும் புதிய, புதிய கட்டுப்பாடுகளால் பாரம்பரியமான விழாவை, அறநிலையத்துறை அதிகாரிகள் சீர்குலைப்பதாக பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-02-2018

    25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

  • sirya_dead123

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர் தாக்குதல் : 5 நாளில் 400 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X